Friday, December 26, 2014

ஜனாதிபதிக்கு ஒரு லெட்டர் - ரொம்பவே முக்கியமானதுங்க

இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி தோழர் சீத்தாராம் யெச்சூரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அவசியம் படியுங்கள்



அவசரச்சட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது
குடியரசுத்தலைவருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

புதுதில்லி, டிச. 24-
நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அவசரச் சட்டத்திற்கு அனுமதி வழங்கிடக்கூடாது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சிபிஎம் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி `அவசரச் சட்ட ஆட்சியை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறது என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடிதத்தின் முழு விவரங்கள் வருமாறு:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த விதிமுறைகளை பெரிய அளவில் மீறக்கூடிய ஆபத்தான போக்கு இப்போது உருவாகியிருப்பதற்கு என் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதற்காக இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகிறேன்.

குடியரசுத் தலைவர் என்பவர் அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் ஆவார். அவரிடம்தான் அரசமைப்புச் சட்டத்தின் 53ஆவது விதியின்படி ஒன்றியங்களை ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் அரித்துவீழ்த்தப் படக்கூடாது. அந்த விதத்தில் இப்பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பாக, இத்தனை ஆண்டுகாலமும் நிறுவப்பட்டு வந்த நாடாளுமன்ற நடைமுறைகளை உத்தரவாதம் செய்திட தங்கள் தலையீட்டைக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன்.     நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடைமுறை விதிகள் குறித்தும் மற்ற எல்லோரையும்விட தங்களுக்கு அதிகமாகவே தெரியும். அந்த விதத்தில் நம் அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாத்திடவும் தலையிடவுட்ம மிகவும் பொருத்தமான அதிகாரம் உங்களுக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் (16ஆவது மக்களவையின் மூன்றாவது அமர்வில்), மொத்தம் 16 சட்டமுன்வடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 13 சட்டமுன்வடிவுகள் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கே அனுப்பப்படாமல் நிறைவேறி இருக்கின்றன. ஐரோப்பாவில் நவீன நாடாளுமன்ற ஜனநாயகம் உருவாகி வளர்ந்த சமயத்தில் இத்தகைய மூர்க்கத்தனமான நடைமுறையைச் சுட்டிக்காட்ட ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான், “ஜனநாயகத்தின் கொடுங்கோன்மை’’ (“tyranny of democracy”) என்பதாகும்

மாநிலங்களவையில், மக்களவையால் நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டமுன்வடிவுகளைப் பரிசீலனை செய்திட தெரிவுக்குழுக்கள் (select committiees)அமைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அமர்விலும் இதுபோல் முன்னெப்போதும் இருந்ததில்லை

மக்களவை விதி 75(2) கூறுவதாவது: சட்டமுன்வடிவு பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்படும் சமயத்தில், உறுப்பினர் எவரேனும் அச்சட்டமுன்வடிவிற்குத் திருத்தம் கொண்டுவந்தால், அச்சட்டமுன்வடிவு தெரிவுக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது இரு அவைகளின் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும், அல்லது ஒருகுறிப்பிட்ட தேதியை நிர்ணயம் செய்து அதன்மீது கருத்துக் கோரி சுற்றுக்கு விட வேண்டும்.’’

இத்தகைய விதிகள் எதுவும் தங்களுக்கு இருக்கும் `மூர்க்கத்தனமான பெரும்பான்மைகாரணமாக மதிக்கப்படுவதில்லை. நாடாளுமன்றத்திற்குள் அமளி நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு நாடாளுமன்ற நடத்தைவிதிகள் மீறப்படுவது அனுமதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தையும், தங்கள் தலையீட்டையும் நான் உங்களிடமிருந்து கேட்டுக் கொள்கிறேன்

விதிகளில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்காவிட்டால் அல்லது அசாதாரணமான சூழ்நிலைகளில் எந்தவொர சட்டமுன்வடிவிற்கும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலிருந்து முழுமையாக ஆய்வு செய்யப்படுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கக்கூடாது

அரசாங்கம், குறிப்பாக இரு முக்கியமான சட்டமுன்வடிவுகளை -- இன்சூரன்ஸ் துறையிலும், நிலக்கரிச் சுரங்கப் படுகைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்திடுவதற்கான சட்டமுன்வடிவுகளை -- அவசரச்சட்ட மார்க்கத்’’தின் மூலம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிட இந்த அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்காததால் இவ்வாறு அரசு யோசிக்கிறது.

மாநிலங்களவையில் இன்சூரன்ஸ்ட் சட்டமுன்வடிவை தெரிவுக்குழு பரிசீலனை செய்தது. அதன் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் அதன்மீது இதுவரை விவாதம் எதுவும் நடைபெறவில்லை. எனவே, இது இப்போதும் அவையின் சொத்துதான். அதன்மீது மேற்கொள்ளப்பட வேண்டிய முடிவு நிலுவையில் இருக்கிறது.
இந்த நடைமுறை முற்றுப் பெறும்வரை, இதன்மீது அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டால், நாடாளுமன்ற உத்தரவுகளின் புனிதத்தன்மையையே மிகப்பெரிய அளவில் மீறிய செயலாகிவிடும். அத்தகைய அவசரச் சட்டம் எதற்கும் தாங்கள் அனுமதி அளிக்கக்கூடாது என்று நான் உங்களை நேர்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.  

இத்தகைய சூழ்நிலையில் அவசரச்சட்ட மார்க்கத்தை’’ மேற்கொள்வது, நம் நாட்டில் நிறுவப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தை முழுமையாக மீறும் செயலேயாகும் என்பது தெளிவு.

நாடாளுமன்ற செயல்பாட்டில் எதேச்சாதிகார பாணியை நோக்கிச் செல்லும் இத்தகைய போக்குகளை, `முளையிலேயே கிள்ளி எறியக்கூடிய விதத்தில் தாங்கள் தலையிட வேண்டும் என்று மெய்யாகவே கேட்டுக்கொள்கிறேன். அரசின் சிந்தனைப்போக்குகள் அரசமைப்புச் சட்டத்தின்படி நிறுவப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானவைகளாகும்.’’

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. குடியரசுத் தலைவர் நல்லதையே செய்வார் என எதிர்பார்ப்போம்

    ReplyDelete