Sunday, April 2, 2017

பீப் சாங்கிற்கு எதிராக மட்டுமல்ல. . . . .

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு "தேசிய குற்ற ஆவண ஆணையம்" ஆங்கிலத்தில் National Crime Records Bureau.  ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து அறிக்கையாக வழங்கும்.

கடைசியாக அது வெளியிட்டுள்ள அறிக்கை என்பது 2015 ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் பற்றியது.

அந்த அறிக்கையின்படி பெண்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்கள் 2015 ம் ஆண்டில் 2014 ம் ஆண்டை விட குறைவாம். 

2014 ம் ஆண்டில் 3,25,327 குற்றங்கள் என்றால் 2015 ல் அவை 3,14,575 என குறைந்து விட்டதாம். அதே போல பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களும் குறைந்து விட்டதாம். 2014 ல் 36,735 என்பது 2015 ல் 34,651 என்று குறைந்துள்ளதாம். 

அப்படியா, நிஜமாகவே குறைந்துள்ளதா என்று யோசிக்கையில் இந்த அறிக்கை  தனது அடிப்படை என்று சொல்வது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

காவல்துறையும் ஊர்ப் பெரிசுகளும் செய்கிற கட்டப் பஞ்சாயத்துக்கள், சமூகம் என்ன சொல்லுமோ, எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம் ஆகியவற்றால் பல குற்றங்கள் பதிவாகாமல் புதைக்கப்படுகின்றன. இப்படி இருப்பினும் கூட இவ்வளவு குற்றங்கள் இந்தியாவிற்கு இழிவுதான். 

சரி, இத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே, இவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனரா என்று அறிக்கை சொல்கிறதா என்று கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் கிடைப்பது ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற ஒட்டுமொத்த வகையில் 89 % வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை என்பதைத் தாண்டி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தண்டிக்கப் பட்டவர்கள் என்று பார்த்தால் வெறும் 21.7% மட்டுமே. 

அரசும் காவல்துறையும் எவ்வளவு அலட்சியமாக வழக்குகளை நடத்தினால் பெரும்பான்மையினரால் தண்டனையின்றி வெளியே வர முடியும்? வழக்கு பதிவு செய்யும்போதே பலவீனமாக,ஓட்டைகளோடு காவல்துறை தன் திருப்பணியை தொடங்கி விடுகிறது என்பது நிதர்ஸனம். 

ஒரு வழக்கின் விசாரணையை ஒழுங்காக எடுத்துச் செல்வதற்கே போராட்டமும் தொடர்ச்சியான முயற்சிகளும் தேவைப்படுகிறது.  இந்த பணியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எவ்வளவு நுணுக்கமாகவும், கவனத்தோடும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் செயல்படுகின்றது என்பதை களப்போராளிகளோடு ஒருநாள் முழுதும் நேரடியாக நின்று பார்க்கும் அனுபவம் கிடைத்தது. 

பிப்ரவரி மாத இறுதியில் தீக்கதிர் நாளிதழில் வந்த செய்தி ஒன்று அதிர்ச்சியளித்தது. அம்மாதத்தில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் மூன்று மோசமான சம்பவங்கள் நடந்திருந்தது.

சிதம்பரம் தாலுக்கா, குமராட்சியைத் தாண்டி மேல வன்னியூர் என்ற கிராமம், அங்கே பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி விடுதி வளாகத்திற்கு எதிரில் உள்ள ஒரு கொட்டகையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததாக  சொல்லப்படுகிறது. தூக்கு மாட்டிக் கொண்டு இறப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு இளைஞனின் சீண்டல் இருந்திருக்கிறது. வழக்கை தற்கொலை என்று சொல்லி கோப்பை மூடுவதில்தான் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிரமாக இருக்கிறார். பிரேதப்பரிசோதனை அறிக்கையை வாங்கக் கூட அவர் விரும்பவில்லை. வரும் போது வரட்டும் என்று அலட்சியம் காண்பிக்கிறார். 

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரெட்டியூர் என்ற கிராமத்தில் இன்னொரு பெண், சற்றே மன நலம் பாதிக்கப்பட்டவர். இயற்கையின் அழைப்பிற்காக சென்றவரை ஒரு கேடு கெட்டவன் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்தாலும் விரைவிலேயே பிணையில் வந்து அதே கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

இந்த இரண்டு சம்பவங்களை விட இன்னும் மோசமான சம்பவம் என்பது தொழுதூரைத் தாண்டி இருக்கிற மாபுடையூர் என்ற கிராமத்தில் நிகழ்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணை ஐந்து பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள். இதிலே காவல்துறை மூன்று பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து இருவரை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் செல்வாக்கு உள்ள குடும்பத்து பிள்ளைகள். கல்லூரி முதலாளியின் பேரன். இதற்கு முன்பாக பதிமூன்று பேரை இப்படித்தானே செய்துள்ளேன், இப்போது ஏன் வழக்கு போட வேண்டும் என்று கேட்கிறானாம் அந்த பெரிய இடத்து பொறுக்கி.

பாதிக்கப்பட்ட மூவரும்  தலித் என்பது யதேச்சையானதாக தெரியவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் மீது எவ்வளவு தாக்குதல் வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற சிந்தனை இன்னும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறதே!

இந்த மூன்று பிரச்சினைகளிலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து விபரங்கள் அறிந்து மாவட்ட காவல் கண்காளிப்பாரை சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்வகையில் தொடர்ந்து தொடர்பிலும் உள்ளார்கள்.  பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிடம் அளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். மேல வன்னியூர் சம்பவத்திலும் மாபுடையூர் சம்பவத்திலும் விசாரணை முறையாக நடைபெற உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளார்கள்.

இந்த மூன்று சம்பவங்களும் உங்கள் வேலூர் கோட்ட எல்லைக்குள் நிகழ்ந்துள்ளதால் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் என்று எங்கள் தென் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனை சொன்னார்கள். வழிகாட்டுதல் அளித்தார்கள். 

இப்பிரச்சினைகளைச் சொல்லி எங்கள் கோட்டத்து தோழர்களிடம் நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். ரூபாய் 42,150 வசூலானது. அத்தொகையில் ரூபாய் 12,150 ஐ மாதர் சங்கத்திற்கு வழக்கு செலவுகளுக்காகவும் மூன்று குடும்பங்களுக்கும் தலா பத்தாயிரம் என்றும் அளித்தோம். 



நேற்று மதியம் கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் வழக்கு நிதி வழங்கப்பட்டது. 

நேற்று அந்த கிராமங்களுக்குச் சென்று அக்குடும்பங்களுக்கு நேரடியாக அத்தொகையை வழங்கினோம். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பி.சுகந்தி, கடலூர் மாவட்டத் தலைவர்கள் தோழர் மேரி, தோழர் சிவகாமி, தோழர் தேன் மொழி, எங்களது தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில்குமார், வேலூர் கோட்டச்சங்கத்தின் தலைவர் தோழர் டி.மணவாளன், துணைத்தலைவர்கள் தோழர் கே,மீரா, தோழர் டி.தேவராஜ், பொதுச்செயலாளர் எஸ்.ராமன், இணைச்செயலாளர் தோழர் எஸ்.ஜெயஸ்ரீ, மற்றும் முன்னணித் தோழர்கள் வி.சுகுமாரன், ஜி.வைத்தியலிங்கம், கே.சரவணகுமார், ஆர்.வெற்றிவேல், பி.குப்புசாமி, பி.ராஜூ ஆகியோர் சென்றிருந்தோம்.

மேல வன்னியூர் கிராமத்தில் இறந்து போன அந்தப் பெண்ணிற்கு தாயார் கிடையாது. தந்தையோ டாஸ்மாக்கிற்கு அடிமை. பாட்டிகள் மட்டுமே. அந்தப் பெண்தான் அக்குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால் நட்சத்திரம் உதிர்ந்து விட்டது. அதனை உதிர்த்தது யார் என்று தெரியாததுதான் கொடுமை என்றால் பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடும் இழி கலாச்சாரம் இன்னும் கொடுமை. அந்தப் பெண்ணின் தம்பி ஏழாம் வகுப்பு படிக்கிறான். அக்கா விட்டுச் சென்ற கனவுகளை அவன் நிறைவேற்றுவான் என்று அவன் கண்களில் வடிந்த கண்ணீரைத் தாண்டி தெரிந்த உறுதி உணர்த்தியது. 





ரெட்டியூர் கிராமத்தில் அந்த சின்னப் பெண்ணை பார்க்கையில் மனதை என்னவோ செய்தது. வந்திருந்த அத்தனை பேரும் டீ சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தியது அந்த வெகுளிப் பெண். அந்தப் பெண்ணின் அக்கா, பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் இந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்காக வேலைக்கு எங்கும் செல்லவில்லை. தந்தை மறைந்து விட்டார். தாய் வயதானாலும் விவசாயத் தொழிலாளியாக உழைத்து வருகிறார். திருமணமாகி விட்டுச் சென்ற இன்னொரு சகோதரி, யாரிடமும் எந்த பணமும் வாங்க வேண்டாம் என்று சொல்கிறார் என்று சொல்ல, மாதர் சங்கத் தோழர்கள் கட்டாயப்படுத்தி அளித்தார்கள். அப்போது அந்தப் பெண் "அக்கா சொன்னா கேட்கனும்" என்ற போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த பெண் சிரித்துப் பேசினாலும் "அவன் இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கான். பயமா இருக்கு" என்ற போது காவல்துறை எவ்வளவு பலவீனமாக வழக்கு போட்டிருந்தால் அவன் ஜாமீனில் வந்திருப்பான் என்றும் தோன்றியது. 




அங்கிருந்து மாபுடையூர் செல்ல இரவு பத்து மணியாகி விட்டது. அந்த பெண்ணின் அப்பா கேரளாவில் ஒரு தொழிலாளியாக வேலை செய்பவர். தனது பெண்ணிற்கு நியாயம் கிடைக்காமல் வேலைக்கு போகப்போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார். இன்னும் மின்சார வசதி இல்லாத குடிசை வீடு. குடிசைக்குள் பரண் அமைத்து பொருட்களை வைத்து வீட்டிற்குள்ளேயே சமையலும் செய்து அங்கேயேதான் தூங்கவும் செய்கிறார்கள். அந்தப் பெண் தன் படிப்பை தொடர விரும்புகிறாள். கல்விதான் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்று மாதர் சங்கத் தலைவர்கள் எடுத்துச் சொன்னார்கள். பணம் வேண்டாம் என்று அத்தந்தையும் மறுத்தார். ஒரு மாதத்திற்கும் வேலைக்கு போகாமல் இருக்கிற உங்களுக்கு இச்சிறுதொகை உதவியாக இருக்கும் என்று எங்கள் தென் மண்டலத் தலைவர்கள் வற்புறுத்தி அளித்தார்கள். வழக்கில் நீதி கிடைக்கவும் படிப்பை பாதுகாப்பான இடத்திலிருந்து தொடரவும் ஏற்பாடு செய்கிறோம் என்று மாதர்சங்கத் தலைவர்கள் உறுதி அளித்தார்கள்.





நாங்கள் சென்ற மூன்று இடங்களிலும் கவனித்த முக்கியமான விஷயம் பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர்கள் இயல்பாக கலந்து பழகியது. அவர்கள் மனதில் நம்பிக்கையையும் உறுதியையும் விதைத்தது. தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு அமைப்பு இருக்கிறது என்ற உணர்வை அளித்தது. 

இந்தியா முழுதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கிற, போராடுகிற அமைப்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். அதனை ஏதோ பீப் பாட்டிற்கு எதிராக மட்டும் போராடுபவர்கள் என்று சில குறுகிய எண்ணம் கொண்டவர்கள் சித்தரிப்பதால் சற்று விரிவாக எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

எப்போது கேட்டாலும் உடனே நிதி வழங்கும் எங்கள் கோட்டத் தோழர்களுக்கு முதல் நன்றி. அத்தொகையை பெற்றுக் கொண்ட அக்குடும்பங்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் வழிகாட்டுதல் வழங்கிய தென் மண்டலப் பொறுப்பாளர்கள் தோழர்கள் டி.செந்தில்குமார், கே.சுவாமிநாதன், அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா (அவரும் நேற்று வருவதாக இருந்தார். உடல் நலன் காரணமாக வர இயலாமல் போய் விட்டது) ஆகியோருக்கும் நன்றி.

நாங்கள் அளித்த தொகை சிறிதுதான்.  தொகையை விட ஏராளமான தோழர்கள் நேரில் சென்றது அவர்களுக்கு நம்பிக்கையையும் உறுதியையும் அளித்திருக்கும் என்று நம்புகிறோம்.

கடலூரிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டோம். மாபுடையூரிலிருந்து புறப்பட்டது இரவு பதினோரு மணிக்கு. வீடு வந்த சேர்ந்த போது காலை மூன்று மணி. 

சற்றே நீண்ட பயணம்தான்.

ஆனால் நெகிழ்ச்சியான பயணம். 

பின் குறிப்பு : பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையோ புகைப்படங்களையோ வெளியிடுவது சரியல்ல என்ற மரபின் அடிப்படையில் பெயர்களை குறிப்பிடவில்லை. முகத்தையும் நீக்கி உள்ளேன்.




 

6 comments:

  1. Dear Comrade,Welldone timely and heartful help those affected persons.Red salute to AIIEA and AIDWA

    ReplyDelete
  2. உங்களின் சேவைக்குத் தலைவணங்குகிறோம்.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான உதவி.

    ReplyDelete
  4. தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்பொழுது உதவிக்கரம் நீட்ட வரும் ஒரே அமைப்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மட்டும்தான். மற்ற பெண்கள் அமைப்பினர் எல்லாம் தேவையில்லாத பெண்ணிய போராட்டங்களை தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள மட்டும் முன்னெடுக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதைச் சொல்லக்கூட அனாமதேயமாகத்தான் வர வேண்டுமா?

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete