Monday, April 3, 2017

காரைக்குடியில் ஏமாற்றிய கஜலட்சுமி சிட்பண்ட்





“பத்திரிக்கைக்காரர்கள் கட்டிய வரியை திருப்பித் தருகிறேன் என்று வசனம் பேசிய பாஜக எச்.ராசாவே, காரைக்குடியில் சிட் பண்ட் நடத்தி ஏமாற்றிய பணத்தை முதலில் திருப்பிக் கொடு”

நிலைத்தகவலாக, மீம்ஸாக நிறைய பேர் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கையில் காரைக்குடியில் அந்த காலத்தில் நடந்த ஒரு மோசடி நினைவுக்கு வந்தது.

முன்னர் ஒரு பதிவில் சொன்னது போல 1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் காரைக்குடியில் இருந்தது. அந்த சமயத்தில் 1978 முதல் 1982 வரை நான் திருக்காட்டுப்பள்ளியில் ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை படித்து வந்தேன். (நாளை ஜெயமோகன் மாதிரி வேறு யாராவது தப்பும் தவறும் எழுத வாய்ப்பில்லாமல் நாமே பதிவு செய்து விடுவது நல்லதல்லவா)

1974 அல்லது 1975 ம் ஆண்டாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பள்ளி முடிந்து விளையாடி விட்டு வீட்டுக்கு வருகையில் வீட்டு வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அப்போதெல்லாம் வீட்டு வாசலில் கார் நிற்பது என்பது எவ்வளவு பெரிய பெருமை தெரியுமா! நம் வீட்டிற்கு யார் காரில் வந்துள்ளார்கள் என்று ஆவலோடு நுழைந்து பார்த்தால் ஒரு கனவான் தோற்றத்தில் ஒரு நடுத்தர வயது மனிதரும் பட்டுப்புடவை கட்டிய பெண்மணியும் இருந்தார்கள்.

அவர்கள் பேசி முடித்து விட்டு கிளம்பும்போது காரிலிருந்து ஒரு ப்ரீப்கேஸ் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார்கள். கார்ட்போர்ட் அட்டைக்கு மேலே ரெக்ஸின் துணி போர்த்தப்பட்ட பெட்டிதான். அந்த பெட்டியின் ஒரு மூலையில் சின்னதாக இரண்டு யானைகளுக்கு நடுவே லட்சுமி படத்தோடு “கஜலட்சுமி சிட்பண்ட்ஸ்”  என்று போட்டிருக்கும்.

என் நினைவு சரியாக இருக்குமானால் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் ஆறாவது வீதியிலோ அல்லது ஏழாவது வீதியிலோ பிரதான சாலையைப் பார்த்தால் போல அவர்களது பங்களா இருக்கும். பங்களாவின் வெளியிலும் “கஜலட்சுமி சிட்பண்ட்ஸ்” என்று தகரத்தில் செய்யப்பட்ட விளம்பரப் பலகை இருக்கும்.

அவர்களிடம் என் அப்பா மாதம் இருபத்தி ஐந்து ரூபாய் என ஒரு ஆர்.டி போட்டிருந்திருக்கிறார். அதற்குத்தான் அந்த ப்ரீப்கேஸ் அன்பளிப்பு. ஒவ்வொரு மாதமும் அந்த சிட்பண்டிலிருந்து ஒரு ஊழியர் வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போவார். எல்லாம் நான்கைந்து மாதம்தான். அதன் பின்பு பணம் வாங்க யாரும் வரவில்லை. அந்த பங்களாவும் பூட்டியே கிடந்தது. சிட்பண்டில் மக்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டே ஓடி விட்டதாக பேசிக் கொண்டார்கள். அந்த ஆர்.டி பாஸ்புக்கை என் அப்பா மிகவும் பத்திரமாக வைத்திருந்தார். நாங்கள் வேலூருக்கு 1992 ல் வந்த பிறகு கூட அந்த பாஸ்புக்கை பார்த்துள்ளேன். எப்போது அதை கிழித்தெறிந்தார் என்று தெரியவில்லை.

ஒரு வேளை அந்த கஜலட்சுமி சிட்பண்டைப் பின்பற்றி எச்.ராஜா உறவினர்கள் ஊரை ஏமாற்றினார்களோ என்னவோ? இவருக்கு அந்த நிறுவனத்தோடு தொடர்பு இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் வீட்டின் முன்பாக போராட வேண்டும். என்ன அதற்குப் பிறகு எச்.ராஜா காரைக்குடி பக்கம் தலை வைத்து படுக்காமல் போகலாம்.
                                                         
அதுவும் கூட அந்த ஊர் மக்களுக்கு நல்லதுதான். 

பின் குறிப்பு : இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே லட்சுமியின் பெயரில் நடைபெற்ற இன்னொரு மோசடி நினைவுக்கு வந்தது. அது நாளை

1 comment:

  1. காரைக்குடியில் சிநேகம் பைனான்ஸ் ஏமாற்றியது தெரியும்... கஜலெட்சுமி தெரியவில்லை.... எச்.ராஜா காரைக்குடி பக்கம் அதிகம் வருவதில்லை என்பதாய் கேள்வி. டேஷ் துரோகி என்று விளிக்கும் அவர் மக்களை ஏமாற்றியிருந்தால் அவரை நாமும் மக்கள் துரோகி என்று விளிக்கலாம்.... தப்பேயில்லை...

    ReplyDelete