Thursday, October 16, 2014

ஊழலை ஆதரிக்கத்தான் அனுமதி, தெரியுமுல்லே




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நேற்று சென்னையில் “ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம்” நடத்துவது என்று முடிவு செய்து முன் கூட்டியே காவல்துறை அனுமதியையும் கேட்டிருந்தார்கள். முதுபெரும் தலைவர்கள் தோழர்கள் என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன் வை.பாலசுந்தரம் ஆகியோர் பேசுவதாக இருந்தது.

ஆனால் தீபாவளி நேரத்தில் இக்கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சொல்லி கடைசி நிமிடத்தில் காவல்துறை அனுமதி மறுத்து விட்டது.

தமிழகத்தில் அதிமுககாரர்கள் கடந்த இருபத்தி ஏழாம் தேதி முதல் கடையடைப்பு, பஸ் எரித்தல், கல்லால் அடித்தல், கண்ட இடத்திலும் உண்ணா விரதம், தர்ணா, மொட்டையடித்து பால் குடம் எடுத்தல் என்று ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தங்களின் தலைவிக்கு ஆதரவாக நடத்தும் போராட்டங்களால் பாதிக்கப்படாத சட்டம் ஒழுங்கு ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தினால் மட்டும் கெட்டு விடுமா?

இந்த ஊழல் ஆதரவு இயக்கங்களுக்கு அனுமதி வழங்கவும் அவைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்தான் காவல் துறை உள்ளதா? அதிமுக எந்த போராட்டத்திற்கும் காவல்துறையின் அனுமதியையே கேட்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். ஏனென்றால் பெரும்பாலான ஊர்களில் எந்தெந்த இடங்களில் போராட்டங்களோ இல்லை ஆர்ப்பாட்டங்களோ நடத்த காவல்துறை அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர அமைப்புக்களுக்கு அனுமதி வழங்காதோ, அந்த இடங்களில்தான் அதிமுககாரர்களின் போராட்டம் நடந்துள்ளது.

காவல்துறை ஆளும்கட்சியின் துணை அமைப்பாக மட்டுமே செயல்படுகிறதே தவிர அரசாங்க இயந்திரமாக இல்லை என்பதற்கு இந்த அனுமதி மறுப்பும் ஒரு சான்று. ஆக ஊழலை ஆதரித்து போராட்டம் நடத்தினால், பஸ்களை கொளுத்தினால், கல் வீசினால், கடைகளை அடித்து நொறுக்கினால், வன்முறை வெறியாட்டம் நடத்தினால், காவல்துறை கண்டுகொள்ளாது, விசுவாசத்துடன் பாதுகாப்பு தரும். அப்போதெல்லாம் தமிழகம் அமைதிப் பூங்காவாகவே இருக்கும். ஊழல் எதிர்ப்பு என்று மட்டும் யாராவது வாய் திறந்தால் அப்போது மட்டும் சட்டம் ஒழுங்கின் மீது அக்கறை வந்து விடும்.

ஒரு சின்ன சந்தேகம் : ஒரு வேளை “ 2 G ஸ்பெக்ட்ரம்  ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம்” என்று சொல்லியிருந்தால் அப்போது காவல்துறை அனுமதி கொடுத்திருப்பார்கள் அல்லவா?

பின் குறிப்பு : காவல்துறை அனுமதி மறுப்பிற்கு எதிராக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படம் மேலே உள்ளது. கருத்தரங்கம் நடந்தது என்று யாரும் தவறாக கருதி பின்னூட்டம் போட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம்.

1 comment: