Thursday, July 19, 2018

ரஜனிக்கும் புரியாது. அவரு ?????????


நேற்று காலையில் தீக்கதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் எழுதிய கடிதத்தைப் பார்க்கும் போது "இதெல்லாம் ரஜனிக்கு எங்க புரியப் போவுது. அப்படியே புரிஞ்சாலும் மோடி மாயையில் கிறங்கிக் கிடக்கும் அவர் மண்டையில எங்க ஏறப் போவுது. அவரோட ரசிகர்களுக்கு புரிஞ்சா சரி" என்று நினைத்துக் கொண்டேன். 

சிறிது நேரம் முன்பாக ஏதோ ஒரு தொலைக்காட்சியில் அவர் சார்பாக பேசிய பிரவீன் காந்தி என்ற இயக்குனரும் தோழர் கனகராஜூம் கலந்து கொண்ட நிகழ்ச்சியைப் பார்க்கையில் ரஜனிகாந்தை ஆதரிக்கிறவர்களும் அவரை மாதிரியே அதீதீதீதீமேமேமேமேதாவிகளாகத்தான் இருப்பார்கள் என்பது புரிந்தது. 

இந்த ஜென்மங்களுக்கு எல்லாம் ஒரு எழவும் தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சிக்காது. 

தோழர் கனகராஜ் கடைசியாக  கேட்டது நச்சென்ற கேள்வி

"ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில, நீங்களாம் எதுக்கு அரசியலுக்கு வரீங்க?"



தன் நெஞ்சறிவது பொய்யற்க...

-----க.கனகராஜ் 

அன்புள்ள ரஜினிகாந்த்,

சென்னை சேலம் 8 வழி சுங்க சாலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். 

ஒரு துறையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள உங்களைப் போன்றவர்கள் ஒரு கருத்தை சொல்லும்போது அது பெரும்பாலான மக்களின் கவனத்தைப் பெறுகிறது சில நேரங்களில் தங்களைப் போன்றவர்கள் சொல்வதாலேயே அதற்கு நம்பகத்தன்மை ஏற்பட்டு விடுகிறது.

 இத்தகைய தாக்கத்தை அது ஏற்படுத்தும்போது அதற்கு உண்டான பொறுப்புணர்வோடு தங்களின் கருத்து அமைய வேண்டுமென்பதில் காட்ட வேண்டிய அக்கறையை தாங்கள் காட்டவில்லை என கருதுகிறேன். 

எல்லா விதமான தரவுகளையும், தேடி கண்டுபிடித்து அதனடிப்படையில் கருத்து சொல்ல போதிய அவகாசம்தங்களுக்கு இருக்காது. இப்போது கூட இந்த கருத்தை சொன்ன பிறகு தாங்கள் மீண்டும் படப்பிடிப்பு சென்று விட்டதாகவும், படப்பிடிப்பின் ஓய்வு நாட்களில் வந்திருந்த தாங்கள் இந்த கருத்தைக் சொல்லிவிட்டு சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால்எதிரும் புதிருமான கருத்துக்கள் ஒரு பிரச்சனையில் வருகிற போது, அந்த பிரச்சனைபற்றிய அம்சங்களை உங்களுக்கு நெருக்கமான யாராவது ஒருவரிடம் கேட்டு அதை உணர்ந்து கொண்டு அதனடிப்படையில் கருத்து சொல்ல வேண்டியது உங்கள் கடமை.

( 1 )தூரமும் நேரமும் மோசடியானவை
———————————————-

8 வழி சுங்கச்சாலையின் நோக்கம் தூரத்தையும், நேரத்தையும் குறைப்பதுதான் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். 

பிரச்சனை என்ன வெனில், ஏற்கெனவே உள்ள சென்னை-சேலத்திற்கான 3 சாலைகளுக்கான தூரமும், பயணிப்பதற்கான நேரமும், மதுரவாயல் முதல் சேலம் வரை கணக்கிடப்பட்டுள்ளது. புதிதாக உத்தேசிக்கப்பட்டுள்ள 8 வழிச்சாலைக்கான தூரமும், நேரமும் வண்டலூரை தாண்டியுள்ள புறவழிச்சாலையிலிருந்து கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் பழைய சாலைகளோடு ஒப்பிட்டு நேரமும், தூரமும்குறைவு என்று காட்டப்படுகிறது.

 புதிய சாலை 277 கிலோ மீட்டர் தூரம் என்றும், பழைய சாலையை மிகக் குறைந்த தூரமுள்ளது 333 கி.மீ எனவும் பழைய சாலையில் செல்வதற்கு 5 மணி நேரத்திற்கு மேலாகும் என்றும், புதிய சாலையில் செல்வதற்கு 3 மணி நேரம்போதுமென்றும் இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப் பட்ட வாய்ப்பறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

ஆனால் மதுரவாயலுக்கும், வண்டலூர் அருகில் துவங்கும்சாலைக்கும் இடையே 24.89 கி.மீ தூரம் இருக்கிறது என்பதையும் அது பதிவு செய்திருக்கிறது. 

அதாவது பழைய சாலைக்கும் உத்தேசிக்கப்பட்டுள்ள சாலைக்கும் இடையே 30 கி.மீ தூரம் மட்டுமே குறையும் என்பதை இந்த அறிக்கையை படிக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும். 

வண்டலூர் முதல் மதுரவாயல் வரை உள்ள போக்குவரத்து நெரிசலையும், அதனால் ஏற்படும்காலதாமதத்தையும் கணக்கிட்டால் வாகனப்போக்கு வரத்து உச்சமாக இருக்கிற சமயங்களில் ஒரு மணி நேரத்தை விட அதிக நேரம் இதை கடக்க ஆகிறது.எனவே, தூரம் நேரம் குறித்து அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களும், அரசால் முன்வைக்கப்படும் வாதங்களும் மோசடியானவை, உண்மையை மறைக்கக் கூடியவை.

( 2 )விவசாயிகள் துயரம் கண்ணில் படவில்லையா?
--------------------------------------------------------------------------------

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமலும், போதுமான இழப்பீடும் வழங்கி இந்த சாலை போடப்பட வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆதரவான குரலை போன்று இந்த திட்டத்தை ஆதரித்து கருத்து கூறியிருக்கிறீர்கள்.

 நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கும், அனல்மின் நிலையத்திற்கும் நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு இன்று வரையிலும் அரசால் ஒத்துக்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு, இழப்பீடு தரப்படவில்லை.

 2009ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை-சேலம் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இன்று வரையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதை தாங்கள் சமீபத்திய செய்திகள் மூலமாக அறிந்திருக்கக்கூடும்.

 இந்த அரசு அந்த அரசு என்பதல்ல பிரச்சனை. இறுதியாக அரசுகளின் துணையோடு அதிகார வர்க்கமும், ஆளும் கட்சியும் இதைப்பற்றி எவ்வித கவலையுமின்றி சாலை போட்டதோடு, தங்கள்பணி முடிந்து விட்டதாக மூட்டை கட்டி விடுகிறார்கள்.

 நிலத்தின் வருமானமும் இழந்து, பயிரிடுவதற்கு நிலமும் இன்றி, அதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் துயரமும், போராட்டமும் தங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது அதிசயத்திலும் அதிசயம்தான்.

( 3 )காரில் போவோரும் கதறப் போகிறார்கள்
------------------------------------------------------------------------

மூன்றாவதாக இத்தகைய சாலைகள் அமைக்கப்படுவதால் நேரமும், காலமும் மிச்சமாகும் என்பதை ஒருவாதத்திற்காக ஏற்றுக் கொண்டால் இதனால் பலன் அடைவோர் யார், பாதிக்கப்படுவோர் யார், என்பது முக்கியமில்லையா?

 தமிழகத்தில் இயங்குகிற எந்த பஸ்சும் சராசரி 120 கி.மீ. வேகத்தில் செல்லமுடியாது. எனவே பஸ்சில் பயணம் செய்யும் சராசரிமனிதர்களுக்கு இதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. காரில் செல்பவருக்கும், அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்பவருக்கும் இது பயன்படக்கூடும். அதாவதுஅவர்களின் நேரத்தையும், தொழிலையும், லாபத்தை அதிகரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 இந்த தடத்தில் அமையப்போகும் 8 சுங்கச் சாவடிகள் மூலம் இழக்கப்போகும் தொகையை கணக்கில்கொண்டால் காரில் போகிறவர்களும் கதறவே போகிறார்கள். 

மறுபுறம் இந்த நிலத்தை கொடுப்பவர் களோ, ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள். அந்த விவசாயிகளுக்கு மாற்று இடமோ, உரிய இழப்பீடோ அரசுகளின் கடந்த காலத்தை அனுபவத்தை கணக்கில் கொண்டால் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை

. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பது உண்மை. ஆனால், வேறு தொழில்கள் அதைவிடவும் பயன்தரத் தக்கதாக இல்லை என்கிற காரணத்தினால்தான் விவசாயத்தை நம்பி வாழ்கிறவர்கள் அந்த நிலங்களை விட்டு பிரிய மறுக்கிறார்கள்

. கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு என்னை நானே கொலை செய்து கொள்கிறேன் என்கிற அந்த பெண்ணின் கதறல் உணர்வின் அடியாழத்திலிருந்து வந்தது. அந்த பெண் முன்வைக்கும் வேண்டுதல்கள் அதிகாரத்தின் செவிப்பறைகளுக்குள் நுழைந்ததே கிடையாது.

( 4)எது முன்னேற்றம் சூப்பர் ஸ்டார்?
--------------------------------------------------------------

எந்தவிதமான முன்னேற்றமும் வரக் கூடாதா? இந்தியா வளரக்கூடாதா? மாட்டு வண்டியில்தான் போக வேண்டுமா? இந்தியா வல்லரசாக கூடாதா என்கிற கேள்வியை தேசத்தின் நலனை முன் வைப்பவர்கள் என்கிற தோற்றத்தோடு வெளிப்படுத்தி வருகிறீர்கள்.

 தேசம் என்பது நில எல்லை அல்ல. அதிலிருக்கும்மக்கள் என்பதை புரிந்து கொண்டால் இந்த ரூபாய் 10,000 கோடியை தமிழகத்தின் கிராமப்புறங்களில் தாங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களையும், பொருட்களையும் கொண்டு செல்ல ஒற்றையடி பாதை கூட இல்லாத - மழைக்காலங்களில் குளங்களின் நடுவே நடந்து செல்கிறவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது.

அந்த சாலைகள் மேம்படுத்தப்பட்டால் இதே 10000 கோடி ரூபாய் பல லட்சம் பேருக்கு அவர்கள் பொருளை விரைவாகவும், இலகுவாகவும் கொண்டு செல்ல வாய்ப்பளித்துஅவர்களுடைய வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும். 

ஆனால் இந்த சாலை சில விரல் விட்டு எண்ணத்தக்க பெரும் பணக்காரர்கள் லாபமீட்டுவதற்கு உதவலாம். இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை தாங்கள் அறிந்திருக்கக்கூடும். ஒரு படத்தில் நடிப்பதற்கு நீங்கள் வாங்கும் தொகை அதிகரிப்பதன் மூலம் அந்த படத்தில் நடிக்கும் அல்லது அந்த தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் எல்லோருக்கும் சம்பளம் உங்களைப் போலவே உயர்ந்து விடும் என்பது பொருளல்ல.

 எல்லோரும் ஏன் சாலையோர கடைகளில் சாப்பிட வேண்டும். 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடக்கூடாதா என்கிற கேள்வி சாதாரண மக்களிடம் ஒரு ஆர்வத்தை தூண்டும். அதற்காகத்தான் சாலையோரக்கடைகளை, தள்ளுவண்டி கடைகளை ஒழிக்கிறோம் என்று நீங்கள் சொல்கிற போது மகிழ்ச்சி கூட ஏற்படலாம்.

 ஆனால் சூப்பர் ஸ்டார் அவர்களே, அந்த 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வழங்கப்படுகிற குடிதண்ணீர் விலையை விடவும் குறைந்த செலவில்தான் பல பேருடைய உணவு கழிகிறது என்பதை தாங்கள் அறிந்திருந்தால் அதைப் பேச மாட்டீர்கள்.

 எனக்கு நுழைவதற்கு வழி இல்லாத போது அது 5 நட்சத்திர ஹோட்டலாக இருந்தாலென்ன, 9 நட்சத்திர ஹோட்ட லாக இருந்தால் என்ன?

 தெரு சுத்தமில்லை, சாக்கடைநாறுகிறது, திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கிறார்கள் என்றெல்லாம் முகம் சுளித்துவிட்டு நீங்கள் கடந்து போகிறீர்கள். இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட யாரும் அதையெல்லாம் வரம் வாங்கி பெற்றுக்கொண்டவர்கள் அல்ல.

 மாறாக, நாட்டின் பேரை சொல்லியோ, இன்ன பிற உணர்வுகளை தூண்டியோ வேறு வழியின்றி பிழைத்துக் கிடக்கிறவர்கள்.

 8 வழி சுங்கச்சாலையிலும் நிற்க முடியாது, பொருட்களை ஏற்றிஇறக்க முடியாது. இளைப்பாற முடியாது. அதைத்தடுக்கும் வகையில் இருபக்கமும் சுவர் எழுப்பப்பட்டி ருக்கும்.

 ஒரு நபரின் நிலத்தின் நடுவே சாலை சென்றால் நிலத்தின் ஒருபகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கோ அருகிலுள்ள மற்றொரு நிலத்திற்கு செல்வதற்கு அவர்கள் நடக்க வேண்டிய தூரத்தையோ அதனால் அவர்கள் இழக்கும் நேரத்தையோ வாய்ப்பறிக்கையும் கணக்கில் கொள்ளாது; உங்களைப்போல் வாய் திறந்து பேசுபவர்களும், கணக்கில் எடுக்க மாட்டீர்கள் என்றால் இதற்காக போராடுவது அரசியல் கட்சிகளின் கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.

( 5 )சாலை வழி மந்திரம், பலே!
--------------------------------------------------------------

பல வழிச்சாலைகள் வந்தால் தொழில் பெருகும் என்று ஒரு பொய்ச் சூத்திரத்தைசொல்லிப்போகிறீர்கள். உலகத்திலேயேசாலைகளின் மூலம் தொழிற்சாலை களையும் வேலைவாய்ப்புகளை பெருக்குகிற மந்திரத்தை நீங்களும், நீங்கள் ஆதரிக்கிற மத்திய, மாநிலஅரசுகளும் கையிலேயே இவ்வளவு நாளும்வைத்திருக்கிறீர்கள் என நினைக்கும் போது பெருமை யாக இருக்கிறது. 

தொழில் வாய்ப்புகள் இருக்கும் இடங்களுக்கு சாலைகளும், இதர வசதிகளும் ஓடிவரும், தேடி வரும் என்பது உண்மை. 

ஆனால் சாலைகள் போட்டுவிட்டதானலேயே வேலைவாய்ப்புகள் வரும் என்றால் சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் இருக்கிற எல்லா மாவட்டங்களிலும் தொழில் செழித் தோங்கி வளர்ந்திருக்கிறதா? இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதா? என்பதை தங்கள் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

( 6 )ரசிகர்களும் நம்பினார்களே...
-----------------------------------------------------------------------------

புதிய வேலைவாய்ப்பு வருவது இருக் கட்டும், ஆனால் ஏற்கெனவே இருந்த50,000 சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு விட்டதாகவும் அதன் காரணமாக 5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறி போய்விட்டதாகவும் நீங்கள் ஆதரிக்கும் தமிழகஅமைச்சர் சட்டமன்றத்தில் பேசியிருக் கிறார்; அதற்கான காரணமாக நரேந்திர மோடி அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட உயர் பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும் தான் என்றும் சொல்லியிருக்கிறார்.

 இவை இரண்டையும் நீங்கள் ஆதரித்தீர்கள். அது தேசத்தில் கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழித்து விடும் என்று நீங்கள் நம்பிக்கை தெரிவித்தீர்கள்.

 இதை சொல்லிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் நம்முடைய மாநிலத்தில் ஒரு ஒப்பந்தக்காரர் வீட்டிலிருந்து ரூபாய் 160 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

 எனவே கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டு விடும் என்று நம்பிய தாங்கள் உங்களை கண்மூடித்தனமாக உங்களுடைய வசனங்களுக்காக ஆதரித்த, தன் குழந்தைக்கு சாப்பாடும், படிப்பும் வழங்காமல் கூட அந்த பணத்தை உங்கள் சினிமா டிக்கெட்டை வாங்குவதற்கு கூடுதல் விலை கொடுத்த பல பேர்நம்பினார்கள்.

 வேலையை இழந்தவர்களில் அவர்களில்சிலரும் இருக்கக்கூடும். நான் இப்படி நடக்கும் என்றுஎதிர்பார்த்தேன்; ஆனால் அது பேரிடியாய் பெரும் துயராய் ஏழை மக்களை பாதித்திருக்கிறது, இளைஞர்களைபாதித்திருக்கிறது, தொழிலை பாதித்திருக்கிறது, பொருளாதாரத்தை துயரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது என்று எப்போதாவது பேசியிருக்கிறீர்களா?

( 7 )சாலைக்கு வரும் நிதி மாணவர்க்கு வர 
--------------------------------------------------------------------------------

மறுப்பதேன்?
____________________________________

ரஜினிகாந்த் அவர்களே, இதைத் தாண்டியும் இந்த திட்டத்திற்கு பின்னாலும், இதுபோன்ற திட்டங்களுக்கு பின்னாலும் ஏராளமான அரசியலும் இருக்கிறது, அது சார்ந்த சதிகளும் இருக்கிறது.

 ஏன் இப்போது தமிழகத்திற்கு வரும் நிதி சாலைகளுக்காக மட்டும் வருகிறது? ஒருசாலைக்கு 10,000 கோடி ரூபாய் தரத்தயாராக இருக்கும் மத்திய அரசு தமிழகத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு +2க்கு மேல் வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை கடந்தசில வருடங்களாக முழுமையாக தரவில்லை.

 சமீபத்தில்சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டபடி இந்த வகையில் தமிழகத்திற்கு வர வேண்டிய தொகை ரூபாய் 1900 கோடி. முதன் முதலாகமுதல்வர் எடப்பாடி பழனிவாமி கடிதம் எழுதிய போது 1500 கோடியாக இருந்தது. இப்போது 1900 கோடியாக உயர்ந்திருக்கிறது.

 படிப்புக்கு, வர்தா புயலுக்கு, சென்னை வெள்ளத்திற்கு 100 நாள் வேலைக்கு பணம்தராத மத்திய அரசாங்கம் சாலைகளுக்காக ஏன் ஆயிரமாய், ஆயிரம் கோடிகளை கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.

 இதுவெல்லாம் தேசிய நெடுஞ் சாலையா? மாநில நெடுஞ்சாலையா? தனியார் சாலையா? என்பதைப்பற்றியெல்லாம் எந்த கவலையுமின்றி ஆதரித்து குரல் கொடுப்பது ஒரு பேரழிவுக்கு, பெரும் கொள்ளைக்கு, மோசடிக்கு துணை போவதாகாதா? 

இப்போதும் கூட மத்திய அரசாங்கம் இந்த 8 வழி சுங்கச்சாலைக்கு, சாலைக்கு 10.69 கி.மீ சாலை தூரம்மலைவழி செல்வதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கவில்லையென்ற செய்தி வந்திருப் பதை தாங்கள் அறியமாட்டீர்களா?

 முதலமைச்சர் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தனது சொந்த விருப்பத்திற்குரிய திட்டம் என்று பலமுறை பேசியிருக்கிறார் அதில் காட்டாத அவசரத்தை இந்த பிரச்சனையில் காட்டுவது ஏனென்ற கேள்வியே தங்களுக்கு எழாமல் போனது ஏன்?

( 8)உங்கள் வாழ்க்கையே கடமைப்பட்டுள்ளது...
--------------------------------------------------------------------------------

இப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றுஅவர்கள் சொல்கிறார்கள். அது குறித்து ஏராளமான விவாதங்கள் வந்திருக்கின்றன. ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன போது நீங்கள் ஆதரவளித்தீர்கள், அதன்துயரத்தை மக்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

 மத்தியில் இருக்கும் அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படுவது என்பதை தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான நிலைபாடு இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறை தான்; மாநிலங்கள் கூடாது; அதற்கு உரிய முறையில் சட்டதிருத்தம் செய்ய வேண்டும் என்பதுதான். 

அதை நோக்கித்தான ஆரம்பத்தில் அவர்கள் நேரடி தேர்தல் முறையை முன்வைத்தார்கள். தற்போது ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை முன்வைக்கிறார்கள்

. ஒரு பகுதி மக்கள் நடிப்புக்காக உங்களை நேசிக்கும்போது, நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்கிற போது, வியர்வைசிந்தி உழைத்த பணத்தையெல்லாம் கட்அவுட்களில் நிற்கும் உங்கள் வேடங்களின் மீது பாலாக சொரிகிற போதுஅவர்களுக்கு உங்கள் வாழ்க்கையே கடமைப்பட் டுள்ளது.

 அந்தக்கடமைக்கு உரிய முறையில் பொதுபிரச்சனைகளில் பொறுப்புணர்வோடு தங்கள் கருத்துக் களை முன்வைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

அதிகாரத்தின் குரலிலேயே பேசும் உங்களுக்கு இந்தக் குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னை சுடும்”

2 comments:

  1. இப்பதிவின் சுட்டியை எனது பதிவில் கொடுத்து இருக்கிறேன் தோழரே...

    ReplyDelete