Sunday, April 21, 2024

தோழர் அச்சுதன் -இனிய தலைவர்

 


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். தென் மண்டலக் கூட்டமைப்பின் துணைத் தலைவராக, கோழிக்கோடு கோட்டச்சங்கத்தின் தலைவராக, பொதுச்செயலாளராக, அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினராக செயல்பட்ட தோழர் சி.அச்சுதன் இன்று காலமானார் என்ற துயரச்செய்தி இன்றைய காலையை சோகமாக்கியது.

வயது வித்தியாசம் இல்லாமல் பழகக்கூடிய இனிய தலைவர் அவர். 1995 ம் வருடத்தின் இறுதி நாட்கள். தென் மண்டல செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த காலேஜ் ஹவுஸ் ஹோட்டலில்தான் தங்க வைத்திருந்தார்கள். வேலூரிலிருந்து நானும் தோழர் ஆர்.ஜகதீசனும் சென்றிருந்தோம். கோழிக்கோடு தோழர்களும் அதே அறையில்தான் இருந்தார்கள்.

மதிய உணவோடு காலை கூட்டம் முடிந்திருந்தது. மாலை ஒரு பணி நிறைவு பாராட்டு விழா, இடையில் கிடைத்த நேரத்தில் விளக்குத்தூண் பகுதிக்கு சென்று என் மனைவிக்கு ஒரு சுங்குடி சேலை வாங்கி வந்தேன். புடவைப் பையோடு சென்ற என்னை பார்த்த தோழர் அச்சுதன் புடவையை காண்பிக்கச் சொன்னார். பார்த்ததும் பாராட்டி உடனடியாக மற்றவர்களிடமும் காண்பித்து தங்களை அந்த கடைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்.

இரவு பேசிக்கொண்டிருக்கையில் நகைச்சுவையாகவும் ஒன்றைச் சொன்னார். "ராமன், இப்போதுதான் இயக்க வேலைகளுக்கான பயணம் உனக்கு தொடங்கியுள்ளது. இன்னும் ஏராளமான காலமும் உனக்கு உள்ளது. ஒவ்வொரு பயணத்தின் போது ஏதாவது வாங்கி வருவது என்ற வழக்கத்தை உருவாக்கினால் மிகவும் கஷ்டப்படுவாய்," என்று சொல்லி விட்டு ஒரு இடைவெளிக்குப் பிறகு சொன்னார் "என்னைப் போல" என்று.

சில வருடங்களுக்குப் பின்பு கான்பூரில் அகில இந்திய செயற்குழுக் கூட்டம். அப்போது எதுவும் வாங்கவில்லையா என்று கேட்டார். "உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றத் தொடங்கி விட்டேன் தோழர். சீனியர் லீடர் அச்சுதன் அறிவுறுத்தியுள்ளார் என்று மனைவியிடமும் சொல்லி விட்டேன்" என்று பதில் சொல்ல "அடப்பாவி மனுசா, நாளைக்கு உன் வீட்டுக்கு வந்தா எனக்கு காபி கூட கிடைக்காத மாதிரி செஞ்சிட்டியே" என்று சொல்லி சிரித்தார்.

சென்னையில் ஓய்வூதியர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கோழிக்கோடு திரும்புகையில் உடல் நலன் சரியில்லாமல் போக காட்பாடியில் இறங்கி சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்க்க கோழிக்கோட்டிலிருந்து வந்த தோழர்களின் எண்ணிக்கையும் தொலைபேசிகளும் அவர் மீது தோழர்கள் கொண்டிருந்த  நேசத்திற்கு சான்று.

எப்போது பார்த்தாலும் நன்றாக பேசிக் கொண்டிருப்பார். சங்கத்தின் பல வரலாற்றுத் தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். சுவாரஸ்யமான பேச்சாளர் அவர். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முகமாக கேரளாவில் திகழ்ந்த தோழர் அவர்.

அவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் மனதிலிருந்து மறையாது.

செவ்வணக்கம் தோழர் அச்சுதன் . . .

No comments:

Post a Comment