Tuesday, June 30, 2015

கடந்த வாரத்தில் ஓர் நாள்



கடந்த வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு முக்கியமான போராட்டம் குறித்து  இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

அடிமைகளாக, நால் வர்ணத்தில் கூட சேர்த்துக் கொள்ளப்படாமல் பஞ்சமர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் மக்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி சுமார் பனிரெண்டு லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியா முழுதும் தலித் மக்களுக்கு அளித்தது. இதிலே தமிழகத்தில் மட்டும் அளிக்கப்பட்டது இரண்டு லட்சர் ஏக்கம்.

இவ்வாறு தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட தமிழிலே பஞ்சமி நிலமும் ஆங்கிலத்தில் Depressed Class Land சுருக்கமாக DC Land என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சமி நிலங்களின் முக்கியத்துவம் என்னெவென்றால் இந்த நிலங்களை தலித் மக்களைத் தவிர வேறு சமூகத்தோர் யாரும் வாங்கவோ, அனுபவிக்கவோ முடியாது. அப்படி வேறு யாராவது வாங்கினால் சட்ட விரோதம். அப்படி வேறு சமூக மக்களுக்கு விற்பதை பதிவு செய்யக்கூடாது என பத்திரப் பதிவுத்துறைக்கு உத்தரவு உள்ளது.

ஆனால் விதி மீறல் என்பதே விதியாகிப் போன ஒரு சமூகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பஞ்சமி நிலங்களில் பெரும்பகுதி இன்று காலப்போக்கில் ஆக்கிரமிப்பு நிலங்களாக மாறி விட்டது. வறுமை காரணமாக சிறிய பகுதி நிலங்கள் விற்கப்பட்டது என்றால் சமூக நெருக்கடி, மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் அறியாமை காரணமாக கை மாறிப் போனவைதான் பெரும் பகுதி நிலங்கள்.

சில வருடங்கள் முன்பாக தமிழக அரசே ஒப்புக் கொண்டபடி பஞ்சமி நிலங்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் மாற்று சமூகத்தவர் வசமே உள்ளது. அப்படிப் பட்ட நிலங்களை அவர்களிடமிருந்து மீட்டு தலித் மக்களுக்கே மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசாணைகள் இருந்தாலும் அவை வெறும் காகிதமாக மட்டுமே இருக்கிறதே தவிர அதற்கு செயல் வடிவம் தர வேண்டும் என்று ஆட்சியாளர்களோ இல்லை அதிகாரிகளோ என்றும் முயற்சித்தது கிடையாது. இரு கழக ஆட்சிகளிலும் இதுதான் நிலைமை.

ஆனால் பஞ்சமி நிலங்களை மற்றவர்கள் வாங்குவதை பதிவு செய்வதும் நிற்கவில்லை. அதற்கு வருவாய்த்துறை பட்டா அளிப்பதும் கூட நடக்கிறது. தலித் அமைப்புக்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் தவிர வேறு எந்த ஒரு அரசியல் கட்சியும் பஞ்சமி நிலம் குறித்து கவலைப்படுவதே கிடையாது. பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு அளிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கூட கொடுப்பது கிடையாது. ஜெயலலிதாவின் சிறுதாவூர் மாளிகை கூட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்த போது மட்டும் அவசரம் அவசரமாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அவருக்கு நற்சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டது.

பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே யாரிடம் இருக்கிறது என்று சரியான விபரங்கள் கிடையாது. ஆனாலும் பல அமைப்புக்கள் தங்களின் முயற்சியால் கண்டறிந்து அவற்றை மீட்க இயக்கங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இப்பணியில் உரிய கவனம் செலுத்தி வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த இரண்டு வருடங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களால் பல நூறு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு தலித் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் தாலுகாவில் அரக்கோணம் நகரத்திலிருந்து ஒரு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கீழ்ப்பாக்கம் என்ற கிராமத்தில் 95 ஏக்கர் பஞ்சமி நிலம் மாற்று சமூகத்தவருக்கு பட்டா போட்டு அளிக்கப்பட்டுள்ளது. அக்கிராம மக்கள் ஒரு மூன்று வருடங்களாக ஜமாபந்தி கூட்டங்களில் பஞ்சமி நிலத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்த அசைவும்  நிர்வாகத்திடமிருந்து இல்லை.

தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு தகவல் கிடைத்தது. அமைப்பு முதலில் வட்டாட்சியருக்கு முறைப்படி மனு அளித்தது. மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பிரச்சினையை எடுத்துச் சென்றும் கவனம் கொடுக்கப்படவில்லை. அதற்கடுத்தபடியாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதும் நிர்வாகம் அசைந்து கொடுக்காததால் நேரடியாக களம் இறங்கி நில மீட்புப் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தலித் மண்ணுரிமை அமைப்பும் முடிவு செய்தன. தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கும் அளிக்கப்பட்டது.

கடந்த வாரம் ஜூன் 24 ம் தேதியன்று இரண்டு அமைப்புக்களின் தோழர்களும் நேரடியாக அந்த நிலத்திற்கே சென்று “குறிப்பிட்ட சர்வே எண் உடைய நிலம் பஞ்சமி நிலம் என்றும் வேறு சமுதாய மக்கள் இதனை பயன்படுத்துவது சட்ட விரோதம்” என்று அறிவிக்கிற பதாகைகளை அந்த நிலப்பகுதிகளில் நிறுவினர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல் ராஜ், தலித் மண்ணுரிமை அமைப்பினுடைய அமைப்பாளர் தோழர் நிக்கோலஸ் ஆகியோர் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றார்கள், அங்கேயே உணவு சமைக்கப்பட்டு பறிமாறப்பட்டது. இந்த போராட்டம் நடைபெற்ற போது காவல்துறை தூரமாக நின்று வேடிக்கை பார்த்ததே தவிர கிட்ட வரவில்லை.

தலைவர்களோடு அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். தவறாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து தலித் பயனாளிகளுக்கு அதனை பகிர்ந்தளிப்பதாக வருவாய் கோட்டாட்சியர்  உறுதி அளித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி காப்பாற்றாமல் பின் வாங்கினால் இன்னும் கடுமையாக போராட்டம் வெடிக்கும் என்பதை அறியாதவர்களா அவர்கள்?

இப்போராட்டத்தில் எங்கள் சங்கத்தின் சார்பில் எட்டு தோழர்கள் பங்கேற்றோம் என்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் இது ஒரு நல்ல துவக்கம். இனியும் தொடரும்.

இயக்கத்தின் சில புகைப்படப் பதிவுகள் கீழே












Monday, June 29, 2015

என்னுடைய நினைவுகளில் எமர்ஜென்சி



hindu report on emergency

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமான அவசர நிலைக்காலம் பற்றி அதன் நாற்பதாவது ஆண்டையொட்டி பலரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அதில் சிறப்பானதாக ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கர் எழுதியதைச் சொல்வேன். அவரது தந்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.ராமச்சந்திரன் அவர்கள் அவசர நிலையின் போது தலைமறைவாக இருந்தது, காவல்துறை தொந்தரவு, அதை சமாளித்தது பற்றியெல்லாம் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். அதனை மாற்று இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த இணைப்பை இங்கே பாருங்கள். அவசியம் படியுங்கள்.

எங்கள் வேலூர் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளராக இருந்த திரு வி.சுப்ரமணியன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியதை கீழே அளித்துள்ளேன்.
--------------------------------------------------------------------
 பின்னோக்கி பார்த்தேன்.
எவ்வளவு பின்னடைவு.
1974 ல் LIC யில் சேர்ந்தேன். 19வயது.
1975ல் Emergency. 40 வருடம். என்னை சங்கத்தின் கிளை செயலாளராக ஆக்கினர் கடலூர் கிளையில். சின்ன வயசு. பெரிய பொறுப்பு.
என்ன கெடுபிடி. தினசரி காவல்துறையின் இடையூறுகள். கோஷம் எழுப்பக்கூடாது. சேர்ந்து போகக்கூடாது. கூட்டம் நடத்தக்கூடாது. வாயிற்கூட்டம் கூடாது.
சர்வாதிகார அடக்குமுறை. நல்ல நினைவில் உள்ளது.
சென்னை கோட்டத்தின் கூட்டம் ரகசியமாக ஒரு இடத்தில். எங்கு என்று ஒருவர் வந்து அழைத்துச் சென்றார்.
யாருக்கும் தெரியாமல்.
நானும், நண்பர் சிவப்பிரகாசம் அவர்களும் சென்றோம்.
அப்படிப்பட்ட காலம்.
ஜனநாயக நாட்டின் சர்வாதிகார ஆட்சி.
இன்று இதைப்பற்றி வந்த பிரசுரத்தை வாசிக்கும் போது என் நினைவுக்கு வந்தது.
பின்னடைவான காலத்திலும் முன்னேற்றம் கண்டோம். பிரச்சினையாக பார்க்காமல் வாய்ப்பாக பார்த்தோம். என்னை பக்குவப்படுத்திய காலம். பொதுவாக தப்பு நடக்கும்போது எல்லோரும் சொல்லக்கூடிய வார்த்தை, மீண்டும் Emergency வரணும் என்று. தவறு. விளையாட்டாகக் கூட
சொல்ல வேண்டாம்.
பட்டால்தான் தெரியும்.
பட்டுத் தெரிந்த அனுபவம். விசு
 ------------------------------------------------------------------
திரு வி.எஸ் குறிப்பிட்டுள்ள அக்கூட்டம் பற்றி எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் இப்போதும் மெய்சிலிர்த்துப் போவார். இன்சூரன்ஸ் தொடர்பான தேர்வு ஒன்று எழுதிக் கொண்டிருந்த போது ஒரு பொறுப்பாளர் நாளை காலை இந்த இடத்திற்கு வந்துவிடுங்கள் என்று காதில் கிசுகிசுத்தது மட்டுமே தகவல். அகில இந்தியத் தலைவர்கள் அந்த இடத்திற்கு எப்படி, எப்போது வந்தார்கள், எப்படி புறப்பட்டார்கள் என்பதெல்லாம் கண்கட்டி வித்தை போல இருந்தது என்று அவர் சொல்வார். வாழ்க்கையின் இயல்பான பல விஷயங்களுக்கே சாகசங்கள் தேவைப்பட்டிருக்கிறது. காவல் துறையின் கெடுபிடி அப்படி இருந்தது.

இது போன்ற அனுபவங்கள் எதுவும் எனக்குக் கிடையாது.

எமெர்ஜன்சி அறிவிக்கப்பட்ட காலத்தில் நான் வெறும் ஒன்பது வயது சிறுவன். ஆகவே எமெர்ஜன்சி என்றால் என்ன என்பதெல்லாம் தெரியாது. காமராஜர் இறந்து போன போது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எமெர்ஜன்சியால்தான் மனம் நொந்து காமராஜர் இறந்து போய் விட்டார் என்பதை கேட்டிருக்கிறேன்.

மண்டபம் முகாமில் என் அப்பா பணியாற்றி வந்தார். காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த நான் ஒரு பத்து நாள் விடுமுறைக்கு போன போது அங்கே படித்த தினத்தந்தி (அப்படித்தான் நினைவு) எமெர்ஜன்சி புகழ் பாடிக் கொண்டிருந்தது.

அப்போது படித்து இப்போது நினைவில் உள்ளவை

1)  கீழக்கரையில் கடத்தல் பொருட்கள் பிடிபட்டது. அங்கே ஒரே மாதிரியான ஒன்பது மாளிகைகளை கடத்தல்காரர்கள் கட்டியுள்ளனர்.
2) திருச்சி பக்கத்தில் மெய்வழிச்சாலை என்ற சாமியார் ஆசிரமத்தில் பூமிக்கடியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது.
3) ரயில்கள் சீக்கிரம் வருகிறது.
4) ஜனதா சாப்பாடு என்ற பெயரில் அளவு சாப்பாடு அமல்.
5) அன்னையின் இருபது அம்சத் திட்டம், மகனின் ஐந்து அம்சத்திட்ட,ம்/
6) ஆனந்த விகடன் பத்திரிக்கை முத்திரைக்கதைகள் போல இருபது அம்ச திட்ட சிறுகதைகளை வாராவாரம் வெளியிடும்.


இவை மட்டும்தான் எமெர்ஜன்சி என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு பிறகுதான் அதன் கொடூரம் பிறகுதான் தெரிந்தது. 1977 தேர்தல் சமயத்தில் அரசியல் ஆர்வமும் பிறந்து விட்டது. அப்போது பல தேர்தல் கூட்டங்களுக்கு என் அப்பாவும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

“கிஸ்ஸா குர்ஸி கா” என்ற ஒரு திரைப்படச் சுருளை சஞ்சய் காந்தியும் அவரது சகா வி.சி.சுக்லாவும் கொளுத்தி அதன் இயக்குனரை எப்படியெல்லாம் அடித்து துவைத்தார்கள் என்று சோ பேசியது நினைவில் உள்ளது.

ஆனால் காரைக்குடியை உள்ளடக்கிய சிவகங்கைத் தொகுதியில் அப்போது வெற்றி பெற்றது என்னவோ இந்திரா காங்கிரசோடு கூட்டணி வைத்திருந்த அதிமுகவின் வேட்பாளர்தான்.

இந்திராவின் சாதனையாக பெரிதும் அத்தேர்தலில் பேசப்பட்டது “ஜனதா சாப்பாடு”. இந்திராவை 1977 தேர்தலில் வீழ்த்தியது அதே பெயரைக் கொண்ட ‘ஜனதா கட்சி” என்பது சுவாரஸ்யமான நகை முரண்.

எமெர்ஜன்சி சமயத்தில் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்டு கருத்துரிமை, எழுத்துரிமை என எல்லாமே பறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரே ஒரு உரிமை மட்டும் பறிக்கப்படவில்லை.

என்ன உரிமை அது?

நாளை பார்ப்போம்.


Sunday, June 28, 2015

சிவாஜி - சிவாஜி




காக்கா முட்டை திரைப்படத்தில் ஒரு குடிம்கன் 'ராமன் எத்தனை ராமனடி'  திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் வசனத்தை பேசுவதாக ஒரு காட்சி வரும்.


கவியரசு கண்ணதாசனின் வசனத்திற்கு நடிகர் திலகம் உயிர் கொடுத்திருப்பார்.

சிவாஜியின்  கம்பீரம் அற்புதமாக வெளிப்படும் காட்சி இது.

எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் இது. 

உழைப்பவர்களுக்கான உரிமையை மறுப்பதென்பது இன்னும் மாறாமல் இருப்பது ஒரு பெருந்துயரம்.

Saturday, June 27, 2015

தேவர் மகனில் ஒரு வசனம்

நேற்று ஏதோ ஒரு லோகல் சேனலில் தேவர் மகன் படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.



அதிலே ஒரு வசனம் அனுபவத்தில் எழுதியது போல தோன்றியது. அதுதான் இன்றைய யதார்த்தமும் கூட.

கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பத்தாவது நிமிடத்தில் வரும்  அந்த வசனத்தை பார்த்தால் நீங்களும் அதை ஏற்றுக் கொள்வீர்கள்.

 

Friday, June 26, 2015

மோடியின் செய்தியா? மோசடிச் செய்தியா?



நேற்று எங்கள் வேலூர் கிளையின் ஆண்டுப் பேரவைக் கூட்டம். கூட்டம் முடிந்ததும் அதுவரை மௌனமாய் வைத்திருந்த அலைபேசியை உயிர்ப்பித்து வந்திருந்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மின்னஞ்சலைப் பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன். என்னவென்று பக்கத்தில் அமர்ந்திருந்த தோழர் விபரம் கேட்க, அவரையும் அதை படிக்கச் சொன்னேன். எனக்குக் கூட இந்த மின்னஞ்சல் முன்னரே வந்திருந்தது என்றார்.

இதோ கீழேயுள்ள அச்செய்தியை நீங்களும் படியுங்கள்.



பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக  பொங்கி எழுந்து சுதேசியம் பேசி உள்ளது இந்த மின்னஞ்சல்.

இது நிஜமாகவே மோடி அனுப்பியதா?

பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்டை அதிகரிக்க ஒவ்வொரு நொடியும் கடுமையாக உழைக்கிற மோடி பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களை புறக்கணிக்கச் சொல்கிறாராம்.

இந்தியாவில் உள்ள எல்லா தொழிலாளர் நலச் சட்டங்களையும் ஒழித்துக் கட்டி விடுகிறேன். எந்த தொந்தரவும் இல்லாமல் இந்தியாவில் தொழில் செய்து லாபத்தை அள்ளிச் செல்லுங்களென்று நாடு நாடாக “இந்தியாவில் உருவாக்கு” என்று கூவி கூவி விற்கிற மோடி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கிற பணத்தைப் பார்த்து கவலைப்படுகிறாராம்.

இந்திய விவசாயிகளின் நிலத்தைப் பறித்து கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்து இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் மோடி, இளநீர் குடியுங்கள், பழரசம் பருகுங்கள் என்று போதிக்கிறாராம்.

கரும்பிற்கான அடிப்படை விலையை உயர்த்த மறுத்துள்ளது மட்டுமல்ல, மாநிலங்கள் வழங்கும் கூடுதல் தொகையையும் தரக்கூடாது என்று சொல்லிக் கொண்டே கரும்புச்சாறு அருந்தச் சொல்கிறாராம்.

அமெரிக்க நலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிற, அணு உலை வெடித்து இந்தியாவே எழவு வீடாக மாறினாலும் அவற்றை நிறுவிய அமெரிக்கக் கம்பெனிகள் ஒரு ரூபாய் கூட இழப்பீடு தர வேண்டாம் என்று ஒப்பந்தம் போட்டவர் இந்திய ரூபாயின் மதிப்பும் டாலரின் மதிப்பும் ஒன்றாக வேண்டும் என்று விரும்புகிறாராம்.

இப்படியெல்லாம் மோடி சொன்னால் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளை அவரை வீட்டிற்கு அனுப்பி விடும் என்பது தெரியாத இளிச்சவாயரா மோடி?

ஆக மோடியின் செய்தி என்ற பெயரில் யாரோ உருவாக்கி மோடிக்கு “ரொம்ப நல்லவர்” என்ற பிம்பத்தை உருவாக்க முயல்கின்றனர்.

ஒரு வேளை இந்தச் செய்தியை அனுப்பியது நிஜமாகவே மோடி என்றால் அதற்குப் பெயர் “களவாணித்தனம்”. ஏனென்றால் அவரது நடவடிக்கைகள், கொள்கைகள் எல்லாமே இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு எதிராகவும் முரணாகவும்தான் இருக்கிறது.  

இரண்டு தீர்ப்புக்கள் - எது நல்ல வாய்?

 

 

ஆலமரத்தடி கட்டப் பஞ்சாயத்து போல பாலியல் கொடுமை செய்தவனை திருமணம் செய்து கொள்ள வழிகாட்டி பேச்சுவார்த்தை நடத்த வழி செய்ய குற்றவாளியை பிணையில் விடுவித்த தீர்ப்பு நேற்று முழுதும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இன்றைய நாளிதழைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

அதே நீதிபதி இன்னொரு பாலியல் வன் கொடுமை வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளார். அது மட்டுமா

 “The victims of sexual violence, the trauma left on them will long last in their memory, it will have psychological impact on their moral and physical activities. The painful event will refuse to fade away from their memory. The victim in a murder case dies once for all, but the victim in sexual violence case dies every day every minute.” 

என்று வேறு கூறியுள்ளார்.

நேற்று அவருக்குக் கிடைத்த ஞான ஒளி, நேற்று முன் தினம் கிடைக்கவில்லை போலும்!

ஆளைப் பொறுத்து நீதி மாறுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதே!. பின்னணியில் வேறு ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியாது.

இரண்டு தீர்ப்புக்களையும் சொன்னது ஒருவர்தான்.

ஒன்று நல்ல வாய். இன்னொன்று வேற வாய்
 

Thursday, June 25, 2015

ஜட்ஜய்யா, தீர்ப்பை மாத்துங்க





இன்னும் எத்தனை விசித்திரமான தீர்ப்புக்களை இந்திய நீதிமன்றங்கள் அளிக்கப் போகிறதோ?

மைனர் சிறுமியை பாலியல் கொடுமை செய்தான் ஒரு கயவன். கர்ப்பமுற்ற அந்தப் பெண் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தாள். டி.என்.ஏ சோதனை முடிவு வெளிவரும் வரை தான் ஒரு யோக்கியன் என்றே வாதிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

அந்த சிறுமியோ இல்லை அவளது குடும்பத்தினரோ எந்தவொரு சமரசத்தையோ இல்லை இழப்பீடையோ விரும்பவில்லை. கேட்கவில்லை. மாறாக தவறிழைத்த அந்த கொடூரனை சட்ட ரீதியாக தண்டிக்கவே விரும்பினார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட அந்த பாவி பிணை கேட்டான். அவன் என்ன உரிமைக்காக போராடிய தொழிலாளியா இல்லை தன் நிலத்தை பன்னாட்டுக் கம்பெனி அபகரிக்கக் கூடாது என்று குரல் கொடுத்த விவசாயியா, பிணையை மறுப்பதற்கு?

திருடர்களுக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கும் உதவி செய்வதற்கு ஆட்சியாளர்களின் ஈர இதயத்தில் மனிதாபிமானம் பொங்கி வழியும் காலமல்லவா இது? பாலியல் கொடுமை செய்தவன் மீது நீதிபதிக்கு மட்டும் மனிதாபிமானம் வாராதா என்ன?

பிணை கொடுத்தார். அதற்கொரு விளக்கம் சொல்லியுள்ளார் பாருங்கள். அப்படியே மெய் சிலிர்க்கும்.

“இந்த பிரச்சினைக்கு ஒரு இனிய முடிவு வர வேண்டுமானால், குற்றம் செய்தவனே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், அதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமானால் இந்த உத்தமன் உள்ளேயிருந்தால் அது எப்படி சாத்தியம்? ஆகவே அவருக்கு பிணை அளிக்கிறேன்” என்று அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வது போல சிறைக் கதவுகளை திறக்க வைத்திருக்கிறார்.

“இது என்ன அபத்தம்?” என்று நாம் கேட்பதற்கு முன்பாக அந்தப் பெண்ணே கேட்டு விட்டாள். அவனோடு சேர்ந்து வாழ்வது என்பதெல்லாம் முடியாத காரியம் என்றும் ஆணித்தரமாக சொல்லி விட்டாள். பாலியல் வன் கொடுமை வழக்குகளில் சமரசப் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே கிடையாது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முற்றும் முரணானது சென்ன உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்று பல சட்ட வல்லுனர்களும் கூறியுள்ளனர்.

ஒரு திரைப்படத்தில் விவேக் பாலியல் குற்றவாளிக்கு அளிக்கும் தீர்ப்பு போல தீர்ப்பளிக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்காக ஆலமரத்தடி நாட்டாமைகளாகவா நீதியரசர்கள் செயல்படுவது? இன்னும் எத்தனை குமார சாமிகள் இந்தியாவில் இருக்கின்றனரோ?

ஜட்ஜய்யா, தீர்ப்பை மாத்துங்க…..