மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற திமிர், அந்த திமிரைத் தவிர வேறு எதுவும் திரு பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" நாவலை எரித்ததற்கும் அவரது படத்தை இழிவு படுத்தியதற்கும் காரணமில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு நாவலை இன்று திடீர் சர்ச்சையாக மாற்றுவதன் காரணம் என்ன?
அக்கதையினை நான் படிக்கவில்லை. ஆனால் அக்கதை பற்றி ஏராளமானவர்கள் எழுதியதைப் படிக்கையில் தவறொன்றும் இருப்பதாக தோன்றவில்லை. கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருந்ததில்லையா? இல்லை இருப்பதில்லையா? எத்தனை மூடப் பழக்கங்கள் இன்னும் தொடர்கிறதே? உயர்சாதியினர் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது தாழ்த்தப்பட்டவர்கள் படுத்து உரள வேண்டும் என்ற அசிங்கம் இப்போதும் கர்னாடகக் கோயில் ஒன்றில் உள்ளதே!
கடவுள் என்ற பெயரில் நீங்கள் கட்டுக்கதைகள் கட்டியுள்ளீர்கள். அவற்றில் இல்லாத அசிங்கங்களா?
புராணங்கள் படி பார்த்தால் இந்திரனை விட மிகப் பெரிய அயோக்கியன் யாரும் இருக்க முடியாது. ஆனால் சமஸ்கிருத மந்திரங்கள் இன்னும் இந்திரனைப் போற்றிக் கொண்டிருக்கிறதே! அதை யார் கொளுத்துவது?
இது ஒரு சம்பவம் மட்டுமா?
பெரியாரை செருப்பால் அடிப்போம் என்று சொன்ன ஹெச்.ராஜா, "பெரியாரும் அண்ணாவும் தமிழகத்தில் பிறந்தது தவறு" என்று மீண்டும் தனது திமிரை வெளிப்படுத்தியதைப் பார்க்கிறோம்.
அமீர் கான் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று ஒரு கோஷ்டி புறப்பட்டுள்ளது.
ராமரின் பிள்ளையா இல்லை முறை தவறி பிறந்தவரா என்று ஒரு பெண் சாமியார் கேட்கிறார்.
ஐந்து லட்சம், இரண்டு லட்சம் என்று விலை நிர்ணயம் செய்து மத மாற்றம் செய்யத் துடிக்கிறார்கள்.
இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் நாடாளுமன்றம் வர மாட்டார். வந்தாலும் வாயில் கொழுக்கட்டை வைத்திருப்பார். பதில் சொல்ல மாட்டார்.
நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற திமிர், திமிர் மட்டுமே. அந்த கொழுப்போடுதான் காவிக்கூட்டத்தின் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்.