Thursday, October 9, 2014

மயில் பிடிக்க ஓடிய கதை



நேற்று காளையார் கோயில் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது அடுத்த ஊர் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ரெட்டியார்பட்டி என்ற ஊர் அது. அந்த ஊருக்கு ஒரு இனிஷியல் கூட இருக்கும். அது எனக்கு நினைவுக்கு வரவில்லை.

அதை ஊர் என்றோ கிராமம் என்று சொல்வதோ கூட தவறு. கிட்டத்தட்ட குக்கிராமம். அங்கே எப்படி ஒரு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அமைந்தது என்று தெரியவில்லை. இப்போது என்ன நிலைமை என்று தெரியாது என்பது வேறு விஷயம். டூரிங் கொட்டாய் கூட இல்லாத ஊராகத்தான் அது இருந்தது. கோயில் கூட பெரிதாய் எதுவும் இல்லை.

ஆனால் அந்த ஊரிலும் ஒரு சிறப்பு இருந்தது.

ஆம், மயில்கள்.

குறைந்தபட்சம் ஒரு நூறு மயில்களாவது அந்த ஊரில் இருக்கும். சர்வசாதாரணமாக நடந்தும் பறந்தும் கொண்டு இருக்கும்.

“மயிலே, மயிலே என்று கேட்டால் இறகு போடாதல்லவா?”

அதனால் ஏதாவது ஒரு மயிலைப் பிடித்து இறகை எடுத்துக் கொள்வோம் என்று சிறுவர்கள் கூட்டம் முடிவு செய்து மயில் கூட்டத்தை துரத்த ஆரம்பித்தோம். அவை ஓட நாங்கள் துரத்த என்று ஒரு மணி நேரம் சாலை, வயல் வெளிகள் என்று இந்த மயில் வேட்டை நடந்தது.

ஓடும் வேகத்தில் கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக் கொண்டு ரத்தக் காயத்துடன் அந்த வேட்டை தோல்விகரமாக முடிந்தது. எந்த ஒரு மயிலையும் கிட்டே நெருங்கக் கூட முடியவில்லை.

பாரதி வாழ்ந்த எட்டயபுரம், வீர பாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட கயத்தாறு ஆகிய இடங்களுக்கு என் அப்பா அழைத்துப் போயிருக்கிறார். எட்டயபுரத்திலிருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்ல பேருந்துக்காக மணிக்கணக்கில் கால் கடுக்க காத்திருந்த நேரத்தில் அந்த பஸ் ஸ்டாண்ட் பெட்டிக்கடையில் இருந்த “கலர்” வாங்கித் தராத சோகம் இப்போதும் தொண்டையை அடைக்கிறது.


அருப்புக்கோட்டையில் ஒரு ஸ்டூடியோவில் எடுத்த இந்த புகைப்படம்தான் ரெட்டியார்பட்டி சென்றதற்கான சான்று. எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி போன்ற இடங்களுக்கு எல்லாம் நானும் என் மகனை அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கான வாய்ப்புதான் இன்னும் அமையவில்லை.

No comments:

Post a Comment