*நாளொரு கேள்வி: 03.04.2022*
தொடர் எண்: *672*
இன்று நம்மோடு நியூஸ் கிளிக் கட்டுரையாளர்கள் *அபிர் தாஸ் குப்தா, ரவி நாயர்* (தமிழில் சாரம் : இரமணன்)
###########################
*ஊரான் வீட்டு நெய்யே*
*பதஞ்சலி ராம்தேவ் கையே*
கேள்வி: ருசி சோயா நிறுவனம் பதஞ்சலி ராம்தேவ் கைகளுக்கு மாறியதும், அதற்கு அரசு வங்கிகளில் உள்ள மக்கள் சேமிப்புகள் பயன்படுத்தப்பட்டதும் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளதே. என்னதான் நடக்கிறது?
*அபிர்தாஸ் குப்தா & ரவி நாயர்*
கசந்து போன "ருசி சோயா"... பதஞ்சலியின் கையில் இனித்த மர்மக் கதைதான் இது.
சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ருசி சோயா. 2017ஆம் ஆண்டு அது திவால் அறிக்கை அளித்தது.
ருசி சோயாவின் பங்குகளின் மதிப்பு அந்த நேரத்தில் ரூ.66 கோடிகள். ஆனால் அதன் சுத்திகரிப்பு ஆலைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்த அதன் மற்ற சொத்துக்கள் இந்த மதிப்பை விட பல மடங்குகள் இருக்கும். *மொத்த கடன் ரூ 12146 கோடிகள். அதில் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன் தொகை ரூ 9385 கோடிகள்.*
கடன் கொடுத்த வங்கிகள் பெரும்பான்மையானவை நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளே.
மொத்தம் நான்கு நிறுவனங்கள் திவாலான ருசி சோயாவை எடுக்க முன்வந்தன. அதிக தொகைக்கு கேட்டிருந்த *அதானி வில்மர்* போட்டியிலிருந்து விலகிக்கொண்டது. இரண்டாவது உயர்ந்த தொகை சமர்ப்பித்திருந்த *பதஞ்சலி குழுவிற்கு நிறுவனம் கை மாற்றப்பட்டது.* பதஞ்சலியின் ஏலத்தொகை ரூ 4350 கோடிகள். அதாவது வங்கிகள் கொடுத்த கடன் தொகையில் சுமார் 50% மொட்டையடிக்கப்பட்டது. மக்கள் சேமிப்பு பறி போனது. ஒரு திரைப்படத்தில் *வடிவேல் அரிசிக் கடையிலிருந்து எடைக்கற்களை திருடி 500 ரூபாய்க்கு விற்று விடுவார். அதன் மதிப்பு 5000 ரூபாய் என்று கடைக்காரர் மூலம் தெரிந்ததும் 'ஐய்யய்யோ ஏமாத்திட்டான்டா? என்று கத்துவார். இது நான பேச வேண்டிய டயலாக்குடா என்று கடைக்காரர் அதிர்ந்து போவார்.* அந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது. கடைக்காரர் நிலைமைதான் வங்கி சேமிப்புதாரருக்கு...
இந்த டீலிங் ஐ கடன் கொடுத்த வங்கிகளில் *டிபி.எஸ் வங்கியைத் தவிர மற்ற வங்கிகள் ஏற்றுக் கொண்டன.* திவால் சட்டப்படி, நிறுவனத்தின் சொத்துக்களை விற்றும் கடனை அடைக்கலாம். இந்த வழியில் போனால் தனக்கு 90% கடன் தொகை திரும்பக் கிடைக்கும் என டி பி எஸ் வங்கி வாதாடியது. ஆனால் அதை சொல்கிற முதுகெலும்பு அரசு வங்கிகளுக்கு இல்லை. *தீர்ப்பாயம், மேல் முறையீட்டு தீர்ப்பாயம், உச்ச நீதி மன்றம்* என எல்லாப்படிகளிலும்
*டி பி எஸ்* வங்கி ஏறியது. எல்லா மன்றங்களுமே திவால் விதிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.
விசித்திரத்திலும் விசித்திரம் என்னவென்றால் வாராக்கடன் என்று வகைப்படுத்தப்பட்ட *ருசி சோயாவின் பங்குகளை வாங்க பதஞ்சலி நிறுவனத்திற்கு அதே நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடன் கொடுத்துதான்.*
*ஸ்டேட் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா* ஆகியன ஆகும். இந்த வங்கிகளே ருசி சோயா கடன் தள்ளுபடியில் இழந்த வங்கிகளே.
*இந்த 3300/ கோடி கடன் எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது?* அதே ருசி சோயா பங்குகள் அடமானத்தின் பேரில்தான்.
*அதுதான் செயல்படா சொத்தாயிற்றே என்கிறீர்களா?*
இப்ப அது பாபா ராம்தேவ் கைக்கு வந்துவிட்டது. ஆகவே அதன் மீது கடன் கொடுக்கலாம் என்று வங்கிகள் வியாக்கியானம் கொடுக்கலாம். *பதஞ்சலி நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்தம் ரூ 4370 கோடியில் இந்தக் கடன் ரூ 3300 போக மீதி ரூ.1070 கோடியும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் பதஞ்சலி நிறுவனத்தின் பங்குகள், அதன் கச்சாப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட பண்டங்கள், ஆலைகள் போன்றவற்றின் மீது அடமானமாக கொடுத்துதான்.* அதாவது பைசா செலவில்லாமல் இன்று ரூ. 25000 கோடி மதிப்புள்ள சொத்திற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உரிமையாளராகிவிட்டது.
இந்த காலகட்டத்தில் *இக்ரா(icra), கேர்(care), பிரிக் ஒர்க் (brick work)* போன்ற பல்வேறு கடன் தர நிர்ணய நிறுவனங்கள் பதஞ்சலியின் கடன் பெறும் மதிப்பை குறைத்தன. அதனால் வங்கிகள் பதஞ்சலிக்கு கடன் தர சற்று யோசித்தன போலும். *இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இன்னல் என்றால் அரசியல் கூட்டாளிகள் கண்களில் உதிரம் கொட்டி விடுமே!* 2019அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் *நிர்மலா சீத்தாராமன், சுய உதவிக் குழுக்கள், ஆன்மீகவாதிகள் தலமை தாங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வங்கிகள் கடன் கொடுக்க தயங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.* இது பதஞ்சலிக்குக் கடன் கொடுப்பவர்களை நோக்கியே வீசப்பட்ட அம்பு என ஊகிக்கப்பட்டது.
திவால் நடவடிக்கைகள் முடிந்த டிசம்பர் 19,2019 அன்று ருசி சோயாவின் பங்கு மதிப்பு 98.9% குறைந்துவிட்டது. அதாவது *66கோடியாக இருந்தது 66 இலட்சமாக சரிந்தது.*
இதன்பிறகு பதஞ்சலி நிறுவனம் *இரண்டு விசயங்களை* செய்தது.
*ஒன்று 18.67 மில்லியன் ருசி சோயா பங்குகளை தனக்கு அளித்துக் கொண்டது.* (preferential shares). அதன் விலை ரூ 7 என நிர்ணயித்தது. அதாவது 66 இலட்சம் மதிப்பை ரூ.1300 கோடியாக மாற்றி ஜால வித்தை புரிந்தது. ரூ 7 என எப்படி மதிப்பிட்டது? 26 வார சராசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாக கூறியது. நடுவில் பங்குகள் விற்பனை நிறுத்தப்பட்டதையோ பங்குகளின் விலை தொடர்ச்சியாக இல்லை என்பதையோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. *இப்போது பதஞ்சலியின் கையில் 98.9% பங்குகளும் பொது மக்கள் கையில் 1.1% பங்குகளும்* இருந்தது.
*அடுத்த தகிடுதத்தம் என்ன தெரியுமா?*
ஜனவரி 27-2020 அன்று ருசி சோயாவின் பங்குகள் சந்தையில் மீண்டும் பட்டியலிடப்பட்டது. அன்று *ஒரு பங்கின் விலை ரூ16.10 ஆக* உயர்ந்திருந்தது. *ஜூன் 2021 அன்று அதன் விலை ரூ. 1377ஆக* உயர்ந்திருந்தது. மிகக் குறைந்த பொது பங்குகள் (1%) மட்டுமே சந்தையில் இருந்ததே இதற்குக் காரணம். டிசம்பர் 2021 அன்று அது சமர்ப்பித்த கணக்கின்படி அதன் பங்கின் கணக்கு *புத்தக மதிப்பு ரூ 148.82 தான்.* மார்ச் 2022 அது பொதுமக்களுக்கு தன் பங்குகளை விற்க (follow on public offer) முன் வந்தது.
*ஒரு பங்கின் விலையை ரூ.615 முதல் ரூ.650 என* நிர்ணயித்தது.
பொதுப்பட்டியலிடப்பட்ட 19% பங்குகள் பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட பின்னரே சந்தை இயங்கியலின் மூலம் அதன் உண்மையான மதிப்பு வெளிவரும்.ஆனால் அதற்கு முன்பாக ரூ.615 முதல் ரூ.650 என்கிற விலையில் 19% பங்குகளை விற்று தான் பெற்ற கடன்களை அடைத்து,
*எந்த வித மூலதனமும் போடாமல் ரூ.25000 கோடி மதிப்புள்ள நிறுவனதிற்கு ராம்தேவ் தலமையிலான பதஞ்சலி உடமையாளராக ஆகியிருக்கிறது.*
*இது கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லலாம்.*
பொதுப் பட்டியலிடுவதற்கு ஊடாக இன்னொரு மலிவான விளம்பரப் பிரச்சாரத்தையும் பதஞ்சலி செய்தது. ஒரு காணொளியில் பாபா ராம்தேவ் *ருசி சோயா பங்குகளை வாங்கினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்* என்றார். (ஆதாரம் :மணி கன்ட்ரோல்).
மேலும் இந்தப் பங்கு விற்பனை குறித்த தவறான விவரங்கள் கொண்ட எஸ் எம் எஸ் கள் பலருக்கும் கேளாமலேயே (umnsolicited) அனுப்பப்பட்டது. இதனால் இதைமறுத்து பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்; பங்கு வாங்க விண்ணப்பித்திருந்தவரகள் விரும்பினால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்குமாறு *"செபி"* ஆணை பிறப்பிக்க வேண்டி வந்தது.
தீயேல்லாம் எரிந்து முடித்த பிறகு வந்து சேர்ந்த ஃபயர் பைட்டிங் லாரி மாதிரி...
*செவ்வானம்*
பிகு: குரங்குக் குளியல் = மங்கி பாத் = மனதின் குரல்
No comments:
Post a Comment