Monday, July 30, 2018

களப்போராளியைப் பற்றி விரிவாக . . .

எங்கள் தலைவர் தோழர் எஸ்.ராஜப்பா பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதி, நேற்றைய வண்ணக்கதிர் இதழில் வெளியான பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.




ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து அரசியல் இயக்கத்திற்கு...


களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

ஜி. ராமகிருஷ்ணன்

பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே வேம்பாகக் கருதி முகம் சுழிக்கும் மத்திய பாஜக அரசு அவற்றை வேக வேகமாகத் தனியாருக்குக் கைமாற்றி வருகிறது. மத்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (எல்ஐசி) முந்தைய காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் தனியார்மயமாக்க முயன்றபோதெல்லாம் உறுதியாக எதிர்த்து போராடி, மக்களின் சொத்தாகிய அந்த நிறுவனத்தை பொதுத்துறையாகப் பாதுகாத்ததோடு, அது அரசுக்கு லாபப்பங்கீடு தரக்கூடிய நிறுவனமாக செயல்படுவதற்கும் முக்கிய காரணமாகத் திகழ்வது அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ). இதற்காக இந்தச் சங்கம் நடத்திய போராட்டங்கள் ஒரு மகத்தான வரலாறு. 

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல இருந்தாலும் இப்போதும் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்கக்கூடிய நிறுவனமாக எல்ஐசி செயல்படுவதற்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் பங்களிப்பு தலையாயது. இத்தகைய சங்கத்தை வளர்த்ததிலும், உயரிய நோக்கங்களுக்காக ஊழியர்களை ஒற்றுமையாகச் செயல்பட வைத்ததிலும் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் தோழர் எஸ். ராஜப்பா. 

மதுரையில் 1936-ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜப்பா. தந்தை காவல்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றியவர். மதுரை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த ராஜப்பா சென்னைக்கு வந்து, ‘இந்து’ நாளேட்டில் ஓராண்டு பணியாற்றி 1957-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். துவக்கத்திலிருந்தே ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்த்திட முன்முயற்சி மேற்கொண்டார். 1959-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தின் மனமகிழ்ச் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டுறவு உணவகம், கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை தொடங்கப்பட்டபோது இவைகளுடைய நிர்வாகியாகவும் ராஜப்பா தேர்வு செய்யப்பட்டார். அப்போது சங்கத்தின் தென்மண்டல தலைவராக இருந்த மோகன் குமாரமங்கலம் பண்டக சாலையில் முதல் விற்பனையை துவக்கி வைத்ததை ராஜப்பா நினைவு கூர்கிறார். 

1968ம் ஆண்டு காப்பீட்டு ஊழியர் சங்கத்தில் செயல்பட்ட அதே நேரத்தில் தோழர் வி.பி. சிந்தன் ஆலோசனைப்படி பியர்லெஸ் எம்ப்ளாயீஸ் யூனியன், டிடர்ஜென்ட் இந்தியா லிமிட்டெட், ரோட் டிரான்ஸ்போர்ட் ஊழியர் சங்கம் ஆகியவற்றிலும் பொறுப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். 1966-ஆம் ஆண்டு சென்னை கோட்ட பொதுச்செயலாளராக ராஜப்பா தேர்வு செய்யப்பட்டார். மேலும் தென் மண்டல தலைவராகவும் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய இணை செயலாளராகவும், துணைத் தலைவராகவும் செயல்பட்டார். தோழர் ராஜப்பா காப்பீட்டு ஊழியர் சங்க போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார். 

1965-ஆம் ஆண்டு நிர்வாகம் நிறுவனத்தில் கம்ப்யூட்டரை புகுத்த திட்டமிட்டது. சங்கம் எல்லா மாநிலங்களிலும் இதை எதிர்த்து போராட வேண்டுமென முடிவெடுத்தது. சென்னை கோட்டத்தில் 35 சதவிகித ஊழியர்களே சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். நிறுவனத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று சங்கம் முடிவெடுத்தபோது “சென்னை கோட்டத்திலும் வேலைநிறுத்தம் செய்வோம்” என்று ராஜப்பா, என்.எம். சுந்தரம் உள்ளிட்ட தோழர்கள் கூறியிருக்கிறார்கள். “மாநிலத்தில் பிற கோட்டங்களில் சங்கம் ஓரளவுக்கு பலமாக இருக்கிறது. தலைமையகமான சென்னையில் பலவீனமாக இருக்கிறது; எப்படி உங்களால் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க முடியும்,” என அகில இந்திய பொதுச்செயலாளர் சரோஜ் சௌத்ரி சென்னை கோட்டத் தோழர்களைக் கேட்டிருக்கிறார்.


“தலை பலவீனமாக இருந்து உடலின் மற்ற அங்கங்கள் வலுவாக இருக்குமானால் என்ன பயன்,” என்று சரோஜ் சௌத்ரி, பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் கேட்டதை (றுhயவ ளை வாந ரளந டிக வாந டிவாநச டiஅளெ டிக வாந bடினல நெiபே ளவசடிபே கை வாந hநயன ளை றநயம?) அப்படியே நினைவில் வைத்திருக்கிறார் ராஜப்பா. “உறுதியாக வேலைநிறுத்தும் செய்தோம். 19 சதவீத ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதைப் படிப்பினையாக எடுத்துக்கொண்ட சங்கம், போராட்டத்தின் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியுமென்று ஊழியர்களுக்கு போராட்ட உணர்வூட்டத் திட்டம் வகுத்தது.அடுத்தடுத்து நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஊழியர்களின் பங்கேற்பு அதிகரித்தது. 

1966ல் 51 சதவீதம், 1967-ல் 78 சதவீதம், 1968ல்-90 சதவீதம் என பங்கேற்பு அதிகரித்தது. இந்த சாதனைக்காக அகில இந்திய பொதுச்செயலாளர் சென்னை கோட்ட சங்கத்தலைமைக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினார். இவ்வாறு படிப்படியாக போராட்டத்தில் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதற்கு மற்ற தோழர்களோடு சேர்ந்து தோழர் ராஜப்பாவும் முனைப்பாக பணியாற்றினார். என்.எம். சுந்தரம், ராஜப்பா ஆகிய தோழர்களை உள்ளடக்கிய போராட்டக்குழு அமைத்து கம்ப்யூட்டரை எதிர்த்து இயக்கம் நடைபெற்றது. எல்ஐசியில் மட்டுமல்ல, ரயில்வேயில் கம்ப்யூட்டரை புகுத்தும் முயற்சியை எதிர்த்த போராட்டத்திலும் ராஜப்பா கலந்து கொண்டார். 

1968-ஆம் ஆண்டு ரயில்வேயில் கம்ப்யூட்டரைப் புகுத்தும் முயற்சி ராணுவத்தின் உதவியோடு நடந்தபோது அதை எதிர்த்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற தோழர் ராஜப்பா உள்ளிட்ட எல்ஐசி மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். அகில இந்தியஅளவிலும், மாநிலத்திலும் கம்ப்யூட்டர்மயமாக்கலை எதிர்த்துப் போராட்டம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் தேவையின் அடிப்படையில் சங்கத்தோடு பேச்சுவார்த்தை மூலம் கம்ப்யூட்டரை அனுமதிப்பது என்று முடிவாக்கப்பட்டது. இத்தகைய முடிவால், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவது தவிர்க்கப்பட்டது, அதே வேளையில் நிர்வாகத்தில் வேலை அதிகரித்திருந்த நிலையில் கம்யூட்டர் அனுமதிக்கப்பட்டது.

1972-ஆம் ஆண்டு அகில இந்திய சங்கத்தின் 7-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. சென்னையில் இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதில், மற்ற தோழர்களோடு ராஜப்பாவும் முக்கிய பாத்திரம் வகித்தார். சென்னைப்பகுதியில் சங்கத்தை பிளவுபடுத்தும் முயற்சிகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது. 

1974ஆம் ஆண்டு ஊதிய உயர்வுக்கான வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு அகில இந்திய அளவில் 168 ஊழியர்கள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களில் தோழர் ராஜப்பாவும் ஒருவர். 


அதனாலெல்லாம் அவரோ சக ஊழியர்களோ பின்வாங்கிவிடவில்லை. 40 நாட்களுக்குப் பிறகு நிர்வாகம்தான் பின்வாங்கியது, அந்த நடவடிக்கையை விலக்கிக்கொண்டது. 1974-ஆம் ஆண்டு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போது, சங்கத்தலைமை ஒத்துழையாமை போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. போராட்டம் தொடங்கிய பின்னணியில் மத்திய அரசு சென்னை, தார்வார், பெங்களூர், டெல்லி, பாட்னா, மீரட் ஆகிய நகரங்களின் எல்ஐசி அலுவலகங்களுக்குக் கதவடைப்புச் செய்தது. 16 நாட்கள் வேலைநிறுத்தம் நீடித்தது. ஒன்றுபட்ட ஊழியர்களின் போராட்டத்தை உடைக்க முயற்சியெடுத்து தோல்வியுற்ற மத்திய அரசு கதவடைப்பை விலக்கிக் கொண்டு, சங்கத்தலைமையோடு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஊதிய உயர்வு அளித்தது. 

1984-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தை ஐந்து நிறுவனங்களாக பிரிப்பதற்கு மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. இதை எதிர்த்து சங்கத் தலைமை தொடர்ச்சியாக பல கட்ட இயக்கங்களை நடத்தியது. ஊழியர்கள் உறுதியாக எதிர்த்ததால் மத்திய அரசு அந்தப் பிரிப்புத் திட்டத்தை கைவிட்டது. 1988-ஆம் ஆண்டு சங்கத்தினுடைய அகில இந்திய பொதுச்செயலாளராக என்.எம். சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் இருக்கும் சென்னைக்கு சங்கத்தின் தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது. “தொடக்கக் காலத்தில் சங்கம் பலவீனமாக இருந்த சென்னை மாநகரத்தில் இருந்து சங்கத்தின் அகில இந்திய மையம் செயல்பட்டது எங்களுக்குப் பெருமைதான்,” என்று உணர்வுப்பூர்வமாக ராஜப்பா கூறினார். 

அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைமை போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கின்ற போதெல்லாம் தமிழகத்தில் எல்லா காப்பீட்டு நிறுவன அலுவலகங்களிலும் 100 சதவிகித ஊழியர்கள் பங்கேற்பார்கள். அந்த அளவிற்கு அகில இந்திய அளவில் உருக்குப் போன்ற ஒற்றுமையைக் கட்டி இச்சங்கம் இன்றளவும் செயல்பட்டு வருவது கவனிக்கத் தக்கது. 

1960-களில் துடிப்போடு சங்கப்பணியாற்றிய தோழர் ராஜப்பா சென்னை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வி.பி. சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன் ஆகியரோடு ஏற்பட்ட தொடர்பினாலும் அகில இந்திய தலைவர்கள் சுனில் மைத்ரா உள்ளிட்ட தலைவர்களின் தாக்கத்தினாலும் தோழர் ராஜப்பா 1968ம் ஆண்டு கட்சியில் உறுப்பினரானார். இவரது அயராத பணியினை அங்கீகரிக்கும் அடிப்படையில் தோழர் ராஜப்பா அரங்கத்தினுடைய மாநில கட்சி கமிட்டிக்கும், அகில இந்திய கட்சி கமிட்டிக்கும் உறுப்பினராக உயர்த்தப்பட்டார். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் ஒரு சிறப்புத்தன்மை என்னவெனில், ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக அல்லாமல் மக்களுக்கு எதிராக வருகிற மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டங்களிலும் கலந்து முன்னணியில் நிற்கும். 

1989-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு விலக வலியுறுத்தி நடைபெற்ற நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் எல்ஐசி ஊழியர்கள் முழுமையாகக் கலந்து கொண்டனர். இத்தகைய போராட்டங்கள் அனைத்திலும் தோழர் ராஜப்பா மையமான பங்காற்றினார். சென்னை மாநகரிலும், தமிழகத்திலும் தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவாகவும், எல்ஐசி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் தோழர் வி.பி. சிந்தன் மற்றும் உ.ரா. வரதராசன் போட்டியிட்டபோது தோழர் ராஜப்பா தேர்தல் பணியாற்றியிருக்கிறார்.

அத்துடன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 14வது மாநாடு சென்னையில் நடைபெற்றபோதும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு நடைபெற்றபோதும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியிருக்கிறார்.

1996ம் ஆண்டு தோழர் ராஜப்பா எல்ஐசி பணியிலிருந்து ஓய்வுபெற்றார். சிஐடியு தலைவர்களில் ஒருவரான தோழர் டி.கே. ரங்கராஜன் கூறிய ஆலோசனையை ஏற்று சிஐடியு தலைமையிலான பல சங்கங்களில் தோழர் ராஜப்பா பணியாற்றி வருகிறார். ஃபோர்டிஸ் மலர், எம்.எம்.எம், விஜயா போன்ற பெரிய தனியார் மருத்துவமனை ஊழியர்களின் சங்கத் தலைவராக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இத்துடன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், காஸ்மோபாலிட்டன் கிளப், எஸ்.வி.எஸ். சபா ஆகிய அமைப்புகளின் தொழிற்சங்கங்களிலும் தலைவராக, துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு மருத்துவமனை ஊழியர்களின் குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கும் தமிழக அரசின் குழுவில் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

1976ம் ஆண்டு அவசரநிலை ஆட்சிக் காலத்தில் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்போது தலைமறைவாக செயல்பட்ட வி.பி. சிந்தன், உமாநாத் போன்ற தோழர்களுக்கு உதவுவதற்காகவும். கட்சியுடனான அவர்களது தொடர்புகளுக்காகவும் கே.என். கோபால கிருஷ்ணன் போன்ற தோழர்களோடு இணைந்து ராஜப்பாவும் பணியாற்றினார்.தோழர்கள் என்.எம். சுந்தரம், கே.என். கோபாலகிருஷ்ணன், ஆர். கோவிந்தராஜன் போன்ற தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நாட்களை ஒரு இளைஞரின் உற்சாகத்தோடு நினைவுகூர்கிறார் ராஜப்பா. அகில இந்திய அளவில் அன்றைய சிஐடியு தலைவர்கள் பி.டி. ரணதிவே , பி. ராமமூர்த்தி அவ்வப்போது சங்கத்திற்கு அளித்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளது என்பதை நெகிழ்வோடு ராஜப்பா கூறினார். 

பணியில் இருந்த போதும், ஓய்வு பெற்ற பிறகும், தன்னுடைய சங்கப்பணி, கட்சிப்பணிக்கு துணைவியாரும், பிள்ளைகளும் உதவியாக இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு கூறினார்.நடுத்தர வர்க்கத்தினருக்கான சங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து மாநில, அகில இந்திய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர் தோழர் ராஜப்பா. சங்கப்பணி, கட்சிப்பணி இரண்டிலும் மற்றவர்களோடு இணக்கமாக இணைந்து செயல்பட்டதோடு, அடுத்தடுத்து தலைமைக்கு இளைய தோழர்களை கொண்டு வருவதிலும் முனைப்புடன் இருந்தவர் தோழர் ராஜப்பா. காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னணித்தலைவர்களில் ஒருவரான தோழர் ராஜப்பா நிர்வாகத்தினுடைய ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக வேலைநீக்கம் போன்ற சோதனைகளை உறுதியாக எதிர்கொண்டவர். தற்போது 82 வயதாகும் தோழர் ராஜப்பா கட்சி உறுப்பினராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் சக ஊழியர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக உறுதி குன்றாமல் இயங்கி வருவது பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.


No comments:

Post a Comment