Sunday, January 6, 2019

நாங்கள் ஏன்?




இந்தியத் தொழிலாளி வர்க்கம் 8,9, ஜனவரி, 2019 அன்று நடத்தவுள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஏன் இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது என்பதை விளக்கி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
தலைமையகம் : ஹைதராபாத்

அனைத்து இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும்.
அன்பார்ந்த தோழர்களே,

8,9, ஜனவரி 2019 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம். . .
வெற்றியடையச் செய்வீர் தோழர்களே

தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் மத்தியரசு தனது தொழிலாளர் விரோதக் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய தேசத்தின் உழைப்பாளி மக்கள் வரும் 8,9 ஜனவரி, 2019 ஆகிய நாட்களில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளனர்.

  •  அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும்,

  • கண்ணியமான புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்,

  • குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூபாய் 18,000 நிர்ணயிக்கப்பட வேண்டும்

  •  குறைந்தபட்ச பென்ஷனாக மாதம் ரூபாய் 6,000 நிர்ணயிக்கப்பட வேண்டும்.

  • தேசிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்,

  • பலன் வரையறுக்கப்பட்ட பென்ஷன் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும்,

  •  பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை தடுக்கப்பட வேண்டும்,

  •  பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படக் கூடாது,

  • பணிகளை வெளியே அளிக்கும் அவுட்சோர்ஸிங் முறை தடுக்கப்பட்டு ஒப்பந்தக் கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும்,

  • பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்,

  • விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்,

  • அனைவருக்குமான சமூகப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட வேண்டும்,

  • தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்கள் கூடாது. அவை கறாராக அமலாக்கப் படவேண்டும்

ஆகிய கோரிக்கைகளை இந்திய உழைப்பாளி வர்க்கம் நீண்ட காலமாகவே எழுப்பி வந்து கொண்டிடுள்ளது. இவை தொழிலாளர்களின் சட்டரீதியான, நியாயமான கோரிக்கைகள்தான்.

இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி தொழிலாளர்கள் 9-11, நவம்பர், 2017 ஆம் நாள் புதுடெல்லியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து 5 செப்டம்பர் 2018 அன்று மாபெரும் எழுச்சிப் பேரணி நடத்தினார்கள்.  

பாட்டாளி மக்களின் நியாயமான, அடிப்படைக் கோரிக்கைகளை மத்தியரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. மாறாக தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின்  உரிமைகள் மீதான தாக்குதலைத்தான் அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் ஊதிய மாற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. பேச்சுவார்த்தையை துவக்குவதற்கான அனுமதியை அளிக்க அரசு மறுத்து வருகிறது.

வேலையின்மை பிரச்சினை இன்று மிகவும் கடுமையாகவும் தீவிரமாகவும் மாறியுள்ளது. குறிப்பிட்ட கால வேலை வாய்ப்புக் கொள்கை (Eixed Term Employnment Policy)  பணிப் பாதுகாப்பு என்பத்ற்கு சாவு மணி அடித்திடும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் சுமைகளை அதிகரித்துக் கொண்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின் விளைவுகளும் அவசரகதியில் அமலான ஜி.எஸ்.டி யும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வோடு விளையாடி விட்டது.

அரசு தொழிலாளர் நலச்சட்டங்களில்  சீர்திருத்தங்களை கொண்டு வருவதில்  மிகவும் தீவிரமாக உள்ளது. நாற்பத்தி நான்கு மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்ட் தொகுப்புக்களாக, கார்ப்பரேட்டுக்களுக்கு பயனளிக்கக்கூடிய விதத்தில் மாற்ற முடிவெடுத்துள்ளது.  சமூகப் பாதுகாப்புப்  பலன்களை பரவலாக்குவது என்ற பெயர் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தொழிலாளர்கள் காப்பீட்டுக் கழகம் (ESI) மற்றும் எண்ணற்ற நல அமைப்புக்களை கலைத்துக் கொண்டிருக்கிறது.

 பாதுகாப்பு தளவாட உற்பத்தி, பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, எண்ணெய், நிலக்கரி, எஃகு  மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள்,  அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள் என்று அனைத்து கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்களையும் நேரடி அடிமாட்டு விற்பனை (Strategic Sale) மூலமாகவோ அல்லது பங்கு விற்பனை வாயிலாகவோ தனியாருக்கு தாரை வார்க்க முயல்கிறது. பல முக்கியமான கேந்திரமான துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை நூறு சதவிகிதம் வரை அனுமதித்துள்ளது. விவசாயிகளின் அதிருப்தி நாடெங்கிலும் பரவி  வருகிறது. உற்பத்திச் செலவைப் போல ஒன்றரை மடங்காக குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி அமலாக்கப்படவே இல்லை. 

கார்ப்பரேட்டுகள் மற்றும் மத்தியரசின் தீவிரமான தாக்குதலுக்கு பொதுத்துறை இன்சூரன்ஸ்துறை  உள்ளாகியுள்ளது. பொதுத்துறை இன்சூரன்ஸ்துறையின் அரசுடமைத் தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளை மத்தியரசு மேற்கொள்கிறது. ஜி.ஐ.சி ரீ மற்றும் நியூ இந்தியா  நிறுவனங்களின் பங்குகளை விற்றதன் மூலம் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் துறையில் பங்கு விற்பனையை மத்தியரசு தொடக்கி வைத்துள்ளது. மீதமுள்ள மூன்று பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அவற்றை பங்குச்சந்தையில் கொண்டு வருவதற்காகவே இணைக்க முயல்கிறது. எல்.ஐ.சி யின் பங்குகளை சந்தைக்கு கொண்டு வர வேண்டும், எல்.ஐ.சி யை தனியார்மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கையை கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் வற்புறுத்திக் கொண்டிருக்கிறது எல்.ஐ.சி யில் தனியார்மயம் வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு . ஐ.டி.பி.ஐ நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது என்ற எல்.ஐ.சி யின் முடிவு கூட பயன்படுத்தப்பட்டது.

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தீர்விற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன. 01.08.2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்விற்கான கோரிக்கை சாசனம் 02.08.2017 அன்றே எல்.ஐ.சி நிர்வாகத்திடமும் ஜிப்சா (GIPSA) விடமும் அளிக்கப்பட்டது. பதினாறு மாதங்கள் கடந்த பின்னரும் கூட இன்னும் பூர்வாங்கச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் கூட எல்.ஐ.சி யிலோ அல்லது பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலோ நடைபெறவில்லை. பென்ஷன் திட்டத்தில் இணைவதற்கு இறுதி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக நிலுவையில் உள்ளது. பென்ஷன் திட்டத்தில் இணைய இறுதி வாய்ப்பு அளிக்க நிர்வாகங்கள் தயாராக இருப்பினும் அரசு அதனை ஏற்க தயாராக இல்லை. “பலன் வரையறுக்கப்பட்ட” திட்டத்தில் இணைய வாய்ப்பு அளிப்பதன் மூலம் “பங்களிப்பு வரையறுக்கப்பட்ட”  திட்டத்தை  நீர்த்துப் போகச் செய்ய முடியாது என்று அரசு சொல்கிறது. ஊதிய உயர்வு மற்றும் பென்ஷன் திட்டத்தில் இணைய வாய்ப்பு ஆகிய இன்சூரன்ஸ் ஊழியர்களின் மிக முக்கியமான இரு கோரிக்கைகளும் நிறைவேற தடை போடுவது மத்தியரசுதான்.

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சுயேட்சையான செயல்பாடு கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் இயக்குனர் குழுமம், அரசின் பாரபட்சத் தன்மையால் ஊழியர்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்த முடிவும் எடுக்க இயலவில்லை. பணி நியமனம் என்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கியமான இன்னொரு பிரச்சினை. மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு பணிகளில் 1993 க்குப் பிறகு பணி நியமனம் நடைபெறவில்லை. உதவியாளர் மற்றும் சார்பணியாளர் பணிகளில் பணி நியமனம் உடனடியான தேவையாகும். ஊதிய உயர்வு, பென்ஷன் இறுதி வாய்ப்பு, பணி நியமனம் ஆகிய பிரச்சினைகளில் தீர்வு வர முடியாமல் அரசின் கொள்கைகள் வழி மறிக்கிறது.

ஆகவே இன்சூரன்ஸ் ஊழியர் ஊழியர்களாகிய நாம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ள  இத்தேசத்தின் தொழிலாளர்களோடும் விவசாயிகளோடும் 8,9, ஜனவரி, 2019 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் வாயிலாக இணைந்திட வேண்டும்.  

நம்முடைய கோரிக்கைகளான தேசியமயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ்துறையை பாதுகாப்பது,  ஊதிய உயர்வு, பென்ஷன் திட்டத்தில் இணைய இறுதி வாய்ப்பு, புதிய பணி நியமனம் மற்றும் நிலுவையில் உள்ள இதர கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காகவும்   நாம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

நாடு தழுவிய 8,9,ஜனவரி, 2019 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மகத்தான வெற்றியடையச் செய்வீர்  என அனைத்து இன்சூரன்ஸ் ஊழியர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் (வி.ரமேஷ்)
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment