Tuesday, April 30, 2024

தப்பு பண்ணிட்டீங்க நேரு

 


ஆம்.

நேரு தவறு செய்து விட்டார்.

என்ன தவறு?

மோடி சொல்லும் தவறுதான்.


உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலும் நீர்ப்பாசனத்திற்காக அணைகளை கட்டுவதிலும் அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்காக பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தியதிலும் காண்பித்த அக்கறையை மோடி சொன்னது போல கோயில்களை கட்டியிருந்தால், நேரு உருவாக்கிய நிறுவனங்களை சிதைப்பது போல கோயில்களையும் பாபர் மசூதி போல இடித்திருப்பார் மோடி.

அதற்கு வாய்ப்பு தராமல் போய் விட்டீர்களே நேரு . . .

Monday, April 29, 2024

அப்படியா? நிஜமா ஆட்டுக்காரா?

 


பாஜக கூட்டணியில் உள்ள தேவே கௌடாவின் பேரனும் குமாரசாமியின் மகனுமான ரேவண்ணா தொடர்பான பாலியல் காணொளிகள் இப்போது கர்னாடக மாநிலத்தை கலக்கிக் கொண்டுள்ளதாம்.

கர்னாடகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆட்டுக்காரன் சென்றதன் தொடர்ச்சியாகத்தான் இந்த காணொளிகள் வந்துள்ளது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சொந்தக்கட்சியினரின் காணொளிகளை வெளி வர காரணமாக உள்ள ஆட்டுக்காரன் கூட்டணிக்கட்சிக்கு மட்டும் தயவு காட்டுவாரா என்ன!

என்ன ஆட்டுக்காரா, இதெல்லாம் நிஜமா?

Sunday, April 28, 2024

ஆட்டுக்காரன் ஸ்டேட் ஸ்டேட்டாவாம் . . .

 


ஆட்டுக்காரன் கோவையிலேயே ஜெயிக்கப் போவதில்லை. ஆனால் சங்கிகள் என்ன பீற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

ஸ்டாலின் குடும்பத்திற்க்கும், பழனிசாமி கோஷ்டிக்கும் தேர்தல் முடிந்துவிட்டது , இனிமேல் அவர்கள் எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் ஓய்வெடுப்பார்கள்,

ஆனால் தலைவர் அண்ணாமலைக்கு மே மாதம் இறுதிவரை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயனம் உள்ளது. "கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டில்லி, உத்தர பிரதேஷ் வரை தலைவர் அண்ணாமலையின் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயனம் அணல் பறக்கும்..!

இது சும்மா சேம்பிள்தான்.  சங்கிகள் மட்டுமல்ல, பாஜக தமிழ்நாட்டின் ட்விட்டர் பக்கமே ஆட்டுக்காரனின் அயறாத (!) பணிக்கு பயர் விட்டுள்ளது.

கூறையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான்.

இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தது.

கர்னாடக சட்டமன்ற தேர்தல் பணிக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு பசவராஜ் பொம்மையை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கியது (பொம்மை பாஜக முதல்வர்தான்)

ஆட்டுக்காரனால்தான் வோட்டுக்கள் குறைந்தது என்று கர்னாடக பாஜக ஆட்களே புலம்பியது.

இதே சாதனையை செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஆட்டுக்காரன் உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஆட்டுக்காரனின் சாதனைகள் பற்றி தெரிந்தும் பல மாநிலங்களுக்கு பிரச்சாரத்திற்கு அனுப்பியுள்ள பாஜக தலைமையின் மன தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்கு கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜாதேவி ஆலயமணி திரைப்படத்தில் பயன்படுத்திய ஒரு சோப்பு டப்பாவை பரிசாக அளிக்கிறேன்.

Saturday, April 27, 2024

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் . . .

 

மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தில் இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் உருவான "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வீசுதம்மா" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

மந்திரியே மன்னிப்பு கேள்

 


கடந்த வருடம் ஆந்திராவில் நடைபெற்ற கொடுமையான விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மூன்று வண்டிகள் மோதியதால் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட முப்பது பேர் இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான ஒரு டிரெயினின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் இருவரும் அலைபேசியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் விபந்து நடந்ததாக ரயில்வே மந்திரி அஸ்வினி எழவு பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியுள்ளார்.

இன்று வந்த செய்தியின்படி அந்த இருவரின் தொலைபேசிகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய போது அவர்கள் தொலைபேசிகளை பேசக்கூட பயன்படுத்தவில்லை, இணையத்தை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விபத்திற்கு இவர்கள் காரணமில்லை என்பது தெளிவாகிவிட்டது என்று ரயில்வே உயிரதிகாரிகள் சொல்லி விட்டனர்.

மோடி பெரிதாக பீற்றிக் கொண்ட "கவச்" எனும் பாதுகாப்பு ஏற்பாடு விபத்துக்குள்ளான எந்த டிரெயினிலும் பொருத்தப்படவில்லை, சிக்னல் கோளாறுகளை சரி செய்ய வேண்டும், அதற்கு நிதி வேண்டும் என்பதை புறக்கணித்து மோடி வந்தே பாரத்திற்கு பச்சைக்கொடி காட்டவும் மரண தூதன் மோடியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் அமைக்க ஊதாரித்தனமாக கோடிக்கணக்கில் செலவழித்தது ரயில்வே துறை. மோடியைப் போலவேதான் எல்லா மந்திரிகளும் கேவலமானவர்களாகவே இருக்கிறார்கள். 

அதன் கையாலாகத, நிர்வாகம் நடத்த அருகதையற்ற கேவலத்தை மறைக்க, பதில் சொல்ல வாய்ப்பில்லாத இறந்து போன ஓட்டுனர்கள் மீது பழி போட்டார் ரயில்வே மந்திரி. இதில் இந்தாளு மிகப் பெரிய மேதைன்னு வேற சங்கிங்க பீற்றிக் கொண்டார்கள்.

உன் தவறை மறைக்க இறந்தவர்கள் மீது களங்கம் சுமத்திய கேடு கெட்ட, கேவலமான ரயில்வே மந்திரியே, நீ செய்த அவதூறுக்கு பகிரங்க மன்னிப்பு கேள். 

Friday, April 26, 2024

மோடின்னா பயமா EC???

 


தேர்தல் பிரச்சாரத்தின் போது அநாகரீகமாக, ஆபாசமாக, வெறுப்புப் பேச்சு யாராவது பேசினால் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கும்.

மோடி தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கடிதம் அனுப்பி அழுத்தம் கொடுத்த பின்னர் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் மோடிக்கு அல்ல.

பாஜக தலைவர் பதவியில் உட்கார்ந்திருக்கும் பொம்மை நட்டாவிற்கு.

அதிலும் கூட மோடியின் பெயர் இல்லை. உங்கள் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்றுதான் சொல்கிறது கடிதம்.

கட்சித்தலைவருக்கு கடிதம் அனுப்பியது மோடிக்காக மட்டும் இல்லை என்று காண்பிக்க "மோடி பொய் பேசுகிறார்" என்று ராகுல் காந்தி சொன்னதற்கு மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற மறைப்பு எல்லாம் இல்லை. நேரடியாக ராகுல் காந்தி என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏன்யா தேர்தல் ஆணையர்களா, மோடி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? அந்தாளு பெயரை சொல்றதுக்கு இப்படி பயப்படறீங்க?

மோடி பொறுக்கி எடுத்து பதவி கொடுத்த விசுவாசமா? எலும்புத்துண்டு போட்டவனுக்கு விசுவாசமா ஏதோ ஒன்னு வாலை ஆட்டுமே, அது மாதிரி . . 

கொண்டையையும் மறைக்கலை, மையையும் மறைக்கல . ..

 


அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்பது சினிமா டயலாக்.

அசிங்கப்பட்டான் ஆட்டுக்காரன் என்பது நிஜம், யதார்த்தம்.

ஆமாம். வாக்குகள் அகற்றப்பட்டது என்று ஆட்டுக்காரன் கட்டி விட்ட கதைக்கு ஒரு பில்ட் அப் கொடுக்க  வாக்குகள் அகற்றப்பட்டவர்கள் என்ற போர்வையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

அதில் காமெடி என்னவென்றால் அத்தனை பேர் கையிலும் ஓட்டு போட்ட மை இருக்கிறது.



ஒரு தாத்தா பாட்டி இருக்கிறார்கள். ஒரு போலியான போராட்டத்தில் கடுமையான வெயில் காலத்திலும் கலந்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு மோசமான சங்கிகளாக இருக்க வேண்டும்.

உண்மையில் பெரிய காமெடி எது தெரியுமா?

"நான் உயிரோடு இருக்கிறேன், என் வோட்டு எங்கே?" என்ற அட்டையை பிடித்து நிற்பவர் கையிலும் மை இருப்பதுதான்.

கவுண்டமணி பாணியில் 

"இப்படியெல்லாம் பொய் பேசி அசிங்கப்பட்டுக்கிட்டு நீயெல்லாம் எதுக்குடா உயிரோட இருக்கே?"

இந்த கவுண்டமணி கேள்வி ஆட்டுக்காரனுக்கும் பொருந்துமல்லவா? 


Thursday, April 25, 2024

காரணம் கண்டுபிடித்த ஆட்டுக்காரன்

 


கோடி கோடியாய் கொட்டியிருந்தாலும் மோடியே சாலை சீன் போட்டிருந்தாலும் கோவையில் ஆட்டுக்காரன் வெல்ல வாய்ப்பில்லை.

 அந்த உண்மை ஆட்டுக்காரனுக்கும் புரிந்து விட்டது.

 கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காண்பிக்க, தன் தோல்விக்கு ஆட்டுக்காரன் கண்டுபிடித்த காரணம்தான் ஒரு லட்சம் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர் என்று அடித்து விட்டுள்ள புதிய அளப்பு.

 


இதையெல்லாம் சங்கிகள் நம்புகிறார்களே, அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

 இதைத்தவிர இன்னொரு கதையும் சுற்றிக் கொண்டிருக்கிறது..

 அது பற்றி மாலையில்

Wednesday, April 24, 2024

மோடியை அனுப்பி வையுங்கள்

 


பாஜக கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

உங்கள் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் பேசும் பேச்சுக்களை கேட்கையில் அவர் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

அவரை உடனடியாக நல்ல மன நல மருத்துவரிடம் காண்பியுங்கள்.

உங்கள் காலதாமதம் அவரை பாண்டிமடம், குணசீலம், ஏர்வாடி போன்ற இடங்களில் சங்கிலியால் பிணைத்து வைக்கும் அளவிற்குச் செல்லும்.

இல்லையென்றால் மெக்கானிக் முருகன் போல

ஞைஞைஞைஞைஞைஞைஞைஞை 



என்று திரியும் நிலை வரலாம்.

அதனால் அவரை உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். வெயில் வேறு அதிகமாக இருக்கிறது.

Tuesday, April 23, 2024

பாடல் படிக்க வைத்த நூல்

 



 அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள். வாசிப்பை நேசிக்கும் எனக்கு வாழ்த்து சொல்லும் அருகதை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

 சமீபத்தில் படித்த ஒரு நூல் பற்றிய பகிர்வு.

 ஆடு ஜீவிதம்.

 நூல் வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலான பின்பும் படிக்காமல் இருந்த நூல்களின் பட்டியலில் இருந்த நூல் இது.

 இதுவே திரைப்படமாக வெளிவரும் முன்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “பெரியோனோ, என் ரஹ்மானே” என்ற பாடலைக் கேட்டேன். அநேகமாக மீண்டும் மீண்டும் கேட்ட புதிய பாடல் இதுதான். இதற்கு முன்பாக அப்படி கேட்டது பொன்னியின் செல்வன் 2 படத்தின் “வீரா தீரா” பாடல்.

 அந்த பாடலை கேட்டவுடன் பயணப் பையில் இந்நூலை எடுத்து வைத்துக் கொண்டேன்.

 இம்மாத துவக்கத்தில் ஒரு இரண்டு மணி நேர பயணம். சென்ற இடத்தில் ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து போன வேலை நடக்காமல் வெட்டியாய் திரும்பி வந்தேன்.

 ஆனாலும்  அந்த பயணத்தை பயனுள்ளதாய் மாற்றியது ஆடு ஜீவிதம்.

 திரைப்படமாக வந்ததால் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் சுருக்கமாக சொல்லியாக வேண்டும்.

 குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து வளமான வாழ்வு வாழலாம் என்ற நம்பிக்கையோடு சவுதிக்குப் புறப்படுகிறான் நஜீப். அவனுக்கான முதல் அதிர்ச்சி விமான நிலையத்தில் கிடைக்கிறது. ஒரு மோசமான ஓட்டை வாகனத்தில் நாற்றமடிக்கும் உடை அணிந்த ஒருவன் அவனை அழைத்துச் செல்கிறான்.

 எங்கே? எதற்கு?

 பாலைவனத்துக்கு நடுவில் இருக்கிற ஆட்டுத் தொழுவத்திற்கு. ஆடு மேய்க்கும் வேலைக்கு.

 பயிர்கள் இல்லாத பாலைவனத்தில் ஆடுகள் எதை மேயும் என்ற கேள்வி வருகிறதல்லவா?

 ஆடுகளை தொழுவத்திலிருந்து நடக்க வைத்து பின் கூட்டி வருவதுதான் வேலை. அப்படி நடக்காவிட்டால் ஆடுகளுக்கு நோய்கள் வருமென்பதால் அந்த ஏற்பாடு.

 நஜீபோடு இன்னொரு பணியாள். அவனும் அழுக்கான ஆடைகளோடு பார்க்கக் கொடூரமாக இருக்கிறான். சில நாட்கள் கழித்து காணாமல் போகிறான்.

 முகம் கழுவ தண்ணீரை பயன்படுத்தியதெற்கெல்லாம் பெல்ட்டால் அடித்து சாப்பாடு கொடுக்காமல் எஜமானன் செய்யும் சித்திரவதைகளை முதலில் தாங்க முடியாத நஜீபிற்கு பின் அதுவே பழகி விடுகிறது. ஆடுகளை நேசிக்க தொடங்குகிறான். பெயர் வைக்கிறான். அவை வெட்டுக்கூடத்திற்கு செல்லும் போது கலங்குகிறான்.

 வாழ்நாள் முழுதும் பாலைவனத்திலேயே முடிந்து விடுமோ என்று அஞ்சும் நஜீபிற்கு தப்பித்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பாலைவனத்தில் நடந்து நடந்து நடந்து நடந்து ஒரு வழியாக நகரத்தை வந்தடைகிறான். தாய்நாடு திரும்புவதற்கான வழிமுறையாக தானே கைதாகிறான்.

 தப்பித்துச் சென்ற வேலையாட்களை சிறையில் முதலாளிகள் தேடிப்பிடுத்து மீண்டும் இழுத்துச் செல்வார்கள், குறிப்பிட்ட காலம் வரை யாரும் வராவிட்டால் தூதரகம் மூலம் தாய்நாடு திரும்பி விடலாம். இந்த நாள் கழிந்து விட்டாக் சுதந்திரம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் நஜீபின் கனவுகளை தகர்க்கும் வண்ணம் அன்றுதான் நஜீப்பை  விமான நிலையத்திலிருந்து இழுத்துச் சென்ற மனிதன் வருகிறான். நஜீபின் இதயம் துடிக்கிறது. அவன் கண்டுகொள்ளவில்லை. ஒரு வழியாய் துயரம் முடிந்து போகிறது.

 முன்பின் தெரியாத இடத்தில் சிக்கிக் கொண்டும் தப்பிக்கும் போதும்  பல சித்திரவதைகள் அனுபவித்தாலும் வாழ வேண்டும் என்ற வேட்கை நஜீபிற்கு குறையவே இல்லை.  அந்த வேட்கைத்தான் நஜீபை காப்பாற்றியது. பிரச்சினைகள் எதுவானாலும் நம்பிக்கையோடு எதிர்கொண்டால் அதிலிருந்து வெளி வர முடியும் என்பதுதான் நூல் சொல்லும் செய்தி. முக்கியமான செய்தி.

 ஒரு உண்மை நிகழ்வை பென் யாமின் நாவலாக கொடுத்துள்ளார். விலாசினி ரமணி நூலின் உணர்வுகளை படிப்பவர்கள் நெஞ்சு படபக்கும் படி தமிழாக்கம் செய்துள்ளார். இருவருக்கும் பாராட்டுக்கள். ஒரு நிமிடம் கூட சலிப்பு வராமல் நூலின் நடை உள்ளது. அதனால்தான் பயணம் வெட்டியாக முடிந்தாலும் எரிச்சல் இல்லாமல் நேரம் கழிந்தது.

 நூல் படித்து கிடைத்த உணர்வை இழக்க விரும்பாததால் திரைப்படத்திற்குச் செல்லவில்லை.

பிகு : 

பாடலையும் கேட்டு விடுங்களேன்.



மோடியின் "படுத்தே விட்டானய்யா" மொமெண்ட்

 


தன்னைப் போல ஒரு கேவலமான, அற்பத்தனமான, கேடு கெட்ட ஜந்துவை உலகம் பார்த்திருக்க முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது பிரதமர் என்ற பெயரில் இந்தியாவுக்கு நிகழ்ந்த துரதிர்ஷ்ட விபத்து.

நேற்று முன் தினம் கான்பூரில் பேசுகையில் 

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியைக் கூட பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள்" 

என்று அயோக்கியத்தனமாக பேசிய அதே ஜந்து

நேற்று அலிகாரில் பேசுகையில்

"அதிகமான எண்ணிக்கையில் முஸ்லீம்கள் ஹஜ் போக நாந்தான் சவுதி இளவரசரோடு பேசினேன். ஆண் துணை இல்லாமல் பெண்களும் தனியாக போக வழி செய்தேன், முத்தலாக்கை ஒழித்து முஸ்லீம் பெண்களின் ஆசியைப் பெற்றேன் (இவரால் தள்ளி வைக்கப்பட்டு வாழ்விழந்த யஷோதா பென் நினைவுக்கு வருகிறார்)"

என்றெல்லாம்  பேசி விட்டு போயுள்ளார்.



இதனால் இந்த ஜந்து திருந்தி விட்டதா என்றெல்லாம் சிந்திக்காதீர். எந்த அடிப்படை அறமும் இல்லாமல் பதவிக்காக எந்த அளவும் கீழிறங்கும் தரங்கெட்ட ஜந்து.

"படுத்தே விட்டானய்யா" மொமெண்ட் நேற்று. 

இன்று எங்கே என்ன விஷத்தை கக்குகிறது என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.


Monday, April 22, 2024

மோடியின் பேச்சு அயோக்கியத்தனமாது.

 


தோல்வி பயம் மோடிக்கு வந்து விட்டது.

 முதல் முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.

 புல்வாமாவில் எல்லைப் பாதுகாப்புப்ப்டை வீரர்கள் கொல்லப்படுவதை அனுமதித்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

 இனி பொய்களையும் அள்ளி விட முடியாது. ராணுவ வீரர்களையும் சாகடிக்க முடியாது.

 அதனால் மோடி கையிலெடுத்திருப்பது மத வெறிப் பேச்சு.

 “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  நாட்டு மக்களுடைய செல்வத்தை எல்லாம் பிடுங்கி  இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்”

 காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள், தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று அவர் சொல்லும் விஷயங்களுக்கு அவரிடம் எந்த தரவுகளோ, ஆதாரங்களோ கிடையாது.

 வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார். ஆனால் அது ஆபத்தானது. பிளவு படுத்தும் நோக்கமுடையது. ஒற்றுமையை குலைக்கக் கூடியது. வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை  உருவாக்கக்கூடியது. வெறுப்பை விதைக்கும் விஷம். மொத்தத்தில் அயோக்கியத்தனமானது.

 இந்த அயோக்கியத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. மோடியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் அதை செய்ய மாட்டார்கள். அதனால் மக்கள்தான் மோஈடியை முறியடிக்க வேண்டும்.

 

இளையராஜா - நீனா சிமோன் ஒப்பீடு நியாயமில்லை

 


பெல்ஜியம் வாழ் தோழர் இ.பா.சிந்தன்  அவர்களின் முக்கியமான பதிவை அவருக்கு அனுதாபம் தெரிவித்து பகிர்ந்து கொள்கிறேன். இளையராஜாவின் கடினச்சாவு விசிறிகளை மட்டுமல்லாமல் பா.ரஞ்சித் ரசிகர்களையும் சீண்டி விட்டார். என்ன ஆகப் போகிறாரோ?

எழுதவேண்டிய அவசியம் இருப்பதால், கொஞ்சம் சர்ச்சையான பதிவு என்று தெரிந்தேதான் எழுதுகிறேன்.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் துவக்கத்தில் ஒரு உரையாடல் காட்சி வரும்.

அதில் இளையராஜாவை இனியன் (காளிதாஸ்) போன்றவர்கள் கொண்டாடுவதில்லை என்று ரெனே (துசாரா விஜயன்) சொல்வதாக விவாதம் நடக்கும். ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில், "எங்கயோ இருக்குற நீனா சிமோனைக் கொண்டாடுவ. ஆனா இளையாராஜாவக் கொண்டாட மாட்டியா?" என்று ரெனே சொல்வதாக ஒரு வசனம் வரும். அந்த வசனம் எனக்கு ஒரு திணிப்பாகத்தான் தெரிந்தது. படம் வந்தபோதே இதுகுறித்து எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படம் குறித்து வேறொரு திசையில் விவாதம் நடந்துகொண்டிருந்தபடியால் இதுகுறித்து நான் பேசுவது சரியாக இருக்காது என்று விட்டுவிட்டேன்.

அந்த வசனம் குறித்து இரண்டு கருத்துகளை சொல்ல நினைக்கிறேன்.

ஒன்று, இளையராஜா இங்கே கொண்டாடப்படவில்லை என்று சொல்வது இளையராஜாவின் ஒருசில அதிதீவிர ரசிகர்களைத் தவிர வேறு யாருமில்லை. சுமார் 30 ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகை தன்னந்தனியாக ஆண்டுகொண்டிருந்தவர் இளையராஜா. அவருடைய பெயருக்காகவும் இசைக்காகவும் இங்கே ஓடிய படங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. எல்லா இசைக் கருவிகளுக்கும் நேரடியாக இசைக் குறிப்பெழுதி பாடலை உருவாக்கிய கடைசி இசையமைப்பாளர் என்று தைரியமாக அவரைக் குறிப்பிடலாம். இன்றைக்கு மட்டுமல்லாமல் காலத்திற்கும் ராஜாவின் இசை நிலைத்து நிற்கத்தான் போகிறது. அவரது பெயரும் புகழும் என்றென்றைக்கும் அழியாதவை. அவர் கொண்டாடப் பட்டிருக்காவிட்டால், அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகளோ இவ்வளவு பெரிய பெயரோ கிடைத்திருக்குமா? அதனால் ராஜா கொண்டாடப்படவில்லை என்று சொல்லி, போகிற வருகிறவர்களை எல்லாம் கடித்துவைப்பதால் ராஜாவுக்குத்தான் இந்த சிலர் இழுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

இரண்டாவது, நீனா சிமோனைக் கொண்டாடுவதற்கு பதிலாக ராஜாவை மட்டும் கொண்டாட வேண்டும் என்று சொல்வது என்ன வகையில் சரியென்று தெரியவில்லை. அப்படிச் சொல்பவர்களுக்கு நீனா சிமோன் யாரென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

இசை மன்னராக ராஜாவை முழுமையாக ஏற்கிறேன். உலக இசை வரலாற்றில் ராஜாவுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. ஆனால் அதற்காக நீனா சிமோனுடன் எல்லாம் ஒப்பிடுவது எவ்வகையிலும் சரியான ஒப்பீடல்ல. அமெரிக்காவில் நம்பர் ஒன் இசையைக் கொடுத்து, மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இருந்த நீனா சிமோன், தான் வாழ்ந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க வெள்ளையின ஆதிக்கம் நிகழ்த்திவந்த கொடூரங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி எதிர்க்க முன்வந்தார். 1960 களில் அவருடைய பாடல் இடம்பெறாத கருப்பின மக்கள் போராட்டமே இல்லை எனலாம். "மிசிசிப்பி காட் டேம்" என்று அவர் எழுதி இசையமைத்துப் பாடிய பாடல், சுற்றிவளைத்தெல்லாம் இல்லாமல் நேரடியாகவே வெள்ளையின ஆதிக்கத்தை ஓங்கியடித்தது. அவரது "Ain't got no, I got life" பாடல் ஒரு கருப்பினப் பெண்ணின் வாழ்க்கையைப் பேசும் பாடலாக பாடப்பட்டது. இன்றுமே கூட இவ்விரு பாடல்களும் அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கை நிலைக்கு அப்படியே பொருந்திப் போவதாக இருக்கிறது.

"என்னுடைய வரிப்பணத்தில் வியட்னாமில் போர் நடத்தி அப்பாவி மக்களைக் கொல்வதா? அதற்கு அனுமதிக்கமாட்டேன்" என்று சொல்லி வரிகட்ட மறுத்தார் நீனா சிமோன்.

"மிசிசிப்பி காட் டேம்" என்கிற ஒரு பாடலுக்காகவே அமெரிக்க வெள்ளையின ஆதிக்க இசைத்துறை, நீனா சிமோனைப் பழிவாங்கியது. அவருடைய அடுத்தடுத்த பாடல்களை வெளியிட மறுத்தது. அவரை அமெரிக்க இசை வரலாற்றிலிருந்தே விரட்டியடித்தது. ஆனால், அதற்காகவெல்லாம் ஆளும் வர்க்கத்திடம் நீனா சிமோன் ஒருபோதும் அடிபணியவே இல்லை. அதன்பிறகு அவருடைய இசைப் பாடல்களை பெரியளவிற்கு விற்க எவரும் முன்வரவில்லை என்ற போது கவலையேபடாமல், கருப்பின மக்களின் உரிமைக்காக இறுதிவரை போராடியவர் நீனா சிமோன்.

ஆனால், ராஜாவோ, இன்றைய கொடும் பாசிச காலத்தில், வெறிபிடித்தாடும் சங்கியத்தை எதிர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதனோடு கூட்டுசேராமலாவது இருக்கலாம்தானே.

"தான் வாழும் காலத்தின் அரசியலைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் கலைஞர்களே இல்லை" என்றார் நீனா சிமோன். ஆனால், ராஜாவோ ரங்கராஜ் பாண்டேவோடுதான் எப்போது மேடையேறுகிறார். அம்பேத்கரும் மோடியும் ஒன்று என்கிறார். அவர்கள் கொடுத்த எம்பி பதவியை ஏற்றுக்கொள்கிறார்.

ராஜா என்றென்றைக்கும் மக்கள் மனங்களில் இசையரசர்தான். ஆனால், அதற்காகவெல்லாம் ஒட்டுமொத்த சமத்துவத்திற்காக எல்லா இழப்புகளையும் சந்திக்க நேரிட்டும் உறுதியாக இறுதிவரைப் போராடி மறைந்த நீனா சிமோனையெல்லாம் தாழ்த்திப் பேசாதீர்கள்.

இன்று நீனா சிமோனின் நினைவு நாள்.

Sunday, April 21, 2024

பாஜகவில் நேர்மை இல்லை --சங்கி ஒப்புதல்

 


மதுரையில் பாஜக வேட்பாளராக தோற்றுப்போன போலிப் பேராசிரியர் ராம.சீனு பேசிய காணொளி கீழே உள்ளது.


இது கண்டிப்பாக புதிதல்ல. பழைய வீடியோ இது என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். அதனால் இது பழசு என்று எந்த அனாமதேயமோ போலிப் பெயர் உளவாளி துரோகிகளோ பின்னூட்டம் இட வேண்டாம்.

என் கருத்து ஒன்றுதான்.

நேர்மையான தலைவர் என்றால் சங்கியால் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தலைவரைத்தான் உடனடியாக சொல்ல முடிகிறது. கம்யூனிஸ்டுகள்தான் நேர்மையோடு இணைக்கப்பட்டுள்ளனர்.

அவரால் ஆட்டுக்காரன் பெயரையோ, பொன்னார், டமில் மூசிக் என்றோ சொல்ல முடியவில்லை அல்லவா! அது போதும்,

தோழர் அச்சுதன் -இனிய தலைவர்

 


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். தென் மண்டலக் கூட்டமைப்பின் துணைத் தலைவராக, கோழிக்கோடு கோட்டச்சங்கத்தின் தலைவராக, பொதுச்செயலாளராக, அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினராக செயல்பட்ட தோழர் சி.அச்சுதன் இன்று காலமானார் என்ற துயரச்செய்தி இன்றைய காலையை சோகமாக்கியது.

வயது வித்தியாசம் இல்லாமல் பழகக்கூடிய இனிய தலைவர் அவர். 1995 ம் வருடத்தின் இறுதி நாட்கள். தென் மண்டல செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த காலேஜ் ஹவுஸ் ஹோட்டலில்தான் தங்க வைத்திருந்தார்கள். வேலூரிலிருந்து நானும் தோழர் ஆர்.ஜகதீசனும் சென்றிருந்தோம். கோழிக்கோடு தோழர்களும் அதே அறையில்தான் இருந்தார்கள்.

மதிய உணவோடு காலை கூட்டம் முடிந்திருந்தது. மாலை ஒரு பணி நிறைவு பாராட்டு விழா, இடையில் கிடைத்த நேரத்தில் விளக்குத்தூண் பகுதிக்கு சென்று என் மனைவிக்கு ஒரு சுங்குடி சேலை வாங்கி வந்தேன். புடவைப் பையோடு சென்ற என்னை பார்த்த தோழர் அச்சுதன் புடவையை காண்பிக்கச் சொன்னார். பார்த்ததும் பாராட்டி உடனடியாக மற்றவர்களிடமும் காண்பித்து தங்களை அந்த கடைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்.

இரவு பேசிக்கொண்டிருக்கையில் நகைச்சுவையாகவும் ஒன்றைச் சொன்னார். "ராமன், இப்போதுதான் இயக்க வேலைகளுக்கான பயணம் உனக்கு தொடங்கியுள்ளது. இன்னும் ஏராளமான காலமும் உனக்கு உள்ளது. ஒவ்வொரு பயணத்தின் போது ஏதாவது வாங்கி வருவது என்ற வழக்கத்தை உருவாக்கினால் மிகவும் கஷ்டப்படுவாய்," என்று சொல்லி விட்டு ஒரு இடைவெளிக்குப் பிறகு சொன்னார் "என்னைப் போல" என்று.

சில வருடங்களுக்குப் பின்பு கான்பூரில் அகில இந்திய செயற்குழுக் கூட்டம். அப்போது எதுவும் வாங்கவில்லையா என்று கேட்டார். "உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றத் தொடங்கி விட்டேன் தோழர். சீனியர் லீடர் அச்சுதன் அறிவுறுத்தியுள்ளார் என்று மனைவியிடமும் சொல்லி விட்டேன்" என்று பதில் சொல்ல "அடப்பாவி மனுசா, நாளைக்கு உன் வீட்டுக்கு வந்தா எனக்கு காபி கூட கிடைக்காத மாதிரி செஞ்சிட்டியே" என்று சொல்லி சிரித்தார்.

சென்னையில் ஓய்வூதியர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கோழிக்கோடு திரும்புகையில் உடல் நலன் சரியில்லாமல் போக காட்பாடியில் இறங்கி சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்க்க கோழிக்கோட்டிலிருந்து வந்த தோழர்களின் எண்ணிக்கையும் தொலைபேசிகளும் அவர் மீது தோழர்கள் கொண்டிருந்த  நேசத்திற்கு சான்று.

எப்போது பார்த்தாலும் நன்றாக பேசிக் கொண்டிருப்பார். சங்கத்தின் பல வரலாற்றுத் தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். சுவாரஸ்யமான பேச்சாளர் அவர். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முகமாக கேரளாவில் திகழ்ந்த தோழர் அவர்.

அவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் மனதிலிருந்து மறையாது.

செவ்வணக்கம் தோழர் அச்சுதன் . . .

Saturday, April 20, 2024

பிரியாணிக்கு பதற்றமாகும் சங்கிகள்

 


ஒவ்வொரு வருடம் ரம்ஜானின் போதும் சங்கிகள் பதற்றமாகி விடுகின்றனர். பாய் வீட்டு பிரியாணி வந்தது என்றோ பிரியாணி இன்னும் வரவில்லை என்றோ சிலர் போடும் முகநூல் பதிவுகள் சங்கிகளை பதற்றமாக்கி விடுகின்றது. பலரும் பல விதமாக புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.



அப்படிப்பட்ட ஒரு புலம்பல் கீழே. ஆமாம் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவிலிருந்துதான் . . .


 
அதற்கான என் எதிர்வினைதான் மேலே உள்ள படம்.

 சங்கிகள் மக்களை மத ரீதியாக பிளவு படுத்த முயன்று கொண்டே இருக்கிறார்கள். பிரியாணி மூலமாக மக்கள் ஒன்றிணைவதா என்பதுதான் அவர்களின் கடுப்பிற்கான காரணம்.

 பிகு: ரம்ஜான் அன்றே எழுதியதுதான். பகிர்ந்து கொள்ளதான் தாமதமாகி விட்டது.

இளையராஜா வழக்கு - நீதிபதிகள் தப்பினார்கள்

 




நேற்றோ, நேற்று முன் தினமோ நாளிதழில் படித்த செய்தி . . .

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா துவக்க காலத்தில் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை அத்திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு அளித்து விட்டதால் ஸ்பாடிஃபை ஆப் மூலம் கிடைக்கும் ராயல்டி தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எக்கோ ரெகார்டிங் கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது.

இந்த பதிவு ராயல்டி பிரச்சினை பற்றியல்ல, அதை நீதிமன்றம் சொல்லட்டும்.

வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற விவாதத்தில் சொல்லப்பட்ட ஒரு கருத்து பற்றி...

இளையராஜா தன்னை அனைவருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொள்கிறாரா? என்று எக்கோ வழக்கறிஞர் கேட்க

இளையராஜாவின் வழக்கறிஞர் கொதித்துப் போய்

"ஆமாம், இந்த உலகில் மேலானவர் இளையராஜாதான். அனைவருமே அவருக்கு கீழானவர்கள்" 

என்று முதலில் சத்தமிட்டு சொல்ல,
ஒரு நொடி தாமதித்து

"கடவுள் மட்டுமே இளையராஜாவுக்கு மேலானவர். மற்ற அனைவரும் அவருக்கு கீழானவர்கள்தான்"

என்று நிறைவு செய்திருக்கிறார்.

வழக்கு மீண்டும் நீதிமன்றம் வந்த போது

"இளையராஜா அப்படி என்ன அவரை அனைவருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற சங்கீத மும்மூர்த்திகளை விட அவர் மேலானவர் என்று சொல்கிறீர்களா"

என்ற கேள்வியை நீதிபதிகள் கேட்க

இளையராஜாவின் சார்பில் வாதாட வந்தவரோ

"அன்றைக்கு என் சீனியர் உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டார். அதை அப்படி பொருள் கொள்ளக்கூடாது, என் சீனியர் விளக்கம் கொடுப்பார்" 

என்று வாய்தா வாங்க வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.

தேர்தல் காலம் என்பதால் நீதிபதிகள் சொன்னது பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதனால் நீதிபதிகள் தப்பித்தார்கள். இல்லையென்றால் ராஜாவின் கடினச்சாவு விசிறிகள் (DIE HARD FANS) அவர்களை என்னவெல்லாம் படுத்தியெடுத்திருப்பார்கள் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அவர் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் . . .

Friday, April 19, 2024

ஆட்டுக்காரன் ஊளையிட்டது நல்லது

 


வாக்களிக்க புறப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் "உயிரே போனாலும் நீட்டை ரத்து செய்ய மாட்டோம்" என்று ஆட்டோக்காரன் சொன்னதை கேட்டேன்.

அந்த ஒரு வார்த்தையே நீட் ரத்தாகி விடும் என்பதற்கான அறிகுறி. ஏனென்றால் ஆட்டுக்காரன் வரலாறு அப்படி.

வேளாண் சட்டங்களில்  ஒரு கமா, ஃபுல் ஸ்டாப் கூட மாறாது என்று சொன்ன இரண்டாவது நாளே, அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறுவதான மோடியின் அறிவிப்பு வந்தது.

ஆனால் இந்த முறை மோடியின் பெயரில் அறிவிப்பு வராது. ஏன்?











அப்போது அவர் பிரதமராக இருக்க மாட்டார். 

Thursday, April 18, 2024

எரியும் மண் - களத்திலிருந்து நேரடியாக

 எங்கள் கோட்டச் சங்க இதழான "சங்கச்சுடர்" ஏப்ரல் தேர்தல் சிறப்பிதழிற்காக எழுதிய நூல் அறிமுகத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சத்யபிரதா சாஹூ சார், இது நூல் அறிமுகம்தான். தேர்தல் பிரச்சாரம் கிடையாது. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.


நூல்  அறிமுகம்

 

நூல்                                  : எரியும் மண் – மணிப்பூர்

ஆசிரியர்                       : கிர்த்திகா தரன்

வெளியீடு                      : நக்கீரன் பதிப்பகம்,

                                           சென்னை 14

விலை                            : ரூபாய் 75.00

 

பெரும்பான்மை இனமான மெய்தி இனத்தவரால் தாக்குதலுக்கு உள்ளான குக்கி இன மக்களின் துயரங்களை நிகழ்ந்த இடம் மணிப்பூர். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பின்பும் இந்தியப் பிரதமர் அங்கே செல்லவில்லை. வாரம் இரு முறை தமிழ்நாட்டிற்கு வருகின்ற மோடி தேர்தலில் வாக்கு கேட்கக் கூட செல்லவில்லை. ஆனால் பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கிர்த்திகா தரன், மணிப்பூருக்கு நேரடியாக சென்று அம்மக்கள் மத்தியில் உரையாடி கவுன்சிலிங் அளித்து தன் அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அம்மக்களின் வலியை உணர்ந்து கொள்ள இந்த நூல் உதவிகரமாக இருக்கும்.

 

நூலிலிருந்து சில பகுதிகள்

 

மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்ல ப்ளைட் வசதி உண்டு. ஆனால் இம்பாலில் இருந்து குக்கிகள் வாழும் பகுதிகளுக்கு மருந்து உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி தர மாட்டார்கள் என்பதால் நாகாலாந்து சென்று அங்கிருந்து சேனாபதி வழியாக காங்போக்பி மாவட்டத்திற்கு வந்தோம்.

*********

அங்கே கேஸ் அடுப்பு இருந்தாலும் சிலிண்டர் ப்ளாக்கில்தான் கிடைத்தது. எல்லோராலும் வாங்க முடியாது என்பதால் விறகுகளைக் கொண்டுதான் சமையல்.

 

ஒரு சமூக சேவை நிறுவனத்தின் நிர்வாகி அந்த பெண்மணி. எனது அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்ட கவலை ஒரு புறம், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான அண்ணி பற்றிய கவலை. பத்திரமான இடம் நோக்கி செல்கிற போதே கலவரக்காரர்கள் வந்து விட்டார்கள். இடிபாடுகளுக்குள் பதுங்கி அமர்ந்துள்ளார். இரவில் சிறு சத்தம் கூட பெரிய கலக்கத்தை அளித்துள்ளது.

*****

இம்பாலுக்கு அருகே உள்ள கிராமத்தை மே 3 ம் தேதி சூறையாடத் தொடங்கினார்கள். ஒரு பொருளைக் கூட விட்டு வைக்கவில்லை. கணவர் கலவரத்தில் இறந்து போனார். கணவரின் உடலோடு இருக்க நினைத்தேன். ஆனால் நிலைமையைப் பார்த்ததும் ஊர்க்காரர்களோடு ஓடி வந்து விட்டேன். என் கணவருக்கு இன்று வரை இறுதிச்சடங்கு நடக்கவில்லை.

*****

இன்னொரு இளம்பெண், தன் கிராமம் எரியூட்டப்பட்டதால் ஒரு வாரம் மலையில் நீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்ததைச் சொன்னார். மற்றொரு பெண்ணோ அழுது கொண்டே இருந்தார். அவரால் ஏதும் பேசவே முடியவில்லை.

******

முகாமில் மெண்டல் ஹெல்த் கேம்ப் நடத்தினோம். என்னுடன் வந்த மன நல மருத்துவர் அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். “தூங்க முடியாதவங்க இங்க வாங்க” என் நான் சொல்ல பலர் வந்து விட்டனர். ஒவ்வொருவரும் கண் மூடி பல நாட்கள் ஆனது என்றார்கள்.

*******

பக்கத்திலிருக்கும் முகாமிற்கு சென்றோம். அது பழைய இடிந்த சர்ச். பெரிய ஜன்னல்களை திரை போட்டு மறைத்திருந்தனர். ஒரே ஹாலில் பலர் இருப்பதால் ஸ்காபிஸ், வைரஸ் அவுட்பிரேக் இரண்டும் தொடங்கியிருந்தது.

*******

சமீப காலங்களில் அரசு பட்ஜெட்டில் மலைப்பகுதிகளுக்காக மிகக் குறைந்த தொகையை  ஒதுக்கியுள்ளது அதாவது 3000 கோடி ரூபாய் சமதளப் பகுதிக்கு என்றால் 200 கோடி ரூபாயை மலைப்பகுதிக்கு ஒதுக்குவார்கள். பிறகெப்படி சாலையை செப்பனிடுவது? வளர்ச்சியை கொண்டு வருவது?

*****

பல பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிகளின் நிலையும் மாணவர்களின் கல்வியும் என்ன ஆகும்?

******

மலை உச்சிக்கு சென்ற போது அங்கே வயதான ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. மிகத் தள்ளாத வயது. எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்ட பொது மலை தாண்டி மேத்தி எல்லையில் கிராமம் இருக்கிறது. அங்கு எப்பொழுதும் தாக்குதல் அபாயம் உண்டு. வயல், காடுகள் அங்கிருந்ததால் இத்தனை நாள் காலி செய்ய யோசித்துள்ளனர். இப்போது அவர்களும் தங்க முடியாத நிலை.

*******

கலவரக்காரர்கள் கிராமத்தை எப்படி அழித்திருந்தார்கள் என்றால் செங்கல் குவியல்கள் மட்டுமே இருக்கும் இடமாக அந்த கிராமத்தை மாற்றியிருந்தனர். பெட்ரோலை கேன் கேனாக எடுத்துக் கொண்டு ஊற்றினால்தான் இது சாத்தியம். ஆயிரக்கணக்கானவர்கள் ஆயுதத்தோடு வந்து அழித்திருப்பது புரிந்தது.

******

ஒருவர் ஐந்து மலைகளைக் கடந்து வந்ததாக தெரிவித்தார். என் கணவரை, பிள்ளைகளைக் கொன்றார்கள். வாய் பேசாத ஆடு, மாடுகள் என்ன பாவம் செய்தன? அதை உயிரோடு கொளுத்த எப்படி மனம் வந்தது “ என்றார் மற்றொருவர்.

******

மருத்துவமனை என்பதால் எங்களை தாக்க மாட்டார்கள் என்று நினைத்து அலட்சியமாக இருந்து விட்டே. ஆனால் எங்கள் போன் நம்பர்கள் மூலம் நாங்கள் கண்காணிக்கப்பட்டு எங்கள் வீடுகள் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.

*********

இதை எழுதும் போது மணிப்பூரில் கடும் ஆயுதங்கள் தாங்கிய ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். அவர்களை விடுவிக்கக் கோரி மீரா போய்பா அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்கள் போராட்டத்தில்  குதித்துள்ளனர். மீரா போய்பா எனில் தீவட்டி ஏந்திய பெண்கள் என்று அர்த்தம். ராணுவம் பெண்கள் மீது நிகழ்த்தும் அட்டகாசங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 1077 ல் உருவாக்கப் பட்ட அமைப்பு. அது இன்று திசை மாறி விட்டது.

*****

டாக்டர் சாங்க்லாய் அவர்களைச் சந்தித்தேன். 13 வாகனங்கள், மூன்று அடுக்கு கட்டடம், மேலே அலுவலகம், கீழே வீடு, சர்ச் வளாகம் என வசதியாக வாழ்ந்தவர். இக்கலவரம் அவரையும் வீதிக்குக் கொண்டு வந்து விட்டது. கலவரம் நடந்த போது கூட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை பாதுகாக்கலாம் என்று பார்த்தேன். கூட்டம் நெருங்க நெருங்க எதற்கும் அட்ங்காத கூட்டம் என்று தெரிய ஆரம்பித்தது. தப்பிப்பதற்குள் பல விஷயங்கள் நடந்து விட்டது. சில சர்ச்சுகளில் பெண்கள் பிரேயர் செய்யும் நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதை மெல்லிய குரலில் சொன்னார். முட்டி போட்ட நிலையில் பெண்கள் இறந்திருப்பதைப் பார்த்து மனம் உடைந்ததாக தெரிவித்தார்.

*****

இம்பால் பகுதியிலிருக்கும் சர்ச்சுகளை இடித்து நொறுக்கியுள்ளனர். இன்று பள்ளத்தாக்கு பகுதியில் ஒரேயொரு தேவாலயம் கூட இருக்க வாய்ப்பில்லை.

*****

ஒரு மணி நேரப்பயணத்தின் போது அந்த ஆட்டோ டிரைவர் ஒரு சம்பவத்தை சொன்னார். குக்கி பெண்ணொருவர் தப்பித்து மீரா போபாய் அமைப்பிடம் வந்து சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணை அவர்கள் குண்டர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மலை உச்சிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.

******

இன்று குக்கி மெய்தி இன மக்களை ஒன்று படுத்த காந்திஜி போன்றொரு தலைவர் தேவைப்படுகிறார். ஆனால் கலவரத்தைத் தூண்டுபவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்.

******

போகும் வழியில் ஒரு கட்டடம் பார்த்தேன். பலத்த பாதுகாப்பு,  வாச் டவர் எல்லாம் இருந்தது. பாஜகவின் கட்சி அலுவலகம். மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் அலுவலகத்திற்கு கச்சிதமான பாதுகாப்பு.

******

மணிப்பூர் பற்றி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடும் போது சத்தமில்லாமல் ஒரு பில் பாஸானது. அது மைனிங் எனப்படும் சுரங்கத்துறை பில். இதுவரை அட்டாமிக் மினரல் எனப்படும் அணுசக்தித் துறையில் உபயோகப்படும் கனிமச்சுரங்கங்கள் தனியார் துறைக்கு தரப்படவில்லை. அணுசக்தி தயாரிக்கப்படும் கனிம்ங்களை தனியார்வ்சம் கொடுப்பதற்கான மசோதா அது.அதாவது மணிப்பூர் சிக்கல்களை பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த ஊருக்கு இன்னொரு சிக்கலை கொடுக்கும் மசோதாவை சத்தமில்லாமல் நிறைவேற்றும் அரசை என்னவென்று சொல்வது?

*****

மணிப்பூர் சிக்கலை அரசு ஒரு சில நாட்களில் தீர்க்க முடியும். ஏன் தீர்க்காமல் வைத்திருக்கிறது? அவர்கள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பழங்குடியினர் முழுதும் வெளியேறாதவரை இந்த சிக்கலை தீர்க்காது என்றே நினைக்கிறேன்.

*****

மணிப்பூரை நான் ஒரு மாடலாகத்தான் கவனித்தேன். அப்பாவி மக்களை அரசியலுக்கான கருவியாக மாற்றி இன்னொரு இனத்துக்கான எதிரியாக மாற்றி விட முடியும் என்பதை மணிப்பூர் நிரூபித்துள்ளது. மணிப்பூர் மாடல் இந்தியா முழுமைக்கும் பரவினால் அதன் விளைவுகளையும் அழிவுகளையும் தாங்க முடியாது.

 

மேலே உள்ளதெல்லாம் பொது வெளியிலோ சமூக ஊடகங்களிலோ நாம் அறியாத தகவல்கள்.  படிக்கும் போதே நெஞ்சம் கலங்குகிறது. இக்கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை பல சம்பவங்கள் மூலம் நூலாசிரியர் உணர்த்துகிறார். நூலின் அட்டைப்படமும் உள்ளே இருக்கும் புகைப்படங்களும் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

 

கலவரத்துக்கான பின்னணி என்ன என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்தது என்பதையும் அம்பலப்படுத்துவதாக நூல் அமைந்துள்ளது. மணிப்பூர் மாடல் இந்தியா முழுதும் பரவினால் என்ன ஆகும் என்ற கேள்வியை ஆசிரியர் கேட்கிறார்.

 

குஜராத் மாடல்தான் மணிப்பூரிலும் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்திடக் கூடாது. இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்ட தயங்க மாட்டார்கள். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் உணர்த்தும். வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களை கண்டிப்பாக நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும்….

 

இந்தியப் பிரதமரே செல்லாத மணிப்பூருக்கு உயிரை பணயம் வைத்து சென்று தன் அனுபவங்களை இந்நூல் மூலமாக ஆவணமாக்கிய திருமதி கிர்த்திகா தரன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.