எல்.ஐ.சி நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு ப.இசக்கிராஜன் அவர்களின் முகநூல் பதிவு. படிக்கையிலேயே மெய்சிலிர்த்துப் போனது. திரு அரங்கசாமி அவர்களைப் போல ஒவ்வொருவரும் நேசிக்கிற நிறுவனம் எல்.ஐ.சி. இந்த உணர்வு தொடர்கிறவரை எல்.ஐ.சி நிறுவனத்தை மோடி போன்ற எந்த தீய சக்தியாலும் அசைத்து விட முடியாது.
இவரல்லவா முரட்டு பக்தன்..
அண்ணாச்சி... திரு.அரங்கசாமி...
LIC திருச்சி மலைக்கோட்டை கிளையின் ஓய்வுபெற்ற வளர்ச்சி அலுவலர். பாசம் நிறைந்த பெரிய மீசைக்காரர். நட்புக்காக உயிரைக்கூடகொடுக்க முன்வரும் மாமனிதர்.
நிறுவனத்தின் மீது பெரும் பாசம் கொண்டவர். நிறுவனத்தில் இவருக்கு ஒளி காட்டியாகவும், நல் வழி காட்டியாகவும் விளங்கிய ஓர் உயர் அலுவலர் திரு வை. நடரஜன் என்ற பெரியவர். அவரது கை பேசி எண்ணை தனது கைபேசியில் பெயரைப்போடாமல் குலதெய்வம் என்ற பெயரில் பதிந்து இருப்பதை நான் அறிவேன்.
நிறுவனத்தின் முத்திரை பொதித்த தங்கப் பதக்கத்தை தனது மேல் சட்டையில் குத்தியிருப்பார். இந்த உடையில் தான் கூட்டங்களில் கலந்து கொள்வார். எந்த அணியின் முகவர்களாக இருந்தாலும் சாதனை படைப்பவர்களை பரிசுகள் வழங்கி பாராட்டி பெருமைப்படுத்துவார்.
அண்ணாச்சியின் இல்லத்திற்கு நாம் சென்றால், அவரும் அவரது இல்லத்தரசியும் விருந்தோம்பலில் நம்மை திக்கு முக்காடச் செய்து விடுவார்கள்.
அவருடைய பணி நிறைவு நாள் நான் பொறுப்பிலிருந்த காலத்தில் 31-8-2008 அன்று வந்தது. ஓய்வு பெறுவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன் அதிகாலையில் திருச்சியிலிருந்து தஞ்சையிலிருக்கும் கோட்ட அலுவலக வளாகத்திற்கு வந்திருக்கிறார்.
வளர்ச்சி அலுவலர் சங்க கூட்டமைப்பின் தலைவர் திரு சரவணனை உடனே கோட்ட அலுவலக வளாகத்திற்கு வருமாறு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். சரவணனுக்கு அண்ணாச்சி எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமலே உடனே புறப்பட்டு வந்திருக்கிறார்.
அவர் வந்து சேர்ந்ததும் வளாகத்தில் இருந்த நகர்மன்ற தண்ணீர் இணைப்புக் குழாயில் நீர் பிடித்து குளித்திருக்கிறார். சரவணன் அவர்களின் உதவியுடன் ஈர உடையோடு அலுவலகக் கட்டிடத்தைச் சுற்றி உருள் வலம் வந்திருக்கிறார். உருள் வளம் முடிந்ததும் அலுவலகக் கட்டிடத்தை ஓர் ஆலயமாக நினைத்து தரையில் விழுந்து வணங்கி எழுந்தாராம்.
நிறுவனத்தை பெற்ற தாய்க்கும் மேலாக நினைத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே இந்த விளம்பரம் இல்லாத உருள் வலம்.
அலுவலகத்தில் பணியிலிருந்த காவலாளிகள் மூலம் இந்த தகவலை அறிந்து, அதிசயித்து, மற்றவர்களுக்கும் தெரிவித்து மகிழ்ந்தேன்.
* தாய்ப்பற்று... உணர்ந்திருக்கிறோம்.
* மொழிப்பற்று .. நிறைய வெளிப்படுத்தி இருக்கிறோம்.
* நாட்டுப்பற்று ... படித்து பரவசமுற்று இருக்கிறோம்.
அரங்கசாமி அண்ணாச்சியின்
* நிறுவனப்பற்று... கேட்டாலே மெய் சிலிர்க்கிறது.
இப்படிப்பட்ட கள்ளமில்லா வெள்ளை உள்ளத்து ஊழியர்களின் நிறுவனப் பற்றும், ஈடுபாடும், பங்களிப்பும் தான் LIC என்ற மாபெரும் நிறுவனத்தின் நெடிதுயர்ந்த வளர்ச்சிக்கு மூலக் காரணம். இந்த பலம் தான் பல திசைகளிலிருந்தும், பல தரப்பிலிருந்தும் வரும் போட்டிகளை எளிதாக எதிர்கொள்ள LIC க்கு துணை நிற்கிறது.
அண்ணாச்சியின் நிறுவனப்பற்று போன்று ஒவ்வொருவரும் அவரவர் நிறுவனத்தின் மீது கட்டாயம் பற்று வைக்க வேண்டும்.
Great heart n attitude.touching
ReplyDelete200 ரூபா கூலிக்கு மாரடிக்கும் கட்சி அல்லக்கைகளுக்கு, காசுக்கு ஓட்டு விட்பனை செய்யும் மக்கள் மத்தியில்
ReplyDeleteஇந்த காலத்திலும் இப்படியும் சில விசுவாசிகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றார்கள்
மழை பெய்யத்தான் செய்யும்