நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டிலில் பதுக்கி
வைத்துள்ள கறுப்புப் பணத்தை கைப்பற்றுவேன். ஒவ்வொரு இந்தியருக்கும் பதினைந்து லட்ச
ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாய் வரை கிடைக்கும் என்ற வீர வசனத்திற்கு சொந்தக்காரர்
நரேந்திர மோடி.
ஆனால் அவரது நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி “கறுப்புப்
பணத்தை கொண்டு வருவதா? அதெல்லாம் முடியாது போய்யா?” என்று இந்திய மக்களிடம் சொல்லி
விட்டார். வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள மோசடிப் பேர்வழிகளின் பட்டியலை
வெளியிடக் கூட தயாராக இல்லாத அரசு எங்கே அதனை மீட்கப் போகிறது?
மோடியின் டயலாக் படி எங்கள் குடும்பத்தில் உள்ள
மூவருக்கும் சேர்த்து குறைந்தபட்சம் நாற்பத்தி ஐந்து லட்சம் ரூபாய் வரவேண்டும்.
ஆக எனக்கு இழப்பு நாற்பத்தி ஐந்து லட்ச ரூபாய்.
ஆனால் நான் இதை மோடியிடம் கேட்க மாட்டேன். கேட்பதற்கான
தார்மீக உரிமை எனக்கு கிடையாது. ஏனென்றால் மோடிக்கு நான் வாக்களிக்கவில்லை.
மோடிக்கு வாக்களித்து ஏமாந்து போக வேண்டாம் என்று எழுதியுள்ளேன், கூட்டங்களில்
பேசியுள்ளேன். ஆகவே சட்டைக் காலரைப் பிடித்து எங்கே எனக்குச் சேர வேண்டிய பணம்
எங்கே என்று கேட்கும் உரிமை எனக்கு கண்டிப்பாக கிடையாது.
ஆனால் நம்பி வாக்களித்தவர்கள் யாரெல்லாம்
இருக்கிறீர்களோ, நீங்கள் கேட்கலாம், கேட்க வேண்டும். மோடி வென்றவுடன் என்னவெல்லாம்
கூச்சல் கேட்டது? படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என்று உலகத்தாரால்
நம்பப்படும் பலருமே மாயையில் மயங்கி மகிழ்ச்சியில் திளைத்தார்கள். சென்செக்ஸ்
புள்ளி சற்று உயர்ந்ததும் பங்குச்சந்தை என்பது சர்வதேச நிதி மூலதனம் நடத்தும்
மங்காத்தா சூதாட்டம் என்பதைக் கூட மறந்து போயிருந்தார்கள். கறுப்புப் பணத்தை
கைப்பற்றும் தைரியம் கொண்ட ஒரே அரசியல்வாதி மோடி மட்டுமே என்று வாய் கிழிய
பேசினார்கள்.
மோடி மோகத்தில் அவர்கள் மறந்து போனது ஒரே ஒரு சின்ன
விஷயத்தைத்தான்.
மோடி பிரதமராக கோடிகளைக் கொட்டி அழுதுள்ளது
முதலாளிகள்தான். வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதும் அவர்கள்தான். அதே போல்
மக்களவை உறுப்பினர்களின் நானூறு பேர் கோடீஸ்வரர்கள்.
இவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மோடியால் எடுத்து
விட முடியுமா என்ன?
டீசல் விலையில் கட்டுப்பாட்டை அகற்ற முடியும்.
மருந்து விலையில் கட்டுப்பாட்டை அகற்ற முடியும். தொழிலாளர் நலச்சட்டங்களை குப்பைத்
தொட்டியில் வீச முடியும். பொதுத்துறை நிறுவனங்களை அவர்களுக்கு விற்க முடியும்.
எல்லாவற்றையும் அவர்களுக்கே அளிக்க முடியும்.
மோடி நல்லது செய்வார் என்று இன்னும் நம்புகிற
மோடிக்கு வாக்களித்த அப்பாவி மக்களே, பட்டு வேட்டி கிடைக்கும் என்ற கனவின்
மயக்கத்தில் நீங்கள் உங்களையே மறந்து கொண்டிருக்கும் வேளையில் உங்களின் இடுப்புத்
துண்டையும் மோடி களவாடிக் கொண்டிருக்கிறார் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்????
குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete