Monday, January 7, 2019

அனைவருக்கும் பென்ஷன் கேட்டே . . .


இந்தியத் தொழிலாளி வர்க்கம் வரும் 8,9 ஜனவரி, 2019 ஆகிய நாட்களில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

அந்தப் போராட்டத்தின் ஒரு முக்கியமான கோரிக்கை “அனைவருக்கும் பென்ஷன் வேண்டும்” என்பதே.

அக்கோரிக்கையின் நியாயத்தையும் அது சாத்தியமான ஒன்றுதான் என்பதையும் விளக்குகின்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுற்றறிக்கையின் சில பகுதிகளின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளேன்.




ஒரு சமூக நலத்திட்டமாக பென்ஷன் வேண்டுமென்பது, இந்திய சமூகத்தின் பல பிரிவினரின் போராட்டங்களில் ஒரு முக்கியமான கோரிக்கையாக உருவெடுத்து வருகிறது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியமாக தற்போது மாதம் ரூபாய் 200 என்று தரப்படும் ஓய்வூதியத்தை மாதம் ரூபாய் மூவாயிரமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஏராளமான முதியோர் நாட்டின் தலைநகரிலும் இதர முக்கியமான நகரங்களிலும் சமீப காலமாக பெருந்திரளாக கூடுகின்றனர். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும்  இத்திட்டத்தை சுருக்காமல் அனைவருக்குமான ஒன்றாக மாற்றிட வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். தேசிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் “பலன் வரையறுக்கப்பட்ட பென்ஷன்” திட்டத்தை அமலாக்க வேண்டுமென மத்தியரசு, மாநில அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 26, நவம்பர்,2018 அன்று அவர்கள் தேசிய அளவில் கண்டன இயக்கம் நடத்தியுள்ளனர். ரிசர்வ் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் பென்ஷன் திட்டத்தில் இணைய இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும் பென்ஷன் பலனை மேம்படுத்த வேண்டுமென்றும் போராடி வருகிறார்கள்.

இன்சூரன்ஸ் ஊழியர்களின் போராட்டம்

பென்ஷன் திட்டத்தில் இணைய இறுதி வாய்ப்பு தரப்பட வேண்டிமென்றும் பென்ஷன் திட்டத்தில் முன்னேற்றங்கள் வேண்டுமென்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். இப்பிரச்சினைக்காக ஏ.ஐ.ஐ.இ.ஏ  அளித்த சில வேலை நிறுத்த அறைகூவல்கள் வெற்றிகரமாக நடத்தப் பட்டுள்ளன. வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகம் பங்களிப்பதற்குப் பதிலாக பென்ஷன் திட்டம், 1995 ல் எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1995 திட்டம் அறிமுகமான பின்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 01.04.2010 வரை பென்ஷன் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் 01.04.2010 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தவில்லை. அவர்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில்  இணைக்கப்பட்டார்கள்.  “பலன் வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டம்” மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் கூட 01.04.2004 முதல் திரும்பப் பெறப்பட்டது. வங்கி ஊழியர்களுக்கும் 01.04.2010 முதல் இத்திட்டம்  திரும்பப் பெறப்பட்டது.

இன்றைய தினத்தில் ஐம்பது லட்சம் மத்தியரசு, மாநில அரசு ஊழியர்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இத்திட்டத்தை முழுதுமாக நீக்கி விட்டு தங்களை “பலன் வரையறுக்கப்பட்ட பென்ஷன்” திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். பென்ஷனுக்கான செலவினம் அதிகரித்துவதாலும் கட்டுப்படி ஆகாததாலும் தாங்கள் மிகுந்த தெளிவுடனேதான் “பலன் வரையறுக்கப்பட்ட” திட்டத்திற்குப் பதிலாக “பங்களிப்பு வரையறுக்கப்பட்ட” திட்டத்திற்கு மாற்றியதாக அரசு தனது செயலை நியாயப்படுத்தப் பார்க்கிறது.  வாழும் காலம் அதிகரித்து வருவதாலும் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதாலும் பென்ஷன் செலவினம் என்பது நீடிக்கத் தக்கதல்ல என்று அரசு கருதுகிறது.

எதிர்மறை அணுகுமுறையும் பென்ஷன் என்பது இனியும் ஒரு பொருளாதார கோரிக்கை அல்ல, ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கை என்பதை தெளிவாக்கி விட்டது. எனவே இப்பிரச்சினையில் போராட்டத்தை விரிவுபடுத்துவதும் தீவிரப்படுத்துவதும் அவசியமாகும்.

அரசியல் சாசனம் அளித்த கடமை  சமூக பாதுகாப்பு

பென்ஷனும் மற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களும் இந்தியாவில் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாளர்களால் உலகெங்கும் நிகழ்கின்றது. நவீன தாராளமயமாக்கல் சித்தாந்தமே உழைக்கும் வர்க்கத்திற்கும்  ‘நல அரசு” கோட்பாட்டிற்கும் எதிரானது. உலகப் போர்கள் உருவாக்கிய சிக்கல்களைத் தீர்க்க உருவான “நல அரசுகள்” திட்டமிட்டு தகர்க்கப்படுகின்றன. பல நாடுகளில் பென்ஷன் தொகை குறைக்கப்படுகிறது, ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படுகிறது. ஓய்வுக்குப் பிந்தைய வாழும் காலத்தை குறைத்திட பணிக்காலத்தை உயர்த்துகிறார்கள். இதற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.

சமூக பாதுகாப்பு என்பது ஒரு மனித உரிமைப் பிரச்சினை. சமூகப் பாதுகாப்பு ஒரு அடிப்படை உரிமை என்ற ஐக்கிய நாடுகள் சபையின் 1948 மனித உரிமை பிரகடனத்தை ஒரு உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21 ன் படி வாழ்வதற்கான உரிமை என்பது ஒரு அடிப்படை உரிமையாகும். வாழ்வதற்கான உரிமை என்பது வெறுமனே உயிர் வாழும் உரிமை அல்ல, கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக கூறியுள்ளது.

அரசின் வழிகாட்டும் கொள்கைகளின் அடிப்படையிலான அரசியல் சாசனப் பிரிவு 39 ஒவ்வொரு குடிமகனும் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்களைப் பெறுவது ஒரு உரிமை என்று அரசை வற்புறுத்துகிறது. மேலும் பிரிவு 41, அரசு தன் பொருளாதார சக்திக்கு உட்பட்டு வேலை செய்யும் உரிமை, கல்விக்கான உரிமை ஆகியவற்றை அமலாக்குவதற்கும் நோய் மற்றும் முதுமை வருகையில் உதவி செய்வதற்குமான நிதி ஒதுக்கீட்டை செய்திட வேண்டுமென்று கூறுகிறது. எனவே பென்ஷன் வடிவத்தில் அனைவருக்குமான சமூக பாதுகாப்பை கொண்டு வருவது அரசின் அரசியல் சாசனக் கடமையாகும்.

அனைவருக்குமான பென்ஷன் திட்டம் சாத்தியமே, கட்டுப்படியாகக் கூடியதே!

அனைவருக்கும் பென்ஷன் வழங்கக் கூடிய அளவிற்கு அரசிடம் போதுமான நிதியாதாரம் உள்ளதா என்ற கேள்வி எழலாம். அரசிட,ம் அதற்கான சக்தியும் போதுமான நிதியும் உள்ளது என்று நம்மால் ஆணித்தரமாக கூற முடியும், அளிப்பதற்கான அரசியல் உறுதி மட்டும்தான் கிடையாது. மிகப் பெரிய பொருளாதார நாடுகளிலேயே வேகமாக வளரும் நாடு இந்தியா என்று அரசு பீற்றிக் கொள்கிறது. பொருளாதாரம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு செல்வத்தை உருவாக்குகிறதென்றால் அதிலிருந்து போதுமான நிதியை அனைவருக்குமான பென்ஷன் திட்டத்தை ஒதுக்க இயலும்.  பயனளிக்கக் கூடிய ஒரு பென்ஷன் திட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக பிஎம் ஜன் ஜோதி பீம யோஜனா, பிஎம் சுரக்சா பீம யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா ஆகிய திட்டங்களை காண்பித்து அவை ஏதோ மிகப் பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போல சித்தரித்து வருகின்றன.  பிஎம் ஜன் ஜோதி பீம யோஜனா, பிஎம் சுரக்சா பீம யோஜனா ஆகிய இரு திட்டங்களிலுமே பயனாளிகள்தான் முழு தொகையை செலுத்த வேண்டுமே தவிர அரசுக்கு எந்த வித நிதிச்செலவும் கொஞ்சமும் கிடையாது.

அடல் பென்ஷன் யோஜனாவில் கூட அரசின் பொறுப்பு என்பது சொற்பமானதே. யதார்த்ததில் இத்திட்டங்களையெல்லாம் ஒரு சரியான சமூக பாதுகாப்புத் திட்டங்கள் என்றே சொல்ல முடியாது. முதியோரின் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றி தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மூத்த குடிமக்களின் தேவைகளையும் பராமரிப்பையும் உறவினர்களின் பொறுப்பாக்கி தனது பொறுப்பை கைகழுவுகிறது. சமூக நீதித்துறை தயாரித்துள்ள “பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு (திருத்த) மசோதா 2018 ல் மூத்த குடிமக்களை பராமரிப்பதில் தூரத்து உறவினர்களைக் கூட பொறுப்பாக்கி உள்ளது. இம்மசோதா எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படலாம்.

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அறுபது வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை 10.4 கோடியாக்ய்ம். இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை 18 கோடியாக அதிகரிக்கும். மேலும் அறுபது வயதைத் தொடுபவர்கள் சராசியாக இன்னும் இருபது ஆண்டுகள் வாழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் ஒரு நியாயமான சமூகப் பாதுகாப்பு திட்டம் இல்லாவிடில் இந்திய சமூகத்தில் அதன்  பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். ஏனென்றால் இந்திய உழைக்கும் மக்களில் 93 % எந்த சமூகப்பாதுகாப்பும் இல்லாத,


மோசமான பணிநிலைகள் கொண்ட ஒருங்கிணைக்கப்படாத துறைகளில் உள்ளனர்.  60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியவர்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என சிலர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் படி மத்தியரசிடமிருந்து  மாதம் ரூபாய் 200 பெறுகின்றனர். எண்பது வயதுக்கு மேற்பட்டோர் மாதம் ரூபாய் 500 பெறுகின்றனர்.  இந்திரா காந்தி விதவை ஓய்வூதியத் திட்டத்தின் படி 40 முதல் 59 வரை உள்ளவர்களுக்கு மாதம் ரூபாய் 200 வழங்கப்படுகிறது. இத்தொகையெல்லாம் கொஞ்சம் கூட போதுமானதல்ல,

சமூக பாதுகாப்புக்காக மத்தியரசு செலவழிக்கும் தொகை என்பது மிகக் குறைவாக பாதாளத்தில் உள்ளது. பட்ஜெட் மற்றும் அரசு செலவினங்களுக்கான கண்காணிப்பு மையத்தின் அறிக்கைப்படி 2018-19 ல் மத்தியரசு சமூகப் பாதுகாப்பிற்காக ஒட்டு மொத்தமாக ஒதுக்கீடு செய்துள்ள தொகை என்பது ஒட்டு மொத்த உற்பத்தி(GDP) யில் 0.07 சதவிகிதம் மட்டுமே. முதியோர் தேவைக்காக ஒட்டு மொத்த உற்பத்தியில் 11.5 % பிரான்ஸிலும் 8.5% ஜெர்மனியிலும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். வளர்ச்சியில் பின் தங்கியுள்ள எத்தனையோ நாடுகளை விடவும்  குறைவாகவே இந்தியா சமூக பாதுகாப்பிற்காக செலவிடுகிறது.

மாதம் ரூபாய் 3000 பென்ஷன் என்று அனைவருக்குமான சமூக பாதுகாப்பு திட்டத்தை அமலாக்கினால் அதற்கு செலவாகும் தொகை ஒட்டு மொத்த உற்பத்தியில் 2 % க்கும் குறைவாகவே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உற்பத்தியில் 5 % வரை ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்ட வேண்டிய வரி பாக்கியை தள்ளுபடி செய்யும் நம் நாட்டில் இத்தொகை என்பது கட்டுப்படியான ஒன்றுதான். பென்ஷன் திட்டங்கள் ஏற்கனவே அமலில் உள்ள எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களில் அவர்களின் வழங்கும் சக்திக்கேற்ப முன்னேற்றங்களை கொண்டு வரும் முடிவுகளை எடுக்க அரசு அவர்களை அனுமதிக்க வேண்டும்.

நம் போராட்டங்களை இதர பகுதி தொழிலாளர்களோடு இணைத்திட வேண்டியது அவசியமாகும்.

ஆனால் இவற்றையெல்லாம் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்பார்க்க இயலாது. உழைக்கும் மக்களின் வாழ்நிலைகளை மிகவும் கடினமாக்கி சந்தையின் செயல்பாட்டை சுமுகமாக்க நினைப்பதுவே நவீன தாராளமயத்தின் கோட்பாட்டுக்களுள் ஒன்று. இக்கொள்கையின்படி மக்களை விட லாபமே பிரதானமானது. எனவே அந்தந்த நிறுவனங்களில் உள்ள பென்ஷன் திட்டங்களில் முன்னேற்றம் வேண்டும் கோருவதற்காக மட்டுமல்லாது அனைவருக்குமான பென்ஷன் திட்டம் வேண்டும் என்பதற்காகவும் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கமும் ஒன்றிணைந்து தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களும் இதர பாட்டாளிகளும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை முறியடிக்கவும் பொருளாதாரக் கொள்கைகளை மக்களைச் சார்ந்து மாற்றியமைக்க வேண்டுமென்று கோரியும் 8-9, ஜனவரி, 2019 நாட்களில் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒன்றிணைகிறார்கள். குறைந்தபட்ச ஊதியம், பென்ஷன், பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பு ஆகியவை இப்போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள்.

பென்ஷன் திட்டத்தில் இணைவதற்கான இறுதி வாய்ப்பு, பென்ஷன் திட்டத்தில் முன்னேற்றங்கள், தேசிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது ஆகிய கோரிக்கைகளுக்கான நம்முடைய போராட்டத்தை இதே கோரிக்கைகளுக்காக போராடி வரும் ரிசர்வ் வ்ங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரோடு கைகோர்த்து விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பு இது. அதே நேரம் நம்  அனைவருக்குமான பென்ஷன் திட்டத்திற்காக போராடும் அமைப்புக்களோடு நாம் இணைந்து நின்றிட வேண்டும். பென்ஷன் திட்டத்தில் இணைய இறுதி வாய்ப்பு மற்றும் பென்ஷன் முன்னேற்றம் தொடர்பான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு மட்டுமல்ல, பென்ஷன் எனும் அதி முக்கியமான பலனை நவீன தாரா:ளமயத்தின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இதுதான் சரியான உத்தி.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் (வி.ரமேஷ்)
பொதுச்செயலாளர்




6 comments:

  1. https://consenttobenothing.blogspot.com/2019/01/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. வேலை நிறுத்தத்தின் தேவை உணராத வெட்டி கூச்சல் இது.

      Delete
  2. எதுக்கு இந்த தேவையற்ற போராட்டம் ?

    மக்களுக்கு தானே சிரமம்

    2019 மே மாசம் காங்கிரஸ் ஆட் சிக்கு வந்து விடும்

    அப்புறம் தானாகவே காங்கிரஸ் பென்ஷன் திட்டத்தை கொண்டு வரும்

    இன்னும் 5 மாசங்கள் மட்டுமே உண்டு

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு பலனையும் தொழிற்சங்க இயக்கம் போராடாமல் பெற்றதில்லை. நாளை காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் கூட. அதற்கான அடித்தளம் இந்த போராட்டம்.

      Delete
  3. படித்த இளைஞர் பல கோடி போல் ஏழ்மையில் இருக்கையில் , சேரை தேய்த்து விட்டு அரசு வேலைகளில் இன்பமாக வாழ்ந்து விட்டு பிறகு ஒய்வுதியமும் மாதத்திற்கு பல்லாயிரம் வாங்குவது இங்கு உள்ளது. ஒரு கிராம ஆசிரியர் இன்று வாங்கும் ஒரு மாத ஓய்வூதியம் 30 ஆயிரம்.. எனக்கு தெரிந்து பலர் 70/80 ஆயிரம் பெறுகிறார்கள். தனியார் வேலை செய்பவருக்கு எதுவும் இல்லை. இதை விட மோசம் எதுவுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. எழுதப்பட்ட பதிவை நன்றாக படித்து விட்டு பின்னூட்டம் போடவும்

      Delete