Wednesday, January 2, 2019

பிந்து ,கனகதுர்கா - உயிர் கொடுத்த வரலாறு . . .




புத்தாண்டின் இரண்டாவது நல்ல செய்தி இது.

நேற்று வனிதா மதிலில் முப்பது லட்சம் பெண்கள் பங்கேற்று முதல் நல்ல செய்தியைத் தந்தார்கள் என்றால்

இன்று பிந்துவும் கனகதுர்காவும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் வழிபட்டு உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பிற்கு உயிர் கொடுத்துள்ளார்கள். அதன் மூலம் அவர்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள்.

சபரிமலைக் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று இதுநாள் வரை கதறிக் கொண்டிருந்தவர்கள் அடிப்படையில் பெண்களை அசுத்தவமானவர்கள் என்று சொல்லி அவர்களை மட்டும் இழிவு படுத்தவில்லை, கூடவே சபரிமலை ஐய்யப்பனையும் சேர்த்தே இழிவு படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான்கு நாட்கள் முன்பாக 29.12.2018 அன்று திருச்சி ஸ்டேஷனில் அதிகாலை வந்திறங்கி புதுக்கோட்டை செல்லும் வழியில் ஸ்டேஷனுக்கு அருகாமையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த “மலைக்கு மாலை போட்டிருந்த ஐய்யப்ப பக்தர்” ஒருவர் முந்தைய நாளின் போதை இறங்காமல் சிகரெட் ஒன்றை பற்ற வைத்து டீ போடச் சொன்னார்.

என் கையில் இருந்த கண்ணாடி டம்ப்ளரைப் பார்த்து விட்டு, “க்ளாஸ் வேண்டாம், பேப்பர் கப்பில் கொடு என்று சொல்லி விரதத்தின் புனிதத்தை காப்பாற்றிக் கொண்டார்.

இது போன்ற ஆசாமிகள் பலரையும் அனுமதிக்கிற சபரிமலையின் ஆச்சாரம் பிந்துவும் கனகதுர்காவும் நுழைந்ததால் பாதிக்கப்பட்டு விட்டதாம். நடை சாத்தி தோஷம் கழிக்கிறார்கள்.

“பைத்தியக்காரர்களின் நாடு” என்று விவேகானந்தர் அன்று சொன்னதை இன்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் “புதிய காவிப் பிராந்தன்கள் “.

No comments:

Post a Comment