Tuesday, July 4, 2023

கோட்சே கூட்டத்தின் சூழ்ச்சியும் சதியும்.

 



 

நூல் அறிமுகம்

 

நூல்                                                     : நாதுராம் கோட்சே –    உருவான வரலாறும்

                                                                இந்தியா குறித்த அவனது பார்வையும்

 

ஆசிரியர்                                          : திரேந்திர கே ஜா

தமிழில்                                             :  தமிழில் இ.பா.சிந்தன்

வெளியீடு                                         : எதிர் வெளியீடு

                                                                பொள்ளாச்சி

விலை                                                : ரூபாய் 500.00

 

 

ஆன்மீக அரசியல், நிழல் ராணுவங்கள் என்று சங் பரிவார அமைப்புக்களை, அவற்றின் சதிகளை செயல்பாடுகளை அம்பலப் படுத்திய நூல்களை எழுதிய திரேந்திர.கே.ஜா அவர்களின் நூல். முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் கடின உழைப்பால் நம்மிடம் தமிழில் பேசுகிறது.

 

இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி “சூழ்ச்சி” என்றும் இரண்டாம் பகுதி “சதி”  என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

 

முதல் பகுதியின் பக்கங்களை தள்ளுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதற்கு நூலாசிரியரோ, மொழி பெயர்ப்பாளரோ காரணம் அல்ல. ஏனென்றால் முதல் பகுதி கோட்சேவின் ஆரம்ப கால வாழ்வை சொல்கிறது. கோட்சேவின் மந்தம் நூலிலும் எதிரொலிக்கிறது.  எந்த ஒரு வேலையையும் செய்ய உடல் வணங்காத, ஆனால் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதனாகவே கோட்சே இருந்திருக்கிறான்.

 

மகாத்மா காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டவனின் வாழ்க்கை சாவர்க்கரின் சகவாசத்தால் திசை மாறுகிறது.  மதவெறி மனதில் ஊறுகிறது. மகாராஷ்டிராவின் பேஷ்வாக்களைப் போல இந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோட்சே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கரின் இந்து மகா சபை ஆகிய இரு அமைப்புக்களிலும் செயல்படுகிறான்.

 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை ஆகிய இரண்டும் தனித்தனி அமைப்புக்கள் போல காட்சியளித்தாலும் இரண்டின் நோக்கங்களும் ஒன்றே என்பதையும் இந்துக்கள் மட்டுமே இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும் என்பதையும் இதர மதச் சிறுபான்மையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இரண்டு அமைப்பிறகும் வேறுபாடுகள் கிடையாது என்பதை நூல் விரிவாக பேசுகிறது.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பாடப்படும் பாடலோடுதான் கோட்சே இந்து மகா சபை கூட்டத்தை துவக்குவான் என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களையும் நடத்துவான் என்பதும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான ஹெட்கேவர் இந்து மகா சபையின் துணைத்தலைவர் என்பதும் இரண்டு அமைப்புக்களும் வேறல்ல என்பதை உணர்த்தும்.

 

இந்து ராஜ்ஜியம் அமைவதற்கு காந்திதான் தடையாக இருப்பார் என்று கோட்சே நீண்ட நாட்களாகவே கருதி வந்தான் என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் நூல், காந்தியே தற்கொலை செய்து கொள் என்று மகாத்மா காந்தி நடத்திய ஒரு போராட்டத்தின் போது கூச்சலிட்டான் என்பதையும் சொல்கிறது.

 

கோட்சேவைப் பற்றி மட்டும் இந்த நூல் பேசவில்லை, கோட்சேவுடன் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நாராயன் ஆப்தே, இருவருக்குளான நட்பு ஆகியவற்றைப் பற்றியும் பேசுகிறது. கோட்சே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானவன் என்றும் நாராயண் ஆப்தே பெண்களை வஞ்சிப்பவன் என்பதும் தெரிகிறது. சாவர்க்கரின் அரசியல் (மன்னிப்பு உட்பட) நூல் விவரிக்கிறது.  கோட்சே பத்திரிக்கையாளர் அவதாரமெடுத்து நச்சு பரப்பியதையும் நூல் முழுமையாக பதிவு செய்துள்ளது. அதிலே பிரச்சினை வந்த போது சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்கவும் அபராதம் செலுத்தவும் அவன் தயங்கவில்லை

 

நூலின் இரண்டாம் பகுதி ஒரு துப்பறியும் நூலுக்கு இணையான வேகத்தில் செல்கிறது. இந்தியாவை இந்து நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக மத வெறி கொண்டலைந்த கோட்சே ஆப்தே கூட்டாளிகள், ஜின்னாவை கொல்ல வேண்டும், பாகிஸ்தான் செல்லும் ரயிலை தகர்க்க வேண்டுமென்று திட்டமிட்டு நிதி சேகரிக்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடியவில்லை அதனால் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக ஆட்களை சேர்க்கிறார்கள்.

 

ஆப்தே இத்திட்டத்தில் தீவிரமாக இருக்க கோட்சேவோ பட்டும் படாமல்தான் இருக்கிறான். சாவர்க்கரை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டு புறப்படுகின்றனர். மதன் லால் பக்வா என்பவனை அவனுக்கு தெரியாமலேயே காந்தியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். கடைசி நேரத்தில் அவன் பயந்து போய் பின் வாங்க, கையெறி குண்டை அவன் வீசினால்  அந்த குழப்பத்தில் மற்றவர்கள் சுட்டு விடுவார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. ஜனவரி 20 அன்று பக்வா குண்டை வீச, மற்றவர்கள் எதுவும் செய்யாமல் முயற்சி தோற்றுப் போகிறது. அவன் மட்டும் மாட்டிக் கொள்கிறான்.

 

அதன் பின்பு மகாத்மா காந்தியை சுடுவதென்று கோட்சே முடிவு செய்கிறான். அந்த கொடுமையையும் நிகழ்த்துகிறான். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களின் வழக்கில் மக்களின் ஆதரவு கிடைத்தது போல தனக்கும் இந்துக்களின் ஆதரவு கிடைத்து பெரிய ஆளாகி விடலாம் என்பதுதான் கோட்சேவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை. மக்களின் எதிர்ப்பு மட்டுமே கிடைத்தது.

 

அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ் ற்கும் சம்பந்தம் கிடையாது என்று சொன்னதெல்லாம் பொய் என்பது பின்பு நடைபெற்ற சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் மூலம் அம்பலமானது என்பதை நூல் பதிவு செய்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது முன்பே தெரியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் ஒரு கூட்டத்தில் பேசிய போது பூடகமாக தெரிவித்துள்ளார் என்பதையும் நூல் பதிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பட்டியலையோ வரவு செலவு கணக்குகளையோ பராமரிக்காமல் இருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்குத்தான் என்கிறது நூல்.  கோட்சே வைத்திருந்த கணக்கு நோட்டு கிடைத்ததால் அவனது கூட்டாளிகள் சிக்கிக் கொண்டனர் என்பதோடு இணைத்துப் பாருங்கள்.

 

காந்தியின் கொலை வழக்கின் போது  யாரோ ஆங்கிலத்தில் தயாரித்து கொடுத்த உரையைத்தான் கோட்சே படித்தான் என்றும் அதன் மூலம் தன்னை தியாகியாக காண்பித்துக் கொள்ள முயன்றான் என்பதையும் நூல் உணர்த்துகிறது.  தூக்கு மேடை ஏறுவதற்கு முன்பு கூட கடைசியாக கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனை பாடலை கோட்சே பாடியிருக்கிறான். அகண்ட பாரதம் உருவான பின்பே சிந்து நதியில் தன் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று கோட்சே சொன்னதால் அது இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பரப்பட்டுள்ள செய்தியும் ஒரு கட்டுக்கதையே என்பதை நூல் சொல்கிறது. எப்படி? நூலை படித்து விடுங்களேன்.

 

இந்தியாவில் இந்துத்துவ கொள்கைகளின் தோற்றத்தையும் அது எப்படி மகாத்மா காந்தியின் கொலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் தன்னை ஒரு நாயகனாக உருவாக்கிக் கொல்லவே கோட்சே காந்தியை கொலை செய்தான் என்பதையும் மிகவும் விளக்கமாக சொல்கிறது இந்நூல்.  மொழியாக்கம் என்ற உணர்வே வராத அளவிற்கு சிறப்பாக தமிழில் தந்துள்ள தோழர் இ.பா.சிந்தனுக்கும் கருத்துக்களை முடக்கும் ஆட்சியாளர்கள் இருப்பினும் இந்த நூலை வெளியிட்ட எதிர் வெளியீடு தோழர் அனுஷிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

பின் குறிப்பு : திருமணம் ஆனவன் என்பதை மறைத்து நாராயண் ஆப்தேவால் ஏமாற்றப்பட்ட பெண் மனோரமா என்ற பெண்ணும் மதன்லால் பக்வாவை மிகவும் நேசித்த செவாந்தி என்ற பெண்ணும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் துயரத்தை அடிப்படையாகக் கொண்டே புனைவுகளை உருவாக்க வேண்டுமென்ற தூண்டுதல் வருகிறது.

 

No comments:

Post a Comment