Wednesday, December 17, 2014

இவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்ட பிறகும் ……





மேலே நீங்கள் பார்த்த புகைப்படம் எல்.ஐ.சி யின் சேர்மன் உள்ளிட்ட உயரதிகாரிகள் 2013 – 14   ம் நிதியாண்டிற்கான லாபத்தில் அரசிற்கான பங்குத் தொகையான  1,634.89  கோடி ரூபாய்க்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லியிடம் கொடுத்த போது எடுத்த படம் அது. கடந்தாண்டு எல்.ஐ.சி ஈட்டிய லாபமான 32,685.21 கோடி ரூபாயில் 95 % பாலிசிதாரர்களின் போனஸ் கணக்கில் சேர அரசுக்கு 5 % பங்காக தரப்பட்டதுதான் இந்த 1,634.89  கோடி.

1956 ல் ஐந்து கோடி ரூபாய் மூலதனம் போட்டு அரசு எல்.ஐ.சி யை உருவாக்கியது. சில ஆண்டுகள் முன்பாக எல்.ஐ.சிக்கு தேவையே இல்லாத போதும் கூட ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் மூலதனம் குறைந்த பட்சம் நூறு கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்னொரு 95 கோடி ரூபாய் மூலதனம் போட்டது.

இந்த 95 கோடி ரூபாயை அரசு தராமல் சந்தையிலிருந்து பெறுவது என்று சொல்லி தனியாரை புகுத்த சிவகங்கைச் சீமான் சிதம்பரம் செய்த சதி பலிக்கவில்லை. நாடாளுமன்றம் அரசுதான் மூலதனத்தை போட வேண்டும். எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மை எக்காலத்திலும் நீர்த்துப் போக அனுமதிக்க முடியாது என்று உறுதியாக சொல்லி விட்டது. எதிர்காலத்தில் மூலதனத்தை உயர்த்துவதற்கான தேவை ஏற்பட்டாலும் கூட அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

கடந்தாண்டு எல்.ஐ.சி கொடுத்தது 1436.38 கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டு அளித்தது 1281.23 கோடி ரூபாய். இந்த ஆண்டு கொடுத்த தொகையோடு சேர்த்து ஐந்து கோடி ரூபாய் மூலதனம் போட்ட அரசாங்கத்திற்கு எல்.ஐ.சி லாபத்தின் பங்காக அளித்தது 14066.74 கோடி ரூபாய். இதைத்தவிர வருமான வரி, சொத்து வரி, நிறுவன வரி என்று கணக்கு போட்டால் அது எங்கேயோ போகும். மத்திய அரசின் பத்திரங்களில் முதலீடு, கடன் கொடுத்தது, பங்குச்சந்தை சரியும் போது முட்டு கொடுக்க முதலீடு செய்தது என்று புள்ளி விபரம் அளித்தால் பக்கங்கள் போதாது.

இப்படி அரசாங்கத்தை தாங்கிப் பிடிக்கிற ஒரு நிறுவனத்தையே சீரழித்து பன்னாட்டுக் கம்பெனிகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற ஒரு மோசமான அரசு உலகிலேயே வேறு எங்காவது இருக்கிறதா?

இந்த லட்சணத்தில் நல்லாட்சி தினமாம்..

நயவஞ்சகர்கள் தினம், நாடக தினம், காட்டாட்சி தினம், அடிமைகள் தினம், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பணியும் தினம், இந்திய விற்பனை தினம்,    மத வெறி தினம், மண்ணாங்கட்டி தினம் என்று வேண்டுமானால் கொண்டாடுங்களேன். பொருத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment