Monday, July 23, 2018

குருதியில் நனைந்த தாமிரபரணி


                                                       நாறும்பூநாதன்

ஜூலை 23 - மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். வருடம் :1999









அவர்கள் கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. கையில் கொடியும், இடுப்பில் குழந்தையுமே இருந்தன. கூட்டத்தை கலைக்கிறோம் என்று சொல்லி விரட்டினார்கள். கட்டடம் கட்ட குவிக்கப்பட்டிருந்த செங்கற்களை காவல்துறையினர் எடுத்து, பொதுமக்களை குறிப் பார்த்து எறிந்தனர். ஆறு அடி நீளமுள்ள சவுக்கு கம்பால், தண்ணீருக்குள் குதித்த ஆண்களையும் பெண்களையும் அடித்து துவைத்தனர்.

ஆற்றின் மறுபுறம் கரையேறி தப்பிக்க முயன்ற ஆண்களையும் ஈரச் சேலையுடன் இருந்த பெண்களையும் கைது செய்து இழுத்துச் சென்றனர்.காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி ஆற்றில் குதிக்கும் முன்பு, தனதுஒன்றரை வயது குழந்தை விக்னேஷை, அம்மா இரத்தினமேரி கரையில் போடும்போது, குழந்தையையும் தூக்கி காவல்துறையினர் உள்ளே எறிந்தனர். 

ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை பார்த்து, நீச்சல் போட்டியில் கோப்பைகள் வென்ற அவர்களின் புகைப்படங்கள் சிரிக்கின்றன.தெருவெங்கும் இறைந்து கிடந்த ஒற்றைச் செருப்புகள், மூன்று மணி நேர வெறியாட்டத்தின் உச்சத்தை காட்டின.

எல்லாம் முடிந்த பின், சுலோச்சனா முதலியார் பாலத்தில், வழக்கம்போல பேருந்துகள் ஓட ஆரம்பித்தன. பாலத்தின் அடியில், இந்த பதினேழு உயிர்களை சுமந்தபடி தாமிரபரணி ரத்தச்சிவப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள்.

1. விக்னேஷ் (ஒன்றரை வயது குழந்தை), 2. ரத்தினம், 3. சஞ்சீவி, 4.ஷாநவாஸ், 5. குட்டி என்ற குமார், 6.இரத்தினமேரி, 7. இன்னாசி மாணிக்கம், 8. ஜான் பூபாலராயன், 9. வேலாயுதம், 10.கெய்சர், 11. ஜெயசீலன், 12.அந்தோணி, 13. முருகன், 14. ராஜி, 15. ஜோசபின், 16. அப்துல்ரஹ்மான், 17. ஆறுமுகம். 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ளவரை, தாமிரபரணி ஆறு இருக்கும் வரை, இந்த பதினேழு பேரின் பெயர்களும் நிலைத்து நிற்கும்.

நன்றி - தீக்கதிர் 23.07.2018

1 comment:

  1. வணக்கம் தோழரே
    வெறுமனே காவல்துறையை மட்டும் குற்றம் சொல்ல கூடாது
    இந்த கொடுமையை தூண்ட காரணமான திமுக அரசு கூட குற்றவாளிகள் தான்
    காவல்துறை என்றைக்குமே ஆளும் வர்க்கத்தின் எடுபிடி

    கீழ்வெண்மணி படுகொலையின் போதும் திமுக அரசுதான்

    இரா.செங்குட்டுவன்
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

    ReplyDelete