Wednesday, March 16, 2022

ஏன் 28,29, மார்ச்சில்?



 *நாளொரு கேள்வி: 15.03.2022*


தொடர் எண் : *652*

*மார்ச் 28, 29 இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் - சிறப்பு கேள்வி பதில்கள்*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
#######################

*கூட்டு இயக்கங்கள் காலத்தின் கட்டளை*

கேள்வி: அகில இந்திய வேலை நிறுத்தங்களி்ன் தாக்கம் என்ன? ஏன் எல்லா தொழிலாளர்களின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படுகிறது? 

*க.சுவாமிநாதன்*

இப்படியொரு கேள்வி சிலரின் மனங்களில் உள்ளது. 

மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம், 1991 க்கு பிறகு நடைபெறும் *21 வது அகில இந்திய வேலை நிறுத்தம்.* 

1990 களில் நவீன தாராளமய கொள்கைகள் அம்லாகத் துவங்கிய போது *"De indexation of wages"* என்ற அபாயம் நமது கதவுகளை தட்டியது. எதற்கு விலைவாசி உயர்வை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டும்? எதற்கு பஞ்சப்படி (DA) தரப்பட வேண்டும்? என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பியது. முன்னாள் ஒடிசா முதல்வர் *பிஜு பட்நாயக்* தலைமையிலான ஒரு குழுவை போட்டது. அக் குழுவும் பஞ்சப்படி தருவது அரசின் கடமை அல்ல என்று கூறியது. இது பிஜு படனாயக் குரல் அல்ல. இந்தியாவுக்கு கடன் தந்த *உலக வங்கி* போட்ட நிபந்தனைகளில் ஒன்று. 

ஆனால் தொழிற் சங்கங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு, வேலை நிறுத்தங்கள்தான் அந்த அபாயத்தை தடுத்து நிறுத்தியது. இன்றும் நிதித் துறை ஊழியர்கள் பஞ்சப்படியை  3 மாதங்களுக்கு ஒரு முறையும், மத்திய மாநில அரசு ஊழியர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு விலைவாசிக்கேற்ற பஞ்சப்படி உயர்வைப் பெற்று வருகிறார்கள். இன்று பிஜு பட்நாயக் மகன் *நவீன் பட்நாயக்* ஒடிசா முதல்வர் ஆகி விட்டார். இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. பஞ்சப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. *இது அகில இந்திய வேலை நிறுத்தங்களின் குறிப்பிடத் தக்க வெற்றி.* அகில இந்திய வேலை நிறுத்தங்கள் இல்லாவிட்டால் இன்று எத்தனை பயன்கள் காவு போயிருக்கும், எத்தனை உரிமைகள் பறி போயிருக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நவீன மென் பொருள் நிறுவனங்களில் பஞ்சப்படி எங்கே இருக்கிறது? இதே நிலைமையை அரசு துறை, நிறுவனங்களிலும் ஏற்படுத்தவே முயற்சி செய்தார்கள். 

அதுபோல இன்று நாடு தழுவிய எதிர்ப்பு தேவைப்படுகிற இன்னொரு பிரச்சினையாக *புதிய பென்சன் திட்டமாக* உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் தனியாக இக் கோரிக்கையை வெல்ல முடியாது. மத்திய அரசு அல்லது மாநில அரசு மட்டங்களில் தீர்வுகள் ஏற்பட்டால்தான் உடைப்பு ஏற்படுத்த முடியும். 

தற்போது *இராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநில அரசுகள்* புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளன. இதன் பின்புலத்தில் லட்சக் கணக்கான ஊழியர்கள் வீதிகளுக்கு வந்ததால் *இமாசலப் பிரதேச அரசும்* இது பற்றி பரிசீலிக்க குழு ஒன்றைப் போட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இது புது நம்பிக்கையை தந்துள்ளது. 

இது போன்ற கோரிக்கைகள், விரிந்த இயக்கம் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும். இதுதான் அகில இந்திய வேலை நிறுத்தங்களின் முக்கியத்துவம். 

மூன்றாவது *பொதுத் துறை பாதுகாப்பு.* முந்தைய அரசுகள் தங்களது சித்தாந்த ரீதியான தாக்குதலாக  தனியார் மயத்தை முன் வைக்காமல் நட்டம், திறமைக் குறைவு, நுகர்வோர் விருப்பம் என்ற காரணங்களை சொல்லி வந்தன. ஆனால் மோடி தலைமையிலான அரசு, *தங்கள் சித்தாந்தமே பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதிரானது என்பதை ஒளிவு மறைவின்றி பிரகடனம்* செய்துள்ளது. கேந்திரமான தொழில்களில் கூட பொதுத் துறை *"குறைந்த பட்ச இருப்போடு"* (Minimum Presence) இருந்தால் போதும் என்கிறது இந்த அரசு. ஆகவே தற்போது எழுந்துள்ள தாக்குதல், ஏதோ ஒரு நிறுவனத்திற்கு ஆபத்து, ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு ஆபத்து என்ற நிலையை கடந்து விட்டது. ஆகவேதான் எந்த நியாயமும் இல்லாமல் எல்.ஐ.சி பங்கு விற்பனை அரசால் முன் வைக்கப்படுகிறது. *அரசிடம் நியாயம் இல்லை என்பது மட்டும் காரணம் இல்லை. நியாயம் தேவையில்லை என்ற இடத்திற்கு வெளிப்படையாக வந்து விட்டார்கள் என்பதுதான்.* ஆகவே இனி பொதுத் துறையைப் பாதுகாக்கிற போராட்டம் ஒரு நிறுவனம், ஒரு தொழில் என்று சுருங்கி விடாமல் பரந்த போராட்டமாக மாற வேண்டியுள்ளது.

ஆகவேதான் அகில இந்திய வேலை நிறுத்தம் தேவை ஆகிறது. இது 21 வது அகில இந்திய வேலை நிறுத்தம். ஆனால் *30 ஆண்டுகளுக்கு உலகமயத்திற்கு எதிராக நடந்தேறிய முதல் அகில வேலை நிறுத்தத்தை விட பரந்த திரட்டலுக்கான அதிக முக்கியத்துவத்தை* இந்த வேலை நிறுத்தம் பெறுகிறது.

*செவ்வானம்*

No comments:

Post a Comment