என்று தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாடலில் எழுதியிருப்பார் மகாகவி பாரதியார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் விளைந்த மூவர்ணக் கொடியை பாதுகாக்க தனது இன்னுயிரை ஈந்தார் தியாகி திருப்பூர் குமரன். அந்நியர் ஆட்சிக் காலத்தில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தன்னுயிரை பணயம் வைத்து தேசியக் கொடியை பறக்க விட்டார் பாரதியின் சீடரான ஆர்யா என்கிற பாஷ்யம்.
லண்டன் தோட் சிங்
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப் பட்டனர். இது அன்றைய இளைஞர்களின் நெஞ்சில் கோபத்தீயை பற்ற வைத்தது. அதனை யொட்டி பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் என்ற நகரில் நீதிமன்றக் கட்டிடத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, தேசியக் கொடியை பறக்க விட வேண்டுமென்று அந்த ஊரின் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனால் நீதிமன்றக் கட்டிடத்தை சுற்றிலும் ராணுவம் குவிக்கப் பட்டது. அதனால், யாரும் வரவில்லை. ஆனால், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்ற இளைஞன் அந்த முடிவை எப்படியும் நிறை வேற்றியே தீருவது என முடிவுசெய்து, தேசியக் கொடியுடன் கட்டிடத்தின் உச்சிக்கு சென்று, யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு தேசியக் கொடியை பறக்கவிட்டார். அப்போது துப்பாக்கிக் குண்டுகள் அவரை நோக்கி பாய்ந்தபோதும், தன் நோக்கத்தை அவர் நிறைவேற்றினார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவரிடம், நீதிபதி உன் பெயர் என்ன? என்று கேட்டதற்கு, ‘லண்டன் தோட் சிங்’ (லண்டனை உடைக்கும் சிங்) என்று கூறி மாவீரன் பகத்சிங்கின் தியாகத்தை புகழ்ந்துரைத்தார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளைஞர் சுர்ஜித்து தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தினங்களில் ஒருவர்.
பாசிச அபாயத்திலிருந்து பாதுகாத்த பதாகை
மே தின தியாகிகளின் குருதியில் தோய்த்தெடுத்து பறக்க விடப்பட்ட கொடி செங்கொடி. இரண்டாம் உலகப் போரின் போது, சோவியத் செஞ்சேனை ஹிட்லரின் பாசிசப் படையை தோற்கடித்து, பூவுலகை பாதுகாத்தது. ஹிட்லரின் படைகளை ஜெர்மனி வரை விரட்டிச் சென்று பாசிசத்தை முறியடித்த செம்படை மனிதகுலத்தின் வெற்றியை உலகிற்கு அறிவிக்கும் வகையில், 1945 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஒரு சோவியத் வீரன் பறக்கவிட்ட காட்சி இப்போதும் சிலிர்ப்பூட்டும் ஒன்றாகும். அந்த கொடியேற்றம் இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது மட்டுமல்ல, பாசிச அபாயத்திலிருந்து உலகை பாதுகாக்கும் பதாகையாக மாறியது.
திருச்சி சிங்காரவேலும் கீழப்பசலை சிகப்பியும்
1946 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி திருச்சியில் சிங்காரவேல் என்ற தொழிலாளியின் வீட்டில் பறந்து கொண்டிருந்த செங்கொடியை இறக்குமாறு ஆளும் வர்க்கத்தால் ஏவிவிடப்பட்ட ரவுடிகள் கூச்சலிட்டனர். கொடியை இறக்க முடியாது என்று முழக்கமிட்டார் சிங்காரவேல். இதனால் வெட்டிக் கொல்லப்பட்டார் சிங்காரவேல். அவரது உடலை பொன்மலை தொழி லாளர்கள் உட்பட 20 ஆயிரம் பேர் ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி நிகழ்ச்சி செய்தனர். அப்போது நடந்த தடியடியில் 5 தொழிலாளர்கள் காய மடைந்தனர். ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழப்பசலை என்ற கிராமம் கம்யூனிஸ்ட் கிராமம் என்றே அழைக்கப் பட்டது. அன்றைய ஆளும் கட்சியும் காவல்துறையும் சேர்ந்து கொண்டு கீழப்பசலையில் செங்கொடி பறந்து கொண்டிருந்த கம்பங்களை வெட்டி வீழ்த்தினர். அப்போது செங்கொடியை காத்து நிற்க சிகப்பி, பேச்சி, முத்தம்மாள், உடையம்மை, ராக்கம்மாள் ஆகிய பெண் கம்யூனிஸ்டுகள் தலைமையில் நூற்றுக்கணக் கான பெண்கள் திரண்டு, கையில் கிடைத்த பொருட் களைக் கொண்டு கொடியை இறக்க வந்தவர்களை ஓடஓட விரட்டினர். அன்றிரவு அதே கிராமத்தில் கூட்டம் போட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் செங்கொடியை யும் அவர்கள் இழிவாக பேசிய போது, பாய்ந்து சென்று தாக்கியது பெண் கம்யூனிஸ்டுகளின் படை. இதைத் தொடர்ந்து, அந்த கிராமமே சூறையாடப்பட்டது. அதை யடுத்து காவல்துறை நடத்திய தாக்குதலில் படுகாய மடைந்த கோடாங்கி முத்துத் தேவர், கருப்பன் என்ற இரு தோழர்கள் மாண்டனர்.
செங்கொடியை தாழ்த்த மறுத்ததால் ஜோதியாயினர்
வெண்மணி கிராமத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 44 கண்மணிகள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு எங்களை மனிதர்களாக்கிய செங்கொடியை ஒரு போதும் தாழ்த்தமாட்டோம் என்று உறுதியோடு அவர்கள் இருந்தது ஒரு காரணமாகும். பி.சீனி வாசராவ் தலைமையிலான விவசாயிகள் சங்கம் வீறு கொண்டு எழுந்த காலம் அது. செங்கொடி பறக்காத கிராமமே கிழக்கு தஞ்சையில் இல்லை என்று கூறும் அளவிற்கு சுரைக்கொடி படர்ந்த குடிசைகள் அனைத்திலும் பற்றிப் படர்ந்து பறந்து ஜொலித்தது செங்கொடி. நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில் நிலவுடமையாளர்கள் சங்கம் அமைத்து போட்டிக்கு மஞ்சள் கொடியை பறக்க விட்டனர். வெண்மணி விவசாயத் தொழிலாளர்களிடம் செங்கொடியை இறக்கி விட்டு, நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் மஞ்சள் கொடியை ஏற்றினால் கேட்பதை விட அதிகமாக கூலி தருகிறோம் என்றனர் நிலப்பிரபுக்கள். ஆனால், எங்களை மனிதர்களாக்கிய செங்கொடியை ஒருபோதும் இறக்கமாட்டோம் என எதிர்த்து நின்றனர் கம்யூனிஸ்டுகள். இதனால் ஆத்திரமடைந்த குண்டர் படை வெண்மணி தியாகிகளை கொளுத்திக் கொன்றது. இன்றைக்கும் அவர்களை எரித்த நெருப்பின் நிறத்தோடு அனைத்து கிராமங்களிலும் சுடர்ந்து பறக்கிறது உதிர நிறக்கொடி.
அன்ன வயலில் கொடியுடன் அன்னை ஜானகி
மதுரை மாவட்ட கிராமங்களில் குத்தகை விவசாயிகளின் நிலங்களை நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள் பறிக்க முயன்றபோது, அன்னை கே.பி.ஜானகியம்மாள் அந்த வயலில் செங்கொடியை பறக்க விட்டு, அருகிலே கம்பீரமாக நிற்பாராம். செங்கொடி லட்சக்கணக்கான சிறு விவசாயிகளின் நிலத்திற்கு வேலியாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் உரிய கூலி கொடுக்காமல், வெளியூர் ஆட்களை வைத்து அறுவடை செய்ய முயன்றால் அந்த வயலில் செங்கொடி பறக்கும். கூலி உடன்பாடு ஏற்படுகிற வரை அந்தக் கொடியின் மீது யாரும் கை வைத்துவிட முடியாது. இன்றைக்கு நூறு நாள் வேலைக்கு கூலி கேட்டு போராடுகிற விவசாயத் தொழிலாளர்களின் கைகளில் பறக்கிறது அந்தச் செங்கொடி.
இரண்டுமே ஒன்றுதான்
தன்னை ஒரு கம்யூனிஸ்டாக பிரகடனம் செய்து கொண்டதாலேயே அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் சார்லி சாப்ளின். ஹிட்லர் வாழ்ந்த காலத்திலேயே அவனை, தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் மூலம் கிழித்து தொங்கவிட்டவர் சார்லி சாப்ளின். அவர் ஒரு திரைப்படத்தில், செங்கொடியின் பெருமையை சித்தரித்து இருப்பார். ஒரு ஆலையில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான தொழிற்சங்கத்தி னால் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு வெற்றிகர மாக நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினர் கம்யூனிஸ்டுகளை வலைவீசி தேடிக் கொண்டிருப் பார்கள். அப்போது, சார்லி சாப்ளின் தெருவில் நடந்து சென்று கொண்டிருப்பார். கதைப்படி அவர் கம்யூனிஸ்டு அல்ல; ஒரு தொழிலாளி மட்டுமே. நெடுஞ்சாலையில் ஒரு டிரக் வண்டி பாரம் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருக்கும். வண்டியின் பின்னால் ஒரு சிகப்புத் துணி கட்டப்பட்டிருக்கும். அந்த துணி கீழே விழுந்து விடும். விபத்து நேர்ந்து விடுமே என்ற பதற்றத்தில் சாப்ளின், அந்த சிகப்புத் துணியை எடுத்துக் கொண்டு டிரக் வண்டியின் பின்னால் ஓடுவார். இதைப்பார்த்த காவல்துறையினர், ஆஹா! சிக்கிவிட்டான் கம்யூனிஸ்டு என்று அவரை பாய்ந்து சென்று பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி விடுவார்கள். இவர்தான் வேலைநிறுத்தத்தின் மூலகர்த்தா என்று குற்றம்சாட்டுவார்கள். அப்பாவியாக கூண்டில் நின்று கொண்டிருக்கும் சாப்ளினைப் பார்த்து நீதிபதி, நீ ஒரு கம்யூனிஸ்டா? என்றுகேட்பார். அதற்கு சாப்ளின், இல்லை நீதிபதி அவர்களே! நான் ஒரு ஹியுமனிஸ்ட் என்பார். அதாவது, நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, மனிதாபிமானி என்பார். அதற்கு நீதிபதி, Both are same (இரண்டும் ஒன்று தான்) என்பார். ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் ஒரு சிறந்த மனிதாபிமானி யாகத்தான் இருக்க முடியும். ஒரு சிறந்த மனிதாபி மானி கம்யூனிஸ்டாக மாறுவது தவிர்க்க முடியாதது என்பதை அற்புதமாக சித்தரித்து இருப்பார் மாமேதை சார்லி சாப்ளின்.
மேடு பள்ளம் இருக்குமிடத்தில்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒருமுறை பாடல் எழுதுவதற்காக ஸ்டுடியோவிற்கு சைக்கிள் ரிக்சாவில் சென்று கொண்டிருந்தாராம். சாலையில் ஒரு இடத்தில் சிகப்பு கொடி நடப்பட்டிருக் கிறது. இதைப் பார்த்த மக்கள் கவிஞர், ரிக்சா தொழிலாளியிடம், எதற்கு இந்த கொடி பறக்கிறது என்று கேட்டாராம். இந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது. பார்த்துப் போக வேண்டும் என எச்சரிக்க இந்தக் கொடி பறக்கிறது என்றாராம் ரிக்சா தொழி லாளி. அதற்கு பட்டுக்கோட்டையார், ஆம்.. உண்மை தான். எங்கேயெல்லாம் மேடும் பள்ளமுமாக இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்தக் கொடி கட்டாயம் பறக்கும். அது சாலையாக இருந்தாலும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி என்றாராம்.
ஆதவனை அடிமையாக்கியே...
சூரியச் சிவப்பின் ஜொலிப்புடன் செங்கொடி பட்டொளி வீசிப் பறப்பதை பாவலர் வரதராஜன், “ஆதவனை அடிமையாக்கியே செங்கொடி ஜோதி வீசி பறக்குது பாரீர், இந்த சேதிக் கேட்டு உழைக்கும் வர்க்கமே, ஆடிப் பாடி களிக்கிது பாரீர்” என்று கம்யூனிஸ்ட் இயக்க மேடைகளில் பெருங்குரலெடுத்து பாடுகிறபோது, உழைக்கும் மக்கள் உணர்வின் உச்சத்திற்குச் செல்வார்கள். அடக்குமுறை காலத்தில் மதுரையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இரட்டை தியாகிகள் மாரி -மணவாளன். இவர்களில் மணவாளன் ஒரு சிறந்த பாடலாசிரியர். தோழர் சங்கரய்யா, மணவாளன் எழுதிய ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே, தோழா, என் தோழா’ என்ற பாடலை கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் சிந்துவார். மணவாளன் எழுதிய புகழ்பெற்ற மற்றொரு பாடல், ‘செங்கொடி ஏந்தி வாரீர்’ என்ற பாடல் புகழ்பெற்றது.
அதுபோல் மதுரை தோழர் எம்.ஆர்.எஸ்.மணி இயற்றிய, ‘செங்கொடி என்றதுமே ஒரு ஜீவன் பிறக்குதம்மா, அது நம்கொடி என்றதுமே புது நாதம் பிறக்குதம்மா’ என்ற பாடலாகும். மதுரை மண் தந்த மகத்தான வீரர்களில் ஒருவரான தூக்கு மேடைத் தியாகி பாலு, அடுத்த நாள் காலை தூக்கிலிடப்பட இருந்த நிலையில், இரவு முழுவதும் ‘செங்கொடி என்றதுமே ஒரு ஜீவன் பிறக்குதம்மா’ என்ற பாடலை பாடிக் கொண்டேயிருந்தார்.
உயிரில் கட்டப்பட்டு உயரப் பறக்கும் கொடி
ஏனைய பல கொடிகள் கயிறில் கட்டப்பட்டு பறக்கலாம். ஆனால், உதிர நிறச் செங்கொடி, உயிரில் கட்டப்பட்டு பறந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆலையின் வாசலில் செங்கொடி பறந்து கொண்டிருந்தால், அங்கே உழைப்பவர்களின் உரிமைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள். ஒரு கிராமத்தில் செங்கொடி பறக்கிறது என்றால், அங்கே சமூகநீதிக்கான சமர் நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு நான்மாடக் கூடல் மாநகராம் மதுரையில் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் எழுச்சியுடன் நடை பெற உள்ளது. இதன் முன்னோட்டமாக மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான மார்ச் 23 ஆம் தேதி மாநாட்டுக் கொடி நாளாக அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் வான் நோக்கி உயரயிருக்கிறது லட்சோப லட்சம் செங்கொடிகள். ‘உழைப்பவர்க்கே இவ்வுலகம் உரியது’ என உயரப் பறக்கட்டும் செங்கொடி. இறுதி வெற்றி நமக்கே என்று காற்றின் திசைகளில் நம்பிக்கையை விதைத்து பறக்கட்டும் நம் கொடி.
நன்றி - தீக்கதிர் 23.03.2022
No comments:
Post a Comment