இப்படி ஒரு அராஜகம் வேலூர் சிப்பாய் புரட்சியின் போது நிகழ்ந்ததாய்
படித்துள்ளேன்.
வேலூர் சிப்பாய் புரட்சியை முன்னின்று நடத்திய தளபதிகளை பீரங்கிகளின்
வாயில் கட்டி சிதறடித்தார்கள் என்பது வெள்ளையர்கள் நடத்திய அராஜக வரலாறு.
அதற்கு சற்றும் குறைந்ததல்ல ஒரு காஷ்மீர் வாலிபரை ஜீப்பின் முன்னால் கட்டி
ஊர் ஊராக இழுத்துச் சென்ற இந்திய ராணுவத்தின் செயல்.
மனிதாபிமானம் உள்ள அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல் இது. ஆனால்
தவறான இந்த செயலை நியாயப்படுத்த ஏராளமான ஆட்கள் கிளம்பியுள்ளனர். கல்லெறியும்
கும்பலிடமிருந்து ராணுவ வீரர்களை பாதுகாக்க ராணுவம் மேற்கொண்ட புத்திசாலித்தனமான
நடவடிக்கை என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஜீப்பில் கட்டப்பட்டவன் ஒரு
தீவிரவாதி, கல்லெறியும் கபோதி என்றெல்லாம் வசை பாடப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை தவறான நடத்தை உள்ளவராக
சித்தரிக்கும் இழிசெயலுக்கு கொஞ்சமும் குறையாத கொடுமை, பாதிக்கப்பட்டவரை தீவிரவாதி
என்று வர்ணிப்பது..
கல்லெறிந்தவர் என்று ராணுவத்தால் சொல்லப்பட்டவர் உண்மையிலேயே ஒரு அப்பாவி.
ஆமாம் அப்பாவிகளிடம்தானே அதிகார வர்க்கம் எப்போதும் தனது வீரத்தை காண்பிக்கும். ஃபாரூக்
அகமது தர் என்ற அந்த அப்பாவி, காஷ்மீர் இடைத்தேர்தலில் வாக்களித்த 7.1 % வாக்காளர்களில் அதாவது 31,476 பேரில் ஒருவர். பைக்கில் தனியாகிப் போய்க் கொண்டிருந்த அவரை அடித்து
உதைத்து ஜீப்பில் கட்டி, கல்லெறிபவர்களுக்கு இதுதான் கதி என்று மனிதத்தன்மையற்ற
முறையில் நடந்து கொண்டுள்ளது ராணுவம். இதற்கு காரணமானவர்கள் யாரோ, அவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். சிலரது பொறுப்பற்ற செயல், நிலைமையை இன்னும்
சிக்கலாக்கியுள்ளது. ராணுவத்தின் மீது காஷ்மீர் மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையை
அதிகப்படுத்தியுள்ளது. இடைவெளி இன்னும் பெரிதாகி உள்ளது.
காஷ்மீர் மக்கள் இந்தியாவிடமிருந்து அன்னியப்படுவதாக உணர்வதற்கு முக்கியக்
காரணமாக தொடர்ந்து பல்லாண்டுகளாக நிகழும் ராணுவ அத்துமீறல்கள் என்பதை யாரும்
மறுக்க முடியாது. இலங்கையில் காணாமல் போன தமிழ் இளைஞர்களுக்காக அனுதாபப்படுபவர்கள்
இங்கே உள்ளனர். அந்த உணர்வு நியாயமானதும் சரியானதும் கூட. ஆனால் இந்தியாவிலும்
ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எத்தனையோ இளைஞர்கள் பல ஆண்டுகளாக வீடு
திரும்பவேயில்லை என்பது தெரியுமா?
ஒரு மிகப்பெரிய பட்டியலையே சில ஆண்டுகள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் குடியரசுத்தலைவர் பிரணாப்
முகர்ஜியிடம் வழங்கினார். ராணுவ அதிகாரங்கள் சிறப்புச் சட்டம் திரும்பப் பெற
வேண்டும் என்ற கோரிக்கை காஷ்மீர் மக்களால் அழுத்தமாக வலியுறுத்தப்படுகின்றது
என்றால் அதற்கு அவர்கள் மீது நடந்த தாக்குதல்கள்தான் காரணம். பாலியல் வன் கொடுமை
நிகழ்த்திய ராணுவ வீரர்கள் சிறு கீறல்கள் கூட இல்லாமல் சட்டப் பாதுகாப்பு பெற்று தப்பிப்பதை அம்மாநில
மக்கள் கையாலாகதவர்களாக வேடிக்கை பார்க்கும் அவலம் தொடர வேண்டுமா?
எப்போதெல்லாம் ராணுவத்தின் அத்து மீறல் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம்
மக்களின் எதிர்வினையும் கடுமையாகிறது. அத்து மீறல்களை போர்வைக்கு அடியில் புதைத்து
விட்டு எல்லாவற்றுக்கும் தீவிரவாதிகளின் தூண்டுதல்கள்தான் காரணம் என்று ப்ழி
போட்டுக் கொண்டிருந்தால் காஷ்மீர் எப்போதுமே எரிந்து கொண்டுதான் இருக்கும்
காஷ்மீர் மக்கள் கொதிப்போடு இருப்பதன் காரணத்தை உணர மறுத்தால் அங்கே யாரால்
எப்படி அமைதியை உருவாக்க முடியும்/
ஜம்மு காஷ்மீர் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போது நாடெங்கிலும் உள்ள
எங்கள் தோழர்கள் அளித்த நிதி கொண்டு பல்வேறு நிவாரணப்பணிகள் நடைபெற்றது. கடந்த
ஜனவரியில் எங்கள் அகில இந்திய மாநாடு எர்ணாகுளத்தில் நடைபெற்றது. அந்த நிவாரணப்
பணிகள் பற்றிய தனது அனுபவங்கள் குறித்து இம்மாநாட்டில் எங்கள் அகில இந்தியத்
தலைவர் தோழர் அமானுல்லாகான் பேசியதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர் லால் சௌக் மைதானத்தில்
இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றிய அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கம். நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதிக்கு நாம் நம் சங்கத்தின்
சார்பில் ஆம்புலன்ஸ்கள் கொடுத்த போது “வித்தியாசமான இந்தியாவை உங்களிடம்
பார்க்கிறோம்” என்று அம்மக்கள் நம்மிடம்
பகிர்ந்து கொண்டார்கள்.
இதுதான் அந்த மக்களின் மன நிலை. அப்படிப்பட்ட நிலைக்கு தள்ளியதில் நேரு
தொடங்கி மோடி வரை அனைத்து பிரதமர்களுக்கும் பங்கு உண்டு. உள்ளதையும் பறிக்கிற
செயல்திட்டமுள்ள மோடி பிரதமரானது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது.
காஷ்மீரின் வரலாற்றை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்வோம்.
காஷ்மீர் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியல்ல. அவர்களிடமிருந்து
விலை கொடுத்து வாங்கிய அரசரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி. இந்திய
விடுதலையின்போது இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர அன்றைய காஷ்மீர் மன்னர்
ஹரிசிங் விரும்பவில்லை. தனித்தே இருக்க விரும்பினார். மக்களில் பெரும்பான்மையாக
இருந்த இஸ்லாமியர்களும் பாகிஸ்தானோடு இணைய விரும்பவில்லை. அவர்களின் தலைவராக
இருந்த ஷேக் அப்துல்லா, இந்தியாவில் இணைய விரும்பினார்.
பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற பதான்களை அனுப்ப, இந்தியாவின் உதவி
கோரப்பட்டது. இந்திய ராணுவத் தலையீட்டின் காரணமாக காஷ்மீரின் கணிசமான பகுதி
பாகிஸ்தான்வசம் செல்லாமல் பாதுகாக்கப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க
ஏராளமான உறுதிமொழிகள் அளிக்கப்பட்டது. அரசியல் சாசனப் பிரிவு 370
உருவாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் ஸின் சிஷ்ய கோடியாக அப்போது காஷ்மீரில் செயல்பட்ட
அமைப்பு இந்தியாவுடன் இணைய மறுத்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று
அவர்கள்தான் தேச பக்த நாடகம் போடுகிறார்கள்.
காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகள் கைவிடப்பட்டதும் 370 பிரிவு நீர்த்துப் போக வைத்ததும். காங்கிரஸ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு
வேலைகளும் அங்கே தீவிரவாதம் துளிர்க்க காரணமாக இருந்தது. தீவிரவாதத்தை ஒடுக்க
சென்ற ராணுவத்தின் கை ஓங்கியதும். சுய நலம் மிக்க சில அதிகாரிகள் பதவி
உயர்வுக்காகவும் பரிசுகளுக்காகவும் போலி எண்கவுன்டர்கள் நடத்தியது இளைஞர்களை கைது
செய்து காணாமல் போக வைத்தது ஆகியவை மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியை
அதிகரித்தது. இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவர்களே காஷ்மீர் பிரச்சினை பற்றி
கருத்து சொல்கின்றனர்.
தீவிரவாதிகள் தேர்தலை புறக்கணிக்கச் சொன்னதால்தான் வாக்குப்பதிவு
குறைந்துள்ளது என்று சொல்வது சரியாக இருக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலையும்
தீவிரவாதிகள் புறக்கணிக்கத்தான் சொல்கிறார்கள். ஆனால் அந்த மிரட்டலைத்தான் மக்கள்
இதுநாள் வரை புறக்கணித்துள்ளனர். மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு என்பது எப்போதுமே
காஷ்மீரில் நடந்ததில்லை ஆனாலும் ஏழு சதிவிகிதம் என்ற மோசமான நிலை வந்தது கிடையாது.
மக்களின் கோபத்தை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புள்ளி விபரமே ஏழு சதவிகித
வாக்குப்பதிவு என்கிற போதே அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனநாயகத்தை ஏற்க
மறுக்கிறார்கள் என்பதன் அடையாளம்.
பல ஆண்டுகள் தேர்தலே நிகழாமல் பின்பு எண்பதுகளின் இறுதியில் சட்டப்பேரவைக்கு
நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனது. அது குறித்து பத்திரிக்கை
நிருபர்கள் அப்போதைய பொதுச்செயலாளர் திரு கருப்பையா மூப்பனாரிடம் கேட்கிறார்கள்.
“தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் தேர்தலை நடத்தியதே
காங்கிரஸ் கட்சியின் வெற்றி”
என்று அவர் சொன்னார். அது சமாளிப்புதான் என்றாலும் கூட அந்த நிலையில் தேர்தல்
நடந்ததே பெரிய விஷயம்தான்.
இருபத்தி ஐந்து சதவிகிதத்திலிருந்து ஐம்பது சதவிகிதம் வரைதான் அங்கே
வாக்குப்பதிவு சதவிகிதம் பெரும்பாலும் அமைந்திருக்கும். (தேர்தல் ஆணைய
இணையதளத்தில் அந்த புள்ளிவிபரங்கள் இருக்கின்றன) அந்த நிலையிலிருந்து முன்னேறி கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் 65 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி, தோண்டியை போட்டுடைத்த கதையாக இப்போது இவ்வளவு
மோசமான வாக்குப்பதிவிற்கு என்ன காரணம்?
வெறுமனே தீவிரவாதிகள் மீதும் பாகிஸ்தான் மீதும் பழி போட்டு விட்டு கண்களை
மூடிக் கொண்டிருக்கப் போகிறோமோ?
பர்கான் வானியின் மரணம், அதற்கான எதிர்வினையான போராட்டங்கள், அதனை அடக்க
நிகழ்ந்த அத்துமீறல்கள், கொல்லப்பட்ட உயிர்கள், ஏவப் பட்ட பெல்லட் குண்டுகள், அவை
ஊடுறுவி நிகழ்ந்த காயங்கள், பறிக்கப்பட்ட கண் பார்வை, இவை எல்லாமே மக்களின்
நம்பிக்கையை சீர்குலைத்திருக்கின்றன. தீவிரவாதிகளின் அறைகூவலுக்கு ஒத்துழைக்கும்
மன நிலையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரை வெறும் மண்ணாக, நாட்டின் எல்லையாக பார்ப்பதை விடுத்து மக்களாக
என்று ஆட்சியாளர்கள் பார்ப்பார்களோ, அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான
நடவடிக்கைகளை எப்போது எடுக்கத் தொடங்குவார்களோ, அப்போதுதான் நிலைமை மாறும்.
அப்படிப்பட்ட அரசியல் பார்வையோ, உறுதியோ கொண்ட ஆட்சியாளர் மோடி அல்ல என்பது
துயரம் தோய்ந்த யதார்த்தம்.
இனி நான் எப்போதுமே வாக்களிக்க மாட்டேன் என்பது பாரூக் அகமது தர்ரை சொல்ல
வைத்ததுதான் ராணுவம் நிகழ்த்திய சாதனை. இது நிச்சயம் ஜனநாயகத்துக்கு நிகழ்ந்த
துயரம். அவருக்கு நடந்த கொடுமை மேலும் பலரை அம்முடிவை நோக்கி தள்ளியிருக்கும்
என்பது இன்னொரு சோகம்.
பழி ஒன்று சொல்லி
ஜீப்பின் மேலே
கட்டிப் போட்டார்.
பாதாளத்திற்குப் போனது
தேசத்தின் பெருமை.
வாகனம் சாலையில் சென்றது
இந்தியாவின் மானமோ
காற்றில் பறந்தது.
அவனைக் கட்டிய
கயிற்றால் அறுபட்டது
ஆள்வோர் மீதான
நம்பிக்கை.
கல்லெறிபவர்களுக்கு எச்சரிக்கை
என்றதொரு கபட நாடகத்தால்
அமைதியின் அடித்தளம்தான்
ஆட்டம் கண்டது.
குளிர் நிலவும் பூமியில்
ஏமாற்றப்பட்ட மக்களின்
மனம் மட்டும்
எப்போதுமே சூடாய்..
நெருப்பை அணைக்க வேண்டியவர்கள்
நெய் வார்த்து வளர்க்கிறார்கள்
வெறுப்புத் தீயை.
மனிதக் கவசமென்று சொல்லி
காட்சிப் பொருளாய்
இழுத்துச் சென்றது
பதிவானது
காஷ்மீர் வரலாற்றில்
ஓர் கரும் புள்ளியாய்.
பின் குறிப்பு : போலி தேச பக்தர்களுக்கு இந்த பதிவு நிச்சயம்
எரிச்சலூட்டும். அவர்கள் எரிச்சலடைந்தால், கோபப்பட்டால் அது எனது நியாயத்திற்குக்
கிடைத்த வெற்றி. அவர்கள் நிச்சயம் தேச விரோதி என்ற வழக்கமான முத்திரையை
கொடுக்கத்தான் போகிறார்கள். அதனால் நானே எனக்கு பட்டம் அளித்துக் கொண்டேன்.
Very good. You ask transfer to Kashmir; move with your family. Good Luck!
ReplyDeleteyou people will not try to realize the actual problem.
Deleteதோழர்,நீங்க கொடுத்துள்ள இணைப்பை கண்டிப்பாக படிக்கிறேன்.
Deleteஎன்ன பண்ணலாம் சொல்லுங்க? இந்தியாவின் தோல்வி என்று அந்த பூமியை விட்டு கொடுத்திடலாமா? தனி நாடாக அதை விடலாமா? பாகிஸ்தானின் பகுதி என்று அறிவிக்கலாமா?
ReplyDeleteகாஷ்மீர் பிரச்சினையை புரிந்து கொள்ள மறுப்பதன் அடையாளம் உங்கள் பதில். முதலில் அந்த மக்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்க அரசுகள் முயல வேண்டும். அதைப் பொறுத்தவரை நிச்சயம் அது இந்தியாவின் தோல்விதான். இதோ இப்போது மோடி வகையறாக்கள் தமிழக விவசாயிகளை வசை பாடுகிறார்களே, அது நமக்கும் எரிச்சலை உருவாக்கவில்லையே!
Deletehttps://ramaniecuvellore.blogspot.in/2016/12/blog-post_62.html என்ன தீர்வு? இதைப் படியுங்கள், ஒரு வேளை சங்கச்சுடர் படித்திருக்காவிட்டால்
Deleteenna irunthalum avarkalathu poomiya indiavum pakistanum urimai kondaduvathu iruvarukkumana vetrumaya illa ma pannuthu.two nations aim one but no one thinks about the people of kashmir.
ReplyDelete