Saturday, January 19, 2019

அவர்களின் புகைப்படம் இல்லாவிட்டாலும் கூட . . .




அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்

இவர்களைப் பார்த்ததில்லை. இவர்கள் மரணம் பற்றியும் அவர்கள் மரணித்த நாளில் அறிந்ததில்லை. இத்தனைக்கும் இவர்கள் வாழ்ந்த அதே மாவட்டத்தில்தான் இவர்கள் உயிரை காவல்துறை தோட்டாக்கள் குடித்த காலத்தில்தான் பள்ளி மாணவனாய் பனிரெண்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

தஞ்சை மாவட்டம் திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஒரு மிகப் பெரிய கொடூரம் பற்றி அதே தஞ்சை மாவட்டத்தில் இருந்த  திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் ஒரு பேசு பொருளாகக் கூட மாறவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு வேளை அங்கே தட்டி கட்டி வைத்திருக்கலாம். ஆர்ப்பாட்ட,ம் நடத்தியிருக்கலாம். மக்களின் கோரிக்கைகளுக்காக நடத்துகின்ற போராட்டங்களை எப்படி மக்கள் மௌனமாக இப்போதும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்களோ, அது போல  நானும் ஒரு வேளை அன்று அதை மௌனமாகக் கடந்து போயிருக்கலாம்.

“ஒரு வீடு ஒரு உலகம்”, “கோயில் புறா” ஆகிய இரு படங்களின் படப்பிடிப்புக்கள் பெரிய நட்சத்திரங்கள் கூட இல்லாமலேயே உருவாக்கிய பரபரப்பு கூட விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிரம்பிய அந்த ஊரில் மூன்று விவசாயத் தொழிலாளர்கள் மீது நிகழ்ந்த அரசு பயங்கரவாதம் பற்றி எந்த பரபரப்பும் இல்லை.

அந்த கொடூர நிகழ்வு பற்றி, நெஞ்சை பதற வைத்த அந்த சம்பவம் பற்றி எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்த பின்பே சங்கத்தின் மூலமாகவே அறிந்து கொண்டேன்.

நடந்தது என்ன?

சமீபத்தில் கடந்து போனதே ஜனவரி 8,9 இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் அது போன்றதொரு அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 19 ஜனவரி 1982 ம் நாள் அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

உலக வங்கியிடமும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்கிய இந்திய அரசு, அந்த கடனுக்காக அந்த அமைப்புக்கள் விதித்திருந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தொடங்கி இருந்த காலம். இன்று போலவே அப்போதும் அந்த நிபந்தனைகள் என்பது  உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்காகத்தான் அமைந்திருந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலை வாசி உயர்வு, ஆலைகள் மூடல் ஆகியவை போனஸ் தாக்குதல்கள்.

இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைகின்றன. தலைநகர் டெல்லியை உலுக்கிய பேரணி நடைபெறுகின்றது.  19 ஜனவரி 1982 ம் நாள் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்ற அறைகூவல் விடப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தை எப்படியாவது முறியடிப்பது என்று அன்று இந்திரா அம்மையார் பிரதமராக இருந்த மத்தியரசு முடிவு செய்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையிலிருந்த மாநில அரசுகளும் காங்கிரஸோடு இணக்கமாக இருந்த எம்.ஜி.ஆர் போன்றவர்களை முதல்வர்களாகக் கொண்ட வேறு சில அரசுகளும் மத்தியரசோடு ஒத்துழைத்தது.

வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறை குண்டாந்தடிகள் ஆவேச தாக்குதல் நடத்துகிறது.

தஞ்சை மாவட்டம் திருமெய்ஞானம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் களமிறங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மறுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

“தொழிலாளிகளின் நண்பன்” என்று வர்ணிக்கப்பட்ட, விவசாயி, மீனவ நண்பன், ரிக்சாக்காரன், படகோட்டி  போன்ற படங்களில் விளிம்பு நிலை தொழிலாளிகளின் காவலனாக திரையில் காட்சியளித்த பொன் மனச் செம்மலின் காவல்துறை, அஞ்சான் நாகூரான், ஞானசேகரன் எனும் மூன்று விவசாயக் கூலித் தொழிலாளர்களை கொன்று தன் வெறியை அவர்களின் குருதியில் தணித்துக் கொண்டது.

தியாகிகளின் மூவரின் புகைப்படங்கள் கிடைக்குமா என்று நேற்று முதலே இணையத்தில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அவர்களின் முகம் அறியாவிட்டாலும் கூட தமிழக உழைப்பாளி வர்க்கம் அவர்களை மறக்கவில்லை. அவர்களின் தியாகத்தை மறக்கவில்லை. 

சி.ஐ.டி.யு அமைப்பு 19 ஜனவரியை ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.

தொழிலாளர்களுக்காக உயிர் நீத்த மகத்தான தியாகிகள் தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோருக்கு செவ்வணக்கம்.


2 comments:

  1. முகமறியா தோழர்களுக்கு
    செவ்வணக்கம்!
    Thank you comrade.. For sharing..

    ReplyDelete