Friday, April 22, 2022

கொண்டை மறந்த அனாமதேயத்திற்காக .

 


யாரோ ஒருவர் அனாமதேயமாக இளையராஜா பற்றிய ஒரு பதிவில் அளித்த பின்னூட்டத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.


Every body has got the right to voice their personal opinion. Don't expect him to toe your lines.  do not dictate your terms to Ilayaraja.

 

If you dont like the comments of ilayaraja just leave it.

you cannot tell a great musician just to stick with music. In a democratic setup when a nobody like Su venkatesan is airing his opinions why cant the great ilayaraja?

 

பாவம் கடைசி வரியில் தோழர் சு.வெங்கடேசனை இழுத்து தன் மண்டையில் இருக்கும் சங்கிக் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்.

 

அவருக்கு நான் அளித்த பதில் கீழே.

 

ஆமாங்கய்யா. இளையராஜாவுக்கு தன் கருத்தை சொல்ல எல்லா உரிமையும் இருக்கத்தான் இருக்கு. மோடியை அண்ணல் அம்பேத்கரோடு அபத்தமா ஒப்பிட்டதால்தான் இப்போ சர்ச்சை. இதுவே மோடியை ஜயேந்திர சரஸ்வதியோட ஒப்பிட்டிருந்தா யாரு அவரை சீண்டியிருக்கப் போறாங்க. ஒரு போலி மனிதனை இன்னொரு போலி மனிதனோடு ஒப்பிட்டிருக்காருன்னு நாங்க பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்போம். இசை ஞானி, அரசியல் ஞானம் இல்லாதவரா இருக்காருன்னு ஒரு ஆதங்கம், நமக்கு ரொம்ப பிடிச்ச மனுசனை இப்படி பேச வேண்டியிருக்கே என்ற வருத்தம் இதெல்லாம்தான் அவர் இசையோடு நிறுத்திக் கொண்டால் நல்லது என்று எழுதினேன். அதற்கான உரிமை எனக்கும் இருக்கிறது மிஸ்டர்.

 

அப்புறம் என்ன, சு.வெ NOBODY யா?  இந்த வரியில் உங்க சங்கிக் கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே! உங்க அறியாமை, பொறாமையில் தீயை வைக்க! இந்த ஒரு வார்த்தையே பதில் சொல்ல அருகதையற்றவர் நீங்கள் என்பதை உணர்த்துகிறது.

 

சமீபத்தில் தோழர் சு.வெ நிகழ்த்திய ஒரு அற்புதமான உரையை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். அதைப் படிச்சாவது அறிவை வளர்த்துக் கொள்ளவும் மிஸ்டர் காவிக் கண்ணாடி.

 

அந்த அனாமதேயத்திற்காகவே தோழர் சு.வெ ஆற்றிய ஒரு முக்கியமான உரையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

ஒரு தமிழ் இலக்கிய ஆளுமை, மதுரை மக்களின் பிரதிநிதி, தமிழ்நாட்டின் குரலை மக்களவையில் ஒலிப்பவராக பன்முகத் திறமையும் ஆளுமையும் கொண்ட தோழர் சு.வெங்கடேசனை NOBODY என்று பேசிய அந்த அனாமதேயம் இந்த உரையைப் படித்து விட்டு வெட்கி தலை குனிய வேண்டும். ஆனால் அனாமதேயமாய் ஒளிந்து வாழும் சங்கிகளுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை என எதுவுமே கிடையாதே! !

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி கண்ணூரில் உள்ள சி.எச். கணாரன் நகரில் பண்பாட்டு மாநாடு நடைபெற்றது. கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி வரவேற்புரையாற்றினார். தேசிய சாகித்திய அகாதெமியின் தலைவரும் தலைசிறந்த கவிஞருமான சச்சிதானந்தன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் எனது உரை;

 

தமிழகமும் கேரளமும் மிக ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்ட இரண்டு மாநிலங்கள். உலகின் மிகப்பழமையான இலக்கிய தொகுப்பான சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிற பல திருவிழாக்கள் இன்றைக்கும் கொண்டாடப்படுகிற நிலம் கேரளம் என்பது மிகவும் பெருமைக்குரியது. நான் மதுரையிலிருந்து வருகிறேன். மதுரைக்காரன். ஒரு ஆச்சரியமான விஷயத்தை இங்கே பகிர விரும்புகிறேன். ஓணம் பண்டிகைபற்றி முதன்முதலில் எழுதப்பட்ட குறிப்பு சுமார் 2500 வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட மதுரைக்காஞ்சி எனும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.

 

மாங்குடி மருதன் எழுதிய மதுரைக்காஞ்சியில் பாண்டிய நெடுஞ்செழியன் காலத்தில் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையைப் பற்றி “மாயோன் மேய ஓணம்நன்நாள்” என்று பாடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையைப் பற்றிய மிகப்பழமையான இலக்கியப்பதிவு மதுரைக்காஞ்சியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். அதுமட்டுமல்ல, 2500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பெயரில் கொண்டாடப்படும் சிறப்புகுறிய விழாவாக ஓணம் பெருவிழா இருக்கிறது.

 

வஞ்சித்த வாமனை அல்லாமல், வஞ்சிக்கப்பட்ட மாபலி சக்கரவர்த்தியை கொண்டாடுவதே ஓணம் பண்டிகை. கேரளம் எப்போதும் அநீதிக்கு எதிரானவற்றையே தனது அடையாளமாக கொண்டது.

 

இந்தப் பண்பாட்டுக் கருத்தரங்கில், முதலில் ஒரு வரலாற்று நிகழ்வுக்கான எனது பாராட்டுகளை பதிவு செய்ய நினைக்கிறேன். அது வெறும் நிகழ்வல்ல, இந்திய பண்பாட்டு வரலாற்றின் இருள்கிழித்த பாய்ச்சலானதொரு முன்னெடுப்பு.வைக்கத்தில் நடந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராக அன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் நேரடியாக வந்து போராட்ட களத்தில் இறங்கினார். அவர் எடுத்த மிக முக்கியமான இயக்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற இயக்கம். டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்தில் அதற்குச் சட்டம் கொண்டு வந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தந்தை பெரியார் தனது இறுதி உரையில், ''அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிலையை உருவாக்க முடியவில்லை. அது எனது நெஞ்சில் தைத்த முள் '' என்று சொன்னார். நண்பர்களே பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றிய முதல் அரசு கேரளாவில் இருக்கிற தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணியின் அரசு.

 

இறைவனுக்கு முன்பு வேறுபாட்டிற்கு இடமில்லை. ஏற்றத்தாழ்விற்கு இடமில்லை. ஒரு தீபச்சுடர் அனைவருக்கும் சமமாய் ஒளி அளிப்பதைப் போல, இறைத்தளம் பாகுபாடின்றி இருக்க வேண்டும் என்பதை கருவறைக்குள் செயல்படுத்திக் காட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்திய பண்பாட்டு வரலாற்றில் இது மகத்தானதொரு பாய்ச்சல். இதனை செய்து காட்டிய தோழர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எனது பாராட்டுகள்.

 

இன்றைக்கு நம்மைச்சுற்றி என்ன நடந்து கொண்டு இருக்கிறது? இறைவனின் பெயரால் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள். வேறுபாடுகள். கர்நாடகத்தில் ஜிகாப்பில் துவங்கி ஹலாலில் வந்து முடிந்திருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் தில்லியின் மேயர் சொல்கிறார் நவராத்திரி பண்டிகை இருப்பதால் மாமிசம் உண்ணக்கூடாது, பூண்டு உண்ணக்கூடாது, வெங்காயம் சாப்பிடக்கூடாது என்கிறார். நவராத்திரியில் மாமிச கடைகளை அடைக்க வேண்டும் என்று ஒரு பி ஜே பி எம்பி பேசுகிறார். உணவின் பெயரால் எவ்வளவு சீழ் பிடித்த அரசியல். இறைவனின் பெயரால் எவ்வளவு கீழ்மையான அரசியல்.

 

எல்லா தளங்களிலும் ஒற்றைவாத அரசியலை இந்துத்துவவாதிகள் வேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

எல்லோருக்கும் பொதுவான ஒற்றை உணவு முறை என்பது இந்தியாவில் எங்கேனும் உண்டா? இந்திய ஆன்மீக மரபிலாவது உண்டா ? கடவுளர்களுக்காவது உண்டா ? சைவ மரபு உங்களுக்குத் தெரியும் சிவனுக்கு என்ன படையல் வைக்க வேண்டும். நெய் கலந்த சுத்த அன்னம்தான் ஓரே படையல். நெய்வேத்தியம் “நிர்மால்யம்”. படைக்கப்பட்டதை மனிதர்கள் சாப்பிடக்கூடாது. காக்கைக்கும் பறவைகளுக்கும் வைக்க வேண்டும். அதுதான் சைவ மரபு.

 

ஆனால் வைணவ மரபில் மனிதன் தனக்கு பிடித்ததையெல்லாம் பெருமாளுக்குப் படைக்கலாம். வடை, பொங்கல், தோசை, பாயாசம், என 300 உணவு வகைகள். அதனைப் பெருமாளுக்குப் படைப்பது மட்டுமல்ல, படைத்ததையெல்லாம் கோயிலிலேயே வைத்து அனைவரும் சாப்பிடலாம்.

 

‘மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்தேளோ எம்பாவாய்”

 

என பெருமாளுக்குப் படைத்த அந்த படையலை எடுத்து உண்ணும் போது, நெய் கையெல்லாம் ஒழுகி ஓடும் பெரும் மகிழ்வு பற்றி ஆண்டால் அழகு தமிழில் திருப்பாவையில் பாடுகிறாள்.

 

சிவன் அபிசேக பிரியன் என்றால் விஷ்ணு போஜனப்பிரியன்.சிவனுக்கு நெய் கலந்த சுத்த அன்னம் மட்டுமே படையல். ஆனால் பெருமாளுக்கு எல்லாம் படையல். சிவனுக்குப் படைத்ததை எவரும் சாப்பிடக்கூடாது. பெருமாளுக்குப் படைத்ததை எல்லோரும் சாப்பிடலாம். அதில் சைவ உணவு மட்டுமா கண்ணப்பன் சிவனுக்கு என்ன படைத்தான் மாமிசத்தைப் படைத்தான். அதுவும் வாயில் கவ்விக்கொண்டு வந்த மாமிசத்தை. எச்சில் மாமிசத்தைப் படைத்தான். சிவனுக்கு எச்சில் மாமிசத்தைப் படைத்த கண்ணப்பனை இந்துவல்ல எனச் சொல்ல இந்துத்துவா வாதிகள் தயாரா? அல்லது மாமிசம் உண்ட சிவனை நவராத்தி காலத்தில் வழிபடாதீர்கள் என்று இவர்கள் சொல்வார்களா?

 

ராமனுக்குக் குகன் என்ன படைத்தான். மீன் படைத்தான். மரக்கறி உண்ணும் இராமனுக்கு அசைவத்தைப் படைத்தான் குகன். அப்பொழுது ராமன் ஒரு நிமிடம் முனிவர்களைத் திரும்பி பார்த்தான் புன்னகை புரிந்தான் என்று எழுதுகிறான் கம்பன். அன்பால் படைத்த அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறான் ராமன்.

 

தாங்கள் வணங்கும் கடவுளர்களுக்கு மக்கள் எத்தனை வகையான படையல்களைப் படைக்கின்றனர். எண்ணிலடங்காத கோழிகள், ஆடுகள், மாடுகள், சாராயம், சுருட்டு என வகைவகையான படையல்கள். இந்திய இறை மரபும், இந்திய பண்பாட்டு மரபும் இத்தனை வண்ணங்களை கொண்டதுதான். ஆனால் தங்களின் வாக்கு அரசியலுக்காக நமது வளமான பண்பாட்டினை முற்றிலுமாக சிதைக்க முயல்கிறார்கள். பிராமணிய பண்பாட்டு முறைதான் இந்து பண்பாடாகவும், அதுவே இந்தியப் பண்பாடாகவும் இந்துத்துவவாதிகள் முன்வைக்கிறார்கள்.

 

இந்தியாவில் எத்தனை வழிபாட்டு முறைகள் உள்ளன. கேரள முழுக்க தாந்திரிக வழிபாட்டு முறை, தமிழ்நாடு முழுக்க மந்திர வழிபாட்டு முறை. இதில் ஒரு வழிபாட்டு முறைதான் சிறந்தது, மற்றதை ஏற்க முடியாது என்று சொல்ல முடியுமா ? நான் கேரளத்தின் உதாரணத்தையே கூறுகிறேன். வைணவத்தின் மகாபுருஷர் ராமானுஜர் திருவனந்தபுரம் பத்மாநாப கோவிலுக்குத் தனது சீடர்களுடன் வருகிறார். இங்கே தாந்திரிக முறையில் வழிபாடு நடக்கிறது. அப்போது நம்பூதிரிகளிடம் ராமானுஜர் சொல்கிறார் தாந்திரிக முறையில் வழிபாடு நடத்தாதீர்கள், பஞ்சராட்ச முறையில் வழிபாடு நடத்துங்கள் எனச் சொல்கிறார். சொல்பவர் வைணவத்தின் மகாபுருஷர் ராமானுஜர்.

 

அன்று இரவு நம்பூதிரிகள் எல்லாம் பத்மநாபசாமியிடம் முறையிடுகிறார்கள். எங்கள் வழிபாட்டு முறையை மாற்றச்சொல்கிறாரே எனப் புலம்பி விட்டுப் படுத்துத் தூங்குகிறார்கள். காலையில் எழுந்து பார்த்தால் பத்மநாபசுவாமி கோவிலில் ராமானுஜரின் சீடர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இராமானுஜர் இல்லை. இராமானுஜரை இங்கிருந்து இரவோடு இரவாகத் தூக்கிக் கொண்டு போய் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் திருக்குறுங்குடி வட்டப்பாறையில் கொண்டுபோய் போட்டுவிட்டார் பத்மநாபசுவாமிகள்.

 

 

வழிபாட்டு முறையும், பழக்கமும் அவரவர்களுக்கானது, அதனை மாற்ற யார் வந்தாலும் ஏற்க மாட்டோம், தூக்கி வீசுவோம், அதனையும் இறைவனே செய்வான் என்பது தான் இம்மண்ணின் மரபு, இந்திய ஆன்மீக மரபு.

 

எத்தனை வழிபாட்டு முறைகள் எவ்வளவு வண்ணங்கள் இங்கே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கலாச்சாரத்தின் பெயரால், வரலாற்றின் பெயரால், மொழியின் பெயரால், உணவின் பெயரால் ஒன்றைப் பண்பாட்டை நிறுவ முயற்சிக்கிறது இந்துத்துவா கூட்டம்.

 

சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டு பண்பாட்டு வரலாற்றை எழுத ஒரு குழு அமைத்தது. அந்த குழுவில் ஒரு தென்னிந்தியர் கிடையாது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கிடையாது. ஒரு தலித் கிடையாது. ஒரு பெண் கிடையாது. வடகிழக்கு இந்தியர் கிடையாது. தமிழறிஞர் ஒருவர்கூட கிடையாது, ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கிற பிராமணர் சங்க செயலாளர் அந்த குழுவில் இருக்கிறார். இதை நாங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம், விந்திய மலைக்குக் கீழ் இந்தியா இல்லையா? எனக்கேட்டோம். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனுக்கொடுத்தோம், தொடர்ந்து போராடினோம். அதன் விளைவு இன்று அந்த குழுவினை மாற்றி அமைப்பதாகவும், அதுவரை அக்குழுவின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

 

நண்பர்களே மிக முக்கியமாக இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை அவர்கள் மாற்றி எழுத நினைக்கிறார்கள். மேற்கின் தாக்கம் இல்லாமல், கம்யூனிஸ்ட்களுடைய அறிவு சிந்தனை இல்லாமல் இந்தியத் தன்மை கொண்ட வரலாறு என்ற பெயரிலே, அவர்கள் ஆரிய வரலாற்றை எழுத முனைகிறார்கள். எனவேதான் ஆரியர்கள் இந்தியாவில் உதித்தவர்கள் என்றும், சிந்து வழி நாகரிகத்தைச் சரஸ்வதி சிந்து நாகரிகம் எனவும் மாற்றி எழுதுகிறார்கள். சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளின் தாய்மொழி என மீண்டும் மீண்டும் கூறுகின்றனர்.

 

சிந்துவெளி நாகரிகம் அது கண்டுபிடிக்கப்பட்ட நாள் தொட்டு அது திராவிட நாகரிகம் என உலக அறிஞர்கள் எல்லாம் ஒத்துக்கொண்ட உண்மை. ஆனால் இன்றைக்குச் சிந்து வழி நாகரிகத்தைச் சிந்து சரஸ்வதி நாகரிகம் என எழுதுகிறார்கள். சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கப் பலநூறு கோடியைச் செலவழிக்கிறார்கள்.

 

சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் சனோலி என்ற இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வில் ஓர் தேர் கண்டுபிடிக்கப்பட்டது. அது மகாபாரத காலத்துத் தேர் என்று சொல்லி, அந்த இடத்தை உடனடியாக பாதுகாக்கப்பட்ட இடம் என அறிவிக்கிறார்கள்.

 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஹம்பியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கத்தில் இந்தியாவில் இருக்கின்ற கோவில்களின் கட்டிடக்கலை முழுக்க வேதங்களிலிருந்து உருவான கட்டிடக் கலைதான் எனச் சொல்கிறார்கள். அதற்கு “தேவதாயனம்” என்ற சமஸ்கிருத பெயர் சூட்டுகின்றனர்.

 

இந்தியாவிலேயே மிக அதிக கோவில்கள் இருக்கிற மாநிலம் தமிழ்நாடு. 43 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது. மிகப்பழமையான 9 ஆயிரம் கோயில்கள் இருக்கும் மாநிலமும் தமிழகம் தான். வேதப்பண்பாட்டிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டு செழுமை கொண்ட மாநிலம் தமிழகம் என்பதை கீழடி, பொருநை அகழாய்வுகள் எடுத்துரைக்கின்றன. இந்திய கோயில் கட்டிடக்கலை என்பது பெருங்கற்கால நினைவுச்சின்னங்களில் இருந்துதான் தோன்றியது என்பதை மாற்றி வேதங்களில் இருந்து உருவாக்கப்பட்டது என்று எழுத நினைக்கிறார்கள்.

 

இந்திய பெரு மதங்களுக்கு சம்பந்தமில்லாமல் ஆதியிலேயே பண்பாடு செழித்தோங்கியிருந்தது என்பதை நிரூபிக்கும் கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளை திட்டமிட்டே கைவிட்டு வெளியேறுகின்றனர். உண்மையான கண்டுபிடிப்புகளை கைவிடுவது, மற்றும் மறைப்பது. தங்களுக்கான பொய்களை உருவாக்க வரலாற்றை திரிப்பது, மாற்றுவது என்பது தான் இன்றைக்கு இவர்கள் செய்து கொண்டிருக்கும் முழுநேரவேளை.

 

வரலாற்றுக்கு அடுத்தபடியாக இவர்கள் கைக்கொள்ளும் ஆயுதமாக மொழி இருக்கிறது. இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசுகிறார். அமைச்சர்கள் பேசுகிறார்கள். சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு எழுதப்பட்ட காலத்திற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு பல கல்வெட்டுகள் தமிழ்மொழியில் இருக்கிறது. ஆனால் அந்த உண்மையை பேச மறுக்கின்றனர்.சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 450 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தியை தவிர மற்ற எல்லா மொழிகளுக்கும் ஒதுக்கப்படும் நிதியை ஒன்று சேர்த்தாலும் இதற்கு சமமில்லை.

 

இந்தியாவில் மொழியென்றாலே சமஸ்கிருதமும், ஹிந்தியும் தான் இவர்களின் நினைவில் இருக்கிறது.

 

நாடாளுமன்றம் மொழியாலும், பண்பாட்டாலும் ஒற்றை மையப்படுத்தப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. நமக்கு வருகிற செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. வேதனை அழிக்கிறது. அந்த புதிய கட்டிடத்தில் மொழிபெயர்ப்பு அறை என்ற ஏற்பாடேயில்லை என்று சொல்கிறார்கள்.

 

இன்றைக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார், இந்தி இல்லாத பிற மாநிலங்கள் எல்லாம் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருக்கிறார். 60 சதவிகிதம் பேர் இந்தி அல்லாத மொழியைத்தான் இந்தியா முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் எந்த மொழி மத்தியில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றால் எட்டாவது அட்டவணையில் இருக்கின்ற 22 மொழிகளும் இந்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்தான், இந்தியாவின் பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகின்ற குரல்.

 

இன்றைக்கு உணவு, உடை, வரலாறு, மொழி. வழிபாட்டு உரிமை என அனைத்துத் தளத்திலும் ஒரு கலாச்சார மகாயுத்தத்தை இந்துத்துவா வாதிகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்து, இந்தி, இந்துஸ்தானி என்ற ஒற்றை கோட்பாட்டை உருவாக்கி. அந்த ஒன்றைக் கோட்டில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை நிறுவ நினைக்கிறார்கள்.

 

இந்தியா பன்மை கலாச்சாரத்தின் தாய் நிலம். நூல்களின் தொகுப்புதான் ஆடையின் வண்ணத்தை அலங்காரத்தைத் தீர்மானிக்கிறது. இந்தியர்களாகிய நாம், நமது வண்ணங்களை குலைக்க நினைக்கிற இந்துத்துவா வாதிகளை பண்பாட்டுத் தளத்தில் தீரத்துடன் எதிர்கொள்வோம். இந்த மண்ணில் நடந்த மகா யுத்தங்களில் எல்லாம் மக்களுக்கு எதிரானவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றையே மீண்டும் நிலைநிறுத்துவோம்.”

 

No comments:

Post a Comment