முழுமையான
மோதலுக்கு தயாராகும் உழைக்கும் வர்க்கம்
8,9
ஜனவரி,2019 ல் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம்
சாமானிய
மக்களுக்கு பலனளிக்கக் கூடிய விதத்தில் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்
என்பதை முன்வைத்து ஜனவரி 8, 9, 2019 ஆகிய நாட்களில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தின்
மூலம் அரசோடு மோத உழைக்கும் வர்க்கம் முடிவு செய்துள்ளது. இந்தியா எப்போது நவீன தாராளமயமாக்கல்
கொள்கையைத் தழுவிக் கொண்டதோ அது தொடங்கி, அதிலும் குறிப்பாக கடந்த நான்காண்டுகளில்
மிகப் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் தொழிலாளர்களுக்கும்
இந்திய சமூகத்தின் நலிவடைந்த மக்களுக்கும் மாபெரும் பேரழிவை உருவாக்கியுள்ளது. இக்கொள்கைகளுக்கு
எதிராக நாடு முழுவதிலுமே அதிருப்தியும் கோபமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின்
பல பகுதிகளிலும் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும்
இதர உழைக்கும் மக்கள் அன்றாடம் நடத்திக் கொண்டிருக்கிற போராட்டங்களில் இது பிரபலிக்கிறது.
5 செப்டம்பர் 2018 அன்று பெரும் எண்ணிக்கையில் புதுடெல்லியில் திரண்ட விவசாயிகள், தொழிலாளர்களின்
சங்கமம், நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை முறியடிப்பதற்கான எதிர்கால கூட்டுப் போராட்டங்களை உருவாக்கும் களமாக அமைந்தது.
இந்த
வெகுதிரள் போராட்டங்களின் நியாயமான குமுறல்களை பொறுமையாக செவிமடுப்பதற்குப் பதிலாக
அவற்றை அரசு ஒடுக்குவது அதிகரித்து வருகின்றது. எவ்வளவு அராஜகமாக விவசாயிகள் போராட்டத்தை
ஒடுக்க முயன்றார்கள் என்பதை நாட்டின் தலைநகரிலும் மத்தியப் பிரதேசத்தின் மாண்டசோரிலும்
நாம் பார்த்தோம். தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டம், நில அபகரிப்புக்கு எதிராக
தமிழகம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களையும்
அரசு அடக்குமுறையை ஏவிவிட்டது. இந்த விளிம்பு நிலை மக்களின் போராட்டங்களுக்கு துணை
நின்ற அமைப்புக்களையும் தனி நபர்களையும் அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து மிரட்ட
முயன்றார்கள். தன் கொள்கைகளை விமர்சனம் செய்கிற
எந்த ஒரு அரசு ஊழியரையும் சகித்துக் கொள்ளாது என்பதை இந்த அரசு தெளிவாகவே உணர்த்தியுள்ளது.
இத்தாக்குதலில்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் அதன் தோழர்களும் விட்டு வைக்கப்படவில்லை. உழைக்கும் வர்க்கப் போராட்டங்களிலும்
விரிந்த ஜனநாயக போராட்டங்களிலும் பங்கேற்கிற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
தோழர்கள் குறி வைக்கப் படுகிறார்கள். அலுவலக நேரத்திற்கு அப்பால் நடக்கிற போராட்டங்களில்
பங்கேற்கிற, தலைமை தாங்குகிற நம் தோழர்களின் மீது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
புகார் கொடுப்பது எல்.ஐ.சி யிலும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் வாடிக்கையாகி விட்டது.
அரசின் கொள்கைகள் மீது விமர்சனம் வைப்பதால் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று எல்.ஐ.சிக்கு கட்டளையிடும் நிதியமைச்சக,
விஜிலன்ஸ் பிரிவு உத்தரவுகளோடு அக்கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
எல்.ஐ.சி
மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாட்டின் மீது செய்யப்படுகிற
அப்பட்டமான தலையீடு இது. தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மீதான இந்த பழிவாங்கும் போக்கை
அவசர நிலை காலத்தின் இருண்ட நாட்களில் கூட நாம் பார்த்தது கிடையாது. இப்படிப் பட்ட பயமுறுத்தல் உத்திகளுக்கு எல்.ஐ.சி
யும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அப்படியே சரணடைவது துரதிர்ஷ்டவசமானது.
ஆனால்
இந்த பயமுறுத்தும் உத்திகள் மூலமெல்லாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தையோ
அதன் செயல் வீரர்களையோ அச்சுறுத்தி விட முடியாது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
தன் மகத்தான வரலாற்றில் இதை விட கடுமையான சந்தர்ப்பங்களை எல்லாம் வெற்றிகரமாக சந்தித்துள்ளது. எப்படிப்பட்ட மோசமான நிலையிலும்
தனது எதிரிகளை நேருக்கு நேராக சந்திக்கும் தைரியம் கொண்ட அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கம். இப்போதும் அதே உறுதியோடுதான்
உள்ளோம். எப்படிப்பட்ட அச்சுறுத்தல் வரினும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,
ஜனநாயகப் போராட்டங்களிலும் தொழிற்சங்கப் போராட்டங்களிலும் தன் பங்களிப்பை உறுதியோடு
தொடரும். எல்.ஐ.சி ஊழியர்கள், இந்நாட்டின் குடிமக்களும் கூட என்பதை எல்.ஐ.சி நிர்வாகம்
புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல்
சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் அனுபவிப்பதற்கான உரிமை
உடையவர்கள். உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளிலே எல்.ஐ.சி ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில்
ஈடுபடுவதற்கான உரிமை உடையவர்கள் என்பதையும் நியாயமற்ற கட்டுப்பாட்டுக்களை விதிப்பதன்
மூலம் அவர்களது அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்
எல்.ஐ.சி ஊழியர் பணி விதிகள் 1960 ன் பிரிவுகள் 25(1) மற்றும் 25(4) ஆகியவற்றை அகற்ற
வேண்டியிருந்தது.
நவீன
தாராளமயமாக்கல் கொள்கைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று உழைக்கும் வர்க்கம்
முன்வைக்கும் கோரிக்கை மிகவுமே நியாயமான ஒன்று. இக்கொள்கைகள் சமத்துவமின்மையை அதிகமாக்கி
உள்ளது. வேலையின்மை பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது. உலகின் பெரிய பொருளாதார நாடுகள்
மத்தியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்று சொல்லி ஆட்சியாளர்கள் இக்கொள்கைகளுக்கு
நியாயம் கற்பிக்கின்றனர். முழுமையான கவனமும் வளர்ச்சி என்பதில் மட்டுமே உள்ளது. நவீன
தாராளமயமாக்கல் காலத்தில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள், தாங்கள் செல்வாதாரங்களை
பகிர்ந்தளிக்க வேண்டிய தலையாய பொறுப்பை தட்டிக்கழித்தே வந்துள்ளன. எனவே ஒட்டு மொத்த உற்பத்தியில் லாபத்தின் பங்கு
அதிகரித்து வருவதும் ஊதியத்தின் பங்கு குறைந்து வருவதும் வியப்புக்குரியதல்ல.
சமீபத்தில்
செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி வேலை வாய்ப்பில்
1 % க்கும் குறைவான உயர்வு இருந்த சூழலில்
ஒட்டு மொத்த உற்பத்தியில் 10 % உயர்வு கூட இருந்துள்ளது. 1970 – 1980 களில் ஒட்டு மொத்த உற்பத்தி மூன்றிலிருந்து
நான்கு சதவிகிதம் மட்டுமே உயர்ந்த நிலையிலே வேலைவாய்ப்பிலே 2 % உயர்வு இருந்த நிலைக்கு
முற்றிலும் மாறாக இன்றைய நிலை உள்ளது. 2013
முதல் 2015 வரை மட்டுமே எழுபது லட்சம் வேலைகள் காணாமல் போயுள்ளது என்றும் அந்த ஆய்வு
சொல்கிறது. நிரந்தர வேலைகளின் இடத்தை மோசமான பணி நிலைமைகள் உள்ள தற்காலிக, ஒப்பந்தப்
பணிகள் வேகமாக பிடித்து வருகிறது. வாழ்வதற்கு
தேவையான குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 18,000 என்பதை அரசே ஏற்றுக் கொண்டாலும் கூட
82 % ஆண் தொழிலாளர்கள் மற்றும் 92 % பெண் தொழிலாளர்கள் ரூபாய் பத்தாயிரத்திற்கு குறைவான
தொகையையே ஈட்டுகிறார்கள். இத்தொழிலாளர்கள் எந்த சமூக பாதுகாப்புத் திட்டத்தின் பலனையும்
அனுபவிக்கவில்லை. இளைஞர்கள் மற்றும் உயர்கல்வி பெற்றவர்களின் வேலையற்று இருப்பவர்களின்
எண்ணிக்கை 16 % ஆகி விட்டது. இது மிகவும் அபாயகரமானது.
உணவு
உற்பத்தியில் சாதனை படைத்துள்ளதாய் அரசு பீற்றிக் கொள்கிறது. அதிகமான தானிய உற்பத்திக்கு
கடுமையான உழைப்பை பங்களித்த பின்பும் விவசாயிகளின் நிலைமை இன்னும் துயரம் தோய்ந்ததாய்த்தான்
உள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் கட்டுக்கடங்காத அளவில் தொடர்கிறது. உணவு உற்பத்தியின்
சாதனை பட்டினியை குறைந்து விடவில்லை. உலக பட்டினி அட்டவணையில் இந்தியாவின் நிலைமை மிகவும்
பரிதாபகரமான நிலையில் உள்ளது. இந்திய மக்களில் இருபது கோடி பேர் பட்டினியோடுதான் காலத்தை
தள்ளுகின்றனர். பெரும்பாலான மனித வள குறீயீடுகளில்
இந்தியா பின் தங்கியே உள்ளது. ஒட்டு மொத்த உற்பத்தியில் வளர்ச்சி என்பது மக்கட்தொகையில்
பெரும்பாலானவர்களுக்கு அர்த்தமற்றது, ஏனென்றால் அது அவர்களின் வாழ்நிலையில் எந்த முன்னேற்றத்தையும்
ஏற்படுத்த தவறிவிட்டது.
எல்.ஐ.சி
மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் பல முக்கியமான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக
தீர்க்கப்படாமலேயே உள்ளது. பென்ஷன் திட்டத்தில் இணைவதற்கான இறுதி வாய்ப்பு என்ற கோரிக்கை
பத்தாண்டுகளாக நிலுவையிலேயே உள்ளது. அனைவருக்கும்
இப்பலனை விரிவுபடுத்துவதற்கு சாதகமான நிலையில் உள்ளதாக நிர்வாகம் தெளிவு படுத்தியும்
அரசு தருவதாக இல்லை. தேசிய பென்ஷன் திட்டத்தின் மூலம் மூடு விழா நடத்தப்பட்ட “பலன்கள்
வரையறுக்கப் பட்ட பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்று அரசு கூறுகிறது.
01.08.2017 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். அரசின் அனுமதி வேண்டுமென்ற காரணம் சொல்லி இன்னும்
பேச்சுவார்த்தை கூட துவக்கப்படவில்லை. எல்.ஐ.சி யும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும்
இயக்குனர் குழுமத்தால் நடத்தப்படுபவை என்று அரசு கூறினாலும் ஊழியர் கோரிக்கைகளிலும்
முதலீட்டு முடிவுகளிலும் தலையிட்டு அதன் சுயேட்சையான செயல்பாட்டை முடக்கவே செய்கிறது.
எனவேதான்
அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கம், மத்திய தொழிற்சங்கங்களோடும் பல்வேறு துறைகளின் ஊழியர் அமைப்புக்களோடும்
இதர பகுதி தொழிலாளர்களோடும் கரம் கோர்த்துள்ளது.
தொழிலாளர்களின் தேசிய மாநாடு முன்வைத்துள்ள கோரிக்கைகள் எளிமையானது, நியாயமானது.
குறைந்த
பட்ச ஊதியமாக மாதம் ரூபாய் பதினெட்டாயிரமும் குறைந்தபட்ச பென்ஷனாக மாதம் ரூபாய் ஒன்பதாயிரமும்
நிர்ணயிக்கப்பட வேண்டும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாய உற்பத்திப்
பொருட்களுக்கு கட்டுப்படியான விலை அளிக்கப்பட வேண்டும், தேசிய பென்ஷன் திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும், வரையறுக்கப் பட்ட பென்ஷன் திட்டத்தை அனைத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த
வேண்டும், ஒப்பந்த ஊழியர், தினக்கூலி முறையை
ஒழித்திட வேண்டும், பொதுத்துறை தனியார்மயமாக்கல் கைவிடப் பட வேண்டும், பெரு முதலாளிகளுக்கு
சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்கள் மாற்றப்படக் கூடாது. இவை அனைத்துமே நியாயமான கோரிக்கைகள்.
போராட்டத்திற்கு உகந்த கோரிக்கைகள். உழைக்கும்
வர்க்கம் மற்றும் ஏனைய பகுதி பாட்டாளிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிற நவீன தாராளமயமாக்கல்
கொள்கைகள் குறித்து மறு ஆய்வு செய்து அவற்றை கைவிட வேண்டும் என்று அரசை நிர்ப்பந்திக்கிற
இயக்கமாக 8,9 ஜனவரி, 2018 இரண்டு நாள் வேலை
நிறுத்தம் அமையும்.
தொழிலாளர்கள்
போராட்டங்களுக்கு தயாராகும் வேளையில் எதிரிகளும் கூட எதிர்வினையாற்ற திட்டமிட்டுக்
கொண்டிருக்கிறார்கள். ஜாதிய, மத உணர்வுகளை தூண்டி விட்டு தொழிலாளர்கள், பாட்டாளிகளின்
ஒற்றுமையைக் குலைப்பதே அவர்களின் எதிர்வினையாக நிச்சயம் இருக்கும். ஒரு தொழிலாளியை
இன்னொரு தொழிலாளியோடு மோத வைக்க எந்த அளவிற்கும் கீழிறங்குவார்கள். அழிவுபூர்வமான விளைவுகளை உண்டாக்கக் கூடிய “அவர்களுக்கு எதிராக நாம்” என்ற உத்திகளை கையாள்வார்கள்.
ஜாதிய, மத ரீதியான திரட்டல் என்பது பிராந்திய ரீதியிலான திரட்டல் என்ற புது வடிவத்திற்கு
மாறி வருகிறது. பீஹார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது குஜராத்தில் நிகழ்ந்த தாக்குதன் ஒட்டு மொத்த தொழிலாளர்களின்
ஒற்றுமையை சிதைக்கக் கூடிய அளவிற்கு மோசமான விளைவுகளை தருவதாகும்.
பதினான்கு மாதக்குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்வது என்பது
மிகக் கொடூரமான ஒன்று. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்த கொடிய குற்றத்தை இழைத்தவன்
சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒருவனின் குற்றச்செயலுக்காக இந்தி பேசும் புலம் பெயர்ந்த
தொழிலாளர்கள் அனைவரையும் தண்டித்தல் தகாது. இங்கே தாக்குதல் நடத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள்
இரு தரப்புமே தொழிலாளர்கள்தான். மிக மோசமான வேலையின்மை பிரச்சினையும் அதனால் ஏற்பட்டுள்ள
விரக்தியுமே இந்த கலவரத்தின் பின்னே ஒளிந்திருக்கிற காரணம்.. இப்படிப்பட்ட சூழல் மற்ற
பகுதிகளில் கூட உருவாகலாம். இப்படிப்ட்ட நடவடிக்கைகள் பரந்த, விரிவுபட்ட இயக்கங்களை பலவீனப்படுத்தும் என்பதையும் அதனால் நம் உண்மையான
எதிரிகளான ஆளும் வர்க்கத்தை அதன் பொறுப்பிலிருந்து விலகி திரிய வைக்கும் என்பதை தொழிலாளர்
வர்க்கம் உணர வேண்டும்., பிரச்சினைகளும் துயரங்களும்
அனைவருக்கும் பொதுவானது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவருக்குமான
பொது எதிரி நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளும் ஆளும் வர்க்கங்களின் பிரிவினைக் கொள்கைகளும்தான்
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தங்களை அவர்கள் ஏய்க்க அனுமதிக்கக் கூடாது.
பேரழிவை ஏற்படுத்தும் பொருளாதார, மத வெறிக்
கொள்கைகளை எதிர்த்து போராடுவதிலேயே கவனத்தை குவிக்க வேண்டும். பொதுவான இயக்கங்கள் மூலம்
இதுவரை உருவாகியுள்ள ஒற்றுமையை பாதுகாத்திட வேண்டும், மேலும் வலிமைப்படுத்திட வேண்டும்.
8-9
ஜனவரி, 2018 வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய தீவிரமான பிரச்சாரத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் ஈடுபட வேண்டும். ஒடுக்குமுறைகள் நீண்ட காலம் நீடிக்காது,
இறுதி யுத்தத்தில் தொழிலாளர் வர்க்கமே வெற்றியடையும்
என்ற புரிதலோடு முன்னே செல்வோம்.
(இன்சூரன்ஸ்
வொர்க்கர் நவம்பர் 2018 இதழின் தலையங்கத்தின் தமிழாக்கம்)
No comments:
Post a Comment