Thursday, December 11, 2014

மீண்டும் பிறந்து வா பாரதி




விடுதலைக்கு முன்னேயே
விடுதலையை வரவேற்றவன் நீ.

சுதந்திரம் பெற்றும்
சுதந்திரத்தை இழக்கிறோம் நாங்கள்.

காக்கை குருவியும்
எங்கள் சாதி என்றவன் நீ.

சாதியின் பெயராலான  சதிகளின்
மோதல்களைப் பார்ப்பவர்கள் நாங்கள்.

பொழுதெல்லாம் நம் செல்வம்
உன் காலத்தில் கொள்ளை போனது.
எம் காலத்திலோ
ஆட்சியாளர்களே அள்ளித் தருகிறார்கள்.

அனைத்து மொழியும் அறிந்த பின்னே
தமிழ் மொழி போல் இனிதாவது
எங்கும் காணேன் என்றுரைத்தாய்.
பயன்பாட்டில் இல்லாததை
பல் இளித்தபடி திணிப்பதை
காணும் காட்சி எங்களுக்கு.

நிலை கெட்ட மனிதரை
நினைக்கையில் எங்களின்
நெஞ்சமும் பொறுக்குதில்லையே.

வேடிக்கை மனிதராய்
நாங்கள் வீழாதிருக்க
மீண்டும் பிறந்து வா பாரதி.

அச்சமில்லை, அச்சமில்லை
அச்சமென்பதில்லையே என
இணைந்தே முழங்க
எரிதழல் கொண்டு
மீண்டும் பிறந்து வா.


1 comment:

  1. வேடிக்கை மனிதராய் நாம்
    வீழாதிருக்க- மீண்டும்
    பாரதி பிறந்து வரட்டும்

    ReplyDelete