தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா இரண்டு வருடங்களுக்கு முன்பாக எழுதிய கட்டுரை. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
என்னதான் செய்யப்போகிறோம் அம்பேத்கரை?
- ஆதவன் தீட்சண்யா
‘‘கடந்த பதினைந்தாண்டு காலமாக எனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறீர்கள்.
இவற்றில் நான் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. நான் இதை எப்போதும் எதிர்த்தே
வந்திருக்கிறேன். இப்போது எனது பொன்விழாவை நீங்கள் கொண்டாடியுள்ளீர்கள்.
இதுவே போதும். இனிமேல் எந்தக் கொண்டாட்டமும் வேண்டாம்...’’ என்று அண்ணல்
அம்பேத்கர் வேண்டுகோள் விடுத்தமைக்கு காரணம் இருக்கிறது. ‘தலைவர்களின் மீது
அளவு கடந்த மரியாதை வைப்பதால் மக்களின் தன்னம்பிக்கை குறைந்துவிடுகிறது.
சோதனைக் காலத்தில் தலைவர் இல்லாத போதோ, ஒழுக்கமற்ற தலைவர்கள் வாய்க்கும்
போதோ அவர்கள் நிர்க்கதியாய் இருப்பார்கள்’ என்பதாலேயே அவ்வாறு அவர்
கேட்டுகொண்டார். ஆனாலும் அவர்மீதிருந்த அளவற்ற அன்பினால் தூண்டப்பெற்ற
அவரது நண்பர்களும் தொண்டர்களும் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக்
கொண்டேதான் இருந்தார்கள்.
இவ்வாறாகவே அவர்கள் பத்தாண்டுகள் கழித்து
1952 ஏப்ரல் 14ல் அம்பேத்கருக்கு 60 வயது நிறைவடைவதை முன்னிட்டு வைரவிழாக்
கொண்டாட்டக்குழு ஒன்றை அமைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள்
திட்டமிட்டிருந்தபடி குறிப்பிட்ட அந்த நாளில் நடத்த முடியாமல் போன அந்த
விழா பம்பாயில் 1954ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதிதான் நடந்தது. அந்த
விழாவில் பங்கேற்ற அம்பேத்கர் ‘‘சிறுவயது முதலே நான் மிகவும் திறமையாக
இருந்ததாக நினைப்பது தவறு. எனது சமூகத்திலுள்ள ஏனைய சிறுவர்களைப் போலவே
நான் சாதாரணப் பையனாகத்தான் இருந்தேன். என் பிறந்த தேதியை என் தந்தை
சரியாகக் கணித்து வைக்கவில்லை. இதனால் எனது சரியான பிறந்த தேதி எது என்ற
தெரியவில்லை. என் வயது அறுபதுக்கு மேலோ கீழோ இருக்கக்கூடும்...’’ என்றார்.
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த 25 ஆயிரம் பேருக்கு
மத்தியில் எனக்கே என் பிறந்த தேதி தெரியாத போது நீங்கள் ஏன்
கொண்டாடுகிறீர்கள் என்கிற கேள்வியை எழுப்பியவர் அம்பேத்கர். மட்டுமல்ல,
கருவிலே திருவுடையோர் என்கிற கற்பிதத்தையும் இந்தக் கூற்றின் வழியே
தகர்த்தெறிந்தார். தான்பிறந்த போது நட்சத்திரங்கள் மிகவும் மோசமாக
இருந்ததாக ஜோசியர் கூறியதை அப்போது அங்கதமாக நினைவுகூர்ந்ததன் மூலம்
அறிவாலும் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் எந்தவொரு ‘சாதாரணப்பையனும்’
தன்னைப்போன்ற மகத்தான ஆளுமையாக மாறுவதை எந்தச் சக்தியாலும் தடுத்துவிட
முடியாது என்கிற செய்தியையும் நமக்கு விட்டு சென்றுள்ளார். இதற்கும் முன்பே
கூட தனது பிறந்தநாளன்றைக்கு இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு
கொண்டாட்டங்களிலிருந்து ஒதுங்கியிருந்தவர். ஆனாலுமென்ன, ஒப்புவமையற்ற அந்த
மகத்தான தலைவனுக்கு மரியாதை செய்கிற சந்தர்ப்பமாக அவரது பிறந்தநாளை இப்போது
வரைக்கும் உலகம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது.
2015 ஏப்ரல் 14
அவரது அம்பேத்கரது 125வது பிறந்ததினக் கொண்டாட்டங்கள் தொடங்கிய வேளையில்
தோழர் மகிழ்நன் ஏற்பாட்டில் நான் மும்பை சென்றிருந்தேன். அம்பேத்கர் பிறந்த
மண்ணான மராட்டியம் அவரது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைக்
காணும் வாய்ப்பு இதனூடாக எனக்குக் கிடைத்தது.
மும்பை தாராவியில்
தமிழர்கள் செறிந்திருந்தாலும் அவர்கள் இங்குள்ளது போலவே சாதிகளாக
பிரிந்துமிருக் கிறார்கள். மகாராஷ்டிரா அம்பேத்கரின் பூமி தான், ஆனால் இந்த
90 அடி சாலை எங்களுடையது, இதில் அவரது சிலையையோ படத்தையோ வைத்து மரியாதை
செய்வதை அனுமதிக்கமாட்டோம் என்று இடைநிலை தமிழ்ச்சாதிகள் அவமதித்தே
வந்திருக்கின்றன. சுயமரியாதைமிக்க இளந்தலைமுறை தலித்துகள் இந்தத் தடையை
மீறி கடந்த இரண்டாண்டுகளைப் போலவே இந்த ஏப்ரல் 14 அன்றும் அந்தச்சாலையின்
பிரதான சதுக்கத்தில் அம்பேத்கர் சிலையையும் அவரது தொகுப்பு நூல்களையும்
காட்சிப்படுத்தி மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்துவருகிறார்கள். அந்த நிகழ்வில் பங்கெடுத்தப் பிறகு நாங்கள்
கடற்கரையின் மருங்கே இருக்கும் தாதர் மயானத்திற்குள் அமைந்துள்ள
அம்பேத்கரின் நினைவிடமான ‘சைத்யபூமி’க்குச் சென்றோம்.
வெகுதூரத்திற்கும் முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட, அந்த
அனலடிக்கும் வெயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைக்குட்டிகளோடு குடும்பம்
குடும்பமாக நினைவிடம் நோக்கி நீண்டிருந்த வரிசையில் காத்திருந்து
முன்னேறிக்கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் கட்சியும் வேறுசில அமைப்புகளும்
பேருந்துகளில் அழைத்து வந்திருந்த கொஞ்சம்பேரை தவிர்த்துவிட்டுப்
பார்த்தால் பெரும்பாலான மக்கள் தாங்களாகவேதான் திரண்டு வந்திருந்தார்கள்.
இதுவே நினைவுநாளாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் இருபதுலட்சம் பேர்
திரண்டு வருவார்களாம்.
தலித் அமைப்புகளும் ஆளுங்கட்சியான பா.ஜ.க. -
சிவசேனா, ஆட்சியை இழந்திருக்கிற காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வைத்திருந்த
பிரம்மாண்டமான விளம்பரத் தட்டிகளில் அம்பேத்கரை அவரவர்க்குரியவராக மாற்றும்
எத்தனங்களைப் பார்க்க முடிந்தது. நுழை வாயிலுக்கு வெளியே
அமைக்கப்பட்டிருந்த அரங்கின் மேடையில் ஆடல் பாடல் சொற்பொழிவு என்று
போய்க்கொண்டிருக்க உள்ளே நீண்ட வரிசையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில்
கூட்டம் அலை மோதியது. அம்பேத்கர் மற்றும் புத்தரின் விதவிதமான சிலைகள்,
புத்தகங்கள், அம்பேத்கரது படம் அச்சிடப்பட்ட கைக்குட்டைகள், தொப்பிகள்,
சாவிக் கொத்துகள், தலித் விடுதலை பற்றிய பாடல் பேழைகள், சுருவங்கள்
ஆகியவற்றுடன் பூங்கொத்துகளையும் வாங்கிச்செல்லும் மக்கள் நினைவிடத்தில்
அமைதியாக மரியாதை செய்து வெளியே வந்தவர்கள் அங்கிருந்து போக
மனமில்லதவர்களைப்போல நிழல்பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அவ்வளவு
கூட்டத்திற்கிடையிலும் அங்கு நிலைத்திருந்த அமைதியைக் குலைப்பதுபோல்
பறந்துவந்த ஹெலிகாப்டர் ஒன்று அரசின் சார்பில் நினைவிடத்தின் மீது
மலர்தூவிவிட்டுப் போனது. தலித்துகளின் காதில் பூ சுற்றுவதற்கு
சங்பரிவாரங்கள் வான்வழியாகவும் நடத்தும் முயற்சிபோல இது எனக்கு தோன்றியது.
சிவ(சேனா) சக்தி + பீம் சக்தி = தேசபக்தி என்கிற நயவஞ்சக முழக்கத்தோடு
தலித் ஓட்டுகளை கவரும் சங்பரிவாரத் திட்டத்திற்கு இரையாகிப் போய் அவற்றுடன்
தேர்தல் கூட்டு வைத்துள்ள சில தலித் கட்சிகளோ தங்களது செல்வாக்கினால்தான்
இப்படியான அற்புதங்கள் நிகழ்வதாக பீற்றிக்கொள்கின்றன. மரத்வாடா
பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்ட போது அதை எதிர்த்து
மாநிலத்தையே ரத்தக்காடாக்கிய இந்துத்வ சக்திகள் இப்போது மலர்மாரி தூவும்
நிலைக்கு ஆளாகியிருப்பததையும் அம்பேத்கர் தேசிய நினைவகம் கட்ட இந்து மில்
வளாகத்திற்குள் 12 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருப்பதையும் தங்களது
சாதனைகளாக கூறிக் கொள்ளவும் இந்த தலித் கட்சிகள் தயாராகிவிட்டன. ஆனால்
அம்பேத்கரது கருத்தியலுக்கும் தலித்துகளின் நலனுக்கும் எதிராக
செயல்படுவதையே இலக்காக கொண்ட சங்பரிவாரமோ அம்பேத்கரை முன்னிறுத்தி
தலித்துகளிடையே மேலும் ஊடுருவிச் சென்று அவர்களை ஆற்றலற்றவர்களாக அரசியல்
நீக்கம் செய்யப்பட்டவர்களாக மாற்றவதற்குரிய வாய்ப்பாக இதைப் பார்க்கின்றன.
நினைவிடத்திலிருந்து வெளியே வந்த நாங்கள் அம்பேத்கர் கட்டி வாழ்ந்த
இல்லமான ராஜகிருஹா சென்றபோது அங்கு காவலர்களைத் தவிர பார்வையாளர்கள்
ஒருவருமில்லாதது கண்டு நான் அதிர்ந்துபோனேன். அவரது பிறந்தநாளாக
இருந்தாலும் இறந்தநாளாக இருந்தாலும் மக்கள் நினைவிடத்திற்கு வந்துதான்
மரியாதை செய்கின்றனர். இந்த வீட்டிற்கு அவ்வளவாக யாரும் வரமாட்டார்களாம்.
வீட்டின் முன்பகுதியிலுள்ள இரண்டு அறைகளை மட்டும் ஒதுக்கி அவற்றில் அவரது
புகைப்படங்கள், புத்தகங்கள், புழங்கியப் பொருட்கள் சிலவற்றை
வைத்திருக்கிறார்கள். வீட்டின் மேல்தளங்களில் அவரது ரத்த உறவுகளில் சிலர்
வசிப்பதாக சொன்னார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கிவிட்டு
திரும்பிவிட்டோம்.
நம்மூரில் கோவில் திருவிழாக் காலத்தில் சாமி
ஊர்வலம் நடக்குமே அப்படி அன்றிரவு ஆயிரக்கணக்கானவர்கள் அதிலும் குறிப்பாக
வெள்ளுடை தரித்த பெண்களும் குழந்தைகளும் புத்தர் மற்றும் அம்பேத்கர்
சிலைகளை வாகனங்களில் அலங்கரித்து ஆட்டம்பாட்டம் வாணவேடிக்கைகளுடன் நகர்வலம்
வந்தார்கள். மும்பை நகரம் முழுவதும் மராட்டிய மாநிலம் முழுவதும் அன்றிரவு
இப்படி நடக்கும் என்றார்கள் நண்பர்கள். அம்பேத்கர் என்கிற மாமனிதரால் மிக
நேரடியாக தனித்துணரும் பயன்களையும் விடுதலையுணர்வையும் எய்தியிருக்கும்
அந்த மக்கள் அவரை கடவுள் நிலைக்கு கொண்டுபோய்விட்டனர். அம்பேத்கரின் அச்சம்
இந்த விசயத்தில் உண்மையாகியிருக்க வேண்டியதில்லை. மும்பை அல்லது
மராட்டியத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இப்படியாகத்தான் அம்பேத்கரது
பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவருகிறது.
சாதியவாதிகள் அம்பேத்கரை ஒரு
கருத்தியலாக கருதி வெறுத்துவரும் நிலையில், தலித்துகளில்
பெரும்பான்மையானவர்கள் அவரை தமக்கான கருத்தியலாக அல்லாமல் வெறும் சிலையாக
படமாக உள்வாங்கியிருக்கும் நிலை ஏன் ஏற்பட்டது? பிறந்த நாள் அல்லது
நினைவுநாள் தவிர்த்த பிற நாட்களில் இந்தியச்சமூகத்தின் அன்றாட வாழ்வில்
அம்பேத்கருக்கு வழங்கப்பட்டுள்ள இடம் என்ன? சொந்தவாழ்வில் சாதியத்தின் எந்த
அம்சங்களையும் அடையாளங்களையும் இழக்காமலே, அம்பேத்கரை ஒரு தலைவர் என்று
கூறிக்கொள்வதன் மூலம் தன்னை சாதிகடந்தவராக பொதுவெளியில் காட்டிக் கொள்கிற
வேடதாரிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், அம்பேத்கரை முழுப்பொருளில்
ஏற்றுக்கொண்ட தலித்தல்லாதவர்கள் வெகு சொற்பமாகவே இருக்கும் நிலை ஏன்
தொடர்கிறது?
கல்விக்காக ஒருவர் மதிக்கப்பட வேண்டுமானால் இன்றளவும்
இந்தியாவில் அதிகம் படித்தவர் என்று அம்பேத்கர் மதிக்கப்பட வேண்டும்.
அறிவுக்காக ஒருவரை மதிக்கக்கூடிய நாடு இது என்றால் மேதமைமிக்க பொருளாதார
ஆய்வுகளையும் வரலாற்று நூல்களையும் அரசியல் சட்டத்தையும்
எழுதியமைக்காகவும், ஏழுமொழிகளில் எழுதவும் பேசவும் கூடிய ஆற்றல் படைத்தவர்
தெரிந்தவர் என்றும் அவர் மதிக்கப்பட்டிருக்க வேண்டும். போர்க்குணத்தையும்
தியாகத்தையும் போற்றும் நாடு இது என்றால், தனது படிப்பையும் சட்ட அறிவையும்
தொடர்புகளையும் கொண்டு சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளாமல் அவற்றை
தன் மக்களின் விடுதலைக்காகவும் பரந்த இச்சமூகத்தின் மேம்பாட்டுக்காகவும்
வாழ்நாள் முழுக்கப் போராடிய அவரை இந்த நாடு உச்சிமீது வைத்து
கொண்டாடியிருக்க வேண்டும். பதவி ஆசையில் இலாகா இல்லாத மந்திரியாகக் கூட
வெட்கமற்று தொற்றிக்கொண்டு அலைகிறவர்கள் மலிந்து கிடக்கும் இந்நாட்டில்,
பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குரிய சமூக நீதியை வழங்கவேண்டும் என்றும்,
இந்தியப் பெண்களின் வாழ்வில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவரும்
நோக்கிலான இந்து சட்டத் தொகுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரியதோடு
அவற்றை சுதந்திர இந்தியாவின் முதலாவது அரசு, மறுத்தபோது அமைச்சர் பதவியைத்
தூக்கி எறிந்த அவரது சுயமரியாதையுணர்வும் அறச்சீற்றமும் இங்கு
மதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்
அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்று கூறியதோடு ஜனநாயகம்
நிலைத்திருப்பதற்கென்று அவர் ஆய்ந்தளித்த முன்னிபந்தனைகளை இந்தியச் சமூகம்
இப்போதாவது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது நலம் பயக்கும். மக்களாட்சி
மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை திறம்பட
செயலாற்றுகிறவர்களாக தயார்படுத்தி அனுப்புவதற்காக நாட்டிலேயே முன்னுதாரணமாக
அவர் உருவாக்கியது போன்ற நிரந்தரப் பயிற்சிப்பள்ளிகள் இன்றைக்கும்
நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டதுதான். மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டத்தில் அவர் சேர்க்க முயன்று தோற்றுப்போன ‘திரும்பப்
பெறும் உரிமை’ இன்றைக்கும் நமக்கு தேவைப்படுவது தானே?
அம்பேத்கரை
அபகரிக்கத் துடிக்கும் இந்துத்துவாவினரின் மோசடிகளை அம்பலப்படுத்துவது,
தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளும் வன்கொடுமைகளும் அதிகரித்துவரும்
நிலையில் அவற்றுக்கு கருத்தியல் நியாயத்தை வழங்கிக் கொண்டிருக்கிற இந்து
மதம் குறித்து அம்பேத்கர் தெரிவித்த கருத்துகளை ஆழ உள்வாங்குவது,
பார்ப்பனமயப்படுத்தப்பட்ட சடங்குகள் உள்ளிட்ட பண்பாட்டு
அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு அவர் கொடுத்துச் சென்றிருக்கும்
அறிவாயுதத்தைக் கைக்கொள்வது, அவர் முன்வைத்த சுதந்திரம் சமத்துவம்
சகோதரத்துவம் என்கிற மும்மைத்துவத்தை தனிமனித உணர்வாகவும் சமூகத்தின்
அடிப்படையாகவும் மாற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்குவது,
இந்துமதத்திற்குள்ளேயே இருந்துகொண்டு சாதி அமைப்பை ஏற்றுக்கொண்டு
தீண்டாமையை மட்டும் ஒழித்துவிட முடியாது என்கிற கருத்துப்பரம்பலை
மேற்கொள்வது என்று நம்முன்னே பணிகள் பெருகிக்கிடக்கின்றன.
2015ம்
வருடமானது, அம்பேத்கர் 125 ஆக மட்டுமல்லாது, அவர் இந்தியாவில் சாதிகள்
என்கிற தனது புகழ்பெற்ற ஆய்வுரையை உலகுக்கு வழங்கியதன் நூறாமாண்டாகவும்
பொருந்திவருகிறது. இந்த ஆய்வுரையையும் இதன் தொடர்ச்சியில் அவர் முன்வைத்த
சாதி ஒழிப்பு என்கிற உரைக்குறிப்பையும் தமிழகம் முழுவதற்கும் கொண்டு
செல்வதை இந்த ஆண்டுக்கான செயல் இலக்காக கொள்ளலாம். ஒத்தக் கருத்துள்ளவர்கள்
கூடிக்கலைகிற மரபான வடிவங்களை விடுத்து மாற்றுக்கருத்து கொண்டவர்கள்
உள்ளிட்ட வெகுமக்களை நேருக்கு நேர் சந்திக்கத் தோதான வடிவங்களில்
அம்பேத்கர் என்னும் ஆளுமையின் பன்முகப் பரிமாணத்தை கொண்டு செல்வோம்.
அம்பேத்கரது கருத்தியலை பரவலாக்குவதால் அவருக்கொரு பயனுமில்லை, மாறாக
இந்தச் சமூகம் சாதியம் என்கிற மனநோயிலிருந்து விடுபடும். மனநோயிலிருந்த
விடுபடுகிறவர்களிடம்தான் நாம் நமது இலக்குகளையும் அதற்கான திட்டங்களையும்
தெளிவுற விவாதிக்க முடியும். மலைத்துப் போவற்கு ஒன்றுமேயில்லை,
எப்போதாயினும் செய்யப்போவது நாம்தான் என்றிருக்கையில் இப்போதே தொடங்குவது
நல்லதுதானே?
நன்றி: அணையா வெண்மணி
தோழர் ஆ.தீ. கட்டுரை மீள்பதிவுக்கு நன்றி.
ReplyDelete