Thursday, January 10, 2019

ஆயிரம் விவசாயிகளும் நயன்தாராவும்




எப்போதோ படித்த கதை இப்போது நினைவுக்கு வந்தது.

காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. உயர் அதிகாரி கூறுகிறார்.

“நாளை தலைநகரில் போராட்டம் நடத்த வரும் ஆயிரம் விவசாயிகளோடு நடிகை நயன்தாராவையும்  நாம் சுட்டுக் கொன்று விட வேண்டும்”

கூட்டத்தில் பதற்றத்தோடு பல குரல்கள் எழுகிறது

“ஏன் நயன்தாராவை கொல்ல வேண்டும்?”  என்று அந்த குரல்கள் கேட்கிறது.

உயர் அதிகாரி தனக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரியைப் பார்த்துச் சொல்கிறார்.

“பார்த்தாயா? நான் சொன்னது சரியாகி விட்டதா? அந்த ஆயிரம் விவசாயிகள் பற்றி யாருமே கவலைப்படவில்லை பார்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் பல விவாதங்கள் இக்கதையை நினைவுபடுத்தின.

“இட ஒதுக்கீடு” என்பதை கொண்டு வந்ததன் அடிப்படை என்ன?

சமூக ரீதியாக பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்வில் மேலே வர வேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு.  ஏன் ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதற்கு அரசியல் சாசனம் சொன்ன பதில் “ஜாதிய ரீதியில் அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்பதால்தான் இட ஒதுக்கீடும் அதே அடிப்படையில் அமைகிறது”

அதனால்தான் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை நிலை நாட்டும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் சிலர் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருந்தால்  அதற்கு சமூக ரீதியிலான ஒடுக்குமுறை என்பது நிச்சயம் காரணம் கிடையாது.

அதற்கான காரணிகள் என்ன என்பதை கண்டறிந்து அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர சமூக ரீதியிலான ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை விரிவு படுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை.  இந்த மசோதா நிறைவேறுவதை அனுமதித்திருக்கக் கூடாது.  யார் ஆதரவளித்திருந்தாலும் அது தவறு.

முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு என்பது சரியா தவறா என்ற அடிப்படையில் விவாதங்கள் அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் நயன்தாராவை  ஏன் கொல்ல வேண்டும் என்று எழுந்த கேள்விகள் போல

எட்டு லட்ச ரூபாய் ஊதிய வரம்பு,
ஆயிரம் சதுர அடி வீடு,
ஐந்து ஏக்கர் நிலம்,
தேர்தல் கால விளம்பர உத்தி,
பணி நியமனமே இல்லாத போது சாத்தியமில்லாத இட ஒதுக்கீடு,
நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு விடும்.

என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறுகிறது.

மோடியின் சூழ்ச்சி வலை இதுதான்.

அடிப்படையான கருத்து பின்னுக்குப் போய் விட்டது.  அது மட்டுமா இந்த ஆட்சி மீதான அனைத்து பிரச்சினைகளும் விமர்சனங்களும் தோல்விகளும் கூட.

இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தினை ஒட்டி எங்கள் சங்கத்தின் மாத இதழான “இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் தலையங்கத்தின் தமிழாக்கத்தை  சில நாட்கள் முன்பாக பகிர்ந்து கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதியை மட்டும் இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு தயாராகும் வேளையில் எதிரிகளும் கூட எதிர்வினையாற்ற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜாதிய, மத உணர்வுகளை தூண்டி விட்டு தொழிலாளர்கள், பாட்டாளிகளின் ஒற்றுமையைக் குலைப்பதே அவர்களின் எதிர்வினையாக நிச்சயம் இருக்கும். ஒரு தொழிலாளியை இன்னொரு தொழிலாளியோடு மோத வைக்க எந்த அளவிற்கும் கீழிறங்குவார்கள். 

அழிவுபூர்வமான விளைவுகளை உண்டாக்கக் கூடிய  “அவர்களுக்கு எதிராக நாம்” என்ற உத்திகளை கையாள்வார்கள். ஜாதிய, மத ரீதியான திரட்டல் என்பது பிராந்திய ரீதியிலான திரட்டல் என்ற புது வடிவத்திற்கு மாறி வருகிறது. பீஹார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது குஜராத்தில் நிகழ்ந்த தாக்குதன் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கக் கூடிய அளவிற்கு மோசமான விளைவுகளை தருவதாகும்.

பதினான்கு  மாதக்குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்வது என்பது மிகக் கொடூரமான ஒன்று. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்த கொடிய குற்றத்தை இழைத்தவன் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.  ஒருவனின் குற்றச்செயலுக்காக இந்தி பேசும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் தண்டித்தல் தகாது. இங்கே தாக்குதல் நடத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்புமே தொழிலாளர்கள்தான்.

மிக மோசமான வேலையின்மை பிரச்சினையும் அதனால் ஏற்பட்டுள்ள விரக்தியுமே இந்த கலவரத்தின் பின்னே ஒளிந்திருக்கிற காரணம்.. இப்படிப்பட்ட சூழல் மற்ற பகுதிகளில் கூட உருவாகலாம். இப்படிப்ட்ட நடவடிக்கைகள் பரந்த, விரிவுபட்ட இயக்கங்களை  பலவீனப்படுத்தும் என்பதையும் அதனால் நம் உண்மையான எதிரிகளான ஆளும் வர்க்கத்தை அதன் பொறுப்பிலிருந்து விலகி திரிய வைக்கும் என்பதை தொழிலாளர் வர்க்கம்  உணர வேண்டும்.,

பிரச்சினைகளும் துயரங்களும் அனைவருக்கும் பொதுவானது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்குமான பொது எதிரி நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளும் ஆளும் வர்க்கங்களின் பிரிவினைக் கொள்கைகளும்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தங்களை அவர்கள் ஏய்க்க அனுமதிக்கக் கூடாது. 

பேரழிவை ஏற்படுத்தும் பொருளாதார, மத வெறிக் கொள்கைகளை எதிர்த்து போராடுவதிலேயே கவனத்தை குவிக்க வேண்டும். பொதுவான இயக்கங்கள் மூலம் இதுவரை உருவாகியுள்ள ஒற்றுமையை பாதுகாத்திட வேண்டும், மேலும் வலிமைப்படுத்திட  வேண்டும்.  

துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்துள்ளது. 




2 comments:

  1. உயர் சாதிக்கு 10% ஒதுக்கீடு என்பதை ஏன் கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கிறார்கள் ? அவலமாக உள்ளது.

    ReplyDelete
  2. ஆதரித்த கம்யூஸ்ட்களை தாங்கள் கண்டிக்கவே மாட்டீர்களா ?

    அவர்கள் கொண்டு வந்தது சட்டம் அல்ல
    அரசியலமைப்பு திருத்தம்
    2/3 பெரும்பான்மையுடன் கொண்டு வந்திருக்கும் திருத்தம்
    இதை உச்ச நீதிமன்றம் கேட்க முடியாது

    50% ஒதுக்கீடடை கை வைத்தால் மட்டுமே தலையிடலாம்

    ஆனால் கம்யூக்கள் , காங்கிரஸ் எதிர்த்து இருந்தால் அந்த 2/3 பெரும்பான்மை கிடைத்திருக்காது

    ஒரு இஸ்லாமியனாக சொல்கின்றேன்
    பாஜக விளையாடியது அட்ட காசமான கேம்
    அதில் காங்கிரஸ் , கம்யூக்கள் படு தோல்வி அடைந்திருக்கின்றார்கள்

    அன்சாரி முகம்மது

    ReplyDelete