Wednesday, March 9, 2022

12 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் . . .

 



 இதே நாளில் 12 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு தரமான சம்பவம் நடந்தது என்பது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா?

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் நடத்தினோம்.

 மகளிர் தினத்துக்கான கோரிக்கைகள் என்று வருகிற போது மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று.

 ஆமாம். எத்தனை பேருக்கு அந்த கோரிக்கை இன்னும் நினைவில் உள்ளது?

 இன்று தமிழ்நாட்டில் உள்ள 22 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளின் மேயராக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை படிக்கும் போதாவது நகர்ப்புற உள்ளாட்சிகளில் 50 % பிரதிநிதித்துவம் உள்ளது என்பதை அறியும் போதாவது அப்படி ஒரு விகித்தாச்சார பிரதிநிதித்துவம் நம் நாட்டின் நாடாளுமன்றத்திலும் மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் இல்லை என்பதும் நினைவுக்கு வர வேண்டும்.

 பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது மகளிர் மசோதா. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மாநில சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு  33 % பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மகளிர் மசோதா முதன் முதலில் 1996 ல் தேவே கௌடா பிரதமராக இருக்கும் போது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேறவில்லை.

 அதன் பிறகு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கூட மக்களவையில் அறிமுகமானது. ஆனால் நிறைவேறவில்லை. அந்த மக்களவை முடிந்ததும் மசோதா காலாவதியாகி விட்டது.

 மன்மோகன் சிங் பிரதமராக இருக்கையில் 2008 ல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இம்முறை மாநிலங்களவையில் அறிமுகமானது. ஒரு வழியாக 9 மார்ச் 2010 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 12 வருடங்கள் ஆன பின்பும் கூட இன்னும் மக்களவைக்கு வரவில்லை.

 ஒருமித்த கருத்து வேண்டும் என்று சொல்லியே அம்மசோதாவை மக்களவைக்கு மன்மோகன் சிங் கோண்டு வரவில்லை. ஒருமித்த கருத்து இல்லாத போதுதான் 123 மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோரின் ஆட்சேபணை காரணமாக சொல்லப் பட்டது. அரசியல் உறுதி இருந்திருந்தால் இவ்விரு கட்சிகளின் எதிர்ப்பை புறந்தள்ளி மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் அதற்கான மனம் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

 இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற மனுவை வேலூர் மக்களவை உறுப்பினராக இருந்த பேராசியர் காதர் மொய்தீன் அவர்களிடம் அளித்த போது அவர்,“தங்கள் தொகுதி மகளிருக்கான தொகுதியாக மாற்றப்படுவதை பழம் தின்று கொட்டை போட்ட பெரும்பாலான வடக்கிந்திய அரசியல்வாதிகள் விரும்பவில்லை. அதனால் மசோதா மக்களவைக்கு வருவதற்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்” என்ற  உண்மையை வெளிப்படையாகச் சொன்னார்.

 மோடி ஆட்சிக்கு வந்த பின்பு மகளிர் மசோதா என்பதே மக்களுக்கு மறந்து போன ஒன்றாகி விட்டது. அதைப்பற்றி சம்பிரதாயத்திற்குக் கூட யாரும் பேசுவதில்லை.

 பெண்களின் கல்வியையே முடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பெண்களின் வேலைகளை பறிக்க முயல்பவர்கள், பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்க அனுமதிப்பார்களா என்ன?

 கனவாக, கானல் நீராக நீடிக்கும் மகளிர் மசோதா இன்னும் இரண்டு வருடங்களும் மோடி ஆட்சி தொடர்கிறவரை அப்படித்தான் இருக்கும் என்பது துயரமான யதார்த்தம்.

 இந்த ஆட்சி மாறினால்தான் மகளிர் மசோதா குறித்த விவாதமும் மீண்டும் தொடங்கும்.

 

 

No comments:

Post a Comment