Thursday, November 17, 2016

உமது ஆட்சிக்குத்தான் மரணமுண்டு மோடி





முன் குறிப்பு 1 : பத்து நாள் முன்பாகவே எழுதியது. புதிய பிரச்சினை காரணமாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அருண் ஷோரி சொன்னது மட்டும் புதிதாய்  சேர்த்தது

முன் குறிப்பு 2 : மோடி பேசிய ஒரு காணொளியை பார்க்க நேரிட்டது. ஹிந்தியில்தான் அவர் பேசுகிறார். ஹிந்தி பேசும் தோழர்களுக்குக் காண்பித்து அவர் என்ன சொன்னார் என்பதை அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த பதிவு.

அது என்ன நிகழ்ச்சி என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவைப் போலவே மெல்லிய இருள் சூழ்ந்திருக்கிறது. மேடையில் ஒற்றை நாற்காலி போடப்பட்டு அதிலே இந்தியப் பிரதமர் என்று சொல்லப்படுகிற நரேந்திர மோடி ஒய்யாரமாய் வீற்றிருக்கிறார். மேடையின் பின்னணியில் ஆதித்ய பிர்லா குழுமம் என்று அங்கங்கே பளிச்சிடுகிறது.

மிகுந்த பணிவோடு ஆனால் கண்களில் பேராசை ததும்ப கோட்.சூட் அணிந்த ஒரு கனவான் கேள்வி கேட்கிறார்.

“பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து உங்கள் அரசின் கருத்து என்ன?”

மோடி பதில் சொல்லத் தொடங்குகிறார்.

“மரணத்தை எப்படி தவிர்க்க முடியாதோ, அது போல பொதுத்துறை நிறுவனங்களின் மரணத்தையும் தவிர்க்க முடியாது. அவை இறக்கத்தான் பிறந்திருக்கிறது. சில உடனடியாக இறந்து போகும். சிலவற்றின் மரணத்திற்கு கொஞ்ச காலம் ஆகும். ஆனால் இறப்பு நடந்தே தீரும்” என்று தத்துவம் பேசுவது போல சொல்கிறார்.

“பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று அவை இறக்க வேண்டும். அல்லது அவற்றை தனியாருக்கு விற்று விட வேண்டும்.”

“தொழில் நடத்துவது என்பது அரசின் தொழில் அல்ல” என்று சொல்லி ஆணவமாகச் சிரிக்கிறார்.

குஜராத்தில் தான் பொதுத்துறை நிறுவனங்களை விற்ற சாகசக் கதைகளை சொல்லத் தொடங்குகிறார்.

இப்படியாகச் செல்கிறது அந்த காணொளி.

பொதுத்துறை நிறுவனங்கள் மரணத்தை சந்திக்க வேண்டும் அல்லது விற்கப்பட வேண்டும் என்பதற்கு என்ன பொருள்?

ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “துரோகம்”

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் பெற்ற குழந்தையை தாயே கொலை செய்யும் அராஜகத்திற்கு, பாலியல் தொழிலுக்கு அனுப்பும் ஈனச்செயலுக்கு ஈடானது.

இந்த இழி செயலை துவக்கியது நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, அதனை விரிவுபடுத்தியது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி. மன்மோகன் ஆட்சி அதை தொடர்ந்தது. பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக அழிப்பது என்று வெறியோடு அலைவது மோடி ஆட்சி.

பெரு முதலாளிகளின் தரகனாக, எடுபிடியாக தன்னை காட்டிக் கொள்ள கொஞ்சமும் கூச்சப்படாத அழிவு சக்தி மோடியிடம் இப்படிப்பட்ட திமிர்த்தனமான பேச்சைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!!!

பொதுத்துறை நிறுவனங்களின் தோற்றத்தைப் பற்றியும் அவசியத்தைப் பற்றியும் மோடிக்கு தெரிந்திருக்குமா?

தேசம் விடுதலை பெற்ற போது இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு இன்றைய பெரு முதலாளிகள் துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா?

“இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தேவைப்படும் எந்த ஒரு ஆலையையும் அமைப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை. ஆகவே அரசுதான் அமைக்க வேண்டும். லாபம் வருவதற்கு நாள் பிடிக்கும் எந்த தொழிலுக்கும் எங்களால் முதலீடு செய்ய முடியாது. அதற்கான தொழில் நுட்பமும் எங்களிடம் கிடையாது. அமெரிக்காவிடம் கையேந்து, இல்லை நாம் துரத்தி விட்ட இங்கிலாந்திற்கே போ” என்று  இந்தியப் பிரதமர் பண்டித நேருவிற்கு நிர்ப்பந்தம் அளித்தவர்கள் யார் தெரியுமா மிஸ்டர் மோடி?

எல்லாவற்றையும் எங்களுக்கே கொடு என்று உங்களைக் கேட்கிற உங்கள் அன்பு முதலாளிகள்தான் அன்று எங்களால் எதுவும் முடியாது என்று கை விரித்தவர்கள்.

நினைத்தால் பறந்து போகிறாரே அமெரிக்கா, மோடியால் டீ போட்டுக் கொடுக்கவரை ஜனாதிபதியாகக் கொண்ட அந்த நாடு ஏதாவது இந்தியாவிற்கு உதவியதா?

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் அடிமைகள் என்ற பெருமையோடு  காமன்வெல்த் அமைப்பு என்று வைத்துக் கொண்டு அந்த அடிமைத்தனத்தை பெருமையாகக் கருதிக் கொள்கிறோமே, அந்த முன்னாள் எஜமான நாடு தன்னால் சுரண்டப்பட்ட இந்தியாவிற்கு என்ன உதவி செய்தது?

ஆர்ய குலம் என்று பெருமை பேசியதால் தங்களின் ஆதர்ஸமாக ஹிட்லரை காவிகள் வைத்துள்ளனரே, அந்த ஹிட்லரின் தேசம் இந்தியாவிற்கு கை கொடுத்ததா?

“எந்த ஒரு தொழிற்சாலையும் உனக்கு அவசியமில்லை. என்ன தேவையோ அதை எங்களிடமிருந்து நாங்கள் சொல்லும் விலைக்கு பேரம் பேசாமல் வாங்கிப் போ” என்று முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இந்த முதலாளித்துவ நாடுகள் துரத்தி விட்ட வரலாற்றை மோடி படித்திருப்பாரா?  

“சோவியத் யூனியனுக்குச் செல்லுங்கள். அவர்கள் நிச்சயம் உதவி செய்வார்கள்” என்று தவிப்பில் மூழ்கிய நேருவிற்கு கரை காண வழி சொல்கிறார் இந்தியாவின் மகத்தான பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி.

சோவியத் யூனியன் இந்தியாவிற்கு உதவ முன்வருகிறது. எங்கள் பொருட்களை வாங்கிச் செல் என்று முதலாளித்துவ நாடுகள் போல பேரம் பேசவில்லை. தொழிற்சாலைகளை அமைக்க உதவி செய்கிறது. தொழில் நுட்பத்தை கற்றுத் தருகிறது. எஃகுத் தொழிற்சாலை வருகிறது. ரசாயன தொழிற்சாலைகள் வருகிறது. அனல் மின் நிலையங்கள் கட்டப்படுகின்றது. கனரகத் தொழிற்சாலைகள் வருகிறது. விண்வெளித் தொழில் நுட்பத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. பெட்ரோலியம் எங்கே இருக்கிறது என்று கண்டறியப்படுகிறது.

எத்தனை எத்தனை நிறுவனங்கள்!!!

BHEL, SAIL, ONGC, IOC, BEL, ECI, IAL, AI, HMT, NTPC, BALCO, NLC, NTC, HAL, HPF,
GAIL, AAI, BEML, PTI, STC, CIL, SCI,

அடுக்கிக் கொண்டே போக முடியும்.

லாபத்தின் அடிப்படையில் மஹாரத்னா, நவரத்னா, மினி ரத்னா என சிறப்பு அந்தஸ்து தரப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே 97 நிறுவனங்கள் ஆகும்.

பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, யு.டி.ஐ போன்ற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன.

தேசத்தின் கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்தது பொதுத்துறை நிறுவனங்கள்தான். வேலை வாய்ப்புக்களை பெருக்கியதும் பொதுத்துறை நிறுவனங்கள்தான். இட ஒதுக்கீட்டை அமலாக்கியதும் பொதுத்துறை நிறுவனங்கள்தான்.

இப்போது புதிதாக ஒரு சொற்றொடர் கண்டுபிடித்துள்ளார்களே, CORPORATE SOCIAL RESPONSIBILITY இந்த பொறுப்புணர்வோடு செயல்படுபவையும் பொதுத்துறை நிறுவனங்கள்தான்.

லாபம் கிடைக்க நாளாகும் என்பதால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த இந்திய முதலாளிகள், உனக்கு நான் ஏன் உதவ வேண்டும் என்று இந்தியாவை ஒதுக்கி வைத்த முதலாளித்துவ நாடுகள். பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்படுவதைப் பார்த்ததும் வாய் ஒழுக அவற்றை விழுங்க ஆசைப்பட்டன.

அந்த ஆசையை நிறைவேற்ற நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் உதவினார்கள். இப்போது அந்த வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் எதுவும் நஷ்டத்தில் இயங்கவே இல்லையா? மூடப்படவே இல்லையா?

உங்கள் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்

ஆம், சில பொதுத்துறை நிறுவனங்கள் இறந்து போயிருக்கின்றன. உண்மைதான்.

ஆனால்

அவை தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளன

அல்லது

கொலை செய்யப்பட்டுள்ளன.

வளர்ச்சிக்கு தேவையான மூலதனத்தை அளிக்காமல் அவை மரணத்தை தழுவுவதை வேடிக்கை பார்த்திருந்ததை கொலை என்று சொல்வதா இல்லை கருணைக் கொலை என்று சொல்வதா? அவைகளை தற்கொலைக்கு தூண்டினார்கள் என்றும் சொல்லலாம்.
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை அப்படித்தான் முடமாக்கினார்கள்.

இன்று சேலம் உருக்காலையை அப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப் பார்க்கிறீர்கள்.

மோடி அவர்களே, பொதுத்துறை நிறுவனங்களை கொலை செய்வதற்கான புதிய ஆயுதமான Strategic Sale என்பதை கண்டு பிடித்தது உங்களுக்கு முன்னாள் ஆட்சியில் அமர்ந்திருந்த உங்கள் கட்சிக்காரர் வாஜ்பாய்தான். அந்த ஆயுதத்தை பயன்படுத்திய கொலைகாரர் யார் என்பது நினைவில் உள்ளதா?

இன்று உங்களை “முட்டாள்” என்றும் “குடும்பம் உள்ளவர்களின் கஷ்டம் அறியாத ஜடம்” என்றும் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிற அருண் ஷோரிதான்.

விதேஷ் சன்சார் நிகாம் லிமிட்டெட் டாடாவிற்கும்
பாரத் அலுமினியம் (பால்கோ) ஸ்டெரிலைட்டிற்கும்
மாடர்ன் பிரெட்ஸ் ஹிந்துஸ்தான் லீவருக்கும்

இன்ன பிற நிறுவனங்களும்

அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு கொலை செய்யப்பட்டன.

வாஜ்பாயின் மருமகன் தலையீட்டினால் உப்புமா கம்பெனிகளின் பங்குகள் கொள்ளை விலைக்கு வாங்கப்பட்டு யு.டி.ஐ நொடித்துப் போனது வேறு பாணி கொலை.

ஆக பொதுத்துறை நிறுவனங்களின் மரணம் என்பது ஆட்சியாளர்களின் தனியாருக்கு ஆதரவான நடவடிக்கைகளால்தான் நிகழ்ந்திருக்கிறது. எஞ்சி இருக்கிற நிறுவனங்களுக்கும் மரணத் தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

அதை கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் ஆணவத்தோடு சொல்கிறீர்கள். உங்களின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளை அதிரடி நடவடிக்கை என்று பாராட்ட ஒரு ஆட்டு மந்தைக் கூட்டம் இருக்கையில் நீங்கள் அப்படித்தான் பேசுவீர்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் மரணத்தை சந்திக்க வேண்டும் என்று பேசுகிற மோடி அவர்களே, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய, இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிக்க, வேலை வாய்ப்பினை ஏற்படுத்த உருவாக்கப்பட்டவை. அவற்றின் செயல்பாடுகளுக்கு கால வரம்பு கிடையாது. அவை ஒன்றும் மருந்துகள் அல்ல  Expiary Date  நிர்ணயம் செய்ய.

ஆனால் உங்கள் ஆட்சிக்கு எக்ஸ்பயரி டேட் உண்டு. ஐந்தாண்டுகளில் முடிந்து போகப்போகிற ஆட்சி உங்களுடையது. பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்புதான் உங்களுடையது. விற்பதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது.

பொதுத்துறை நிறுவனங்கள் உங்கள் ஆட்சிக்காலத்திற்குப் பிறகும் செயல்பட வேண்டும். ஆகவே உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக அவற்றை கொலைக் களத்திற்கு அனுப்புவதை நிறுத்திக் கொள்ளவும்.

தொழில் நடத்துவது அரசின் தொழில் அல்ல என்று சொல்கிற உங்களின் தொழில் தரகுத்தொழில்தானே?








6 comments:

  1. வணக்கம்
    இப்படி ஊதி ஊதி இந்தியாவை சீர் செய்வார்போல....ஹி..ஹி..
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உதிரத்தில் வளர்ந்த மொழி:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Very good article comrade...Thanks for the valuable information.

    Regards,
    A Yusuf

    ReplyDelete
  3. ஆனானப்பட்ட கோடக் கம்பெனியே மூடிண்டு போய்டான்.ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் எல்லாம் ஒரு ஜுஜுபி. கம்ப்யுட்டரே வேண்டாம் கை நாட்டே போதும்னு குதித்தவர்கள் தானே நீங்கள்.வேலை செய்யாமல் ஊதியம் மட்டும் உயரவேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கை.

    ReplyDelete
  4. //ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் எல்லாம் ஒரு ஜுஜுபி// மக்கள் படும் துயரமே ஜூஜூபி என்ற ஈவிரக்கமற்ற கொடூர புத்திக்காரர் இப்படித்தான் சொல்வீர்கள்.

    //கம்ப்யுட்டரே வேண்டாம் கை நாட்டே போதும்னு குதித்தவர்கள் தானே நீங்கள்.வேலை செய்யாமல் ஊதியம் மட்டும் உயரவேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கை//

    இதற்கெல்லாம் சூடாக பதில் சொல்ல முடியும். ஆனால் அந்த அளவிற்கு நீங்கள் வொர்த் கிடையாது.

    ReplyDelete
  5. இப்போது போட்டோ பிலிம் கேமரா எல்லாம் காலவதியாகி மாமாங்கம் ஆயாச்சு.யாரும் வாங்காத ஒரு போருளை உற்பத்தி செய்து யாருக்கு கொடுப்பீர்கள்.
    உங்கள் எங்கள் வரி பணத்தில்தான் அதை ஒட்ட வேண்டும்.இதில் ஈவிரக்கம் ஏஙகேயிருந்து வந்தது.அதே பணத்தை வேறு நல் வழியில் பயன் படுத்தலாமே.

    ReplyDelete
  6. ஆமாம், சாதாரண மக்களின் பணத்தை அதானி, அம்பானிக்கு கொடுப்பது போல, மல்லய்யா கடனை தள்ளுபடி செய்தது போல நல்வழீயில் பயன்படுத்தலாம். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

    ReplyDelete