Thursday, April 13, 2017

தினமும் தரும் மூதேவியே . . . .





நேற்றைய இரவு முழுதும் வெட்டித்தனமாக விதண்டாவாதக்காரர் ஒருவருக்கு பதில் சொல்வதிலேயே கழிந்தது.

பீப் சாங் வந்தாலோ, லெக்கின்ஸ் போடலாமான்னு கேட்டாலோ பொங்குகிற மாதர் சங்கங்கள் இப்ப இருக்கிற இடமே தெரியல.....

எதாச்சும் குரல் கொடுத்தா அந்தக்காவுக்கு விழுந்த மாதிரி நம்ம கன்னத்துலயும் பளார்னு விழுந்திருமோன்னு பயந்திருப்பாங்களோ?”

என்று ஒருவர் முக நூலில் எழுதியிருந்ததைப் பார்த்ததும் கோபம் வந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை வெறும் பீப் சாங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்பு என்று சுருக்கிக் கொள்ள வேண்டாம் என்று மரியாதையாகவே பின்னூட்டம் இட்டிருந்தேன். இப்பிரச்சினையிலும் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப்போகிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். கடலூர் மாவட்டத்தில் மாதர் சங்கத்தின் தலையீடு குறித்த எனது அனுபவம் குறித்த பீப் சாங்கிற்கு எதிராக மட்டுமல்ல என்ற எனது சமீபத்திய பதிவையும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அத்தனைக்குப் பிறகும் விதண்டாவாதமாக பல்வேறு கேள்விகள்.
இந்த வழக்கில் அதைச் செய்தாயே, இதில் ஏன் அப்படி இல்லை.
இதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று மீண்டும் மீண்டும் வன்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள். அதற்கு கூஜா தூக்கிய வேறு சிலர்.

சரி, நீங்கள் என்ன செய்தீர்கள், உங்கள் அமைப்பு எது? அது என்ன செய்தது என்றெல்லாம் கேள்வி கேட்டால் அதற்கெல்லாம் பதில் கிடையாது.

,மாதர் சங்கத்தையும் இதர முற்போக்கு சக்திகளையும் “இதற்கு என்ன செய்தாய், அதற்கு என்ன செய்தாய்” என்று கேட்கிற முக நூல் போராளிகள், அவர்கள் முகனூலைத் தாண்டி வேறு எந்த களத்திற்கும் சென்றிருக்க மாட்டார்கள். வேறு எந்த ஒரு அமைப்பிடமும் வாய் திறக்கவே மாட்டார்கள். நாம் நாகரீகமாக பதில் சொல்வது போல அல்லாமல் அவர்கள் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவார்கள் என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்.

ஒரு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு வீட்டில் மாமியார் எதுவும் கிடையாது என்று திட்டி துரத்தப்பார்ப்பார். ஆனால் மருமகள் தினமும் ஏதாவது பிச்சை போடுவார். ஒரு நாள் மாமியார் துரத்த, அன்று ஏதோ சிந்தனையில் இருந்த மருமகளும் எதுவும் கிடையாது என்று மறுத்து விட்டார்.

உடனே அந்த பிச்சைக்காரனுக்கு கோபம் வந்து விட்டது.

“எப்பவுமே முடியாதுன்னு சொல்ற அந்த மகராசி, இன்னிக்கும் முடியாதுன்னுட்டாங்க. தினமும் போடும் மூதேவி, உனக்கென்ன கேடு”

என்று பொறிந்து தள்ளி விட்டான்.

அந்த பிச்சைக்காரனைப் போலத்தான் சிலர் சிந்தனையும் இருக்கிறது. உண்மையாக பணி செய்பவர்களை மட்டுமே பார்த்து நீளும் வெட்டி வாய், மக்களின் அனைத்துப் பிரச்சினைகளிலும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பெரிய மனிதப் போர்வை போர்த்தியவர்களைக் கண்டாலோ பயந்து ஒதுங்கி விடுகிறது.

பாவம், முக நூல் மட்டும் இல்லையென்றால் இந்த போராளிகள் எல்லாம் எங்கே போய் புரட்சி நடத்துவார்களோ?

பின் குறிப்பு 1 : இந்தியாவில் உருவாகும் அத்தனை பிரச்சினைகளிலும் மாதர் சங்கம் தலையிடவேண்டும் என்று சொல்வதன் மூலம் மற்ற கட்சிகள், அவர்களின் அமைப்புக்கள் எல்லாம் வேஸ்ட் பீஸ்கள் என்று ஒப்புதல் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

பின் குறிப்பு 2: அடி வாங்கிய பெண்ணுக்கு ஆதரவாகத்தான் இப்படி பொங்குகிறார் போல என்றுதான் நினைத்திருந்தேன். அந்த நபர் இன்று ஒரு பதிவு போட்டிருந்தார். பீப் சாங்கில் எந்த ஒரு வார்த்தை பீப் சத்தத்தால் மறைக்கப்பட்டு இருந்ததோ, அந்த வார்த்தையை எழுதாமல், ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ள உதவும் விதத்தில் வேறு ஒரு வார்த்தையை (சம்பந்தமே இல்லாமல்) பயன்படுத்தியிருந்தார். இதிலே உலகத்தரமான அரசியல் பற்றியெல்லாம் உபதேசம்.

பிறகுதான் புரிந்தது. அவர் கோபமெல்லாம் பீப் சாங்கிற்கு எதிராக போராடியதுதான். அவ்வளவு நல்ல தரம் வாய்ந்த ரசிகர். இவங்க எல்லாம்தான் அரசியலில் தரம் வேண்டும் என்று எழுதுவாங்க. போலிகள்.  

பின் குறிப்பு 3 : நான் குறிப்பிட்ட நபர் மட்டுமல்லாமல் பல்வேறு பீப்சாங் பார்ட்டிகள், மீம்ஸ் போடுமளவு பொங்கியுள்ளனர் என்பது தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் பதிவு மூலம் தெரிந்தது. அவர் கொடுத்த பதிலடிதான் மேலே உள்ள படம்.

1 comment:

  1. //மாதர் சங்கத்தையும் இதர முற்போக்கு சக்திகளையும் “இதற்கு என்ன செய்தாய், அதற்கு என்ன செய்தாய்” என்று கேட்கிற முக நூல் போராளிகள், அவர்கள் முகனூலைத் தாண்டி வேறு எந்த களத்திற்கும் சென்றிருக்க மாட்டார்கள்.//
    அது தான் உண்மை.
    பீப் பாட்டு வரவிடாம பண்ணிட்டாங்களே,பெண்கள் லெக்கின்ஸ் அணிவதை தடை செய்யலாம் என்றால் முடியவில்லையே என்று கவலைபடும் பிற்போக்காளராக இருப்பார்.

    ReplyDelete