Tuesday, April 25, 2017

அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் . . .





நூல்                 “தாழிடப்பட்ட கதவுகள்”
ஆசிரியர்             அ.கரீம்
வெளியீடு            பாரதி புத்தகாலயம்
                     சென்னை - 18
விலை               ரூபாய் 140.00

கோவைக்கலவரங்கள் உருவாக்கிய பாதிப்புக்களைச் சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். தோழர் சம்சுதீன் ஹீரா எழுதிய நாவலான "மௌனத்தின் சாட்சியங்கள்" அளித்த அதிர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத தாக்கத்தை இச்சிறுகதைத் தொகுப்பும் அளிக்கிறது.

திருமணப் பத்திரிக்கைகள் அச்சடித்து வந்த மகிழ்ச்சியான நேரத்தில் கட்டிக் கொள்ள இருந்தவன் கொடூரமாய் கொல்லப்பட்டதால் தவிக்கிற பைரோஜாவின் கதறலை “மொஹல்லாவின் மய்யத்துக்கள்”  எதிரொலிக்கிறது.

காக்கிகளும் காவிகளும் கரம் கோர்த்து தேடித் தேடி நர வேட்டையாட, உயிருக்குப் பயந்தவர்கள் ஒளிந்து கொண்டாலும் அந்த முயற்சியில் தோற்றுப் போக, மரண ஓலத்தில் மகிழ்ச்சியடைந்த ஒரு காக்கி “பாரத் மாதா கீ ஜே” என்று முழங்க, “சத்தம் போடாம மெல்ல மெல்ல” என்று உயரதிகாரி செல்லமாய் கடிந்து கொள்ளும் “மௌத்துக்களின் காலமது” வெறியாட்டத்தை படம் பிடித்து காண்பிக்கிறது.

பிஞ்சு நெஞ்சுகளில் திட்டமிட்டு நஞ்சூட்டியதை சித்தரிக்கும் “வந்தாரை” காலம் காலமாக வாழ்ந்து வந்த வீட்டை காலி செய்து விட்டு தவிக்க வைக்கிற “கூடிழந்த பறவைகளின் சோகம்”, கதைகள் சித்தரிக்கிறது.

மத வெறியோடு வணிகப் போட்டியும் பின்னிக் கொண்டதால் போட்டியாளர்களை கருவருக்க கலவரங்கள் பயன்பட்டது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் “தாழிடப்பட்ட கதவுகள்”  உயிரைப் பாதுகாக்க ஐந்து நாட்களுக்கும் மேல் வீட்டிற்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் ஒரு குடும்பத்தின் தவிப்பை மிக அருமையாக உரைக்கிறது.

ஜமாத்தில் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற உரிமைக்குரல் “மொதோ கேள்வி” யில் ஒலிக்கிறதென்றால் இளைய தலைமுறையால் புறக்கணிக்கப்படும் பாரம்பரியக் கலைஞனுக்கு மரணத்தைத் தவிர வேறு வழியில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது “பிலால் எனும் டேப் பசீர்”

காவல்துறையால் வேட்டையாடப்பட்ட ஒரு குடும்பம் எப்படி நிலை குலைந்து போகும், உறவுகள் சீர் கெடும் என்பதைச் சொல்லுகிற “அன்புள்ள அத்தாவிற்கு” என்னை மிகவும் பாதித்தது. இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதையென்று இதைத்தான் சொல்வேன்.

அடுத்தடுத்து அதிர்ச்சியும் வலியும் ரணமும் தந்த இந்த நூலின் படைப்பாளி தோழர் ஏ.கரீம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

1 comment:

  1. நல்லதொரு படைப்பை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete