நூல் “முகிலினி”
ஆசிரியர் இரா.முருகவேள்
வெளியீடு பொன்னுலகம் புத்தக
நிலையம்
திருப்பூர்
விலை ரூபாய் 375.00
முதலாளித்துவ தொழில் வளர்ச்சி காவு வாங்கும் சுற்றுச் சூழல் பற்றிய
உண்மைகள், நாவல் வடிவத்தில் சொல்லப்பட்டுள்ள நூல்.
முதலாளிகள் தங்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக எதையும் செய்ய தயங்க
மாட்டார்கள், ஆட்சியாளர்களும் அவர்களின் இயந்திரமான காவல்துறையும் முதலாளிகளுக்கு
சேவகம் செய்வதையே கடமையாகக் கொண்டுள்ளது, ஆனால் சக்தி மிக்க போராட்டத்தின் முன்னே
யாராக இருந்தாலும் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும் என்பதுதான் இந்த நூலின்
அடிநாதம்.
கோவை மாவட்ட பஞ்சாலைகளின் துவக்க காலம், கொத்தடிமைகள் போல நடத்தப்பட்ட
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொழிறசங்கங்கள் நடத்திய போராட்டங்கள், அதற்கெதிரான
அடக்குமுறை, அவற்றை முறியடித்த உறுதி, பஞ்சாலை முதலாளி தன் தொழிலை விரிவாக்க
செயற்கை நூலிழை உற்பத்தியை அன்னிய நாட்டுக் கம்பெனியோடு துவக்குவது, அதற்காக
இயற்கை தந்த கொடையான நதியை மாசுபடுத்துவது, அன்னியச் செலாவணி நெருக்கடி காரணமாக
மூலப்பொருளையும் இங்கேயே தயாரிக்க ஆலோசனை தரும் அரசு அதற்காக காடுகளை அழிக்க துணை
போவது. உள்ளூர் முதலாளியின் தொழிலை பெரு முதலாளி கைப்பற்ற முயல்கையில் அதை
கொடுத்து விட்டு வேறு தொழிலுக்குப் போவது, மாசு படுதல் காரணமாக அரசும்
நீதிமன்றமும் அளிக்கும் உத்தரவுகளை தொடர்ந்து உதாசீனம் செய்வது என்று நாம் பார்த்த
காட்சிகளை, நடந்த சம்பவத்தை பெயரை மட்டும் மாற்றி அளித்துள்ளார் ஆசிரியர்.
சிறுமுகையில் உருவாகும் டெக்கான் ரேயான்ஸ் ஆலையால் பவானி ஆறு மாசுபடுகிறது.
விவசாயம் பாதிக்கப்படுகிறது. குடிநீருக்குக் கூட அலைய வேண்டியுள்ளது. தங்களின்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியிலும் நீதிமன்றத்திலும் போராட இறுதியில்
ஆலை மூடப்படுகிறது. மூடப்பட்ட ஆலையின் இயந்திரங்களை கொள்ளையடிப்பதையே தொழிலாக
கொண்டு செயல்படுபவர்கள், அவர்களுக்குள் போட்டி, கொலை, வழக்கு என்று ஒரு புறமும்,
டெக்கான் ரேயான்ஸ், உரக்கம்பெனி தொடங்கிய குடும்பமே பிறகு இயற்கை விவசாயம்,
அப்பொருட்களை விற்பது என்று அதிலும் காசு பார்ப்பது என்பது மறு புறம். புதிதாய்
முளைக்கும் சாமியார்களும் வந்து போகிறார்கள்.
மனித மனதின் முரண்களை கச்சிதமாய் வெளிப்படுத்தும் எண்ணற்ற பாத்திரங்கள்
படைக்கப்பட்டுள்ளனர். காதலுக்கும் கதையில் இடமுண்டு. மக்களின் அடிப்படைப்
பிரச்சினைகள்தான் நாவலின் களம் என்றாலும் ஒரு துப்பறியும் நூலைப் போல
விறுவிறுப்பாக நூலின் பக்கங்கள் வேகமாய்ச் செல்கிறது.
அதென்ன முகிலினி என்று தலைப்பு?
சதர்ன் விஸ்கோஸ் ஆலை நாவலில் டெக்கான் ரேயானாக மாறியது போல, ஒரு
பாத்திரத்தின் வழியே பவானி ஆறுக்கு முகிலினி என்று பெயர் சூட்டுகிறார். அந்த
குடும்பத்தின் உறுப்பினராகவே முகிலினி திகழ்கிறது.
சமகாலப் பிரச்சினையை பேசிய முக்கிய நூல்கள் பட்டியலில் “முகிலினி” க்கு
முக்கிய இடம் உண்டு. நூலாசிரியர் இரா.முருகவேள் தமிழாக்கம் செய்த “ஒரு பொருளாதார
அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்துள்ளேன். இதர நூல்களையும் தேடிப் பிடித்து
வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை முகிலினி உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment