Sunday, April 23, 2017

நீருக்காக வீழ்ந்தாய். நில்லாது உன் பயணம்

தோழர் வெண்புறா சரவணனின் நெகிழ்ச்சி மிக்க பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.  




அதிரும் ஒற்றை ஒலியும்,
கரையும் காக்கையின் குரலும்...
_________________________________
1997 ஏப்ரல் 23 இதே நாளில் மதுரை வில்லாபுரம் வீதியில் கண்டந்துண்டமாக வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்தார் தோழர் லீலாவதி. சரியாக 20 ஆண்டுகள் கடந்தும் அந்தக் காட்சியை நினைக்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

அவர் கொல்லப்பட்டே ஆகவேண்டும் என்ற வெறியை, ஒரு தேர்ந்த தொழில் கொலைகாரர்களின் நுட்பத்தை அவரது சிதைக்கப்பட்ட உடலின் காயங்களில் இருந்து உணரமுடிந்தது. இத்தனைக்கும் இந்த கொடிய செயலை செய்த சமூகவிரோத குடும்பத்திற்கும் லீலாவாதியின் குடும்பத்திற்கும் தனிப்பட்ட பகை துளியும் இல்லை.

பின் ஏன், எது இந்த எளிய உழைப்பாளி குடும்பத் தலைவியின் உயிரைக் கொடூரமாக எடுக்கத் தூண்டியது?

அவரைப் போலவே எளிமையானது இதற்கான விடையும்!...

இவர் மார்க்சிஸ்ட் கட்சியை நெஞ்சில் ஏந்தியிருந்த 'மக்கள் போராளி'.
அவர்கள் திமுகவில் அடைக்கலமாகியிருந்த 'சமூகவிரோதிகள்'.

அரசியல் கட்சியின் செல்வாக்கு அவர்களுக்கு இருந்தபோதிலும், மக்கள் செல்வாக்கு இவரை சூழ்ந்து கொள்வதற்கான சூட்சுமம் இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்கியது. அந்த சூட்சுமம்தான் மாநகராட்சி வார்டின் மாமன்ற உறுப்பினராக இவரை அமோகமாக தேர்வு செய்து கொண்டாடியது. மேற்படி சமூகவிரோத கும்பலை ஆத்திரமடையச் செய்ததும்கூட இதே சூட்சுமம்தான்... ஆம், உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது வானத்திலிருந்து திடீரென குதித்துவிடுவதில்லை, அது மக்களுக்கான போராட்டங்களை யாருக்கும் அஞ்சாமல் சமரசமின்றி தலைமையேற்று நடத்தும்போது தன்னால் நிகழும்!
எதற்காக, மக்கள் அவரை தேர்வு செய்தார்களோ, அதைத்தான் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு செய்தார். முன்பு ரேசன் கடை அநியாயங்களைக் கண்டித்து வெளியே கொடிபிடித்தவர், இப்போது நேரடியாக கடைகளுக்குள் நுழைந்து தலையிட முடிந்தது. முன்பு சாக்கடை, குப்பைகள், மின்விளக்கு, சாலை போன்ற பிரச்சனைகளுக்கு மனுக்கொடுக்க அலைந்தவர், இப்போது எல்லாவற்றையும் செய்து முடிக்க ஆணையிடும் இடத்திற்கு வந்துசேர்ந்தார்.

அப்படித்தான் குடிநீர் பிரச்சனையின் கண்ணியில் இருக்கும் சிக்கலுக்கும் முறைகேட்டிற்கும் தீர்வுகண்டார். மாநகராட்சியில் இருந்து வழங்கப்படும் குடிநீருக்கும் விலைவைத்த அந்த சமூகவிரோதக் குடும்பத்தின் மோசடியான வருமானத்திற்கு உலை வைத்தார். ஏற்கனவே வார்டு மக்களின் மேற்கண்ட அடிப்படை பிரச்சனைகளில் மறைமுகமாக காசு பார்ப்பது தடைபட்டதோடு, இப்போது நேரடியாக அடிக்கும் தண்ணீர் கொள்ளைக்கும் வேட்டு வைத்ததால் ஆத்திரத்தித்தின் உச்சத்திற்கு சென்றது அந்த குடும்பம். (குடும்பம் என்றால் நம்மைப்போல் சாதாரண குடும்பம் அல்ல, உறவுகளால் பிணைக்கப்பட்ட மிகப் பெரிய ரவுடி கேங் அது!) கூடவே, அந்தப்பகுதி மக்களை அரட்டி, மிரட்டி உருவாக்கி வைத்திருந்த தங்கள் 'இமேஜ்' சரிவு அதை மேலும் அதிகமாக்கிய ஒரு அதிகாலை வேளையில்தான், எதற்கும் அஞ்சாத இந்த வீரத்தாய் நடுவீதியில் சரிக்கப்பட்டார்.
*
கொலை நடப்பதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பு (ஏப்ரல் 13) திருப்பரங்குன்றம் தமுஎ(க)ச - கலை இலக்கிய இரவில் பார்வையாளராக எங்களோடு இருந்த தோழர் லீலாவதியை, அதற்குப் பின் வில்லாபுர வீதியில் உருக்குலைந்த உடலாகத்தான் பார்த்தேன். சமயநல்லூர் DYFI கலைவிழாவுக்காக ஓவியப் பணியில் இருந்தபோது, பதற்றத்துடன் ஓடிவந்து சொன்னார் அப்போது அந்தப்பகுதியின் பொறுப்பில் இருந்த தோழர் கருணாநிதி... "தோழர் லீலாவதியை வெட்டிக் கொன்றுவிட்டார்களாம் தோழர்".

உடனடியாக ஒரு வேன்பிடித்து அங்குள்ள தோழர்களோடு வில்லாபுரம் சென்று வீரத்தாய்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போது, மதுரை மாநகரமே ஸ்தம்பிக்க ஆரம்பித்திருந்தது!
*
ஒரு நாடறிந்த மக்கள் தலைவர்களுக்கு கூடுவதைப் போல், மதுரை மாநகரம் அதுவரை காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதி ஊர்வலம் தோழர் லீலாவதியினுடையது என்றால் அது மிகையல்ல. ஒரு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும்படியான ஆழ் அமைதியில் நகர்ந்த அந்த ஊர்வலத்தில்...
ட்ரம் இசைக் கருவியின் விட்டு விட்டு அதிர்ந்த ஒற்றை ஒலியும், ஆங்காங்கே கரையும் காக்கையின் குரலும் இன்னும் காதில் ஒலிக்கிறது!
*

1 comment:

  1. ஒரு உண்மையான வீரத்தாய் பற்றி புதிதாக தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete