Thursday, April 6, 2017

ஊஊஊஊஊஊ அறம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் முக நூலில் எழுதியிருந்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். நேற்று முக நூலில் வலம் வந்து கொண்டிருக்கையில் எங்களின் மேற்கு மண்டலத் தலைவர் தோழர் வி.எஸ்.நல்வாடே ஒரு படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். தோழர் கனகராஜ் அவர்கள் எழுதியுள்ளதற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது இப்படம்



நன்றி!
_---------------------------------------------------------------+--+++தினத்தந்தியிடம்
வருத்தத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றவர்கள் புறக்கணித்த செய்தியை அனைத்துப்பதிப்பிலும் வெளியிட்டிருக்கிறது
தினத்தந்தி
-----------++++++++++++++++++++++++++++++++
@ the hindu
@ the new indian expres
@ times of india
@ the decan chronicle


நேற்று 4-4-2017 அன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், எல்லாத்துறையிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாதச்சம்பளம் ரூபாய் 18,000 வழங்க வேண்டுமென கோரி சிஐடியு தலைமையில் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் 20,000 பேர் கலந்து கொண்டதாக சொல்கின்றனர். சிஐடியு தரப்பில் 30,000 என்கிறார்கள். எப்படியானாலும் 20000த்திற்கு குறையாத கூட்டம். கட்டுமானத்தொழிலாளி, துப்புரவுத்தொழிலாளி, சுமைப்பணி தொழிலாளி, ஆட்டோத்தொழிலாளி உள்ளிட்டு மத்திய, மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் ஆணும், பெண்ணுமாய் முறைசாராத்தொழிலில் இருப்போருக்கு நியாயம் கேட்டு இந்த போராட்டத்தை நடத்தினர். 

பொதுவாக, அச்சு ஊடகமும், காட்சி ஊடகமும் இதைப்புறக்கணித்தார்கள். இந்த புறக்கணிப்பு பொதுவாக பெயருக்காக ஒருகால செய்தியோடு நின்றுவிடும். சில நேரங்களில் இந்த பேரணியால் போக்குவரத்து பாதிப்பு என்பது போன்று செய்தி போடுவார்கள். ஆனால், இந்த முறை ஆங்கில இந்து, எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெகான் கிரானிகல் என 4 பத்திரிகைகளிலும் ஒரு வார்த்தை கூட இந்த பேரணி பற்றி கிடையாது. இதில் இந்து பத்திரிகையில் ஊடக அறம் குறித்தான ஒரு தலையங்கமும் இன்று வந்திருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு, துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களுக்கு, கட்டுமானத் தொழிலாளிக்கு 18,000 சம்பளம் அதிகமென்று கூட அவர்ளுக்குத் தோன்றியிருக்கக்கூடும். அது அவர்களது உரிமை. ஆனால், அதைப்பற்றிய செய்தியை வெளியிட்டு விட்டு கூட தங்களின் விமர்சனத்தை அவர்கள் முன்வைத்திருக்கலாம். ஆனால், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருட்டடிப்பு செய்வது என்பதன் நோக்கம் மிக வெளிப்படையானது.

இந்தியாவில் அரசு அமைப்பு நீதிமன்றம், நிர்வாகம், காவல்துறை போலவே 4ம் தூணாகிய பத்திரிகைத்துறையும் அப்பட்டமாக தனது வர்க்க நோக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவோ, மூலதனத்தின் சேவகர்களாகவோ மாறிப்போய் விட்டன ஊடகங்கள் என்ற விமர்சனத்தை எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாமல் உறுதிப்படுத்திக் கொள்வது போல் இருக்கிறது. 

கடந்த ஆண்டும் இப்படித்தான். டெல்லியில் இந்தியா முழுவதுமிருந்து 2 லட்சம் தொழிலாளிகள் பேரணி நடத்தினார்கள். சிஐடியு மட்டுமல்ல, பல சங்கங்கள் இணைந்து நடத்தினார்கள். தினமணியின் டெல்லி பதிப்பைத்தவிர எந்த ஒரு பத்திரிகையும் அந்த செய்தியை பிரசுரிக்கவில்லை. இது என்ன ஊடக அறம்? கடந்த கால பாசாங்குகளை எல்லாம் விட்டு விட்டு மிக அப்பட்டமாக நாங்கள் உழைப்பாளி மக்களுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் எதிரானவர்கள்தான் என்று தைரியம் காட்டிக் கொள்கிறார்கள். 

நான் தூத்துக்குடியில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். தொழிற்சங்க போராட்டத்தில் நான் உட்பட 5 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டோம். அதற்கு முன்னதாக அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் ஒரு போராட்டம் 36 மணி நேரம் உண்ணாவிரதம். அது ஒரே சங்கம். பாகுபாடு எதுவும் இல்லாமல் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டோம். உண்ணாவிரதம் நடைபெற்ற கொண்டிருந்த போது கடைசி நாளன்று பெருமழை, உண்ணாவிரத பந்தலை நோக்கி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே ஊர்வலம் வந்தனர். தூத்துக்குடியை பொறுத்தமட்டில் அது மிகப்பெரும் நிகழ்வு. எல்லா பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தார்கள். ஏராளமான போட்டோ எடுத்தார்கள். அடுத்த நாள் ஒரு பத்திரிகையிலும் அந்த செய்தி வெளிவரவில்லை. ஒவ்வொரு நிருபரையும் அவர்கள் அலுவலகம் சென்று அவர்கள் வரும் வரை காத்திருந்து ஏன் இப்படி என்று ஆதங்கத்தோடு கேட்டோம். எல்லோருமே தாங்கள் அனுப்பிய செய்திகளை காட்டினார்கள். படங்கள் சேர்த்து அனுப்பியதையும் காட்டினார்கள். எந்த பத்திரிகையும் ஒரு வரி கூட அந்த செய்தியை பிரசுரிக்கவில்லை. 

அதன் பிறகு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அந்த கோரிக்கைகளை முழக்கங்களாக்கி விளம்பரமாக தருகிறோம் என்று கொடுத்தோம். அது 1993 அல்லது 1994ம் ஆண்டாக இருக்கக்கூடும். அப்போது 3 காலத்தில் ஒரு பாக்ஸ் கட்டி போடுவதற்கு நாங்கள் கொடுத்த தொகை 14 ஆயிரம் ரூபாய். விளம்பர வாசகத்தையும் டி.டியையும் விளம்பரம் சேகரிப்பவர் வாங்கிக் கொண்டார். அடுத்தநாள் விளம்பரம் வரவில்லை. சம்பந்தப்பட்டவர் எங்கள் சங்க அலுவலகத்திற்கு வந்தார். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அவர் கைப்பட எழுதிய மன்னிப்பு கடிதத்தை கொடுத்து விட்டு எங்கள் நிறுவனத்தின் விளம்பரப்பிரிவிற்கு இது உகந்ததாக இல்லை. எனவே,பிரசுரிக்க மாட்டார்கள் என்று அதை திருபபிக் கொடுத்தார். அப்போது நிர்வாகிகளாக இருந்த நாங்கள் சொன்னோம், ஒன்றும் பிரச்சனையில்லை, இதுதான் கோரிக்கை நீங்கள் விரும்புகிற மொழியில் இது இருக்கட்டும், விளம்பரம் போடுங்கள் என்றோம். இல்லை, இந்த நிறுவனத்திற்கு எதிராக செய்தியோ, விளம்பரமோ போடுவதில்லை என்பது எங்கள் கொள்கையாகும் என்று அவரும் கசப்போடு சொன்னார்.
நியாயம், நடுநிலை, அறம் இவை எல்லாம் வியாபாரத்தின் முன் மண்டியிட்டு கும்பிடும் என்பதை முதல் முறையாக அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன். 


இன்று மேற்குறிப்பிட்ட 4 பத்திரிகைகளையும் பார்க்கிற போது மண்டியிட்டு இருந்த பத்திரிகைகள் இப்போது முழுவதுமாய் கீழே விழுந்து விட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

யாருக்கான அறம்? யாருக்கான ஊடகம்? நீங்கள் சொல்லும் தர்மம் யாருக்கானது.

1 comment:

  1. ஊடகம் எல்லாம உதார் விடத்தான்

    ReplyDelete