Sunday, April 10, 2022

கத்திரிக்காய் சாதம், கோபி பட்டர் மசாலா


நீண்ட நாட்களுக்குப் பிறகு சமையல் பதிவு.

மனைவி ஊருக்குப் போயிருந்ததால் மதிய உணவு தயார் செய்ய வேண்டிய அவசியம். புதிதாக ஏதாவது முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அம்மாவும் சாப்பிட வேண்டுமென்பதால் வெங்காயத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம். அதனால் யோசித்து கத்திரிக்காய் சாதம் தயார் செய்தேன்.

முதலில் கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

குக்கர் பேனில் எண்ணெய் ஊற்றி கடுகைப் போட்டு அது வெடித்ததும் கொஞ்சம் சீரகத்தையும் போட்டு பிறகு நறுக்கி வைத்த தக்காளியை போட்டு அது வதங்கியதும் கத்திரிக்காய் துண்டங்களையும் வதக்கிய பின்பு பொடியை போட்டு கிளறி உப்பும் சேர்த்து பின்பு அரிசியை போட்டுக் கொண்டேன். அரிசியின் அளவைப் போல மூன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பின்பு குக்கரை மூடி நான்கு விசில் வந்ததும் அணைத்து விடவும். சுவையான கத்திரிக்காய் சாதம் தயார். (தக்காளியை வதக்கும் முன்பே பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். கொத்தமல்லி இல்லாததால் என்னால் சேர்க்க முடியவில்லை. அதையும் சேர்க்கவும்).




அம்மாவுக்கு இணை உணவாக தயிரை கொடுத்து விட்டு எனக்காக தயார் செய்தது கோபி பட்டர் மசாலா.

ஒரு வட இந்திய சேனலில் பனீர் பட்டர் மசாலாவின் செய்முறையைப் பார்த்து விட்டு வீட்டில் இருந்த பொருட்கள் கொண்டு முயற்சித்தேன்.

ப்ராசஸ் 1

முதலில் கொஞ்சம் கடலை எண்ணெய்,கொஞ்சம் வெண்ணையை வாணலியில் போட்டு அதிலே நான்கு கிராம்பு, இரண்டு ஏலக்காயை குறைந்த தீயில் முதலில் வறுத்து பின்பு பொடியாக வெட்டிய வெங்காயத்தை பொன்னிறம் வரும் வரை வதக்கி பின்பு தக்காளியையும் 15 முந்திரிப் பருப்பும் போட்டு வறுத்தெடுத்து அதை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டேன்.

 ப்ராசஸ் 2

 எப்போதும் போல காலிஃப்ளவரை மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரில் கொதிக்க வைத்து, அது ஆறிய பின்பு ஒரு சின்ன வாணலியில் கொஞ்சமாக வெண்ணெய் வைத்து அதை பொறித்துக் கொண்டேன். இப்படிச் செய்தால் காலிஃப்ளவர் கறைந்து போகாது.

 இறுதி ப்ராசஸ்

 வாணலியில் எண்ணையையும் வெண்ணையையும் சேர்த்து முதலில் ஒரு பிரிஞ்சி இலையை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காயத்தையும் பின்பு தக்காளியையும் வதக்கிக் கொண்டேன். இப்போது தீயை குறைத்து வைத்து அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, முக்கால் ஸ்பூன் தனியா பொடி, கால் ஸ்பூன் சீரகப் பொடி, ஒரு ஸ்பூன் கரம் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டேன்.  இவையெல்லாம் நன்றாக கலந்து ஒரு நறுமணம் வரும் வேளையில் வெங்காயம் தக்காளி முந்திரி கலவையை சேர்த்துக் கொண்டேன். ஒரு பெரிய டம்ப்ளர் தண்ணீர் சேர்த்துக் கொண்டேன். ஒரு ஐந்து நிமிடத்தில் எண்ணெய் பிரிந்து வந்தது. அப்போது பொறித்து வைத்த காலிஃப்ளவரை சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்களில் நன்றாக கொதித்த பின்பு இறக்கி வைத்தால் “கோபி பட்டர் மசாலா” தயார். (கசூரி மேத்தியை கடைசியில் சேர்க்க சொல்லி இருந்தார்கள். அது எங்கே இருக்கிறது என்பது தெரியாததால் சேர்க்கவில்லை. கொத்தமல்லியும் இல்லாததால் சேர்க்கவில்லை)

 




எனக்கு திருப்திகரமாக இருந்தது.

 மனைவிக்கும் மகனுக்கும் இன்னொரு நாள் செய்து தர வேண்டும்.

 

No comments:

Post a Comment