Thursday, March 31, 2022

இதுதாங்க தமிழ்நாடு

எங்கள் சேலம் கோட்டத் தலைவர் தோழர் நரசிம்மன் பகிர்ந்து கொண்ட புகைப்படமும் செய்தியும் கீழே உள்ளது.

படமும் அத்துடனுள்ள செய்தியும்

மத நல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையும் வேரூன்றியுள்ள மாநிலம் தமிழ்நாடு. எத்தனை ஆட்டுக்காரர்கள் வந்தாலும் அதனை இங்கே சிதைக்க முடியாது என்பதை மட்டுமல்ல தாமரை இங்கே கருகித்தான் போகும் என்பதைத்தான் அழுத்தமாக உரைக்கிறது. முதல்வராக தனக்கு தகுதியில்லை என்பதை ஒப்புக் கொண்ட அண்ணாமலை, பாஜகவின் வேறு யாருக்கும் கூட இங்கே முதல்வராக வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு அவர் சொன்னது போலவே ஆடு மேய்க்க சென்று விடலாம்.


 👆🏻 இந்த புகைப்படம் நேற்று சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் எடுக்கப்பட்டது. இளம்பிள்ளை பகுதி முழுவதும் அம்மன் பண்டிகையை ஒட்டி விழாக் கோலம். நகரத்தின் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை. மக்கள் திருவிழாவாக அம்மன் பண்டிகை நடக்கிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அங்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்த குழந்தைகள் தங்கள் மத நம்பிக்கை படி உடை அணிந்து பள்ளி தேர்வு எழுத கூட வரமுடியாத நிலை...

ஆனால் தமிழகத்தில் ஒரு மதம் சார்ந்த விழாவில் மாற்று மதத்தை சேர்ந்த குழந்தைகள் கூட பங்கேற்று உற்சாகமாக விளையாட கூடிய நிலை. 

இது தான் மதவாத சக்திகளின் ஆட்சிக்கும் ஜனநாயக சக்திகளின் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு. 

இது போன்று அனைத்து பகுதி மக்களும் ஒற்றுமையாக ஒரு ஜனநாயக ஆட்சியில் தான் வாழ முடியும். பெரும்பான்மை அல்லது சிறுபான்மை எந்த மதம் சார்ந்த ஆட்சியிலும் இந்த மக்கள் ஒற்றுமைக்கு சாத்தியம் இல்லை.

ஜட்ஜய்யா ரொம்பவே நல்லவரா ?

 


காலையில ஒரு செய்தியை படிச்சுட்டு கபகபன்னு சிரிச்சுட்டேன். சுப்ரீம் கோர்ட் ஜட்ஜய்யா மொட்டைச்சாமியார் மாநில வழக்கறிஞரைப் பாத்து கேட்டாரே ஒரு கேள்வி, அதுதான் சிரிப்புக்குக் காரணம்.

போராடிய விவசாயிகளை மோடியோட அயோக்கிய மந்திரி ஒத்தனோட அயோக்கிய மகன் காரேத்தி கொன்னது ஞாபகம் இருக்கில்ல! 

அந்த அயோக்கிய சிகாமணிக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துருச்சு, செத்துப் போனவங்களோட சொந்தக்காரங்க, அந்த ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்ட்டாங்க.

அப்போதான் நம்ம ஜட்ஜய்யா "ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி உபி மாநில அரசு ஏன்யா மேல் முறையீடு செய்யலை/" ன்னு கேட்டாரு.

இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே ஜட்ஜய்யா! கொலைகாரன், கொலைகாரனோட அப்பன், கொலைக்கு திட்டம் போட்டுக் கொடுத்தவன். கொலை நடக்க ஆசி கொடுத்தவன், வேடிக்கை பாத்து சந்தோஷப் பட்டவன் அம்புட்டு பேரும் ஒரே கட்சி. அவன் எப்படி ஜட்ஜய்யா அப்பீல் செய்வான்?

ரொம்ப நல்லவரா கேள்வி கேட்காம, மனிதன் படத்து ராதாரவி மாதிரி பேப்பர் வெயிட்டை தூக்கி போடுங்க. அப்போவாவது கோர்ட் மேல அந்த அயோக்கியக் கூட்டத்துக்கு பயம் வருதா பாப்போம். 

Wednesday, March 30, 2022

அர்த்தமிக்க, அழகான, அற்புதமான . . .

 இன்று மதுரையில் தொடங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாட்டில் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரான மதுரை மக்களவை உறுப்பினரான தோழர் சு.வெங்கடேசன் நிகழ்த்திய வரவேற்புரையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 மதுரையின் வரலாற்றை அறிந்த இலக்கியவாதியாகவும் உள்ளதால் அர்த்தமிக்க அவரது உரை அழகு தமிழில் அமைந்து அற்புதமான உரையாக மாறி விட்டது.

 அவசியம் முழுமையாக படியுங்கள். நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள்.



 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு மாநில 23-ஆவது மாநாடு
வரவேற்புரை;
மாநாட்டின் தலைமைக்குழு தோழர்களே,
கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களே,
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிரகாஷ்காரத், எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன் அவர்களே,
கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,
மத்திய-மாநிலக்குழு உறுப்பினர்களே,
தமிழகத்தின் அனைத்துத் திசைகளிலிருந்தும் வருகை தந்துள்ள பிரதிநிதித் தோழர்களே,
பார்வையாளர்களே,
பொது மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்களே, தோழர்களே,

உங்கள் அனைவரையும் வரவேற்புக் குழுவின் சார்பில் வணங்கி வரவேற்கிறோம்.
மதுரை வைகையால் உயிரூட்டப்பட்ட நகரம் மட்டுமல்ல, வரலாற்றால் உரமூட்டப்பட்ட நகரமும் கூட.

இந்தியா வலதுசாரி திருப்பத்தை எதிர்கொண்டிருக்கிற இந்தக் காலம், பொருளாதாரத் தாக்குதல் மட்டுமல்லாமல், தேசத்தின் பன்மைத்துவம், சமூக நீதி, முற்போக்கு மரபுகளெல்லாம் கடும் தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிற காலமாகவும் இருக்கிறது.

இம்மாநாடு நடைபெறும் மதுரை மாநகரின் வரலாறென்பது ஒற்றைத்துவ மேலாதிக்கப் போக்கிற்கு எதிராக காலம் முழுவதும் கலகம் செய்ததாகும். எங்களின் வாழ்வும், வரலாறும், நாடும் நகரமுமென அனைத்தும் எங்களின் அரசியலோடு இணைந்தது.

இந்தியர்கள் எல்லோரும், காற்றே இல்லாமல் பலூன் ஊதும் மோடியின் தற்பெருமைக் கலைக்கு ஒவ்வொரு நாளும் காது கொடுத்து களைத்துப் போயிருக்கிறோம். இதோ… உண்மையான மக்கள் வரலாற்றால் வார்க்கப்பட்ட இம்மாமதுரையின் வரலாற்றுப் பக்கங்களை உங்களை வரவேற்கும் வண்ணம் நினைவூட்டுகிறேன்.

மாபெரும் தத்துவ ஆசான் ஏங்கெல்ஸ் எழுதிய மனித குல வரலாறு பற்றிய மகத்தான நூல் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்”. இந்நூலின் முன்னுரையில் ஆதி தாய்வழிச் சமூகமானது தந்தை வழிச்சமூகமாக மாறும் காலத்தையும். பழைய கண்ணோட்டத்தின் பிரதிநிதிகளான பழைய தெய்வங்களூடே புதிய கண்ணோட்டத்தின் பிரதிநிதிகளான புதிய தெய்வங்கள் எப்படி பலவந்தமாக உள் நுழைகின்றன என்பதைப் பற்றியும் விரிவாக எழுதியிருப்பார்.

”கிளிதெம்னெஸ்த்ரா தனது காதலன் எகிஸ்தசுக்காக, அப்பொழுதுதான் ட்ரோஜன் யுத்தத்திலிருந்து திரும்பி வந்த தன் கணவன் அகமெம்னானை கொன்றுவிடுவார். ஆனால் அகமெம்னான் மூலம் பெற்ற மகனாகிய ஓரெஸ்தஸ் தந்தையின் கொலைக்குப் பழிவாங்குவதற்காக தாயைக் கொலை செய்வான்”.

கணவன் என்ற ஆணை கொலை செய்ததற்கான நியாயத்தையும், தாய் என்ற பெண்ணை கொலை செய்ததற்கான நியாயத்தையும் பற்றி விவாதிக்கப்படுகிறது. இரு கொலைகளையும் தூண்டியவர்கள் தெய்வங்கள். தாய்வழிச் சமூகத்தில் தாய் கொலைதான் மிகப்பெரியக் குற்றம். ஆனால் தந்தை வழிச்சமூகத்தின் பிரதிநிதிகளாக உருவாகத் துவங்கிய புதிய தெய்வங்கள் அதற்கு எதிராக வாதிடுகின்றன.

நீதிமன்றத்தில் தெய்வங்கள் வாக்களிக்கின்றன. வாக்குகள் இரு பக்கமும் சம அளவில் அமைகிறது. இறுதியாக நீதிமன்றத்தின் தலைவி அதீனா “தாயைக் கொன்றது குற்றமல்ல என்ற தரப்புக்கு வாக்களிக்கிறார்” அதுவே தீர்ப்பாக மாறுகிறது.

தாய்வழிச் சமூகத்து வீழ்ச்சியின் கடைசி எச்சமாக இதனை மேற்கோள் காட்டுகிறார் ஏங்கெல்ஸ். கிரேக்கக் காவியங்களே ஐரோப்பிய அறிவுலகத்தின் மூலச்சொத்து. எனவே, கிரேக்க காவியத்தை வைத்து தாய்வழிச் சமூகம் வீழ்ந்த கதையை விளக்கியிருப்பார் மாமேதை ஏங்கெல்ஸ்.

கிரேக்க மொழியில் ஆதி காவியங்கள் எழுதப்பட்ட அதே காலத்தில் உலகத்தின் இன்னொரு மொழியில் அதற்கு நிகரான மகா காவியங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த மொழியின் பெயர் தமிழ். அந்த நிலத்தின் பெயர் தமிழகம். அந்த மண்ணின் பெயர் மதுரை.

இம்மண்ணின் தெய்வமான மீனாட்சியின் கதையை ஏங்கெல்ஸ் அறிந்திருந்தால் தனது நூலின் முன்னுரைக்கு கிரேக்கத்தின் பழைய கடவுளர்களை உவமை சொல்லியிருக்க மாட்டார், மீனாட்சியின் கதையே ஆகச்சிறந்ததென உதாரணம் சொல்லியிருப்பார்.

ஆம். யாராலும் வெல்ல முடியாத பெண்ணரசி மீனாட்சி. உலகை வென்று முடிக்கிறாள். இறுதியாக யுத்தக் களத்துக்கு சிவன் வந்ததும் அவளது மூன்றாவது மார்பு மறைகிறது. போரிடாமலே சிவன் வென்றதாகக் கதை முடிகிறது.

தாய்வழிச் சமூகம் அதிகாரங்களை இழக்கும்போது பெண்கள் தங்களின் மார்பகங்களை இழப்பதான குறியீட்டுக் கதைகள் உலகெங்கும் உள்ள ஆதி குடிகளிடம் இன்றுமுள்ளது; ஆப்பிரிக்க கண்டத்திலும், அமேசான் காடுகளிலும் குஜராத் பழங்குடிகளிடமும், தமிழ்ச் சமூகத்தின் ஆதி நினைவிலும் இக்கதை இன்றும் உண்டு.

அதுதான் அன்னை மீனாட்சியின் கதை.ஆனால், மீனாட்சியின் கதைக்கு மட்டும் ஒரு கூடுதல் சிறப்புண்டு. போர்க்களத்துக்கு வந்த சிவன் போரிடாமலே வென்று முடிக்கிறார்; ஆண்வழிச் சமூகத்தின் அதிகார அரசியல் துவங்குகிறது. ஆனால் கதையின் ஒரு பகுதி அதன் பிறகும் மீனாட்சியின் வசமே இருக்கிறது.

ஆம் திருமணத்திற்குப் பின்னர் சொக்கர் என்று அழைக்கப்படும் சிவன் மீனாட்சியின் கணவர்தானே தவிர, மதுரையின் அரசர் அல்ல. என்றென்றும் மீனாட்சியே மதுரையின் அரசி. இந்த தனித்துவம் இந்தியாவில் வேறு எந்த தெய்வத்துக்கும் கிடையாது.

ஆதி தாய்வழிச் சமூகத்தின் பிடி மண்ணை தனது பண்பாட்டில் இன்றளவும் இறுகப் பிடித்து வைத்துள்ள இக்கதையை ஏங்கெல்ஸ் அறிய நேர்ந்திருந்தால் மகத்தானதொரு பரிணாம விளக்கத்தை அளித்திருப்பார். மதுரையின் இலக்கிய அடையாளம் மார்க்சியத்தின் பேரிலக்கியங்களையும், உலக அறிவுப் பரப்பையும் சென்றடைந்திருக்கும்.

இந்நேரத்தில் இன்னொரு முக்கிய செய்தியையும் இங்கே பதிவு செய்கிறேன். மீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் முழுமையான பாடலோடு இருப்பது 78 கல்வெட்டுக்களே. அதில் 77 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள். ஒன்றே ஒன்று மட்டுந்தான் சமஸ்கிருத கல்வெட்டு.

சமஸ்கிருதம்தான் உலகின் மூத்த மொழி, வேதப்பண்பாடே இந்தியப் பண்பாடு என்று இடைவிடாமல் கூவிக்கொண்டிருக்கும் இந்துத்துவா கூட்டத்துக்கு மதுரையிலிருந்து உரக்கச்சொல்வோம்; தமிழே எங்கள் மொழி, சமத்துவமே எங்கள் வழி, அதற்கான ஆயுதமே எங்கள் இயக்கம். அதனை வென்றடையவே எமது மாநாடு.

நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல பன்மைத்துவத்துக்கும், சமநீதிக்கும், சமூக நீதிக்குமான மரபே இம்மண்ணின் மரபு. அதனால் தான் “உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று மதுரையின் புலவன் சொல்லவில்லை; அரசன் சொன்னான். அதுமட்டுமல்ல, ”கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” என்றான்.

மதங்கள் உருவாகி தெய்வங்கள் உருவானாலும், மனிதனாகி நீ முதலில் செய்ய வேண்டியது படிக்க வேண்டிய வேலையைத்தான். அதே போல எவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை, சாதிய படிநிலைகளை மதம் உருவாக்கினாலும் கீழ்ப்பால் உள்ளவன் கற்றால், மேற்பால் உள்ளவன் அவன் சொல் கேட்டு நட என்று உத்தரவிட்டவன் இவ்வூர் மன்னன்.

அறிவுலக வரலாறு நெடுகிலும் எத்தனையோ உதாரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக்கொண்டே போக முடியும். ஏனென்றால் உலகின் எழுத்துக்களின் ஆதி நிலம் என்று பெருமைப்படக்கூடிய நகரம் இம்மதுரை.

ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட எழுத்துக்கள் ஒரே நகரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் கிடைப்பது உலகிலேயே மதுரையில் மட்டுந்தான். எனவேதான் இதனை எழுத்துக்களின் ஆதி நகரம் என்றே சொல்கிறோம்.

அதனாலேயே இந்நகரம் எழுத்து சார்ந்தும், அறிவு சார்ந்தும், அன்பு சார்ந்துமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.
எழுத்தாலும், அறிவாலும், அன்பாலும் சூழப்பட்ட மதுரை தன் இயல்பாலேயே மார்க்சியத்துக்கு இணக்கமாக உள்ளது.

ஆண்டவனே ஆனாலும் அதிகாரத்துக்கு அஞ்சமாட்டேன், எனது விமர்சனமே சரியானது என வாதிட்ட நக்கீரன் நம்மவன் இல்லாமல் யாரவன்?

அபலைப் பெண்ணாக உள்நுழைந்து அறச்சீற்றத்தோடு கொதித்தெழுந்து “தேரா மன்னா” என்று கர்ஜித்தது இன்றைய மோடி வரை பொருத்தமாக எதிரொலிக்கிறதே, அவளன்றோ நம் தோழி!.

வைகையில் வெள்ளம் கரை புரள, ஊரே பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் போது எவ்வித பதட்டமுமின்றி தனது பணியைச் செய்து கொண்டிருந்த வைராக்கியமேறிய வந்திக்கிழவி நமது தாயல்லாமல் யாரின் தாய்?
“உறுபசி நீக்கலே உயர் அறம்” என்று செயல்பட்ட அறச்செல்வி மணிமேகலையின் குரல்தானே, “பட்டினிக்கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள், பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்ட தோழர்காள்” என்ற சர்வதேச கீதத்தின் ஆதி வடிவம்.

நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் வரலாற்றை மதுரையிலிருந்து துவக்கவில்லை; மதுரையின் வரலாற்றை கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து துவக்குகிறோம். சமத்துவமே இம்மண்ணின் மொழி, பெண்ணுரிமையே இம்மண்ணின் குரல், ஆதிக்க எதிர்ப்பே இம்மண்ணின் அடையாளம், இதனைக் கொண்டு எம் எதிரியை வெல்வோம் என சூளுரைக்கவே இம்மாநாடு.

இம்மதுரை தெருக்கள் தோறும் தமிழால் நிரம்பியது போல, திசைகள் தோறும் தியாகிகளால் நிரம்பியது. விடுதலைப் போராட்டத் தியாகிகள், சமத்துவ சமூகத்தை உருவாக்கப் போராடிய மகத்தான கம்யூனிச தியாகிகளால் தழும்பேறிய ஊர் இது.

இரட்டைத் தியாகிகள் மாரி-மணவாளன், தூக்கு மேடைத் தியாகி பாலு, பொதும்பு பொன்னையா, பூந்தோட்டம் சுப்பையா, ஐ.வி.சுப்பையா, தில்லைவனம், மாணவத் தியாகிகள் சோமு-செம்பு, ரயில்வே தியாகி ராமசாமி, குட்டி ஜெயப்பிரகாஷ், தியாகி லீலாவதி, மாடக்குளம் கருப்பு என இந்த இயக்கத்திற்காக இன்னுயிர் ஈந்த தியாகிகள் பற்பலர்.

எத்தனை எத்தனை அடக்குமுறைகள்.. எத்தனை எத்தனை சிறைக்கூடங்கள்…. அத்தனையும் எம் இயக்கத்தின் பேரடையாளம். வைகை, நீரால் ஓடும் நதி மட்டுமல்ல, எம் வீரத் தியாகிகளின் குருதியால் ஓடும் நதியுமாகும்.

அந்த தியாக வரலாற்றின் உச்சியில் ஒளிரும் நிகழ்வுதான் மதுரை சதி வழக்கு. தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியன், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, ப.மாணிக்கம், எம்.முனியாண்டி, எஸ்.பாலு, எஸ்.கிருஷ்ணசாமி, மணவாளன், பாலச்சந்திரமேனன் ஆகியோர் மதுரை சதிவழக்கில் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி ஹலீம். சிறைச்சாலைக்கு நேரில் சென்று விடுதலை செய்ய உத்தரவிட்டார். இரவு 8 மணிக்கு சங்கரய்யாவையும் மற்ற தோழர்களையும் மதுரை மக்கள் சிறைச்சாலை வாயிலில் இருந்து பெருந்திரளாக வரவேற்று அழைத்து வந்தனர்.

நள்ளிரவில் திலகர் திடலில் விடுதலைக் கொண்டாட்டம் நடைபெற்றது. தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். தோழர் சங்கரய்யா முழங்கினார். அன்று அவர் எப்படி முழங்கினாரோ அதே குரலில்தான் இன்றும் கர்ஜிக்கிறார்.

சங்கம் வைத்த மதுரையின் மகத்தான அடையாளம் எங்கள் அன்புத்தோழர் சங்கரய்யா. அவரது நூற்றாண்டில் மதுரையில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்தித் தரும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது அவரது தியாக வாழ்வுக்கு நாங்கள் சூட்டும் அலங்காரம்.

பிரதிநிதித் தோழர்களே, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டக் களமாக மதுரையின் வீதிகளையெல்லாம் உருமாற்றிய தோழர் சங்கரய்யாவின் மதுரைக்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறேன்.

சீறும் அறமும், சிம்மக்குரலும் கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் என உருவாக்கிக்காட்டிய தோழர் சங்கரய்யாவின் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.
வயதும், முதுமையும் இந்தக்கணம் வரை அண்டாது தனிப்பெரும் அரசியல் குரலாக சுடர்விடும் நூற்றாண்டு நாயகன் களமாடிய மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.

1952 முதல் பொதுத் தேர்தலில் சிறையிலிருந்தவாறே மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வென்ற அன்புத்தோழர் பி.ராமமூர்த்தி சிலையாக நின்று ஒளியூட்டும் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.

மதுரையின் கிராமம் தோறும் நிலப்பிரப்புத்துவ ஆதிக்கத்தை உழுது அகற்றிய ஜானகிஅம்மாளின் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.

மக்கள் பிரதிநிதிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்ற இலக்கணத்தை உருவாக்கிய தோழர்கள் கே டி கே தங்கமணி, பி. இராமமூர்த்தி, பி. மோகன். என் நன்மாறனின் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.

அதிகாரத்துக்கு அஞ்சமாட்டேன், ரெளடியிசம் கண்டு பின்வாங்க மாட்டேன். எங்கள் வாழ்வு மரணத்தோடு முடிவதல்ல, வரலாறு முழுவதும் வாழ்வது என வாழ்ந்து காட்டிய லீலாவதியின் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.

வரலாற்றின் நெடிய பாதையெங்கும் மதுரை மண்ணில் செங்கொடி இயக்கம் தழைக்க பாடுபட்ட எம் தியாக முன்னோர்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் நினைவுகூர்ந்து உங்களை வரவேற்கிறேன்.

அரசியல் மாநாட்டின் வரவேற்பில் உணவும் உபசரிப்பும் பற்றிய குறிப்பில்லாமலா? என்று நினைக்க வேண்டாம். எல்லா உணவிலும் உபசரிப்பிலும் அரசியலே இருக்கிறது.

ஆம், காட்டுக்கு வந்த இராமனை குகன் வரவேற்றதைப் பற்றி வால்மீகி எழுதுகிறார், அப்பமும், பாயாசமும் கொடுத்து வரவேற்றான் என்று. அதையே துளசிதாசர் எழுதுகிறார், பழங்களும் கிழங்குகளும் கொண்டு வரவேற்றான் என்று. ஆனால் தமிழ்ப் பெருங்கவி கம்பன் என்ன எழுதினான் தெரியுமா? தேனும் மீனும் கொண்டு வரவேற்றான் என்று.

எங்கள் உணவே, எங்கள் அரசியல்; எங்கள் அரசியலே எங்கள் உணவு. எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது என கட்டளை பிறப்பிக்கும் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரான மாநாட்டில் “உணவாலும் அடிப்போம்” என்று இருபொருள் மொழியச் சொல்கிறேன். மீனும், ஊனும் கொண்ட விருந்தளிக்க வரவேற்புக்குழு காத்திருக்கிறது.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்று அமைகிறேன்.

நன்றி.
சு.வெங்கடேசன் எம்.பி.,
வரவேற்புக் குழு தலைவர்

கேரளத்திடம் கர்னாடகா கற்றுக் கொள்ளட்டும்

 



இன்று காலையில் படித்த நல்ல செய்தி.

கேரளத்தில் கோட்டயம் அருகில் வேலூர் என்ற ஊரில் உள்ள பலப்பரம்பில் தேவி கோவிலின் திருவிழா இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வானை நோக்கி சுட்ட பின்புதான் தொடங்குகிறது. எட்டு நாள் திருவிழா அதே இஸ்லாமியர் வானை நோக்கி மூன்று முறை சுட்ட பிறகு நிறைவு பெறுகிறது.

அரசர் காலம் முதல் தொடரும் பாரம்பரியமாம் இது.

மத நல்லிணக்கம் என்றால் என்னவென்று கர்னாடகா கேரளாவிடம் கற்றுக் கொள்ளட்டும்.

Tuesday, March 29, 2022

புளிச்ச மாவு ஆஜான் பொய் சொல்லவில்லை.

 


கூகிளில் நான் எதைத் தேடினாலும் அது என் தளத்திற்கே அழைத்து வந்து விடுகிறது என்று ஆஜான் ஜெமோ சில நாட்கள் முன்பாக எழுதி இருந்தார். 

க்ரோம் பரவுஸரில் கோளாறாக இருக்கும். அதை அகற்றி விட்டு மறுபடியும் இன்ஸ்டால் செய்தால் இந்த பிரச்சினை வராது என்று மென்பொருள் துறை விற்பன்னரும் எழுத்தாளருமான வினாயக முருகன் கூட அவருக்கு ஆலோசனை சொல்லியிருந்தார்.

ஆஜான் எதைத் தேடியிருந்தால் கூகிள் அவரை அவரது தளத்திற்கே அழைத்துச் சென்றிருக்கும் என்று யோசித்து முயற்சித்தேன். 

ஆம், ஆஜான் சொன்னது பொய்யல்ல.

கீழே ஆதாரங்கள் உள்ளது.

 பாருங்கள்.











ஆக கூகிளுக்கு ஆஜான் என்றால் யார் என்று நன்றாக தெரிந்துள்ளது. 

கர்னாடகா - வெறியர்களின் மாநிலமா?

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழை புரட்டிய போது "முதோல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பெண்ணிற்கு எந்த வழக்கறிஞரும் உதவக் கூடாது என இந்த்த்துவ அமைப்புக்கள் கூறியுள்ளது" என்ற செய்தியை படித்தேன்.

அப்படி என்ன பெரும் தவறை அவர் செய்து விட்டார் என்று தேடிப்பார்த்தால் 

23 ம் தேதி அன்று குத்மா ஷேக் என்ற பெண்மணி தன் வாட்ஸப் ஸ்ட்டேட்டஸில் "அனைத்து நாடுகளிலும் அமைதியும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவ கடவுள் அருள் புரியட்டும்" என்று வைத்துள்ளார்.

23ம் தேதி பாகிஸ்தான் குடியரசு தினம். அதற்குத்தான் அவர் வாழ்த்து சொல்லி உள்ளார் என்று அருண் குமார் பஜான்ட்ரி  எனும் சங்கி காவல் நிலையத்தில் புகார் செய்ய. "மதத்தின், இனத்தின் அடிப்படையில் பிரிவினையை தூண்டியது, இரு குழுக்களுக்கு இடையே மோதலை தூண்டியது"  ஆகிய இரு பிரிவுகளில் அந்த 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது ஸ்டேட்டஸிகும் காவல் துறை பதிவு செய்த குற்றச்சாட்டுக்களும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

பாகிஸ்தான் குடியரசு நாளுக்கு வாழ்த்து சொன்னதாகவே இருக்கட்டும். அது என்ன சட்ட விரோதமா? 

இந்தியாவில் யாருமே அடுத்த நாட்டின் சுதந்திர தினத்துக்கோ, குடியரசு தினத்துக்கோ வாழ்த்து சொன்னதே இல்லையா? இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டத்திற்கே வெளி நாட்டுத் தலைவரை அழைத்துத்தானே மகிழ்கிறோம்!

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் மென் பொருள் நிறுவனங்கள் விடுமுறையே அளிக்குமே!

கர்னாடகா மத வெறியர்களின் மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.

முதலில் ஹிஜாப் பிரச்சினை. 

பிறகு கோவில் திருவிழாக்களில் மாற்று மதத்தினர் கடை போட தடை.

இந்த முட்டாள்தனம் மூன்றாவது சம்பவம்.

பரம்பரை சங்கிகளை விட பஞ்சத்துக்கு சங்கியான முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள மாநிலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார். 

பிகு 1: அந்த முதோல் என்ற ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்தமாம். சர்ச்சையை உருவாக்கிய சங்கிகளை விட, அதை ஏற்று கைது செய்த அந்த ஊர் போலீஸை விட அந்த நாய்களுக்கு அறிவு அதிகமாகவே இருக்கும். 😀😀😀😀😀😀


பிகு 2 : பிகு 1 ஐ நான் சிரிப்பு எமோஜிகளோடு சொல்லியுள்ளதால் நான் போலீஸை இழிவு படுத்தியதாக அர்த்தமாகாது. என்ன டெல்லி ஜட்ஜய்யா ரைட்டுதானே!


Monday, March 28, 2022

மாலனை தாக்குவதில் தவறேயில்லை . . .

 


என் தோழர் ஒருவர் "வயது முதிர்ந்த எழுத்தாளர் மாலனை கடுமையாக தாக்குகிறீர்களே, பாவமில்லையா அவர்?' என்று அவ்வப்போது கேட்பார். வயதுக்கேற்ற முதிர்ச்சி அந்த வார்த்தை வியாபாரிக்கு கிடையாது என்று நான் பதில் சொல்வேன்.

செஞ்சோற்றுக் கடனுக்காக எந்த அளவும் கீழிறங்கக் கூடிய கேவலமான மனிதர் என்பதை அவரே அடிக்கடி நிரூபித்துக் கொள்வார்.

அண்ணாமலையின் 20,000 புத்தக டுபாக்கூரை கலாய்க்க ஒருவர், மூன்று நூல்களின் சாராம்சத்தை மூன்று வரிகளில் எழுதி இதே போலவே 19997 புத்தகங்களையும் படித்து விடுவோம் என்று எழுத

மூத்தவர் போட்ட பின்னூட்டத்தை படியுங்கள்.


20,000 புத்தகம் படித்துள்ளேன் என்று கதையளந்து விட்டு அதை சமாளிக்க புத்தகத்தின் சாராம்சத்தைச் சொல்லும் ஆப்கள் மூலமாக 20,000 புத்தகங்களுக்கு மேலாக அடுத்த கட்டுக்கதையை அவிழ்த்து விட்ட பெரும் பொய்யன் ஆட்டுக்காரனுக்கு முட்டுக் கொடுக்க

வாசிப்பே தவமாய்க் கொண்டிருந்த அறிஞர் அண்ணாவையும் அண்ணல் அம்பேத்கரையும் வம்புக்கு இழுத்து அவர்களை சிறுமைப் படுத்தியுள்ள இந்த சிறுமதியாளனை தாக்குவதில் தவறேயில்லை.

பெரியாரின் தடி மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.


Sunday, March 27, 2022

ஏன் இன்றும் நாளையும் ???

சற்றே நீண்ட கட்டுரை. நீங்கள் உண்மையான தேச பக்தரென்றால் அவசியம் படியுங்கள். 

தேசத்தின் எதிரிகள் யாரென்றும் இன்றும் நாளையும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தம் ஏனென்றும் எளிதில் புரியும். 



விரிந்த வானத்தில் கைகோர்க்கும் நட்சத்திரங்கள்




தோழர் கே.சுவாமிநாதன்,
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

கூட்டு இயக்கங்கள்  காலத்தின் கட்டளை

அகில இந்திய வேலை நிறுத்தங்களின் தாக்கம் என்ன? ஏன் எல்லா தொழிலாளர்களின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படு கிறது?  இப்படியொரு கேள்வி சிலரின் மனங்களில் உள்ளது. மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம், 1991 க்கு பிறகு நடைபெறும் 21 வது அகில இந்திய வேலை நிறுத்தம். 1990 களில் நவீன தாராளமய கொள்கைகள் அமலாகத் துவங்கிய போது “ஊதியத்தில் இருந்து விலைவாசி ஈடை விலக்குவது” (“De indexation of wages”) என்ற அபாயம் கதவுகளை தட்டியது. எதற்கு விலைவாசி உயர்வை அரசாங்கம் ஈடு கட்ட வேண்டும்? எதற்கு பஞ்சப்படி (DA) தரப்பட வேண்டும்? என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பியது. முன்னாள் ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் தலைமையிலான ஒரு குழுவை போட்டது. அக் குழுவும் பஞ்சப்படி தருவது அரசின் கடமை அல்ல என்று கூறியது. இது பிஜு பட்நாயக் குரல் அல்ல. இந்தியாவுக்கு கடன் தந்த உலக வங்கி போட்ட நிபந்தனைகளில் ஒன்று. 

ஆனால் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு, வேலை நிறுத்தங்கள்தான் அந்த அபாயத்தை தடுத்து நிறுத்தியது. இன்றும் நிதித் துறை ஊழியர்கள் பஞ்சப்படியை  3 மாதங்களுக்கு ஒரு முறையும், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு விலை வாசிக்கேற்ற பஞ்சப்படி உயர்வைப் பெற்று வருகிறார்கள். இன்று பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வர் ஆகி விட்டார். இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. பஞ்சப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய வேலை நிறுத்தங்களின் குறிப்பிடத் தக்க வெற்றி. அகில இந்திய வேலை நிறுத்தங்கள் இல்லாவிட்டால் இன்று எத்தனை பயன்கள் காவு போயிருக்கும், எத்தனை உரிமைகள் பறி போயிருக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நவீன மென் பொருள் நிறுவ னங்களில் பஞ்சப்படி எங்கே இருக்கிறது? இதே நிலைமையை அரசு துறை, நிறுவனங்களிலும் ஏற்படுத்தவே முயற்சி செய்தார்கள்.  அதுபோல இன்று நாடு தழுவிய எதிர்ப்பு தேவைப்படுகிற இன்னொரு பிரச்சனையாக புதிய பென்சன் திட்டம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் தனியாக இக் கோரிக்கையை வெல்ல முடியாது. ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு மட்டங்களில் தீர்வுகள் ஏற்பட்டால் தான் உடைப்பு ஏற்படுத்த முடியும்.  தற்போது இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளன. இதன் பின்புலத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வீதிகளுக்கு வந்ததால் இமாசலப் பிரதேச அரசும் இது பற்றி பரிசீலிக்க குழு ஒன்றைப் போட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்க ளில் இது புது நம்பிக்கையை தந்துள்ளது. 

இது போன்ற கோரிக்கைகள், விரிந்த இயக்கம் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும். இதுதான் அகில இந்திய வேலை நிறுத்தங்களின் முக்கியத்துவம். 

மூன்றாவது பொதுத் துறை பாதுகாப்பு. முந்தைய அரசுகள் தங்களது சித்தாந்த ரீதியான தாக்குதலாக  தனியார் மயத்தை முன் வைக்காமல் நட்டம், திறமைக் குறைவு, நுகர்வோர் விருப்பம் என்ற காரணங்களை சொல்லி வந்தன.  ஆனால் மோடி தலைமையிலான அரசு, தங்கள் சித்தாந்தமே பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதிரானது என்பதை ஒளிவு மறைவின்றி பிரகடனம் செய்துள்ளது. கேந்திரமான தொழில்களில் கூட பொதுத் துறை “குறைந்த பட்ச இருப்போடு” (Minimum Presence) இருந்தால் போதும் என்கிறது இந்த அரசு.  ஆகவே தற்போது எழுந்துள்ள தாக்குதல், ஏதோ ஒரு நிறுவனத் திற்கு ஆபத்து, ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு ஆபத்து என்ற நிலையை கடந்து விட்டது. ஆகவேதான் எந்த நியாயமும் இல்லா மல் எல்.ஐ.சி பங்கு விற்பனை அரசால் முன் வைக்கப்படுகிறது. அரசிடம் நியாயம் இல்லை என்பது மட்டும் காரணம் இல்லை.  நியாயம் தேவையில்லை என்ற இடத்திற்கு வெளிப்படையாக வந்து விட்டார்கள் என்பதுதான். ஆகவே இனி பொதுத்துறை யைப் பாதுகாக்கிற போராட்டம் ஒரு நிறுவனம், ஒரு தொழில் என்று சுருங்கி விடாமல் பரந்த போராட்டமாக மாற வேண்டி யுள்ளது. ஆகவேதான் அகில இந்திய வேலை நிறுத்தம் தேவை ஆகி றது. இது 21 ஆவது அகில இந்திய வேலை நிறுத்தம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு உலகமயத்திற்கு எதிராக நடந்தேறிய முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தை விட பரந்த திரட்டலுக்கான அதிக முக்கியத்துவத்தை இந்த வேலை நிறுத்தம் பெறுகிறது.

ஒட்டுமா கோரிக்கைகள்? உறவாகுமா இதயங்கள்?

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளும், ஒயிட் காலர் தொழிலாளர் கோரிக்கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமா ?கோரிக்கைகள் ஒட்டாமல் இல்லை.  ஆனால் அபாயங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டியவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டுகிறார்களா, இணைந்து நிற்கிறார்களா என்பதே கேள்வி. பி.எஸ்.என்.எல் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. அதற்கு செல் சேவை அனுமதியில் தாமதம். டவர் நிர்மாண அனுமதியில் தாமதம். கேபிள் தருவதில் தாமதம். தற்போது 4 ஜி அனுமதியில் தாமதம். இப்படி சொந்த பிள்ளையை பட்டினி போடுகிற வேலையை அரசாங்கம் செய்தது. பி.எஸ்.என்.எல் சந்தைப் பங்கு வீழ்ச்சி அடைந்தவுடன் ஜியோ இன்று ரூ. 555 கட்ட ணத்தை ரூ. 666 க்கு உயர்த்திவிட்டது. எல்லா மட்டங்களிலும் 20 சதவீத உயர்வு. பி.எஸ்.என்.எல் இருப்பு என்பது கட்டணத்தி ற்கு கடிவாளம் ஆகும். அதை அவிழ்த்து விட்டால் என்ன ஆகும்? அப்புறம் விலைக் குதிரையை பிடிக்க முடியுமா? அதற்கு கடிவாளம் போட முடியுமா?  

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் வணிக களத்தில் இருந்த காலத்தில் ஆட்டோவுக்கு எவ்வளவு இன் சூரன்ஸ் பிரீமியம்? இப்போது தனியார்கள் பொது இன்சூரன்ஸ் துறையில் வந்த  பிறகு எவ்வளவு பிரீமியம்? பல மடங்கு உயர்வு. இதே கதைதான் அரை பாடி லாரிகளுக்கும். முந்தைய காலங்களில் வாகன இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரித்தால் அரசு பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடைபெறும். தனியார்கள் வந்த பிறகு அப்படி போராட்டம் நடத்த முடிகிறதா? 

பொதுத் துறையிடம் மக்கள் சலுகைகளை எதிர்பார்ப்பது பெற்ற தாயிடம் உணவு கேட்டு உரிமையோடு பசியாறுவது போல... தனியார் என்றால் ஊராரிடம் போய் நிற்கிற உணர்வுக்கு ஆளாகிறோம். அவர்களோ சலுகை தர வேண்டாம்; ஆனால் சந்தர்ப்ப சூழலைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கிறார் கள். நம் கோபம் வெளிப்பட வேண்டிய நேரம் இது. 

பொதுத் துறை நிறுவனங்கள் எனில் 
 _- எல்லோருக்கும் வங்கி சேவை_ 
- _எல்லோருக்கும் காப்பீடு_ 
- _எல்லோருக்கும் கல்வி_ 
- _எல்லோருக்கும் மருத்துவம்_ 
என்று பொருள்.

ஆகவே சாமானிய மக்களின் மனதோடு பொதுத்துறையை காக்கும் போராட்டங்கள் இயல்பாகவே ஒட்ட வேண்டும். ஒட்டும். 

ஒண்ணா குறி வைக்கப்படுகிறோம்! ஒண்ணா எதிர் கொள்வோம்!

பொதுத்துறை பாதுகாப்பு என்ற கோரிக்கை சில நேரம் மக்களிடம் ஈர்ப்பை உருவாக்குவதில்லையே! எப்படி அவர்களின் ஆதரவைப் பெறுவது? மக்களின் ஒரு பகுதியினரிடம் இப்படி எண்ணங்கள் இருக்கலாம்.  இரண்டு நாள் வேலை நிறுத்தம் இந்திய உழைப்பாளி மக்களின் மகத்தான சங்கமம். இதை வெற்றியாக்க அறிவார்ந்த பங்களிப்பை வழங்குவதும், மக்கள் கருத்தை திரட்டுவதுமான பொறுப்பு மத்திய தர ஊழியர்களுக்கு உண்டு.  பொதுத் துறை தனியார்மயத்திற்கு  நட்டம், திறமைக் குறைவு, நுகர்வோர் சேவை... இப்படி பல காரணங்கள் 1990 களில் இட்டுக் கட்டப்பட்டன. மக்களில் ஒரு பகுதியோ, சில பிரச்ச னைகளில் பெரும் பகுதியோ இந்த பிரச்சாரத்திற்கு இரையா னார்கள். இப்பவும் இதை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.  ஏர் இந்தியா மீண்டும் டாடா கைகளுக்கு போனதும் ஒரு காணொளி சுற்றுக்கு வந்தது. அதில் விமானத்திற்குள் டாடா கைகளுக்கு வந்ததை மகிழ்ச்சியோடு அறிவிக்கப்படுகிற காட்சி இருந்தது. அமர்ந்திருந்த பயணிகள் கரவொலி எழுப்பு வார்கள். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே,  உக்ரைனில் இந்திய மாணவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்து நிற்கும் போது அவர்களை கொண்டு போய் சேர்க்க அரசுக்கு சொந்தமான ஒரு விமானம் கூட இல்லை. தனியார் விமான நிறுவனங்கள் 26000 கட்டணத்தை 1,50,000 வரை ஏற்றி விட்டார்கள். டாடாவுக்காக கைதட்டியவர்கள் யோசிப்பார்க ளா? அவர்கள் உயர் தட்டு மக்கள். இயல்பாகவே தனியார் மயத்தை ஆதரிப்பவர்கள். அவர்களைக் கூட விடுங்க.

சாதாரண மக்கள் கூட வயர் மேன் மேல் உள்ள கோபத்தி லும், கண்டக்டர் மேல் உள்ள கோபத்திலும் இந்த இ. பி,  பஸ் எல் லாம் தனியார் கைக்கு போகனும் என்று சாபம் விடுகிறார்கள்.  அண்மையில் மதுரை சோக்கோ டிரஸ்ட் ஏற்பாடு செய்த மாணவர்கள் பயிலரங்கு ஒன்றில் கருத்துரையாளராக பங்கேற் றேன். நான் பேசத் துவங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம், யார் யார் தனியார் மயத்தை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டேன். ஐந் தாறு மாணவர்கள் கை தூக்கினார்கள். காரணம் கேட்டேன்.  - சேவை சரியில்லை, இழுத்தடிக்கிறார்கள், அரசு மருத்துவ மனைக்கு போனால் அலைய விடுகிறார்கள்... தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் இருக்கிறது... தனியார் நிறுவனங்களில் புன் முறுவலோடு சேவை செய்கிறார்கள் என்று பல காரணங்க ளை அடுக்கினார்கள்.  

நான் அவர்களிடம் கேட்டேன். 

செல்போன் வாங்குகிறீர்கள், வாங்குன அன்றே பழுது ஆகி விடுகிறது, வாங்குன கடைக்கு போனா விக்கிற வரைதான் இங்கே, அப்புறம் சர்வீஸ் சென்டருக்கு போங்க என்று அலைய விடுவதில்லையா? உங்க வீட்டுல வாசிங் மெஷின் பழுது ஆனா டோல் பிரீ நம்பர்ல போட்டு சர்வீசுக்கு புக் பண்ணுனா 24 மணி நேரத்துல எங்க டெக்னீசியன் வருவாருண்ணு சொல்லி விட்டு அப்புறம் ரெண்டு நாளு, மூணு நாளு அலைஞ்ச அனுபவம் இல்லையா?

 தனியார் மருத்துவமனையில சாதாரணமா போனா சிரிச்சு சிரிச்சு கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு டெஸ்ட் எடுத்து உங்க டெபிட் கார்ட பெரிசா தேய்க்க விடுறதில்லையா? உங்கள் நலத்திற்காக நாங்க காத்திருக்கிறோம்னு நாலைஞ்சு டாக்டருங்க விருந்துக்கு கூப்பிடுறது மாதிரி பண்ணுன விளம்பரம் எல்லாம் கோவிட் ஃபர்ஸ்ட் வேவ் காலத்துல காணாம போயிடுச்சே... சாதாரண டாக்டருங்க வீட்டுல கூட ஒரு சிவப்பு விளக்கு இரவு பூரா ஒரு காலத்துல எரியும், எந்நேரமும் அவசரத்துக்கு கதவ தட்டலாம்னு... ஆனா இவ்வளவு பெரிசு பெரிசா கார்ப்பரேட் ஆஸ்பிடல் வந்த பொறகு கோவிட் பெருந் தொற்று காலத்துல நோயாளிகளை உள்ளே விடாம கதவை மாதக் கணக்குல இழுத்து அடைச்சத பாக்கலியா! மிகவும் வசதி படைத்தவர்கள் கூட கவர்ன்மென்ட் ஆஸ்பிடல் வாசலில் அட்மிட் ஆக காத்துக் கிடைக்கவில்லையா?  

சிரிச்சு சிரிச்சு மக்கள் சேமிப்ப வாங்குன தனியார் நிதி நிறு வனங்கள் துவங்கி பெரிய தனியார் வங்கிகள் வரை திவால் ஆகவில்லையா? இப்பவும் என்ஜினீயரிங் கவுன்சிலிங் என்றால் முதலில் அரசின் கைவசம் உள்ள அண்ணா பல்க லைக்கழகத்தைதானே தெரிவு செய்கிறோம்! தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் கடைசி வரை நிரம்புவதில்லையே! அரசு வங்கி, அரசு போக்கு வரத்து, அரசு பள்ளிகள், அரசு காப்பீடு எல்லாம் இல்லாவிட்டால் இந்த சேவைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு, கிராமங்க ளுக்கு போய்ச் சேர்ந்திருக்குமா? அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் இல்லாவிட்டால் ஏழைக் கர்ப்பிணிகளில் எத்தனை பேருக்கு சுகப் பிரசவம்  ஆகும்? 25 சதவீதம் தடுப்பூசிகளை நீங்க போடுங்கன்னு தனியார் மருத்துவமனைகள் கிட்ட அரசு கொடுத்தா 4 சதவீதம் கூட போடல... “பொணத்த கட்டிய ழும் போதும் தாண்டவக் கோனே! பணப் பொட்டி மீது கண் வையடா தாண்டவக் கோனே!” இப்படித்தானே கோவிட் காலத்துல கூட தனியார்கள் செயல்பட்டார்கள்? 

இதைப் பற்றி எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்! என்று கேட்டேன். ஆழ்ந்த அமைதியோடு கேட்டார்கள். ஆனாலும் அந்த மாணவர்கள் முகத்தில் முழு ஒப்புதல் தென்படவில்லை.  அப்புறம், நீங்க அரசுத் துறை பற்றிச் சொல்கிற குறைக ளை நான் மறுக்கவில்லை என்று சொன்னேன். அப்போது தான் அந்த மாணவர்கள் முகத்தில் கொஞ்சம் இசைவு தெரிந்தது. நான் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன்.  அரசுத் துறையில் குறை என்றால் நமக்கு கோபம் வரு கிறது. ஆனால் தனியார் துறைகளின் குறைகள் பற்றி  அதிகம் கோபம் வருவதில்லை. யாரும் அதையெல்லாம் தேசியமயம் ஆக்கணும்னு சொல்றதில்லை. என்ன காரணம்! அரசு நிறுவனம்னா அது நம்ம சொத்துன்னு ஆழ் மனசில நினைக்கிறோம். உரிமை இருக்குன்னு நினைக்கிறோம். அதனால கோபப்படுறீங்க. சரியா?

அப்படின்னு சொன்னவுடனே மாணவர்கள் மத்தியில் கொஞ்சம் வெளிச்சம். தொடர்ந்து பேசினேன். இந்த குறைகள சரி செய்யனும். பணிக் கலாச்சாரம் வளர வேண்டும். தொழிற் சங்கங்கள் பொருளாதார கோரிக்கைகளுக்காக போராடும் போது பணிக் கலாச்சார மேம்பாடையும் சேர்த்து பேச வேண்டும். மின்னணு சேவைகளை பலப்படுத்தலாம். சேவைக ளுக்கான நேர வரையறை நிர்ணயிக்கப்படலாம். இப்படி சேவைகளை மேம்படுத்த வழிகளை சிந்திக்க வேண்டும். மக்களின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் சேவைக் குறைபாடுக்கு தனியார் மயம் மாற்று அல்ல என்று கூறினேன். மூட்டை பூச்சிக்கு பயந்து போயி வீட்டைக் கொளுத்த முடியுமா - என்று கேட்டேன்.  கடைசியில் ஒரு மாணவி பேசினார்.

அரசுத் துறைகளில் குறைகள் உள்ளன. அதை நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அதைக் களைய வழிகளை சொன்னீர்கள். எப்படியானாலும் அப் பிரச்சனைகளுக்கு தீர்வு தனியார்மயம் அல்ல என்பதை நிறைய உதாரணங்கள் மூலம் பொறுமையோடு விளக்கினீர்கள். நன்றி! என்றார்.  இப்படி உரையாடல்கள் தேவை. அதை விட முக்கியம், மக்களின் நெருக்கத்தைப் பெற ஒவ்வொரு துறையிலும் முயற்சியும் வேண்டும். ஒன்றாக குறி வைக்கப்படுகிறோம். ஒன்றாக கோர்ப்போம் என்று மக்களிடம் சொல்ல வேண்டும். 

அரசு போக்குவரத்து பஸ்கள்  இனி பெட்ரோல் பங்கு வரிசையில்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மொத்த விலை க்கு வாங்க கூடிய டீசலை இனி சில்லரை விலையில் வாங்கப் போவதாக  தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதன் பின்புலம் என்ன?  பொதுவாக மொத்த விலை, சில்லரை விலையை விடக் குறைவாக இருக்குமென்று நினைப்போம். ஆனால் டீசல் மொத்த விலை ஏற்கெனவே சில்லரை விலையை விட லிட்டரு க்கு ரூ. 6 அதிகமாகவே இருந்தது. தற்போது லிட்டருக்கு ரூ .25 ஐ எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் உயர்த்த ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. சர்வதேச விலை உயர்வை ஈடு கட்ட என்று காரணம் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விலை இறங்கினால் இங்கே விலை இறங்குமா என்பது வேறு கேள்வி. 

தமிழ்நாட்டில் 21,700 அரசு போக்குவரத்து பேருந்துகள் 8 கழகங்களால் இயக்கப்படுகின்றன. இதற்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசலை தமிழக அரசு வாங்கி வருகிறது.  தற்போது மொத்த விலை லிட்டருக்கு ரூ .113. ஆனால் பங்குகளில் சில்லரை விலை லிட்டருக்கு ரூ .92. ஒரு லிட்டருக்கு ரூ .21 அதிகம் எனில் 16 லட்சம் லிட்டருக்கு எவ்வளவு இழப்பு பாருங்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3.50 கோடி. மாதத்திற்கு சுமார் 100 கோடி. இப்படியே வருடத்திற்கு போனால் 1200 கோடி. அதனால்தான் தமிழ்நாடு அரசு மொத்த விலைக்கு வாங்கா மல் சில்லறை விலைக்கு டீசல் போட்டுக் கொள்வது என்று இந்தி யன் ஆயில் கார்ப்பரேசன் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு பங்குகளின் வரிசையில் அரசுப் பேருந்துகள் நிற்க வேண்டியிருக்கும். இந்த முடிவை எடுக்காவிட்டால் தமிழ்நாடு அரசு கி.மீ க்கு ரூ. 6 அதிகமாக செலவிட வேண்டி வரும்.  சந்தையின் சுதந்திரம் இதுதான். அதற்கு சாமானிய மக்கள், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்... இது பற்றி எல்லாம் கவலை இல்லை. 

ஏற்கனவே மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வரி பங்கை வரியாக போட்டால் தர வேண்டுமென்று செஸ், சர்சார்ஜ் எனப் போட்டு மறுத்து வருகிறது. இப்போது எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு பச்சைக் கொடி காட்டி விலையை ஏற்றி பாடாய்ப்படுத்துகிறது.  கேட்டால் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களின் சுதந்திரம் என்பார்கள். ஆனால் ஏதாவது தேர்தல் வந்தால் மட்டும் விலை கள் ஏறாமல் ஆணி அடிச்ச மாதிரி அப்படியே நிற்கும். சர்வதேச சந்தையில் விலை கூடினாலும்... ஓட்டுப் போட்ட மை காய்வ தற்குள் மீண்டும் சுதந்திரம் வந்து விடும்.  மாநில அரசு பஸ்களை பங்குகளில் கியூவில் நிறுத்தி இருக் கிற ஒன்றிய அரசின் அணுகுமுறையை என்ன சொல்வது?

மறு தேசிய மயம் ஸ்காட்லாந்து அனுபவம்

உலகம் முழுவதும் தனியார் மயம் அமலாகும் போது அதை ஒரு நாட்டில், துறையில் மட்டும் தனித்து நிறுத்த முடியுமா? இப்படி சில பேர் கேட்கிறார்கள். உலகம் முழுவதும் தனியார்மயக் கொள்கைகள் ரிவர்ஸ் கியரில் போனதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. மறு தேசிய மயம் ஆன உலக அனுபவங்கள் உண்டு.  இதோ இன்னும் ஒரு வாரத்தில் உலகம் ஒரு மறு தேசிய மயத்தை சந்திக்கவுள்ளது. ஆம், தனியார்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட ரயில் சேவை ஏப்ரல் 1, 2022 அன்று முதல் மீண்டும் ஸ்காட்லாந்து அரசின் கைகளுக்கு வருகிறது. என்ன காரணங்களால் இம்முடிவு எடுக்கப்படுகிறது? 

நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்காட்லாந்து போக்குவரத்து அமைச் சர் ஜென்னி கில்ருத் கூறியிருக்கிற வார்த்தைகள் இவை.  “மக்கள் தாங்கக் கூடிய கட்டணம் - நீடித்த செயல்பாடு - நுகர்வோர் நலன்” அமைச்சர் இந்த மூன்று காரணங்களை கூறுகிறார் எனில் என்ன பொருள்? இந்த மூன்றையும் தனியார் கைகளில் இருந்த ஸ்காட் ரயில்வே நிறைவேற்றவில்லை என்பதுதானே. இதை விட இன்னும் ஒரு முக்கியமான காரணமும் சொல்லப்பட்டுள்ளது.  “பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்” - என்ன பொருள்? லாபம் தவிர தனியார்க்கு வேறு  எந்த கவலையும் இருக்காது என்று பொருள். 

இதை நடத்தி வந்த டச்சு தனியார் நிறுவனமான ஆபெல்லி யா மார்ச் 31 க்கு மேல் ஸ்காட் ரயிலை ஓட்டாது. மறு தேசிய முடிவு அதிகாரப் பூர்வமாக ஏப்ரல் 1, 2022 லிருந்து எடுக்கப்பட்டாலும் “கோவிட்” வந்தவுடனேயே தற்காலிக தேசிய மயம் ஆக்கப் பட்டது. பயணிகள் குறைந்தால் தனியார்கள் ரயிலை எடுப்பார்க ளா? ஆனால் பயணம் போக மக்கள் என்ன செய்வார்கள்! அதைப் பற்றியும் தனியாருக்கு என்ன கவலை! ஆகவே அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டி வந்தது.  ஆனால் கோவிட் காலத்திற்கு முன்பே தனியார் ரயிலுக்கு எதிர்ப்பு வர ஆரம்பித்து விட்டது. ரயில்கள் திடீர் என்று ரத்தா வது, மோசமான செயல்பாடு ஆகியன எல்லாம் மக்களை கோபப்படுத்தி இருந்தது.  தற்போது தேசிய மய முடிவு நிறைய எதிர்பார்ப்புகளை உரு வாக்கியுள்ளது. கட்டணங்கள் குறையும், சுற்றுச் சூழல் பாது காக்கப்பட இம்முடிவு உதவுமென்ற கருத்துக்கள் வந்துள்ளன.  ஸ்காட்லாந்து அமைச்சர் சொல்லியுள்ள இன்னொரு முக்கிய கருத்து,  “தொழிற் சங்கங்கள் மிகுந்த அக்கறையோடு இருப்பவை. அவர்களோடு பேசுவோம். நல்ல எதிர்கால செயல்பாட்டை உறுதி செய்வோம்”. - இந்த வார்த்தைகள் நமது ஆட்சியா ளர்கள் காதுகளில் விழுகிறதா?

கவச குண்டலம் இழந்தால்  கர்ணன் உயிர் நிலைக்காது

விலைவாசி உயர்வை இந்த ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த இயலாதா?உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிகிற வரை பெட்ரோலியப் பொருட்கள் விலைகள் உயரவே இல்லையே! தேர்தலில் மக்கள் கோபம் பிரதிபலிக்கும் என்பதால்... மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டது.  பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி யும் கிடைத்தது. தேர்தல் முடிந்தவுடன் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் கருத்து என்பது சமூகத்திற்கு கவச குண்டலம் மாதிரி, அதை திசை திருப்பலில் இழந்தால் ஆட்சியாளர்களின் அம்புகள் தாக்க ஆரம்பித்து விடும்.

கடைசியாக அக்டோபரில் சமையல் கேஸ் விலைகளும்,  நவம்பரில் பெட்ரோலிய விலைகளும் உயர்த்தப்பட்டு இருந்தன. தேர்தல் காலம் கனாக் காலம். நாலரை மாதம் அம்பறாத் துணி யில் தூங்குவது போல நடித்த அம்புகள் இப்போது நாணில் தொடுக்கப்பட்டு மக்களை நோக்கி ஏவப்படுகின்றன. சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் அதிகரித்து விட்டது. பெட்ரோல் டீசல் விலைகள் லிட்டருக்கு 80 பைசா கூடி விட்டது. ஏற்கெனவே மொத்த டீசல் கொள்முதல் விலைகள் கடந்த வாரம் ரூ. 25 உயர்த்தப்பட்டன. தேர்தலுக்கு முன்பாக எக்சைஸ் வரிகள் குறைக்கப்பட்டன. முதுகில் விழுந்த காயங்களுக்கு கொஞ்சம் ஒத்தடம் மாதிரி. ஒத்தட சுகத்தில் ஓட்டு போட்ட மக்களுக்கு இதோ சவுக்கு மீண்டும் தயார்.

இந்த பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுகள் ஏற்கெனவே 6 சதவீதத்தை கடந்த சில்லரை விலை பண வீக்கத்தை இன்னும் அதிகமாக்கும். நுகர்வை சுருக்கும். பொதுப் போக்குவரத்தை சீரழிக்கும். அரசு சாமானியர் மீது கைவைப்பதற்கு காரணம் பெரும் கார்ப்பரேட்டுகள், பணக் காரர்கள் மீது கை வைக்க திராணியும், அரசியல் உறுதியும் இல்லாததுதான். கார்ப்பரேட் வரிகள், செல்வ வரிகள், வாரிசுரிமை வரி... இப்படி நிறைய வழி இருந்தும்... 

ஆகவே வலி தாங்காமல் அலறுவது தீர்வைத் தராது. மாற்று வழிகளுக்கான நமது குரல் களத்தில் ஓங்கி கேட்க வேண்டும். கர்ணன் உயிர் போன்றது மக்களின் வாழ்வுரிமை. போராட்டமும், மக்கள் கருத்துமே கவச குண்டலங்கள்..  மார்ச் 28, 29 -  இரண்டு நாள் வேலை நிறுத்தம் அதற்கான குரல்... அதற்கான களம்.

யாருக்கு "ஸ்ரீ"? எதுக்கு "திரு"?

 


சங்கிகள் நடத்தும் சென்னை இலக்கிய விழாவின் அழைப்பிதழ் கீழே உள்ளது.



பெயருக்கு முன்பாக சிலருக்கு "ஸ்ரீ",   சிலருக்கு "திரு"

ஸ்ரீ க்கும் திரு வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனாலும் இங்கே இவர்கள் இப்படி தனித்தனியாக போட்டுள்ளனர் என்றால்

இதிலே ஏதோ சூட்சுமம் இருக்கிறது. 

அது என்ன என்றுதான் எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.

Saturday, March 26, 2022

ஒவ்வொரு பூக்களுமே - வயலின் 50

 


சேரனின் ஆட்டோகிராப் படத்தின் பாடல். பா.விஜய்க்கும் கே.எஸ்.சித்ராவுக்கும் சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகி என இரு தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்த "ஒவ்வொரு பூக்களுமே" பாடலின்

வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்.

யூட்யூப் இணைப்பு இங்கே

அவன் யூட்யூபில் பதிவேற்றியுள்ள ஐம்பதாவது காணொளி இது என்பதை மகிழ்ச்சியோடு  தெரிவித்துக் கொள்கிறேன்.

வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்பதால் அதை அவனுக்கு கடத்தினேன். துவக்கத்தில் எங்கள் விருப்பத்திற்காக வகுப்புக்களுக்கு சென்றவனுக்கே ஒரு கட்டத்தில் விருப்பம் வர அப்போது துவங்கியது மாயம். 

உரிய ஆசிரியரிடம் கற்றுக் கொள்வது கர்னாடக இசைதான். திரைப்பாடல்களை தானே  கற்றுக் கொண்டு வாசித்து பதிவேற்றுகிறான். 

இசை எப்போதுமே உற்சாகம் தரும், அமைதி தரும். கேட்பவன் என்ற நிலையில் மட்டுமல்லாமல் கொடுக்கும் நிலையில் இருப்பது மகிழ்ச்சியே.

முந்தைய 49 காணொளிகளை பார்க்க விரும்புவர்களுக்காக அவற்றின் இணைப்புக்களை கீழே இணைத்துள்ளேன். பாடலின் பெயரைத் தொட்டாலே காணொளிக்கு சென்று விடலாம்.

கமலஹாசன் பிறந்த நாள் சிறப்புப் பதிவு 8 பாடல்கள்

பேட்ட - மரண மாஸ்

நிற்பதுவே - நடப்பதுவே

ரஜினிகாந்த் 4 பாடல்கள்

இளமை இதோ இதோ

ஏ.ஆர்.ரஹ்மான் - 5 பாடல்கள்

வாரணம் ஆயிரம் பாடல்கள்

நான் ஆணையிட்டால்

கலைவாணியே, உனைத்தானே

கண்ணான கண்ணே

இளங்காத்து வீசுதே

மெல்லினமே மெல்லினமே

விஷமக்கார கண்ணா

தென்றல் வந்து தீண்டும் போது

உனக்கென்ன வேணும் சொல்லு

மாங்குயிலே, பூங்குயிலே

மடை திறந்து பாயும் நதியலை நான்

அன்பென்ற மழையிலே

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே

வெண்ணிலவே வெண்ணிலவே, விண்ணைத் தாண்டி வருவாயா?

உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன்

லெட் மீ டெல் ய குட்டி ஸ்டோரி

வெறித்தனம் வெறித்தனம்

முக்காலா முக்காபலா

ஆராரிராரோ, நானிங்கு பாட

எஸ்.பி.பி க்கு இசையஞ்சலி - 11 பாடல்கள்

கண்ணழகா, கண்ணழகா

உருகுதே, மருகுதே

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

முகுந்தா முகுந்தா

ஒஹோஹோ கிக்கு ஏறுதே

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்

கூட மேல கூட வச்சு

எஞ்சாய் எஞ்சாமி

என்னவளே, அடி என்னவளே

வத்திக்குச்சி பத்திக்காதுடா

முன் தினம் பார்த்தேனே

குறும்பா, என் உயிரே நீதானே

செல்லம்மா, செல்லம்மா

ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா

புதுவெள்ளை மழை இங்கு பொழிகிறது

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா

அண்ணாத்தே பின்னணி இசை

தல கோதும் இளங்காத்து

பார்வை கற்பூர தீபமா, ஸ்ரீவள்ளி

புத்தம் புது பூமி வேண்டும்

ஆலாள கண்டா, ஆடலுக்கு தகப்பா

பனி விழும் மலர் வனம்


உங்கள் ஆதரவு அவனை மேலும் உயர்த்தும்