Wednesday, April 5, 2017

மீண்டும் ஒரு லெனின்

ரபேலைத் தொடர்கிறார் லெனின் ஈக்வடாரில் மீண்டும் இடதுசாரி ஜனாதிபதி




மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட மாற்றுத் திறனாளி

குயிட்டோ, ஏப் 4-
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரும், இடதுசாரிக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்தவருமான லெனின் மொரினோ வெற்றி பெற்றுள்ளார்.மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஈக்வடார் ஜனாதிபதி ரபேல் கோரியா மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றவுடன் அங்கு ஜனநாயகத்தைச் சீர்குலைத்து விடலாம் என்று அமெரிக்காவின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கின. 

பிப்.19 ஆம் தேதியன்று முதல் சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெறுவதற்கு 51 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் வேட்பாளரை விட 10 சதவிகித வாக்குகளும், மொத்தத்தில் 40 சதவிகித வாக்குகளும் பெற வேண்டும். இந்தச் சுற்றில் இடதுசாரி வேட்பாளர் லெனின் மொரினோ 39,36 சதவிகித வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சி வேட்பாளர் கில்லர்மோ லஸ்ஸோ 28.09 சதவிகித வாக்குகளும் பெற்றனர். இருவருக்கு மிடையில் பத்து சதவிகித வாக்குகள் இருந்தாலும், மொரினோவுக்கு 40 சதவிகித வாக்குகள் கிடைக்காததால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. முதலிரண்டு இடங்களைப் பெற்ற மொரினோவும், லஸ்ஸோவும் களத்தில் இருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை பெரும் அளவில் உயர்த்திய ரபேல் கோரியாவின் கொள்கைகளைத் தொடர்வேன் என்று மொரினோ உறுதியளித்தார். அவருடைய கொள்கைகளைக் கைவிட்டு வலதுசாரி சீர்குலைவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவேன் என்று லஸ்ஸோ பிரச்சாரம் செய்தார். அவருக்கு வரி ஏய்ப்பு செய்து மாட்டிக் கொண்ட பெரு நிறுவனங்கள் ஆதரவுக் கரம் நீட்டின. 

அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற பொய்ப்பிரச்சாரங்களை மீறி இடதுசாரி வேட்பாளர் லெனின் மொரினோ 51.16 சதவிகித வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்று கருதப்பட்ட லஸ்ஸோ 48.84 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தேர்தலில் பார்வையாளர்களை நிறுத்தியிருந்த அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றது என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வழக்கம்போலவே எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல் சுற்று வாக்கெடுப்போடு தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள 137 இடங்களில் ஆளும் இடதுசாரிக்கட்சிக்கு 74 இடங்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்திலும் ஆளும் இடதுசாரிக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்தத்தடையும் இருக்காது என்று ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள லெனின் மொரினோ தெரிவித்துள்ளார். தனது வெற்றி பற்றிக் கருத்து தெரிவித்த அவர், இடதுசாரிக் கொள்கைகள்தான் நாட்டிற்கு நல்லது என்று மக்கள் முடிவெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் லெனின் மொரினோ படுகாயம் அடைந்தார். தற்போது சக்கர நாற்காலி உதவியுடன்தான் அவர் தனது பணிகளைச் செய்து வருகிறார். இப்படி உடலில் குறைபாடுகளோடு நாட்டின் தலைமைப் பொறுப்புகளுக்கு வெகு சிலர்தான் இதுவரையில் வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தீக்கதிர் 05.04.2017

No comments:

Post a Comment