Sunday, November 6, 2016

இன்றுதான் பொருத்தமான நாள்



மிக முக்கியமான இந்த நூல் பற்றி “உலகை உலுக்கிய ரஷ்யப் புரட்சி” யின் நூற்றாண்டு தொடங்கும் இன்று பகிர்ந்து கொள்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.


நூல் அறிமுகம்

நூல்                               நீலக் குறிப்பேடு
ஆசிரியர்                          இ.கஸாகேவிச்
தமிழில்                           பி.சிவகாமசுந்தரி
வெளியீடு                         பாரதி புத்தகாலயம்
                                    சென்னை – 600018
விலை                            ரூபாய்  90.

“தென்றலைத் தீண்டியதில்லை, தீயைத் தாண்டியதுண்டு” என்ற வாசகங்களை நிஜமாகவே உச்சரிக்கும் தகுதி படைத்தவர்கள் வரலாற்றில் சிலரே. அதிலே முதன்மையானவர் ரஷ்யப் புரட்சியின் தலைவர் தோழர் லெனின்.

புரட்சிக்கு முந்தைய கால கட்டங்களில் அவர் சிறைப்பட்டிருக்கிறார். சைபீரியாவிற்கு கடத்தப்பட்டுள்ளனர். மாறு வேடங்களில் திரிந்துள்ளார். தலைமறைவாய் இருந்துள்ளார். அப்படி தலைமறைவாய் இருந்த சில நாட்களின் அனுபவத்தைப் பேசுகிறது நீலக் குறிப்பேடு.

எம்ல்யனேவ் என்ற விவசாயியின் வீட்டில் காட்டுக்குள்ளே லெனின் தங்குகிறார். தலைமறைவாக இருந்தாலும் அன்றாடம் செய்தித் தாள்களை வரவழைத்துப் படிக்கிறார். நாள் தோறும் எழுதிக் கொண்டே இருக்கிறார். முந்தைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து திருத்திக் கொள்ள வேண்டிய அம்சங்களை முடிவு செய்கிறார்.

எந்த வசதியும் இல்லாமல் வைக்கோல் போரில் அவர் தன் காலத்தைக் கழிக்கையில் அவருக்கு வருகிற செய்தித்தாள்களோ “உல்லாச வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிற லெனின் பிடிபட்டார்” என்று கற்பனைச் செய்திகளை வெளியிடுகிறது.

காட்டுக்குள்ளே இருக்கும் அவரை சந்திக்க வரும் அவரது தோழர்களோடு “நடைபெறவுள்ள போல்ஷ்விக் கட்சியின் மாநாடு, தீர்மானங்கள் குறித்து விரிவாக விவாதிக்கிறார்.வழிகாட்டுகிறார்”.  அவரது முந்தைய வசிப்பிடத்திலிருந்த நீலக் குறிப்பீட்டை தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு வலியுறுத்துகிறார். அதிலே அப்படி என்ன இருக்கிறது என்பதை கடைசியில் பார்ப்போம்.

தலைமறைவு வாழ்க்கை தோழர் லெனினை முடமாக்கவில்லை, மாறாக புரட்சியை முன்னெடுக்க தன்னை கூர் தீட்டிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார். எம்லயனேவ் குடும்பத்தாருடன் நிகழ்த்தும் அவர் நிகழ்த்தும் உரையாடல்கள் புரட்சி வெற்றி பெற பெண்களின் பங்கு அவசியம் என்ற அவரது கருத்தை உணர்த்தும். எதிர்காலத்தில் இளைஞர்கள் எவ்வாறு முன்னேறுவார்கள் என்ற கருத்தையும் நம் கண் முன் நிறுத்தும்.

அவரோடு உடன் இருந்த ஜினோவிவ் என்ற தோழரோடு லெனின் நிகழ்த்துகிற நீண்ட உரையாடல் அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. ரஷ்ய புரட்சிக்கு முந்தைய காலகட்டம் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல் இது.

நீலக்குறிப்பேட்டில்தான் லெனின் புரட்சிக்குப் பிந்தைய அரசு மேற்கொள்ள வேண்டிய கடமைகள், செயல் திட்டங்கள் பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் தயாரித்த குறிப்புக்கள் இருந்தன.

அனைவருக்கும் பசிப்பிணியற்ற, முழுமையான கல்வி அறிவோடு, உறைவிடத்தோடான கௌரவமான வாழ்க்கையை சொந்தமாக்கிய முதல் தேசம் ரஷ்யாதான் என்பது சாதனை. அந்த சாதனைக்கான வித்து துவங்கிய இடம் நீலக்குறிப்பேடு.


No comments:

Post a Comment