கொச்சி மகாராஜாஸ் கல்லூரியின் மேஜை ஒன்றில் அபிமன்யுவின் உடலை அவரது சக தோழர்கள் படுக்க வைத்திருந்தார்கள்.
அவருக்கு அருகிலிருந்து “என் மகனே... நான் பெற்ற மகனே” என்று அரைகுறை மலையாளம் கலந்த தமிழில் தோட்டத் தொழிலாளியான அவரது தாயார் பூபதி கதறுவதைத் தவிர வேறு எந்த சிறு சத்தமும் அங்கே கேட்கவில்லை. ஏதோ ஒரு தோழரின் தோளில் ஆதரவாக தலையை சாய்த்துக்கொண்டு அமைதியாக அழுதுகொண்டே தனது வேட்டியின் நுனியால் கண்ணீரைத் துடைக்கும் தந்தை மனோகரன்.
ஓரமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோழர் சைமன் பிரிட்டோ, நடுங்கும் கரங்களில் தனது மகளை தன்னுடன் இறுக்கி அணைத்திருந்தார்...!அபிமன்யுவின் உடலை அங்கிருந்து வெளியே கொண்டுசெல்லும் போது தோழர். சைமன் பிரிட்டோவின் அருகில் ஒரு நிமிடம் நிறுத்தினார்கள்... அவர் தனது முறுக்கிய கரங்களை உயர்த்தி அபிமன்யுவிற்கு வீரவணக்கம் செலுத்துவார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் அவர் அபிமன்யுவுக்கு மிகுந்த சிரமப்பட்டு நெற்றியில் முத்தமிட்டார்.
இந்திய மாணவர் சங்கத்தில் செயல்பட்டதற்காக சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுஉடல் செயலிழந்து நரகவேதனையை அனுபவித்துக் கொண்டு, வாழும் தியாகியாக கடந்த 30 வருடங்களாக சக்கர நாற்காலியில் சுழன்று கொண்டிருப்பவர் எழுத்தாளர் தோழர் சைமன் பிரிட்டோ. அவரிடம் அபிமன்யு மிக நெருக்கமாக பழகியுள்ளார். செய்தியாளர்களிடம் தோழர். சைமன் பிரிட்டோ பேசினார்
:“இவ்வளவு நல்ல குணம் படைத்த இளைஞனை பார்க்கவே முடியாது... அவனிடம் ஒருபோதும் பணம் இருந்ததில்லை... ஊருக்குச் செல்லும் போது பணம் கொடுத்து உதவ முயன்றால் ‘வேண்டாம் தோழர்’ என்று மறுத்து விடுவான். சொந்த ஊருக்குப்போகாத வெள்ளிக்கிழமைகளில், எனது புதிய புத்தகத்தை படியெடுக்கும் வேலை களில் எனக்கு உதவுவதற்காக என் வீட்டிற்கு வருவான். எனது மனைவி ஸீனா, அவனுக்கு விருப்பமான உணவை சமைத்துக் கொடுப்பார். அவ்வாறு ஒவ்வொரு முறை உணவை அருந்தும் போதும் விடுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் யாருமே சாப்பிட்டிருக்கமாட்டார்கள் என்று கூறிக்கொண்டு தான் சாப்பிடுவான்.
”அபிமன்யுவிற்கு வயது வெறும் 20.ஒரு ஏழைத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக இருந்தவன். இடுக்கியில் மாநில எல்லையில் உள்ள கிராமமான வட்டவடயிலிருந்து எர்ணாகுளம் நகரத்திற்கு வந்த அபிமன்யு தனக்கு விருப்ப மான கல்விநிலையத்தை தனது பெயருடன் இணைத்துக் கொண்டான். ’அபிமன்யுமகாராஜாஸ்’ என்பது மலையாளத்திலான அவனது முகநூல் பக்கம். மகாராஜாஸிலும் மிகவும் விருப்பத்துக்குரிய நபராக மாறினான். இரண்டாம் வருட வேதியியல் இளங்கலை மாணவன். படிப்பில் படு சுட்டி. அனைத்திற்கும் மேலாக கல்லூரி வளாகத்திற்குள் இந்திய மாணவர் சங்கத்தின் தீரமிக்க போராளி.
இறுதியில் அவனுக்கு மதவாதிகள் மரணத்தை தண்டனையாகக் கொடுத்தார்கள்...! கல்லூரிக்கு வெளியிலிருந்து கொலையாளிகளின் கூட்டம் மதத்தின் பெயரில் கல்லூரி வளாகத்திற்குள் வந்தது. ஒருவன் பின்னிலிருந்து இருகைகளையும் பிணைக்க இன்னொருவன் கத்தியால் நடு நெஞ்சில் குத்தினான். சம்பவ இடத்திலேயே வீரமரணம்.
அபிமன்யு சுவரெழுத்து வேலை யில் ஈடுபட்டிருந்த போது தான் கொல்லப்பட்டான்.அவர் சுவரில் எழுதியிருந்த “மதவாதம் தகரட்டும்” என்ற முழக்கத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. மகாராஜாஸுக்கு மிக அருகில்வன்முறைக் கும்பலின் கத்திக் குத்துக்கு இரையான உடல் மீண்டும் கொண்டு வரப்பட்டபோது அந்த வளாகம் அதிர்ந்தது. மரங்களின் அடியிலும், வராந்தாக்களிலும் இதயம் பறித்த வேதனையுடன் சக மாணவர்கள் நின்றனர்.
மீண்டும் ஆம்புலன்ஸில் அவரது உடலை ஏற்றியபோது வளாகத்தின் காட்சிகள் மாறின. நெஞ்சு வெடிக்க கிளம்பிய அவர்களது முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. பிரிய சகாவே அபிமன்யு… மகாராஜாஸின் ரோசாப்பூவே… இல்லா மரிக்கில்லொரு நாளும்… ஜீவிக்குந்ந ஞங்களிலூடே என்கிற முழக்கங்களோடு அந்த வளாகத்தின் நாயகத்துவம் விடைபெற்றது.
கேரளத்தின் தமிழக எல்லையில் உள்ள கொட்டக்காம்பூர் கிராமம் கடந்த இரண்டு நாட்களாக கண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. வீட்டு வாசல்களில் காண்பதெல்லாம் கண்ணீர் வற்றிய முகங்கள். அப்பா, அம்மா, சகோதரர்களும், பாட்டியும் அபிமன்யுவும் வசித்த ஒற்றை அறைகொண்ட வீடு. சமையலறை, படுக்கை அறை எல்லாம் ஒன்றுதான். ஒரேயொரு ஆடம்பரப் பொருளாக வீட்டின் சிதைந்த மூலையில் ஒரு டிவி. மூன்று மாதங்களுக்கு முன்பு மாதத் தவணையில் வாங்கிய இரும்பு அலமாரியில் அபிமன்யுவின் வேட்டியும் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கலைந்துபோன கனவு போல அலமாரியின் மீதமுள்ள இடம் காலியாக கிடக்கிறது. அப்பா மனோகரனும், அம்ம பூபதியும் எழுத்தறிவற்றவர்கள். மூத்த பிள்ளை களான கவுசல்யாவும், பரிஜித்தும் குடும்ப நிலை கருதி பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டனர். படிப்பில் சுட்டியான இளையவன் அபிமன்யு குறித்து குடும்பம் கனவு கண்டது. அதனால் தான் பலரிடமிருந்தும் கடன் வாங்கி அவனது படிப்புக்காக செலவழித்தனர். மரயூர் பள்ளியிலும், திருக்காக்கர ஒய்எம்சிஏ பள்ளியிலும் எஸ்எஸ்எல்சி வரையிலான படிப்பு. அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூவில் பெற்ற அதிக மதிப்பெண்களோடு எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் நுழைய வாய்ப்பு கிடைத்ததும் மனோகரன் கடன் வாங்கி அனுப்பி வைத்தார்.
அன்றாட வாழ்க்கைக்குப் போதுமான வருவாய் இல்லை. சொந்தமாக உள்ள 2 ஏக்கர் நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் பாறை. மீதமுள்ள அரை ஏக்கர் நிலத்தில் பூண்டு, பீன்ஸ், காரட் போன்றவற்றை விவசாயம் செய்கிறார். அதிலிருந்து கிடைப்பது குறைந்த வருவாய். நூறு நாள் வேலைத்தி்ட்டத்தில் மனோகரனும், பூபதியும் வேலை செய்து தான் குடும்பச் செலவுகளை ஓரளவுக்கு சரிக்கட்டி வந்தனர். இந்நிலையின்தான், மத அடிப்படைவாதத்தை கையில் ஏந்தி செயல்படுகிறது ‘பாப்புலர் பிராண்ட்’ அமைப்பின் குண்டர்களது கொலைக்கத்தி அந்த குடும்பத்தின் கனவுகளை முற்றாக தகர்த்திருக்கிறது. தகர மேற்கூரையின் கீழ் குச்சிகளை இணைத்துக்கட்டி விறகு காயவிடப்பட்டுள்ளது. மனோகரனும், பூபதியும், பரிஜித்தும், கவுசல்யாவும் அபிமன்யுவின் பாட்டி குமாரக்காவும் அதன் கீழ் படுத்துக்கொள்வார்கள். ஒரே ஒரு கட்டில் மட்டும் உள்ளது. அது அபிமன்யுவுக்கு!
ஏசியாநெட் கொச்சி செய்தியாளர் சுஜித் சந்திரன் மற்றும் தேசாபிமானி மரயூர் (இடுக்கி மாவட்டம்) செய்தியாளர் இந்திரஜித் ஆகியோரது குறிப்புகளிலிருந்து தொகுப்பு: தக்கலை சதன், சி.முருகேசன்.
நன்றி - தீக்கதிர் 04.07.2018
Unfortunate incident. It was the CPI(M) which started the campus politics and killing the opponents in Kerala. The Stalin-ism is still in-force in all kerala colleges - terrorizing the opposing ideology. Now this unfortunate kid has to taste the same medicine.
ReplyDeleteIt had become a fashion to put the blame on CPM on everything even when they are at the receiving end and being the victims of violence and also dragging Stalin unnecessarily
Delete