மோடியின் மூடத்தனமான “சாதாரண மக்கள் மீதான துல்லிய தாக்குதல்”
குறித்த ஆசானின் கட்டுரையை அவரது அபத்தங்களில் இதுவும் ஒன்று என ஒதுக்கி
வைக்கத்தான் நினைத்தேன். பக்கம் பக்கமாக
எழுதியதை படிப்பதிலேயே விரயமாகும் நேரத்தை, அவருக்கு பதில் சொல்லி இன்னும்
விரயமாக்க வேண்டுமா என்றும் நினைத்தேன். வேறு ஒரு தோழருக்குக் கூட அப்படித்தான் பின்னூட்டம் போட்டேன்.
ஆனால் கட்டுரையின் இறுதிப்பகுதியில் அவர் முன் வைத்திருக்கிற
ஒரு வாதம் கேவலமானது. அப்பட்டமான மத வெறியை வெளிப்படுத்தி உள்ளார். ஆகவே பதிலடி
கொடுக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி விட்டார்.
இந்த அரசின் முயற்சியால் ஒரு பலனும் வரப் போவதில்லை என்று
பொருளாதார நிபுணர் பேராசியர் பிரபாத் பட்னாயக்
அவர்களின் கட்டுரையை ஏற்கனவே இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். அதற்கு மேல்
தெளிவாக விவரிக்க வேறு எதுவும் அவசியமில்லை என்பதால் ஆசானின் அபத்தங்களுக்கு
பதிலடி என்ற அளவில் மட்டுமே இப்பதிவு அமையும்.
சிவப்புக் கலரில் இருப்பது ஆசானின் மேதமை வாய்ந்த கருத்துக்கள்
என்றால் நீல நிறத்தில் இருப்பது எனது பதிலடி. ஆசானுக்கு சிவப்பும் பிடிக்காது,
நீலமும் பிடிக்காது. காவியை ஒழிக்க சிவப்பும் நீலமும் இன்று ஒன்றிணைந்து போராடுவது
அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் இந்த நிறங்கள்.
இந்த பதிவை ஆசானுக்கு மின்னஞ்சலில் அனுப்பப் போகிறேன். பதில்
வந்தால் பகிர்ந்து கொள்வேன். ஆனால் அனாமதேயங்களாக காவிக்கோழைகள் நிறைய பேர் நிச்சயம் வருவார்கள்.
நரேந்திர மோடி வென்று வந்தபின்னர் நான்
எப்போதும் மெல்லிய ஐயத்துடனேயே அவரை அணுகிவந்தேன்.
மோடியின் ஆட்சியைப் பற்றி மட்டுமல்ல, உங்களுடைய
எழுத்துக்களையும் கூட கொஞ்சம் கூட ஐயமில்லாமல்தான் அணுகினோம். கைப்புண்ணுக்கு
எதற்கு கண்ணாடி? இருவருமே நாகரீக சமுதாயத்தை கெடுக்க வந்த நோய்க்கிருமிகள்தானே!
அதேபோல எனக்கு எப்போதுமே வலதுசாரி , மதவாத அடிப்படைவாதிகளைப்பற்றிய ஐயம் உண்டு. அவர்கள் இந்தியாவில்
பல்லாயிரமாண்டு காலமாக இருந்துவரும் நிலைச்சக்தியின் இன்றைய வடிவம். ஒரு தொன்மையான
பண்பாடு, சமூகம்
அப்படித்தான் இருக்கமுடியும். அது மாற்றங்களை மறுக்கும் மனநிலை கொண்டிருப்பது இயல்பே
அந்தத்தரப்பினரின் மூர்க்கமான சமத்துவ
மறுப்பு, நவீனத்துவ
எதிர்ப்பு மேல் எப்போதும்
எனக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு.
இப்படி சொல்லிக் கொண்டே அவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின்
தவறுகளுக்கு முட்டு கொடுப்பதும் அவர்களை கண்டிப்பவர்களை வசை பாடுவதையும்
பிரச்சினைகளை திசை திருப்புவதையுமே “அறம்” என கொண்டுள்ளீர்கள் என்பதை ஏன்
சொல்லவில்லை?
அத்துடன் மோடி எதிர்பாளர்கள் மேல் எனக்கு ஒரு
நம்பிக்கை இருந்தது.
அதனால்தான் அவர்களை ஒழிப்பதையே இலக்காக கொண்டுள்ளீர்கள் அல்லவா?
இன்றும் அந்நம்பிக்கை நீடிக்கிறது.
அப்படியெல்லாம் எங்களை ஒழித்து விடலாம் என்றெல்லாம் மூட
நம்பிக்கை கொள்ளாதீர்கள்.
வரலாற்றின் இத்தருணத்தில் இப்படி நடந்துகொண்ட
குறுகியபுத்திக்காக அவர்களில் சிலராவது நாளை வருந்துவார்கள். இன்று என்னை
முத்திரை குத்துவார்கள். செய்யட்டும்
உங்களை குறுகிய புத்திக்காரன் என்று சுய விமர்சனம் செய்து
கொண்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. உங்களுக்கு இந்த முத்திரை மட்டும் போதாது. இன்னும் அதிகமாகவே பட்டம் அளிக்க வேண்டும்
ஆசானே.
இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட
அரசியல்கட்சித்தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக்
களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள்
அதன்பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார
மோசடிகளில் ஈடுபடும்
ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்
கள்ளப்பணம் உள்ளவர்கள் எல்லாம் அரசுக்கு ஜால்ரா அடிக்கும்
மர்மம் என்னவென்று கூட எங்களுக்கும் புரியவில்லை. பிரச்சாரத்திற்கும் மோசடிக்கும்
வித்தியாசம் தெரியாத “அறம்” பேசும் எழுத்தாளர்களையும் பார்த்ததில்லை. மூடத்தனமான
ஒரு நடவடிக்கைக்கு முட்டு கொடுத்ததையும் கண்டதில்லை.
சீதாராம் எச்சூரியும் பிரகாஷ் காரத்தும்
கொந்தளிப்பதைப் புரிந்துகொள்ள நாம் இதுவரை அறிந்த வரலாற்றுணர்வு நமக்குப் போதாமலாகி விட்டிருக்கிறது.
உங்களுக்கு அரசியல், வரலாறு, பொருளாதாரம் என்று எந்த உணர்வும்
போதாமல் போனதுதானே பிரச்சினை. வக்கிரம் மட்டும்தானே ஸ்டாக்கில் உள்ளது!
நம் சமூக அமைப்பே ஊழலுக்கு ஆதரவான மனநிலைகொண்டது. ஆக, கள்ளப்பணம் அரசின் பிழையால் உருவாகி
நீடிப்பது அல்ல.
நம் பொருளியல் ஒழுக்கமின்மையின் விளைவு அது
அந்த சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கத்தில்தானே இப்படி பக்கம்
பக்கமாய் மடல் தீட்டி உள்ளீர்கள்!
பெரும்பாலான கள்ளப்பணம் நோட்டுகளாகவே
பதுக்கப்படலாயிற்று. அது ஆபத்தற்றது, வெளியே தெரியாதது. எப்போதுவேண்டுமென்றாலும் வெளியே எடுத்து புழக்கத்திற்கு விடப்படவேண்டியது.
நோட்டுக்களில் மிகப்பெரும்பகுதி இப்படித்
தேங்கும் சூழல் என்பது பொருளியலுக்கு மிகப்பெரிய அடி. முதலீட்டுத்தேக்கம்
உருவாகி தொழில்வளர்ச்சி மூச்சுத்திணறுகிறது. சென்ற இரண்டாண்டுகளாக மிக முக்கியமான
தொழிலதிபர்கள் பலர் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்னிடம். நான்கு வெவ்வேறு பொருளியல் நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன்.
கள்ளப்பணத்தில் பெரும்பகுதியை நீங்கள் நோட்டுக்களில்தான்
பதுக்கி உள்ளீர்கள் போலும். உங்கள் நண்பர்களும் அப்படித்தானா? அதைத்தான் பொதுவாகச்
சொல்கிறீரோ?
இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத்
தொடங்கி ஓராண்டாகிறது. அப்போது ‘சோறில்லாதவர்களுக்கு வங்கிக்கணக்கா?’ என நம் அறிவுஜீவுகள் கிண்டலடித்தனர். அவர்களே இன்று ‘ஏழைக்கு வங்கிக்கணக்கு ஏது?’ என பாட்டுபாடுகிறார்கள்
இன்னும் கூட முப்பது சதவிகித மக்களுக்கு வங்கிக் கணக்கு
கிடையாது என்று நிதி அமைச்சகம் சொன்னது உம்ம கண்ணுக்கு படலியோ? அவங்க எங்க போய்
பணத்தை மாத்துவாங்க?
இடதுசாரி அரசுகளே இத்தகைய நடவடிக்கைகளைச்
செய்யத் துணியும். அதை ஓர் வலதுசாரி அரசு செய்திருப்பது ஆச்சரியம். அதை
இடதுசாரிகள் தெருவுக்கு வந்து எதிர்ப்பது பேராச்சரியம்.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது யாரென்று இன்னமும்
புரியவில்லை என்றால் உங்களை விட மண்ணாங்கட்டி யாரும் கிடையாது.
யார் வரிகட்டுகிறார்களோ அவர்களுக்கே மேலும்
வரி என்பதுதானே? மாதச்சம்பளக்காரர்கள், நுகர்வோர் இரு சாராரும் கட்டும்
வரியில்தான் நாடே
ஓடிக்கொண்டிருக்கிறது. நம் அரசுகள் அவர்கள் மேலேயே மேலும் வரிகளைச் சுமத்திக்கொண்டிருந்தன.
அதைத்தான் நாங்கள்
காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். முதலாளிகளுக்கான கார்ப்பரேட் வரி, லொட்டு
லொசுக்கு எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டே எங்களை ஏன்யா தாலியறுக்கறே என்று
கேட்கிறோம்.
எளிய மக்கள்’ ஒருநாளுக்கு 2000 ரூபாய்தானே எடுக்கமுடியும் என கண்ணீர்விடுகிறார்கள். சமகால
அறிவுலகின் ஆகப்பெரிய கேவலம் என இந்த நீலிக்கண்ணீரைத்தான் நான்
காண்கிறேன்.
அந்த இரண்டாயிரம் ரூபாய் கூட எடுக்கக் கூட மை
வைத்து அசிங்கப்படுத்துகிறார்களே? அதைப்பற்றி உங்கள் பேனா எழுதாதா? எளிய மக்களுக்கு இரண்டாயிரத்துக்கு மேல் எதுக்கு என்று நீங்கள்
கேட்கிறீர்களா?
.வங்கியில் போட்ட பணத்தில் இருந்து செல்லும்
நோட்டாக எடுத்துக்கொடுத்தால்
30 சதவீதம்
கமிஷன் என்கிறார்கள்
நாகர்கோயிலில். நாற்பது என்கிறார்கள் கோவையில். எத்தனை பெரிய பொருளியல் அசைவு இது.
மோடியின் மூடத்தனத்தால் உருவாகிற புதிய
கருப்புப் பணம் இது. இது உமக்கு பெரிய பொருளியல் அசைவா? மோடியை ஆதரிக்கும் வெறி
அறிவை மறைத்து விட்ட்தோ?
இந்தத் திட்டத்தை வசைபாடுபவர்கள் மூன்று
சாரார். கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள்
வசைபாடுவது இயல்பு. இன்னொருசாரார் வெறும் மோடி எதிர்ப்பாளர்கள். அது ஒரு மனநோயாகவே
ஆகிவிட்டிருக்கிறது இன்று. மூன்றாமவர் வரிசையில் இரண்டுநாள் நிற்கநேர்ந்தமையாலேயே
சலித்துக்கொள்ளும் நடுத்தரவர்க்கக்காரர். ஊடகம் உருவாக்கும் மாயையை நம்பும் அப்பாவிகள்
இந்த மூடத்தனத்தை ஆதரிப்பவர்கள் இரண்டு வகை.
ஒன்று அயோக்கியர்கள். இரண்டாவது அடி முட்டாள்கள். நீங்கள் எந்த வகை ஆசானே?
கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவரும் தன்
நோக்கத்தை சொல்லி அவர் பதவிக்கு வந்தார். அதைச் செய்கிறார். இங்கிருக்கும் மாபெரும் கருப்புப்
பொருளியலை ஒழிப்பேன் என்று சொல்லியிருந்தால் அவர் பதவிக்கே வந்திருக்கமுடியாது.
அப்படி சொல்லியிருந்தா அதானி ஏரோப்ளேன்
கொடுத்திருக்க மாட்டான். பெரிய முதலாளிங்க நிதி கொடுத்திருக்க மாட்டானுங்க. அதை
சொல்ல மாட்டியா சாரே?
வெளிநாட்டுக் கள்ளப்பணத்தைப்பற்றி மட்டும்
பேச ஏன் விழைகிறோம்? அது ‘அங்கே’ எங்கோ இருக்கிறது.
பெரும்பாலான கள்ளப்பணம் அங்கேதான்யா
இருக்கு. அதைப் பத்தி பேசாம என் பாட்டி சுருக்குப்பையில கருப்புப் பணத்தை
தேடிக்கிட்டு இருக்கீங்க,
துபாய் எங்க இருக்கு என்று பார்த்திபன் கேட்ட கேள்விக்கு
வடிவேல் பதில் சொன்ன பாணியிலியே அது ‘அங்கே’ எங்கோ இருக்கிறது என்று சொன்னதைப் படித்து
உண்மையிலேயே மனம் விட்டு சிரித்தேன்.
போதிய முன்னேற்பாடுகள் என்றால் என்ன? அனைத்து வங்கிகளிலும்
நோட்டுக்கட்டுகளை முன்னரே
கொண்டுவந்து குவிப்பதா? ஏடிஎம் இயந்திரங்களின் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கான தட்டுகளை அகற்றிவிட்டு மாற்றி
அமைப்பதா? அவற்றைச்
செய்தபின் இந்நடவடிக்கையைச் செய்தால் என்ன பயன்? இதைப்பேசுபவர்களுக்கு மண்டைக்குள்
உண்மையில் என்னதான் இருக்கிறது? கொழுப்பா களிமண்ணா?
அதை செய்யாததால்தான் லட்சக்கணக்கானவர்களின்
பிழைப்பு கெட்டு போச்சு. இதை கேட்டா எகத்தாளமா? உம்ம மண்டையில இருக்கறதை ஏன்யா
அடுத்தவங்களுக்கு இருக்கிறதா சொல்ற?
நடவடிக்கை ஆரம்பித்தநாள் நான் மும்பையில்
இருந்தேன். மறுநாளே
2000 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்தேன். 45 நிமிடமாயிற்று. இன்று மீண்டும் 2500 எடுத்தேன். இன்று எட்டுபேர்
இருந்தனர் வரிசையில். ஐந்து நிமிடம் ஆகியது. என் செலவு அவ்வளவுதான்.
பார்வதிபுரத்தில உங்க வீட்டுல தனியா ஒரு
ஏ.டி.எம் இருக்கா என்ன? வேலூருக்கு வந்து பாருங்க.
ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள்பத்திரிகையில் ஒரு
கட்டுரை. மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது
என்று. என்னதான் உத்தேசிக்கிறார்கள்?
உங்கள் முன்னாள் எதிரியும்
தற்போதயை புதிய
சகாவுமான சாரு எழுதாத மஞ்சள் பத்திரிக்கை
சமாச்சாரங்களா? கலவரம் வரும்னு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லிட்டாங்களே, அவங்க
தீர்ப்பும் மஞ்சள் பத்திரிக்கைதானா?
இதுவரை வந்த ‘அழிவுகள்’ என்ன? வரிசையில் சிலர் மயங்கி
விழுந்தார்களாம். நாற்பது பேர் செத்துப் போனார்கள் என்று கணக்கு. அவர்களின் உடல்நிலை என்ன, அவர்கள் எங்கே ஏன் இறந்தார்கள் எதுவும்
தெரியாது.
எஸ்.வி.சேகர் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். அவரை விடவும் இரக்கம் இன்றி பேச ஆள் இருக்கு. ஒரே கட்சியில எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க?
ஓர் ஆஸ்பத்திரியில் பழையநோட்டை
எடுக்கமுடியாமல் குழந்தை இறந்ததாம். மோடி கொலைகாரா என கண்ணீர்க்குரல். முதலில்
அந்த ஆஸ்பத்திரிமேல் அல்லவா நடவடிக்கை எடுக்கவேண்டும்? அங்கே அக்குழந்தைக்கு உதவாதவர்கள்
அல்லவா பழிசுமக்கவேண்டும்?
செல்லாது என்று சட்டம் போட்ட் மோடி உத்தமரு.
அதை அமலாக்கினவன் அயோக்கியன். இதுதாம்பா காவி நீதி
அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களை தொடங்கி நாட்டை பலமுறை ஸ்தம்பிக்க
வைத்தவர்கள்.
பதினைந்து நாள் நோட்டீஸ் கொடுத்துத்தான்
வேலை நிறுத்தம் செய்ய முடியும். சமீபத்தில் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற்ற ஒரு
நாள் அகில இந்திய வேலை நிறுத்த்திற்கு மார்ச் மாதமே அறைகூவல் கொடுக்கப் பட்டது
தெரியுமா ஜெமோ?
அத்துடன் மக்களை தங்கள் கருவிகளாகப்
பயன்படுத்தி கருப்புப்பணத்தை நோட்டுகளாக ஆக்க களமிறங்கினர் வணிகர்கள்.
அதன்விளைவே நெரிசல் நீடித்தது. மக்களின் அவதியை பற்றிப்பேசிய எந்த ஊடகமும் இந்த
உண்மையைச் சொல்லவில்லை.
மோடியும் ஜெய்ட்லியும் பேசிய அதே
அயோக்கியத்தனமான வாதத்தை அப்படியே வாந்தி எடுத்துள்ள ஜெமோவே குஜராத்தில் ஒரு
பாட்டி வந்து வரிசையில் நின்றார்களே, அவர்களும் அது போன்ற கூலிதானா?
மக்கள்மேல் அக்கறை இருந்தால் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். எங்குமே பணமில்லை என்னும் பீதியைக் கிளப்பியிருக்கக்கூடாது.
சரி, இப்ப எங்க பணம் இருக்கு? அதை
சொல்லுங்க. கிடைக்கிற 2000 ரூபாய் நோட்டு கூட இன்னிக்கு செல்லாக்காசுதான்.
ஒரு வயதான பாட்டி இரு ஐநூறு ரூபாய்களை
வைத்துக்கொண்டு அவை செல்லாமலாகிவிட்டன என அழுகிறாள். அதை படம்பிடித்து ‘ஏழைகள் மேல் மோடியின் போர்’ என ஒரு இணையப்பிரச்சாரம் நடந்தது. ஒரு
தபால்நிலையத்திற்குச் சென்று ஒருமணிநேரத்தில் அதை நூறுரூபாயாக ஆக்கியிருக்கலாம், ஒருவாரம் பொறுத்தால்
பத்துநிமிடம்தான் ஆகும் அதற்கு என அந்தப்பாட்டிக்குச் சொல்லவில்லை எவரும். மாறாக அதை
கிட்டத்தட்ட முப்பதுலட்சம் பேர் பகிர்ந்துகொண்டனர்.
ஏழைகள் மேல் இல்லாமல் அம்பானி, அதானி மேலயா போர் நடந்தது? “எல்லையில்
ராணுவ வீரர்கள்” என்ற பிரச்சாரத்தை வேறு வார்த்தைகளில் சொல்கிறீர்கள். ஏழைகள்
கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்ன நடிகர் விஜயை “நீ போய் உதவி செய்” என்ற பாஜக குரல்
ஒலிக்கிறது. விமர்சனம் கூடாது என்றால்
உங்க தொழிலே முடங்கிடுமே? அத்தனை படைப்பாளிகளையும் காயப்படுத்தும் முன்
இந்த உபதேசம் எல்லாம் நினைவுக்கு வராதோ?
இத்தனையையும் மீறி வெறும் ஒருவாரத்தில்
எங்கும் நிலைமை சீரடைகிறது. ஆனால் ஊடகங்களுக்கு போதவில்லை. நிலைமை கட்டுமீறுகிறது என ஓலமிடுகின்றன.
சமஸ் தி
ஹிந்து நாளிதழில்
‘மாபெரும்
பொருளியல் அழிவை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது’ என்கிறார். அதாவது கறுப்புப்பணம்தான்
பொருளியலாம் .
பழைய பணத்தை கமிஷன் வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுப்பது ஒரு
பெரிய பொருளியல் என்று மூன்று
பத்திகளுக்கு முன்பு நீங்கள்தானே சொன்னீர்கள்.
பெட்டிக்கடைகளுக்கும் காய்கறிக் கடைகளுக்கும் கட்டுமானம்
உள்ளிட்ட தொழில்களில் கூலி வாங்குகிற தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய பணம்
முடங்கிப் போனால் அதுவே பெரிய இழப்புதான். அப்படிப்பட்ட மக்கள்தான் கோடிக்கணக்கில்
உள்ளார்கள். அவர்களின் பணச் சுழற்சி பாதிக்கப்பட்டால் அது பொருளாதாரத்திற்கு
மாபெரும் அழிவை உண்டாக்கும் என்பது உங்களைப் போன்ற விஜய் மல்லய்யா ரசிகருக்கு
எப்படி புரியும்?
.பெருமுதலைகளை விட்டுவிட்டு
சிறுவணிகர்களைப் பிடிக்கிறதே அரசு, இது பிழை அல்லவா?
இது எப்போதும் நிகழும் ஒரு பெரிய மோசடிவாதம்.
கோடானுகோடிக் கணக்கில் வரி ஏய்ப்புசெய்யும் கோடிக்கணக்கானவர்கள்
மேல் ஒரு சிறுநடவடிக்கை வருகிறது. அதற்கும் மேலே சிலரைச் சுட்டிக்காட்டி முதலில்
அவர்களைப்பிடி எனச்சொல்லி வாதிட்டு இவர்களை நியாயப்படுத்துகிறார்கள். இந்த
வாதத்தின் நோக்கம் கள்ளப்பணத்தை ஆதரிப்பது மட்டுமே, வேறேதுமல்ல
கள்ளப்பணத்தை உருவாக்குவதில் முக்கிய காரணியாக இருப்பவர்கள்
யார் என்று கூட தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிற நீங்கள் இப்போது
பேசுவதற்குப் பெயர்தான் மோசடிவாதம். உண்மையில் நீங்கள்தான் கருப்புப்பண முதலைகளை
ஆதரித்துக் கொண்டுள்ளீர்கள்.
முதலாளித்துவப் பொருளியல் அமைப்பில் உற்பத்தி, சேவைத்துறைகளில் பெருமுதலாளிகளின் முதலீடும்
பங்களிப்பும் மிகமிக முக்கியமானவை. அவற்றை காப்பாற்றவே எந்த ஒரு முதலாளித்துவ அரசும்
முயலும். ஏனென்றால் அவை பெருமுதலாளிகளால் நிர்வகிக்கப்பட்டாலும் தேசத்தின்
கூட்டான செல்வம். அவர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல
இந்த வாதத்தைப் படித்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
யதார்த்தம் என்னவென்று தெரியாமல் உங்களை எல்லாம் யார் பொருளாதாரக் கட்டுரை எழுதச்
சொன்னது? முட்டாள்தனமான உளறல் இது. தேசத்தின் சொத்துக்களை அவர்கள்
கைப்பற்றுகிறார்கள். அதற்கு தரகு வேலை பார்க்கிறது அரசு.
வங்கிகள் வீழ்ச்சி அடைந்தபோது அமெரிக்க அரசு
மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்காக தனியார் வங்கிகளுக்கு சும்மா அளித்து அவற்றை
காப்பாற்றியது. ஏனென்றால்
வங்கிகளே அமெரிக்கப் பொருளியலின் அடிப்படை. அவை நலியவிடமுடியாது.
எத்தனை அமெரிக்க வங்கிகள் திவாலானது என்பதையும் பெயில் அவுட்
என்ற பெயரில் அரசு அளித்த தொகை யாருடைய பாக்கெட்டுக்கு போனது என்பதையும் கொஞ்சம்
அறிந்து கொள்ளுங்கள். சரி அரசு நஷ்டத்தை அடைக்கும் என்றால் எதற்கு தனியார்
கம்பெனிகள்? இவர்கள் தவறுக்கு, பேராசைக்கு வரி செலுத்துபவர்கள் பணத்தை கொடுக்க
வேண்டுமா? உலகப் பொருளாதார நெருக்கடி ஏன் வந்தது என்றும் ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதுங்களேன்.
இந்த வசதிகளின் விளைவாகவே இந்தியப்
பொருளியலில் மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவுகளையே நாம் அனுபவிக்கிறோம்.
எண்பதுகளில் ஒவ்வொரு இளைஞனும் வாழ்க்கையில் குறைந்தது ஐந்தாண்டுக்காலத்தை
வேலையில்லாமல் கழித்திருப்பான். அந்நிலை மாறியது.இன்று அடித்தள மக்களின்
வாழ்க்கையில்கூட உணவுப்பஞ்சம் இல்லை. எண்பதுகளில் மூன்றுவேளை உணவென்பதே ஒரு பெரும்
சொகுசு.
இப்போதும் அதே நிலைதான் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளாத நீங்கள்
ஒரு எழுத்தாளர் என்றால் உங்கள் எழுத்தில்
உண்மை என்பது எப்படி இருக்கும்?
கிங்ஃபிஷர் நஷ்டம் அடைந்தது. விஜய் மல்லய்யா
தலைமை வகித்த பொதுப்பங்கு நிறுவனம் அது. அதன் லாபத்தில் பெரும்பகுதி அவருக்குத்தான்
சென்றிருக்கும் என்பதனால் நஷ்டத்துக்கும் அவர் பொறுப்புதான். ஆனால் அவர் இந்திய அரசை
ஏமாற்றி மோசடி செய்து தப்பி ஓடிய அயோக்கியன் என ஊடகங்கள் காட்டுவதும், இந்திய அரசு அவருக்கு பணத்தைச் சும்மா அள்ளிக்கொடுத்தது என்று
சொல்வதும் மூடத்தனத்தின் உச்சம்
இன்று நம் அரசும் வங்கிகளும் ஆற்றல்
உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய தனியார்த்துறையை ஊக்குவிக்கின்றன. கடன் அளிக்கின்றன. அதில் பெரிய
அளவிலான வளர்ச்சி நிகழ்ந்துள்ளது.
இந்தியப்பொருளியலின் ஆதாரமாக அது மாறிவருகிறது. மோடி அரசின் சாதனையாக அது சொல்லப்படுகிறது
ஆனால் அந்த தொழிலதிபர்களில் ஒருசிலர்
தோல்வியடையக்கூடும். வாய்ப்புகளை கணிப்பதில் உள்ள பிழையால். அல்லது கண்ணுக்கே தெரியாத
காரணங்களால். அதில் அரசுக்கு இழப்பும் ஏற்படக்கூடும்.
விஜய் மல்லய்யாவை விட்டுவிடவேண்டும் என்று
சொல்லவில்லை. அவரை வங்கிகள் வரவழைக்கலாம். சாத்தியமான அளவுக்கு அவரிடமிருந்து பணத்தை
மீட்கலாம். ஆனால் அவர் மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுப்போன தொழில்முனைவர். அவரை
மோசடியாளராக வேட்டையாடும் ஓர் அரசு அதற்குப்பின் தொழில் முனைவோரை தன் இலக்குக்கு இழுக்கவே
முடியாது.
எங்கள் மூத்த தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் Hired Pen pushers என்ற
வார்த்தையை பயன்படுத்துவார். அதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. மிகப் பெரிய
அயோக்கியத்தனமான வாதம் என்று ஒற்றை வரியில் உங்களை நிராகரிக்கிறேன். இந்த
பிழைப்பிற்குப் பதிலாக நீங்கள் . . . . . . ( நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.
அச்சலுகையை உங்களுக்கு அளிக்கிறேன்.
உற்பத்தி, உட்கட்டமைப்பு, அடிப்படைச் சேவைத் துறைகளில் பங்களிப்பாற்றும் பெருநிறுவனங்களுக்கும்
சிறுவணிகர்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடுண்டு. அப்பெருநிறுவனங்களின் பெரும்
முயற்சிகள் தோற்றுப்போகக்கூடும். அந்நஷ்டத்தில் அரசு பங்குசேரக்கூடும். சமீபமாக டாட்டா
நிறுவனம் பெரும் கனவுத்திட்டம் ஒன்றின் தோல்வியால் துவண்டிருப்பதாகச்
சொல்கிறார்கள். அரசு உதவக்கூடும். அது வரிப்பணத்தைக் கொடுப்பது அல்ல. டாட்டா நம்
பொருளியலின் அடித்தளங்களில் ஒன்று.
டாடாவுக்கு அரசு கொடுப்பது வரிப்பணம் இல்லையென்றால் அது மோடி டீ
விற்று சேமித்த காசா? டாடா கனவு காண மற்றவர்கள் பாரம் சுமக்க வேண்டுமா? பெரு
நிறுவனங்களோ, சிறு நிறுவனங்களோ, லாபத்தை அனுபவிப்பவர்கள்தான் நஷ்டத்தையும் சுமக்க
வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும்தான் இத்தேசத்தின் பொருளாதார அடிப்படையாக
இருக்க முடியும். வணிகம் என்பதைத் தாண்டி சமூகப் பொறுப்பு என்பதை வேறு எந்த
தனியாரிடமும் எதிர்பார்க்க முடியாது.
அதைச்சுட்டிக்காட்டி நாடெங்கும் வரி ஏய்ப்பு
செய்து பொருளியலை ஸ்தம்பிக்கச்செய்து
வரிகொடுப்பவர்களிடமே மேலும் வரிபோடச் செய்பவர்களை நியாயப்படுத்தும் குரல் எவரால் ஏன்
எழுப்பப்படுகிறது?
கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் வரி ஏய்ப்பு பற்றியும் அவை
தள்ளுபடி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பது
பற்றியும் உங்களுக்கு தெரியாதா? சாமானியர்களை வதைத்து செல்வந்தர்களை பாதுகாப்பதற்கு
எதிரானவர்கள் எழுப்பும் குரல் இது. உங்கள் காதுகளில் அது வேறு மாதிரி ஒலிக்கிறது
என்றால் உங்கள் மூளையைப் போல செவிகளும்
பழுதுபட்டுள்ளது என்றுதான் அர்த்தம்.
மோடி இந்தியாவை அழிப்பதற்காக மட்டுமே முயல்கிறார், அவர் செய்வது ஒவ்வொன்றும் குற்றம்
என்னும் மனநிலை மிக அசிங்கமானது.
மோடி பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணியாக இருக்கையில்
எல்லாவற்றையும் குற்றம் சொல்வதைத்தவிர வேறு என்ன வழி இருக்கிறது. மோடி எதைச்
செய்தாலும் அதற்கு முட்டு கொடுப்பது, ஆதரிப்பது, திசை திருப்புவது என்ற உங்கள் மன
நிலையை விட அசிங்கமான மன நிலை வேறு யாருக்காவது வாய்க்குமா? இதில்
உங்களுக்குத்தான் முதல் பரிசு.
கடைசியாக ஒன்று. மோடி இந்தியாவை அழிப்பதற்காக
மட்டுமே வந்தவர் என்னும் வகையில் ஏராளமான கட்டுரைகளைக் காணநேர்ந்தது .ஒரு பத்தி வாசித்ததுமே கீழே
பார்ப்பேன். எழுதியவர்
எவர் என. இஸ்லாமியப் பெயர் இருக்கும். பொருளாதாரநிபுணர், அரசியல் ஆய்வாளர், இதழாளர், எழுத்தாளர், வாசகர் என பல அடையாளங்கள். ஆனால்
கருத்தும் உணர்ச்சியும் ஒன்றே.
மோடியின் அராஜகங்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருகிற என்
பெயர் எஸ்.ராமன். இதுவும் உங்களுக்கு இஸ்லாமியப் பெயராகத்தான் தெரிகிறதா?
ஏராளமான பெயர்களை சொல்ல முடியும் என்றாலும் நீங்கள் நன்கு
அறிந்த ஒரு பெயரை மட்டும் சொல்கிறேன். அந்த பெயரைச் சொன்னால் உங்களுக்கு ரத்தக்
கொதிப்பு அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பரவாயில்லை. உங்கள் எழுத்தால்
எத்தனை பேருக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்துள்ளது?
ஆதவன் தீட்சண்யா – இந்த பெயர் கூட இஸ்லாமிய பெயர்தானா?
மோடியை இஸ்லாமியர் வெறுப்பதை என்னால்
புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது ஒரு பொருளியல் நடவடிக்கை. இதன்மேல் கொள்ளும் கருத்துகூட அந்த வெறுப்பால்தான் தீர்மானிக்கப்படவேண்டுமா என்ன? ஒரு பொருளியல் விஷயத்தில் ஆயிரம் பேரில் நாலு பேருக்காவது மாற்றுக்கருத்து இருக்காதா என்ன? சரி, நான் மோடியை வெறுக்கிறேன், ஆனால் இந்தப் பொருளியல்
நடவடிக்கையில் இன்னின்ன சாதக அம்சங்கள் உள்ளன என்று சொல்லலாமே. ஒருவர் கூடவா இருக்கமாட்டார்? அத்தனை சிந்தனைகளும் அடிப்படையான மதநோக்கில் இருந்துதான் வந்தாக வேண்டுமா?
இதோ, இங்கேதான் நீங்கள் உபதேசிக்கிற “அறம்” என்ற ஆடை அவிழ்ந்து
நிர்வாணமாக நிற்கிறீர்கள். பிரிவினையைத் தூண்டி ரத்தம் சுவைக்க நினைக்கும்
உங்களின் கோரமான நரிப் பல் தெரிகிறது. நாட்டில் உள்ள மக்களில்
பெரும்பான்மையானவர்கள் எதிர்க்கையில் ஏதோ முஸ்லீம் மக்கள் மட்டும் எதிர்ப்பது
போன்ற சித்திரத்தை உருவாக்குவது போன்ற மிகப் பெரிய அயோக்கியத்தனம், பொறுக்கித்தனம்
எதுவுமில்லை. மத நோக்கில் மட்டும்தான் நீங்கள் மோடியை ஆதரிப்பதும் பட்டவர்த்தனமாக
தெரிகிறது. உங்களின் ஆபத்தான குணாம்சத்தை நீங்களே அம்பலப் படுத்திக் கொண்டு
விட்டீர்கள். உங்களது அபத்தமான கட்டுரையை புறம் தள்ளிப் போகத்தான் நினைத்தேன்.
ஆனால் இந்த ஒரு கருத்துக்காகவே உருப்படியான வேலைகள் இருந்த போதிலும் என் நேரத்தை
விரயம் செய்தேன். இவ்வளவு கேவலமான சிந்தனை
படைத்தவர் என்பதை உலகம் இன்னும் ஒரு முறை புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
ஆனால் இங்கு நடந்தது அதுவல்ல. இங்கு நடந்தது
அந்த முயற்சி தோற்று அதன் விளைவாக இந்தியப் பொருளியல் அழிந்து அதன் பழியையும் அரசின் மேல் சுமத்த வேண்டும் என எதிர்தரப்பினர் கொண்ட கீழ்மை மிகுந்த வேகம். அதற்காக அவர்கள்
செய்துவரும் பொய்ப்பிரச்சாரம், பீதிகிளப்பல். அந்த வெறியில்
இந்தியாவை அழிக்கும் கறுப்புப்பணப் பொருளியலுக்கு ஆதரவாகவே நம் அறிவுஜீவிகள் களமிறங்கிய கீழ்மை.
இரண்டரை வருடங்களாக
ஆட்சி நடத்தியும் சின்னதாக ஒரு உருப்படியான நடவடிக்கை கூட எடுக்க
துப்பில்லாமல், வெற்று முழக்கங்களோடு உலகம் சுற்றும் வாலிபனாக ஊதாரித்தனம்
செய்யும் ஒரு பிரதம மந்திரி, தன் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்ப
எடுத்த அராஜக நடவடிக்கை என்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் முட்டுக் கொடுக்கிற
கீழ்மையை செய்வது நீங்கள்தான். இன்னும் கூட தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தான்
பிடித்த முயலுக்கு மூன்று கால் என மோடி தொடர்ந்தால் அதுதான் இந்தியாவை அழிக்கும்.
மோடியைக் காட்டிலும் மிகப் பெரிய அழிவு சக்தி இந்தியாவில் இருக்கிறதா?
அதில் இடதுசாரிகள் ஈடுபட்டமை மிக மிக வருத்தம் தரக்கூடியது. இடதுசாரிகளின் இந்தச் சரிவு ஒரு பெரும் அறவீழ்ச்சி.
மோடியின் அராஜகத்திற்கு
எதிராக மிகப் பெரிய இயக்கத்தை தொடங்கி உறுதியோடு நடத்தி வருவதற்காக இடதுசாரிகள்
நாங்கள் பெருமிதம் அடைகிறோம். மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர்.
உண்மையாகவே கருப்புப்பணம் வைத்திருக்கிற முதலைகளுக்கு எதிரான நிஜமான தாக்குதல்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்
சீதாராம் யெச்சூரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியதை யுட்யூபில் பார்க்க
முடியும். அந்த உரையின் தமிழாக்கம் வந்து கொண்டிருக்கிறது. ஐந்து ரூபாய்தான் விலை.
உங்களுக்காக நானே என் கைகாசு போட்டு (இப்போதுள்ள நிலைமையில் ஐந்து ரூபாய் சில்லறை
கூட எனக்கு முக்கியம். இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ஒரு வாரமாக என்னால்
மாற்ற முடியவில்லை. நேற்று ஒரு இரண்டாயிரம் ரூபாயை தகராறு செய்து மாற்றினேன்
என்பது வேறு விஷயம்) வாங்கி அனுப்புகிறேன். அதை படித்தால் உங்களுக்கு தெளிந்து
விடும் என்ற மூட நம்பிக்கையெல்லாம் எனக்கு கிடையாது. இந்த உரைக்கு பதில் சொல்ல
பயந்துதான் மோடி பம்மி, பதுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தால் போதும்.
நிற்க, நாங்கள் செய்வது தவறு என்று நீங்கள் சொன்னால் நாங்கள்
சரியான திசை வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். தாங்க்ஸ்
வாத்தியாரே.
அதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
அதான் பக்கம் பக்கமா எழுதித் தள்ளீட்டிங்களே!. இதுக்கும் மேலயா?
வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமெனில் “முடியல” .
ஆனால் முடிக்கும் முன்பாக நான் ஒன்று சொல்ல வேண்டும்.
உங்களின் “பின் தொடரும் குரல்” படித்துத்தான் உங்கள் வாசகர்கள்
விக்கிபீடியா பார்த்து லெனின் பற்றி அறிந்து கொண்டார்கள் என்று கதை விட்டவர்
நீங்கள். லெனினுக்கே அந்த கதி என்றால் என்னைப் போன்ற சாமானியர்கள் நிலை என்ன?
எங்களுக்கு மார்க்ஸூம் தெரியும், லெனினும் தெரியும். கோட்சேயையும் அறிவோம். சாவர்க்கரையும் அறிவோம். அவர்களின்
நவீன அவதாரமான உங்களைப் பற்றியும் தெரியும்.
வரலாற்றில் உங்களுக்கான
இடம் என்ன என்பது உங்களுக்கே தெரியும்
என்றாலும் அதைச் சொல்கிற பொறுப்பை வரலாறு எனக்கு அளித்துள்ளது என்ற பெருமிதத்தோடு
அதனை ஒரு படமாகவே தயாரித்துள்ளேன்.
அது கீழே உள்ளது, உங்கள் கீழ்மை புத்தியின் அடையாளமாய்.
பின் குறிப்பு :
இத்தோடு முடித்துக் கொள்வோம், வேறு வேலையைப் பார்க்கலாம்
என்றால் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே! குமுதம் விளம்பரமும் சுஜாதா மனைவி சொன்னதை
திரித்துள்ளதும் மீண்டும் வசை பாட அழைக்கிறதே.