Friday, October 3, 2014

கட்டை விரல் வெட்டுப்படாத ஏகலைவர்கள்

தீக்கதிர் ஞாயிறு இணைப்பிதழ் வண்ணக்கதிர்  28.09.2014  இதழில் வெளியான  எனது சிறுகதை இங்கே



கட்டை விரல் வெட்டுப்படாத ஏகலைவர்கள்
வேலூர் சுரா

“எதுக்குப்பா நாட்டாமை வரச்சொன்னாரு? உனக்கு தெரியாம இருக்குமா?”

என்ற கேள்வியை மூன்றாவது முறையாக சுப்பையா கேட்ட உடன் நாட்டமையின் பணியாள் அவர் மீது எரிந்து விழுந்தான்.

“தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? உங்க கிட்டயும் போன் இருக்கு, அவருகிட்டயும் போன் இருக்கு, பேசிடுங்களேன். இல்லைனா ராத்திரி பத்து மணிக்கு தெரிஞ்சுக்கங்க” 

சுப்பையா மட்டுமில்லை தனசேகரன், மதனகோபால், ஜெயராமன், முனுசாமி, தேவராஜன் என்ற ஊர் முக்கியஸ்தர்கள் எல்லோருக்குமே தலையை பிய்த்துக் கொள்ளாத அளவிற்கு குழப்பம் இருந்தது. நாட்டாமை தங்க பாண்டியன் எதற்கு அவர்களை இரவு பத்து மணிக்கு தனது மாந்தோப்பிற்கு வரச் சொல்லியுள்ளார் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமாக ஏதாவது பேசி முடிவெடுக்க வேண்டுமென்றால் தனது வீட்டிற்கோ இல்லை கோயிலுக்கோ காலையிலோ இல்லை மாலையிலோ வரச் சொல்வார். இப்படி ரகசியமாக மாந்தோப்பிற்குள் பேசுமளவிற்கு அப்படி என்ன முக்கியமான விஷயம்? போன் செய்து கேட்கலாம்தான். ஆனால்

“ஏன்யா, ஒரு ஏழெட்டு மணி நேரம் கூட உம்மால பொறுமையா இருக்க முடியலனா நீரெல்லாம் என்னய்யா சாதிச்சு கிழிப்பீரு?” என்ற வசவை யார் வாங்குவது என்ற பயம், போனை தொட அனுமதிக்கவில்லை. அப்படியே நிமிடங்கள் மணிகளாக கழிந்து இரவு வேளையும் ஒரு வழியாக வந்து சேர்ந்தது.

நாட்டாமையின் மாந்தோப்பு. காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருக்க பௌர்ணமி நிலவு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்க ஒருவர் ஒருவராய் வந்து சேர்ந்தார்கள். நாட்டாமை இன்னும் வரவில்லை. தோப்பின் காவலாளி மூக்கன் வந்தவர்கள் உட்கார பாய் போட அதிலே உட்கார்ந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அதிலே பரபரப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

சுப்பையா தோப்பின் ஓரமாக சென்று சிகரெட்டை பற்ற வைக்கும்போது தூரத்தில் சின்னதாக ஒரு ஒளி தெரிந்தது. நெருங்க நெருங்க அது ஒரு டார்ச் லைட்டின் வெளிச்சம் என்றும் புரிந்தது. மாரியம்மன் கோயில் பூசாரி லைட்டை அடித்தபடி வர பக்கத்தில் நாட்டாமை கொஞ்சம் நிதானமாகவே நடந்து வந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில் குழப்ப ரேகைகள். எந்த பிரச்சினையென்றாலும் தடாலடியாக முடிவெடுத்து ஒப்புக்கு மற்றவர்களிடம்  யோசனை கேட்பவர் அவர். அவர் இப்படியெல்ல்லாம் குழம்பியதே கிடையாதே என்று யோசித்து மற்றவர்கள் குழம்பிப் போனார்கள்.

மூக்கன் எடுத்துப் போட்ட நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து கொண்டார். ஆறடிக்கு இரண்டு அங்குலம் குறைவான உயரம், அதற்கேற்ற தேகம், கறுத்த நிறத்தை நரைத்த தலை பளிச்சென காட்டிக் கொண்டிருந்தது. முறுக்கி விட்ட மீசைக்கு மட்டும் சாயம் போட்டிருந்தார்.

“என்னய்யா, தூக்கத்தை கெடுத்துட்டேன்னு என்னை திட்டிக்கிட்டு இருக்கீங்களா?

“அதெல்லாம் இல்லீங்கன்னா, என்ன விஷயமுனு தெரியாமதான் குழம்பிக்கிட்டு இருக்கோம்”.

“யோவ் பூசாரி, உனக்கு கிடைச்ச தகவலைச் சொல்லு”

“அடுத்த மாசம் வர பௌர்ணமி திருவிழாவில குடியானவங்க தெரு ஜனங்க அவங்களையும் பொங்கல் வைக்கவும், தேர் வடம் பிடிக்கவும் அனுமதிக்கனும்னு  சொன்னாங்க”

“அடக் கண்றாவியே, இவனுங்களுக்கு என்னய்யா திடீர் ஆசை, நாலு பேரு காலேஜ் போய் படிச்சுட்டா நமக்கு சமதையாயிட்டதா நினைப்பா” என்று எரிச்சலோடு சுப்பையா சொல்ல

“அட இதுக்கெல்லாம் இடம் கொடுத்தா தலை மேல ஏறி உட்கார்ந்துடுவானுங்க, இப்பவே நாலு சாத்து சாத்தி உட்கார வைக்கனும்” இது ஜெயராமன் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திய வார்த்தைகள்.

“ஏய்யா பூசாரி, இதெல்லாம் கேட்டுக்கிட்டு நீ சும்மாவா இருந்த? அப்படியே ஆத்தா கைல இருந்த சூலத்தை பிடுங்கி குத்திருக்க வேண்டியதுதான. இதைப் போய் நாட்டாமை கைல சொல்லிக்கிட்டு பத்து பேரு கூடி பேசிக்கிட்டு” என்று பொறிந்து தள்ளினான் இளவட்ட மதன கோபால்.

அனைவரையும் நாட்டாமை அடக்கி

“ஆளாளுக்கு பேசிக்கிட்டு இருக்காதீங்கப்பா, என்ன செய்யலாமுனு யோசிங்க” என்று அதட்டல் போட்டார்.

“இதுல யோசிக்கறதுக்கு என்னங்க இருக்கு? அவனுங்க சமாதானமா கேட்டாலும் சரி, சண்டை போட்டு கேட்டாலும் சரி, அவங்க கோயிலில பொங்கல் வைக்கறதோ இல்லை தேரை இழுக்கிறதோ நடக்காத விஷயம். இதுக்கு ஒரு போதும் ஒத்துக்கவே முடியாது”

“நம்ம ஊரு பேரு கெட்டுப்போயிடுமேய்யா?”

“என்ன நாட்டாமை நீங்களே இப்படி கேட்கறீங்க? அந்த சின்ன சாதிப்பசங்க கோயிலுக்குள்ள வந்தாதான் நம்ம ஊரு மானம் கப்பலேறும்”

“எத்தனை தலை உருண்டாலும் சரி, எத்தனை வருஷம் ஜெயிலுக்குப் போனாலும் சரி, அவனுங்களுக்கு இடமே கொடுக்கக்கூடாது”

“கோவிலையே இழுத்து மூடினாலும் சரி, திருவிழாவே நடக்காட்டியும் சரி, எந்த ஒரு வழக்கத்தையும் மாத்தவே முடியாது”

“என்ன நாட்டாமை இதெல்லாம் முடியாதுன்னு நீங்களே சொல்றதை விட்டு எங்களையெல்லாம் எதுக்கு கூப்பிட்டு பேசறீங்க?”

ஒவ்வொருவரும் போட்ட சத்தத்தில் தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாய்கள் எழுத்து குலைக்கத் தொடங்கின.

“எலே மூக்கா, அந்த நாய்ங்களை கொஞ்சம் பத்தி விடு”

என்று சொல்லி விட்டு நாட்டாமை பேசத் தொடங்கினார்.

“முதல்ல ஒரு விஷயத்தை எல்லாரும் புரிஞ்சுக்குங்க. கோவிலோட எந்த வழக்கத்தையும் மாத்த நானும் விரும்பல. இப்ப அவங்க மரியாதையா நம்ம அனுமதியைக் கேட்டு நிக்கறாங்க. முரட்டுத்தனமா நாம முடியாதுன்னு சொன்னா அடுத்து முறைச்சிக்கிட்டு சட்டம் பேசுவாங்க”

“என்னங்க பெரிய சட்டம்? சட்டம் பேசிக்கிட்டு அவங்களால நிம்மதியா இந்த ஊரில இருந்துட முடியுமா?”

சுப்பையா எகிற

“எலேய், நான் பேசிக்கிட்டு இருக்கேன்ல, குறுக்க எதுக்கு பேசற” என்று அதட்டல் போட்டு தொடர்ந்தார்.

“அக்கம்பக்கத்து ஊர் நிலவரமெல்லாம் உங்கள்ள ஒருத்தனுக்குமே தெரியலை. அங்கங்க ஜாதிக் கட்சியில சேர்ந்து கிட்டு புரட்சி, கிரட்சினு போஸ்டர் ஒட்டி திரியறானுங்க. சில இடங்களில செவப்பு சட்டை வேற போட ஆரம்பிச்சுட்டங்க. அங்க எல்லாம் ஊர் ஆளுங்க, காலனி ஆளுங்க எல்லாம் ஒன்னா நின்னு கொடி பிடிக்கிறாங்க. நல்ல வேளையா நம்ம ஊருல அது போல எதுவும் நடக்கல. நாம் அடிப்போம், வெட்டுவோம் னு போனா  போலீஸ் வரும், பேப்பர்காரனுங்க வருவாங்க, கூடவே அவங்க ஜாதிக்கட்சி, சிவப்புச் சட்டைக் கட்சி எல்லாம் வரும். அரசாங்கமும் வேற வழியில்லாம அவங்களுக்கு ஆதரவா இருக்கற மாதிரி நடிக்கிறதுக்காகவாவது நம்ம கிட்ட சட்டம் பேசும். இந்த வருஷம் தடுத்தாலும் அடுத்த வருஷம் என்னாகும்னு சொல்ல முடியாது. அப்ப அவங்க வெற்றி வெற்றி ன்னு ஓவரா குதிப்பாங்க. சிவப்புச் சட்டைக்காரங்க அடுத்து கூலியை உசத்துன்னு கொடி பிடிப்பாங்க. நமக்கு தோட்ட வேலையில இருந்து தோட்டி வேலை வரைக்கும் அவங்க இல்லாமலும் நடக்காது”

 நாட்டாமை அடுக்கிக் கொண்டே போக

தனசேகரன் இடைமறித்து

“இப்போ என்னதான் சொல்ல வரீங்கய்யா”

என கொஞ்சம் எரிச்சலோடே கேட்க

“அவங்க போராட்டம் நடத்தி அடுத்தவன் தலையிட்டு அரசாங்கம் சொல்லி அனுமதிக்கிறதை விட நாமே கூப்பிட்டு இந்த வருஷம் முதக்கொண்டு நீங்களும் பொங்கல் வையுங்கப்பா, வடம் பிடிங்கப்பா ன்னு சொல்லிட்டா வேற யாருக்கோ விசுவாசமா இருக்கறதக்கு பதிலா நம்ம கிட்டயே விழுந்து கிடப்பாங்க. புதுசா எதுவும் பிரச்சினை எழுப்பறதுக்கும் யோசிப்பாங்க. நம்மள வில்லனா பாக்காம ஹீரோவாகவே பாப்பாங்க”

“நீங்க சொல்றதும் சரிதாங்கய்யா, அவங்க நம்ம கட்டுப்பாட்டுலயே இருக்கனும்னா அப்பப்போ ஏதாவது எலும்புத் துண்டை வீசிக்கிட்டுத்தான் இருக்கனும்” என்று சுப்பையா சொல்லி முடிக்க மறுநாள் குடியானத் தெரு மக்களை நாட்டாமை வீட்டிற்கு அழைத்து வரும் பொறுப்பை பூசாரிக்குக் கொடுத்து விட்டு எல்லோரும் கலைந்தார்கள்.

கட்டை விரலை வெட்டாமலே ஏகலைவர்களை முடக்கிய மகிழ்ச்சியோடு வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்த நாட்டாமைக்கும் மற்றவர்களுக்கும் ஒரு விஷயம் மட்டும் தெரியாது.

தாங்கள் கேட்பது யாசகம் அல்ல, தங்களின் உரிமை என்ற தெளிவான புரிதலோடு குடியானத் தெரு மக்கள் உள்ளார்கள் என்றும் அவர்கள் உரிமைப் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதும் பாவம் எலும்புத்துண்டை வீசியதாய் நினைக்கிறவர்களுக்கு எப்படி புரியும்?

அம்மக்களின் அடுத்த உரிமைப் போராட்டம் வெடிக்கும்வரை இவர்கள் போலி மயக்கத்திலேயே கொஞ்ச நாள் இருக்கட்டும்.


No comments:

Post a Comment