தோழர் ஆர்.சாவித்ரி - வேலூர் மாவட்ட பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை வேலூர் மாவட்டத்தில் உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் பிரதானமான பங்களிப்பை நல்கியவர். அவர் இன்று மாலை மறைந்தார் என்ற துயரச் செய்தி சற்று முன் கிடைத்தது.
அஞ்சல் ஊழியராக பணியாற்றியவர் ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தன்னை அரசியல், சமூகப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.
பாரதி புத்தகாலயத்தின் வேலூர் பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவர். பல மாநாடுகளில் புத்தகக் கண்காட்சி அமைக்க உற்சாகம் தந்தவர்.
எங்கள் சங்கத்தோடு நெருக்கமான உறவு கொண்டவர். எங்களின் ஏராளமான இயக்கங்களில் பங்கேற்றவர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி பணியிடங்களில் பாலியல் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு குழு அமைக்க வேண்டும். அதிலே நிறுவனத்தில் உள்ளவர்களைத் தவிர வெளியார் ஒருவரும் இடம் பெற வேண்டும். அப்படி எங்கள் வேலூர் கோட்டத்தின் குழுவில் நீண்ட காலம் இடம் பெற்றவர் அவர். அவர் பங்கேற்ற விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நியாயத்தின் பக்கம் உறுதியாக நின்றவர்.
தன் வாழ்நாளுக்குப் பிறகு தன்னுடைய வீடு மார்க்சிஸ்ட் கட்சிக்கே சொந்தம் என்று எழுதி வைத்தவர்.
தோழர் ஆர்.எஸ் என்றழைக்கப்படும் தோழர் சாவித்ரி அவர்களின் மறைவு வேலூர் மாவட்டத்தின் முற்போக்கு இயக்கங்களுக்கு பேரிழப்பு.
செவ்வணக்கம் தோழர் ஆர்.எஸ்
பிகு ;
முதல் படம் இரண்டாண்டுகள் முன்பாக தொலைபேசி ஓய்வூதியர் சங்கம், தோழர் ஆர்.எஸ் அவர்களை கௌரவித்த போது எடுத்த படம்.
இரண்டாவது படம் பத்தாண்டுகள் முன்பாக மகளிர் மசோதாவை அமலாக்க வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் சார்பாக நடந்த கையெழுத்து இயக்கத்தை தோழர் ஆர்.எஸ் துவக்கி வைத்த போது எடுத்த படம்.
மூன்றாவது படம் 2011 ல் வேலூரில் நடைபெற்ற ஐந்தாவது எல்.ஐ.சி மாநில மகளிர் மாநாட்டில் தோழர் ஆர்.எஸ், எங்கள் மூத்த தலைவர் தோழர் என்.எம்.எஸ் அவர்களால் கௌரவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.
No comments:
Post a Comment