Friday, July 27, 2018

பேச விட்டு வேடிக்கை பாக்கறியா?

அவங்களை பேச விட்டு நீ வேடிக்கை பாக்கறயா என்று நாம் கோபமாக கேட்கும் கேள்வியைத்தான் எங்கள் முன்னாள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் இ.ர்ம்.ஜோசப், நாகரீகமான முறையில் மோடியைப் பார்த்து எழுப்பியுள்ளார்.

மோடி பதில் சொல்ல மாட்டார். ஆனால் மோடியின் குரூர புத்தியை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 



மற்றவர்களைப் பேச விட்டு மௌனம் காக்கும் பிரதமர்





















ராஜஸ்தான் மாநில எல்லைப் புறத்தில் ஆல்வார் பகுதி. ஜூலை 20 மாலை நேரம் - ரக்பர் கான், அவரது நண்பர் ஒருவர் ரூ.60,000 விலை கொடுத்து வாங்கிய இரண்டு பசுக்கள். பசுக்களை டெம்போ வேனில் ஏற்றிக் கொண்டு வர கையில் காசு இல்லை. நடந்து கொண்டே பசுக்களை ஓட்டி வருகின்றனர். திடீரென்று ஒரு கூட்டம். அவர்களைத் தாக்கத் தொடங்குகிறது. ரக்பரின் நண்பர் வயல்களுக்குள் ஓடித் தப்பிக்கிறார். ரக்பர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். 

பின்னிரவில் போலீஸ் வருகிறது. ரத்தத்தைக் கழுவி விட்டு, போலீஸ் வேனில் ரக்பர் ஏற்றப்படுகிறார். வழியில் போலீஸ்காரர்கள் டீக்கடையில் நிதானமாக டீ குடிக்கிறார்கள். காலை 4 மணிக்கு மருத்துவமனைக்குச் செல்லும் போது, ரக்பர் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 

கூர் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் 13 காயங்கள். அதிர்ச்சியில் இறந்ததாக டாக்டர்கள் கூறுகிறார்கள். தான் ஒருவர் மட்டுமே சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ரக்பரின் மரணம், அவரது மனைவி, ஏழு குழந்தைகளை ஒரே இரவில் அநாதை ஆக்கிவிட்டது. 

மறுபுறத்தில் இறந்து போனவருக்கும் இருப்பவர்களுக்கும் அறிவுரைகள் தொடங்கி விட்டன.

‘‘முஸ்லிம்கள் இந்துக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பசுக்களை கடத்திச் செல்லக் கூடாது.
இந்த தொழிலை அவர்கள் நிறுத்த வேண்டும்’’ - ராஜஸ்தான் பாஜகஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ்.

‘‘இவர்கள் மாட்டுக்கறி தின்பதை நிறுத்தி விட்டால், கொலைகளும் நின்று விடும்’’ - ஆர்.எஸ்.எஸ் முன்னணித் தலைவர் இந்திரேஷ் குமார்.‘‘

இந்திரேஷ் குமார் ஒரு பக்குவமான மனிதர்’’ - பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் கிரி ராஜ் சிங்.

‘‘முஸ்லிம்கள் பசுக்களைத் தொடுவதையே தவிர்க்க வேண்டும்’’ - பா.ஜ.க தலைவர் வினாயக் கட்டியார். 

‘‘இந்த நாட்டில் பசுக் கொலை நிறுத்தப்படாத வரையில், இத்தகைய கொலைகள் தொடர்வே செய்யும்’’ ராஜா சிங் பா.ஜ.க எம்.எல்.ஏ. 

‘‘மோடியின் புகழ் உயர உயர, இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கவே செய்யும்.’’ - மத்திய நீர்ப்பாசனத் துறைபா.ஜ.க இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால். 

மோடியின் உயர்ந்து வரும் புகழ் குறித்து கடைசியில் சொல்லப்பட்ட வாசகங்கள் மிக முக்கியமானவை. 


2014ஆம் ஆண்டு மோடி பிரதமரானது முதல் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனைகளாகப் புறந்தள்ளி விட முடியாது. 

இந்த நிகழ்ச்சிகளுக்கும் மோடியின் புகழ் உயர்வதற்கும் தொடர்பு உண்டு என்று பா.ஜ.க நம்பும் எனில், நிலைமை என்னவாகும்? மோடியின் புகழை மேலும் உயரச் செய்வதற்குத் தானே அந்தக் கட்சி தொடர்ந்து முயற்சி செய்யும்?

இப்படி பா.ஜ.க-வினர் பலர் பேசிய பின்னரும் இந்தப் பிரச்சனையில் பிரதமர்மோடி காக்கும் கனத்த மௌனம் அந்தமுயற்சிக்கு அளிக்கும் ஒப்புதல் தானோ?

                                     -  தோழர் இ.எம்.ஜோசப்,
                                       முன்னாள் துணைத்தலைவர்,
                              தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment