Tuesday, December 23, 2014

ஒபாமாவுக்கான விருந்தில் ஒரு குறை






நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தேதி குறிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. இக்கூட்டத் தொடரில் அரசு விரும்பிய இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை அதனால் நிறைவேற்ற முடியவில்லை. அதனுடைய விளைவாக அமெரிக்க  அதிபர் ஒபாமாவுக்கு மோடி அளிக்க விரும்பிய விருந்தில்  என்ன குறை ஏற்பட்டுள்ளது  என்பதை அறிய  அருமையான  இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள்.


இன்சூரன்ஸ் மசோதா
செலக்ட் கமிட்டி- சொன்னதும் சொல்ல மறந்ததும்
தோழர் கே.சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர், SZIEF


நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடர் இக்கட்டுரை  வெளிவரும் நேரத்தில் முடிந்தோ, முடியும் தருவாயிலோ இருக்கலாம்இன்சூரன்ஸ் மசோதாவை பரிசீலித்த மாநிலங்களவை செலக்ட் கமிட்டி  அந்நிய முதலீட்டை அதிகரிக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளின் செலக்ட் கமிட்டி உறுப்பினர்கள் மாற்றுக் குறிப்பை தந்துள்ளனர். இவற்றையும் உள்ளடக்கிய செலக்ட் கமிட்டி அறிக்கையை படித்தால் அதன்  முன் வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும்- பரிந்துரைகளுக்கும் இடையேயான முரண்பாடு பெரும் அகழியாக மனதில் படுகிறது.

* செலக்ட் கமிட்டி  -அடுத்த 5 ஆண்டுகளில் ஆயுள் இன்சூரன்ஸ் துறைக்கு ரூ 44500 கோடிகள், பொது இன்சூரன்ஸ் துறைக்கு ரூ 10500 கோடிகளுமாக ரூ 55000 கோடிகள் மொத்தம் கூடுதல் முதலீடுகள் தேவைப்படும். இத்தொகையை உள்நாட்டில் திரட்டுவது சாத்தியமல்ல. ஆகவே அந்நிய முதலீடுகள் தேவைப்படுகின்றன. (பத்தி  11.1.2)

கேள்விகள் 

1. 55000 கோடிகள் தேவைப்படுகிறது  என்கிற மதிப்பீட்டிற்கு செலக்ட் கமிட்டி எப்படி வந்தது? 2011ல் இதே மசோதாவைப் பரிசீலித்த முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்கா தலைமையிலான நிதியமைச்சக நிலைக்குழு இத்தகைய மதிப்பீட்டை மேம்போக்கான, அறிவியல் பூர்வமற்ற மதிப்பீடு என நிராகரித்ததே !  இது சம்பந்தமாக நவம்பர் 7,2014 ல் செலக்ட் கமிட்டி முன்பு நிதியமைச்சகம் சமர்ப்பித்த சாட்சியத்தில் ஏதாவது  புது விளக்கம் ஏதும் உள்ளதா?

2. உள்நாட்டில் இம்முதலீட்டை திரட்ட முடியாது  என்ற முடிவுக்கு செலக்ட் கமிட்டி எப்படி வந்தது? உதாரணமாக டாட்டா-... இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த மூலதனமே ரூ 1951 கோடிகள்தான். அதில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 26 சதவீத அந்நிய முதலீடு எனில் ரூ 507 கோடிகள். இப்போது அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதம் என உயர்ந்தால் ரூ 449 கோடிகள்தான் கூடுதலாக வருகிறது. இன்னும் அதிகமாக வரும் என்கிற வாதத்தை ஏற்றுக் கொண்டால் கூட எவ்வளவு  வந்து விடும்? டாட்டா குழுமத்திற்கு இது அற்பத் தொகை இல்லையாகடந்த அக்டோபர்,2014ல் கூட ரூ 10700 கோடிகளை சீனாவில் தனது கார் தொழிற்சாலைக்கு கொண்டு போவதாக டாட்டா குழுமம் அறிவித்துள்ளதுவெளிநாட்டு முதலீட்டை நம்பித்தான் டாட்டா போன்றோர் இன்சூரன்ஸ் துறையில் இருக்கிறார்கள் என்பதை செலக்ட் கமிட்டி நம்பியது எப்படி?

3. செலக்ட்  கமிட்டி அறிக்கையிலேயே இந்தியாவில் இப்போது இயங்குகிற 7 தனியார் நிறுவனங்களுக்கு அந்நியக் கூட்டாளிகளே கிடையாதுதற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 26 சதவீதம் வரையறையைக் கூட பயன்படுத்தவில்லை எனக் கூறப்பட்டுள்ளதே! (பத்தி 11.1.3).

எக்ஸ்சைடு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சி.. கிசித்ஜ் ஜெயின் "பைனான்சியல் எக்ஸ்பிரஸ்" (24.11.2014) இதழில் அளித்த பேட்டியில் " அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான அவசரத் தேவை எங்களுக்கு இல்லை " என்று சொல்லியிருக்கிறாரே! இதில் இருந்து புதிய முதலீடுகள் அதிகம் வராது. ஏற்கனவே இந்தியத் தனியார் கைகளில் உள்ள மூலதனம்தான் நாள், நேரம் பார்த்து அன்னியர் கைகளுக்கு லாபத்திற்கு கைமாறும் என்பது தெளிவாகிறது.

* செலக்ட் கமிட்டி -அந்நிய முதலீட்டு அதிகரிப்பு இன்சூரன்ஸ் பரவலாக்கலை அதிகரிக்கும் 
கேள்விகள் 

4. அந்நிய முதலீடு 26 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆனபின்னரும் இன்சூரன்ஸ் பரவலாக்கல் 1 சதவீதம்  அதிகரித்துள்ளது. அதுவும் கூட தனியாரால் ஏற்பட்ட விரிவாக்கம் அல்ல. தொழிலின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட எல்..சியின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்துள்ளதே

5. மூலதனம் அதிகரித்தால் வணிகம் கூடும் என்கிற செலக்ட் கமிட்டி கருத்திற்கு என்ன ஆதாரம்? அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் செலக்ட் கமிட்டி முன்பு அளித்த சாட்சியத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலதன அளவுகளுக்கும், வணிகத்திற்கும் இடையில் அப்படியொரு தொடர்பு இல்லை என்பதை  சான்றுகளோடு நிறுவியுள்ளதே! பஜாஜ்-அல்லயன்ஸ் நிறுவனத்தில் மூலதனத்திற்கும் வணிகதிற்குமான விகிதம் ஒன்னேகால் மடங்கு (1.2),பாரதி-ஆக்ஸா நிறுவனத்தில் இரண்டரை மடங்கு (2.5), எச்.டி.எப்.சி-ஸ்டாண்டர்ட் லைப் நிறுவனத்தில் ஐந்து மடங்கு என்பதைக் கூறி மூலதன அளவிற்கும் வணிகத்திற்கும் சம்பந்தம் பெரிதாக இல்லை என்பது விளக்கப்பட்டதே! குறைவான மூலதனம் வைத்துள்ள நிறுவனங்கள் அதிக வணிகத்தை ஈட்டியுள்ளன.அது போன்று எதிர்மாறான அனுபவங்களும் உண்டுஇதற்கு பதில்கள் ஏதும் அறிக்கையில் இல்லையே!

6. தனியார்கள் 1999 ல் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆயுள் இன்சூரன்ஸ் துறையில் 18.2 சதவீத வளர்ச்சி எட்ட்ப்பட்டிருப்பது அந்நிய முதலீட்டிற்கு ஆதரவான வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளது. (பத்தி 16.2.3). இதை வளர்ச்சி என்றால் தனியார்கள் அனுமதிக்கப்படாத அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் என்ன வளர்ச்சி விகிதம் என்பதை ஒப்பிட்டு காண்பித்திருக்க வேண்டாமா! 1991-2000 காலத்தில் பிரிமியம் திரட்டலில் 19.5 சதவீத வளர்ச்சி இருந்துள்ளது. 2000 க்குப் பின்னர் அவ்விகிதம் அதிகரிக்கவில்லை என இன்சூரன்ஸ் நிபுணரும் முன்னாள் எல்..சி நிறுவன இயக்குனருமான திரு ஆர் .ராமகிருஷ்ணன் (ramvijay3539.blogspot.com) போன்றோர் கட்டுரைகளில் விளக்கியுள்ளார்கள். எனவே புள்ளிவிவரங்களை ஒப்பீடே இல்லாமல் தந்து முடிவுக்கு வந்திருப்பது முரண் அல்லவா!

7. .ஆர்.டி. தருகிற 2013-14 வணிக விவரங்களை பார்த்தால்  74 சதவீதத்தை பிரிமியம் திரட்டலில் சந்தைப் பங்காய் வைத்துள்ள எல்..சி பாலிசி எண்ணிக்கையில் 83 சதவீத சந்தைப்பங்கை வைத்திருந்தது. என்ன அர்த்தம்?  சாதாரண மக்களை நோக்கி போயிருப்பது எல்..சி என்பதுதானே! செலக்ட் கமிட்டி பரவலாக்கல் எனும்போது தொகையை மட்டுமே பேசுகிறது. இன்சூரன்ஸ் இல்லாதவர்களை நோக்கி செல்வதுதானே பரவலாக்கல்! தனியார்கள் போயிருக்கிறார்கள் என்பதற்கு செலக்ட் கமிட்டி அறிக்கையின் எந்தப் பத்தியிலும் விவரங்கள் இல்லையே!

8  செலக்ட் கமிட்டியே எல்..சியின் வணிக விரிவாக்கத்தை, உரிமப்பட்டுவாடா விகிதத்தை பாராட்டி பதிவு செய்துள்ளதே! (பத்தி 16.2.3) அப்படியொரு பாராட்டு அவ்வறிக்கையில் இந்தியாவில் இயங்குகிற 45 தனியார் நிறுவனங்களில் எதைப்  பற்றியும் இல்லையே! எல்..சி மற்றும்  அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செய்த வணிகத்தையும் சேர்த்துக் காண்பித்துவிட்டு அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக முடிவு எடுப்பது சரியா!

* செலக்ட் கமிட்டி -அந்நிய முதலீட்டு உயர்வால் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான நிதியாதாரங்கள் பெருகும்.

கேள்விகள் 

9. தனியார் நிறுவனங்களின் வணிகத்தில்  சந்தையோடு இணைக்கப்பட்ட திட்டங்களின்  வாயிலாக பங்குச் சந்தை முதலீடாக மாறியிருப்பது 66.7 சதவீதம். இப்படியென்றால் எங்கே ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நிதி கிட்டும்? எல்..சியின் வணிகத்தில் பங்குச் சந்தை முதலீடுகளாக மாறுவது 8 சதவீதமே. இதுவெல்லாம் செலக்ட் கமிட்டி முன்பு வைக்கப்பட்டுள்ள உண்மைகள் அல்லவா!

10. செலக்ட் கமிட்டி அறிக்கைக்கு மாறுபட்டு குறிப்பு ஒன்றை பதிவு செய்துள்ள  ஒரு உறுப்பினர் குறிப்பிடுவது போல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஆண்டுச் சராசரி பிரிமியம் ரூ 60000. எல் .சியில் இது ரூ 9000 என்றால் சாமானியர்களின் கதவுகளைத் தட்டுவது எல்..சிதான் என்பது தெரியாதா! இத் தகவல் செலக்ட் கமிட்டியால் பரிசீலிக்கப் படவில்லையா

* செலக்ட் கமிட்டி -அந்நிய முதலீட்டு உயர்வால் சேவையின் தரமும், தொழில் நுட்ப பயன்பாடும் மேம்படும்.

கேள்விகள் 

11. எல்..சியின் முன்னாள் சேர்மன் எஸ்.பி.மாத்தூர் அளித்த சாட்சியத்தில் எல்..சியால் நிராகரிக்கப்பட்ட பாலிசி உரிமங்கள் 1 சதவீதம் மட்டுமே. ஆனால் தனியார் நிறுவனங்களின் சராசரி நிராகரிப்பு 8 சதவீதமாகவும், சில நிறுவனங்களில் 28 சதவீதம் வரை கூட உள்ளது என்று கூறியிருக்கிறாரே!

(திரு ராஜீவ் எம்.பியின் மாறுபட்ட குறிப்பில் இருந்து) இன்சூரன்ஸ் தொழிலின் சேவைத் தரத்தில் முதன்மையான அம்சம் உரிமப்பட்டுவாடாவே எனும்போது செலக்ட் கமிட்டி வேறு எந்த அளவுகோலை வைத்திருக்கிறது? காலாவதியாகிற பாலிசிகள் எல்..சியில் 5 சதவீதம், ஆனால் தனியார் நிறுவனங்களில் 42 சதவீதம் முதல் 58 சதவீதம் வரை என்பதும் செலக்ட் கமிட்டி முன்பு கூறப்பட்டுள்ளதே! இதுவெல்லாம் அறிக்கையில் எங்கும் மறுக்கப்படவும் இல்லையே!

12. எல்..சியின் இன்றைய சேர்மன் திரு எஸ்.கே.ராய் செலக்ட் கமிட்டி முன்பு சாட்சியமளித்துள்ளார். அதில் எல்..சி மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது என்று குறிபிட்டுள்ளார். ( இரண்டாவது அமர்வு நிகழ்ச்சி பதிவேடு-பத்தி 5). எல்..சியின் சாட்சியத்தில் அன்னிய் முதலீட்டிற்கு ஆதரவாக உள்ள வாதத்தை மட்டும் எடுத்துக் கொள்கிற செலக்ட் கமிட்டி தொழில் நுட்ப மேம்பாடு பற்றி இவ்வளவு ஆணித்தரமாக எல்..சி சொல்லியிருக்கிற கருத்தை கணக்கிற் கொள்ள வேண்டாமா?

* செலக்ட் கமிட்டிஅந்நிய முதலீடு 49 சதவீதத்திற்கு உயர்ந்தாலும் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு இந்தியர்கள் கைகளிலேயே இருக்குமென மசோதா கூறுகிறது. அதை உறுதிப்படுத்துகிற வகையில் ஓர் விளக்கக் குறிப்பு இணைக்கப்படவேண்டும். (பத்தி 16,2,4)

கேள்விகள்    

13. மசோதாவில் விளக்கக் குறிப்பை இணைப்பதால் இந்தியர்கள் கைகளில் கடிவாளம் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? செலக்ட் கமிட்டி  முன்பு சாட்சியமளித்த சில தொழிலகங்களே இந்நிபந்தனை விதிக்கப்பட்டால் அந்நிய முதலீடு வரத் தயங்கும் என்று கூறியிருக்கிறார்கள். இப்போதே நிர்ப்பந்தங்கள் துவங்கிவிட்டது என்பதன் அறிகுறியே அது . இடதுசாரிகளும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து இம்மசோதா செலக்ட் கமிட்டிக்கு போயிருக்காவிட்டால் இவ்விளக்கக் குறிப்பும் கூட இருந்திருக்காது இல்லையா!

* செலக்ட் கமிட்டிஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் துவங்குவதற்கான குறைந்தபட்ச மூலதனத்தை ரூ 50 கோடியாகக் குறைக்கக்கூடாது. அப்படிக் குறைத்தால் தொழிலில் உண்மையான ஈடுபாடற்ற நிறுவனங்கள் (NON SERIOUS PLAYERS) வந்துவிடும். எனவே ரூ 100 கோடி என்பதே குறைந்தபட்ச் மூலதனமாக நீடிக்க வேண்டும்.   (பத்தி 16.5.1)

கேள்விகள் 
14. ரூ 100 கோடியாக குறைந்தபட்ச மூலதனம் இருந்தால் மட்டும் ஈடுபாடற்ற தனியார்கள் வருவதைத் தடுத்து விட முடியுமா? ஆனால் தனியாரை அனுமதிக்கும்போது இப்படி பொறுப்பற்றவர்கள் வர வாய்ப்பு இருக்கிறது என்பதை செலக்ட் கமிட்டி ஏற்க வேண்டியுள்ளதே! இடதுசாரிகளும், எதிர்க்கட்சிகளும் செலக்ட் கமிட்டிக்கு இம்மசோதாவை அனுப்பி வைத்திருக்காவிட்டால் குறைந்த பட்ச மூலதனம் ரூ 50 கோடி என்கிற அம்சத்தோடுதானே மசோதா நிறைவேறியிருக்கும்

* செலக்ட் கமிட்டிவேறு சில நாடுகளில் அதிகமான விகிதத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. (பத்தி 11.1.3)

கேள்விகள் 

16. ஜப்பான், தென் கொரியா,ஹாங்காங் போன்ற நாடுகளில் 100 சதவீதமும், இந்தோனேசியாவில் 80 சதவீதமும் அந்நிய முதலீட்டு வரம்புகளாக உள்ளது என்கிறது செலக்ட் கமிட்டி அறிக்கை. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறதுஅரசின் உண்மையான விருப்பமும் அதுதான். 49 சதவீதம் இறுதியானது அல்ல. எதிர்காலத்தில் 74 சதவீதம், 100 சதவீதம் என அரசு முயற்சிக்கக் கூடும்.  

* செலக்ட் கமிட்டிசெலக்ட் கமிட்டியின் சில உறுப்பினர்கள் அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்து மாற்றுக் கருத்துக்கள் தெரிவித்தனர். எனினும் ஒருமித்த கருத்தை உருவாக்க இயலாததால் மசோதாவில் உள்ள பங்கு விற்பனை அம்சம் தொடரலாம் எனக் கருதுகிறோம். (பத்தி 16.25.1)

கேள்விகள் 

17. அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாபப் பங்கு,  உபரி,காப்புகள் ஆகிய கணக்குகளைக் கொடுத்து பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட வேண்டியதில்லை என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  சார்பாக அளிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு உரிய  பதிலேதும் இல்லை. ஒருமித்த கருத்திற்கு வரமுடியவில்லை என ஒருவரியில்  கூறிச் செல்கிறதே அறிக்கை?

நிறைவாக      

இந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எனும் சூதாட்ட மூலதனத்தை அனுமதிக்க இம்மசோதா வழி செய்கிறது. இதுவரை இந்தியாவிற்கு வந்துள்ள அந்நிய நேரடி முதலீட்டில் இன்சூரன்ஸ் துறைக்குள் வந்திருப்பது 1 சதவீதம் கூடக் கிடையாது. இதற்காக இவ்வளவு பெரிய முடிவு ஏன்? தர்க்கங்களுக்கும்,நியாயங்களுக்கும் இசையாத கொள்கைகளை அரசாங்கம் அமலாக்கத் துடிப்பது ஏன்! உண்மையில் இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள் இறுதியாகக் குறி வைப்பது அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களைத்தான். இடதுசாரிகளின் எதிர்ப்பு கண்ணி வெடிகள் போல அபாயத்தின் வருகையைத் தாமதமாக்குகிறது. நிரந்தரத் தடுப்பு வேண்டுமெனில் மக்களின் அணிவகுப்பு தேவை.  நீண்ட நெடிய கரங்கோர்ப்புகள் அவசியம்.

“ நிதியமைச்சர் அருண்ஜேட்லி  நிதானம் இழக்கத் துவங்கி விட்டார்" நாடாளுமன்றத்தில் இன்சூரன்ஸ் மசோதாவை எதிர்க்கட்சிகள் முடக்க நினைத்தால் விடமாட்டோம். அதை ஈடேற்ற எங்களுக்கு நிறைய வழிகள் உள்ளன" என்று கூறியுள்ளார்.அவசரச் சட்டம் கூடப் பிறப்பிக்கப்படலாம் எனச் செய்திகள் வருகின்றன.யாருக்கு அவசரம்? எதற்காக  பரபரப்பு? ஜனவரி 26 அன்று இந்தியாவிற்கு  குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தரவுள்ள பாரக் ஒபாமாவிற்கு படைக்கிற விருந்தில் ஒரு அயிட்டம்  குறைந்துவிடக் கூடாது என்பதாலா?

No comments:

Post a Comment