Monday, June 29, 2015

என்னுடைய நினைவுகளில் எமர்ஜென்சி



hindu report on emergency

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமான அவசர நிலைக்காலம் பற்றி அதன் நாற்பதாவது ஆண்டையொட்டி பலரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அதில் சிறப்பானதாக ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கர் எழுதியதைச் சொல்வேன். அவரது தந்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.ராமச்சந்திரன் அவர்கள் அவசர நிலையின் போது தலைமறைவாக இருந்தது, காவல்துறை தொந்தரவு, அதை சமாளித்தது பற்றியெல்லாம் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். அதனை மாற்று இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த இணைப்பை இங்கே பாருங்கள். அவசியம் படியுங்கள்.

எங்கள் வேலூர் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளராக இருந்த திரு வி.சுப்ரமணியன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியதை கீழே அளித்துள்ளேன்.
--------------------------------------------------------------------
 பின்னோக்கி பார்த்தேன்.
எவ்வளவு பின்னடைவு.
1974 ல் LIC யில் சேர்ந்தேன். 19வயது.
1975ல் Emergency. 40 வருடம். என்னை சங்கத்தின் கிளை செயலாளராக ஆக்கினர் கடலூர் கிளையில். சின்ன வயசு. பெரிய பொறுப்பு.
என்ன கெடுபிடி. தினசரி காவல்துறையின் இடையூறுகள். கோஷம் எழுப்பக்கூடாது. சேர்ந்து போகக்கூடாது. கூட்டம் நடத்தக்கூடாது. வாயிற்கூட்டம் கூடாது.
சர்வாதிகார அடக்குமுறை. நல்ல நினைவில் உள்ளது.
சென்னை கோட்டத்தின் கூட்டம் ரகசியமாக ஒரு இடத்தில். எங்கு என்று ஒருவர் வந்து அழைத்துச் சென்றார்.
யாருக்கும் தெரியாமல்.
நானும், நண்பர் சிவப்பிரகாசம் அவர்களும் சென்றோம்.
அப்படிப்பட்ட காலம்.
ஜனநாயக நாட்டின் சர்வாதிகார ஆட்சி.
இன்று இதைப்பற்றி வந்த பிரசுரத்தை வாசிக்கும் போது என் நினைவுக்கு வந்தது.
பின்னடைவான காலத்திலும் முன்னேற்றம் கண்டோம். பிரச்சினையாக பார்க்காமல் வாய்ப்பாக பார்த்தோம். என்னை பக்குவப்படுத்திய காலம். பொதுவாக தப்பு நடக்கும்போது எல்லோரும் சொல்லக்கூடிய வார்த்தை, மீண்டும் Emergency வரணும் என்று. தவறு. விளையாட்டாகக் கூட
சொல்ல வேண்டாம்.
பட்டால்தான் தெரியும்.
பட்டுத் தெரிந்த அனுபவம். விசு
 ------------------------------------------------------------------
திரு வி.எஸ் குறிப்பிட்டுள்ள அக்கூட்டம் பற்றி எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் இப்போதும் மெய்சிலிர்த்துப் போவார். இன்சூரன்ஸ் தொடர்பான தேர்வு ஒன்று எழுதிக் கொண்டிருந்த போது ஒரு பொறுப்பாளர் நாளை காலை இந்த இடத்திற்கு வந்துவிடுங்கள் என்று காதில் கிசுகிசுத்தது மட்டுமே தகவல். அகில இந்தியத் தலைவர்கள் அந்த இடத்திற்கு எப்படி, எப்போது வந்தார்கள், எப்படி புறப்பட்டார்கள் என்பதெல்லாம் கண்கட்டி வித்தை போல இருந்தது என்று அவர் சொல்வார். வாழ்க்கையின் இயல்பான பல விஷயங்களுக்கே சாகசங்கள் தேவைப்பட்டிருக்கிறது. காவல் துறையின் கெடுபிடி அப்படி இருந்தது.

இது போன்ற அனுபவங்கள் எதுவும் எனக்குக் கிடையாது.

எமெர்ஜன்சி அறிவிக்கப்பட்ட காலத்தில் நான் வெறும் ஒன்பது வயது சிறுவன். ஆகவே எமெர்ஜன்சி என்றால் என்ன என்பதெல்லாம் தெரியாது. காமராஜர் இறந்து போன போது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எமெர்ஜன்சியால்தான் மனம் நொந்து காமராஜர் இறந்து போய் விட்டார் என்பதை கேட்டிருக்கிறேன்.

மண்டபம் முகாமில் என் அப்பா பணியாற்றி வந்தார். காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த நான் ஒரு பத்து நாள் விடுமுறைக்கு போன போது அங்கே படித்த தினத்தந்தி (அப்படித்தான் நினைவு) எமெர்ஜன்சி புகழ் பாடிக் கொண்டிருந்தது.

அப்போது படித்து இப்போது நினைவில் உள்ளவை

1)  கீழக்கரையில் கடத்தல் பொருட்கள் பிடிபட்டது. அங்கே ஒரே மாதிரியான ஒன்பது மாளிகைகளை கடத்தல்காரர்கள் கட்டியுள்ளனர்.
2) திருச்சி பக்கத்தில் மெய்வழிச்சாலை என்ற சாமியார் ஆசிரமத்தில் பூமிக்கடியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது.
3) ரயில்கள் சீக்கிரம் வருகிறது.
4) ஜனதா சாப்பாடு என்ற பெயரில் அளவு சாப்பாடு அமல்.
5) அன்னையின் இருபது அம்சத் திட்டம், மகனின் ஐந்து அம்சத்திட்ட,ம்/
6) ஆனந்த விகடன் பத்திரிக்கை முத்திரைக்கதைகள் போல இருபது அம்ச திட்ட சிறுகதைகளை வாராவாரம் வெளியிடும்.


இவை மட்டும்தான் எமெர்ஜன்சி என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு பிறகுதான் அதன் கொடூரம் பிறகுதான் தெரிந்தது. 1977 தேர்தல் சமயத்தில் அரசியல் ஆர்வமும் பிறந்து விட்டது. அப்போது பல தேர்தல் கூட்டங்களுக்கு என் அப்பாவும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

“கிஸ்ஸா குர்ஸி கா” என்ற ஒரு திரைப்படச் சுருளை சஞ்சய் காந்தியும் அவரது சகா வி.சி.சுக்லாவும் கொளுத்தி அதன் இயக்குனரை எப்படியெல்லாம் அடித்து துவைத்தார்கள் என்று சோ பேசியது நினைவில் உள்ளது.

ஆனால் காரைக்குடியை உள்ளடக்கிய சிவகங்கைத் தொகுதியில் அப்போது வெற்றி பெற்றது என்னவோ இந்திரா காங்கிரசோடு கூட்டணி வைத்திருந்த அதிமுகவின் வேட்பாளர்தான்.

இந்திராவின் சாதனையாக பெரிதும் அத்தேர்தலில் பேசப்பட்டது “ஜனதா சாப்பாடு”. இந்திராவை 1977 தேர்தலில் வீழ்த்தியது அதே பெயரைக் கொண்ட ‘ஜனதா கட்சி” என்பது சுவாரஸ்யமான நகை முரண்.

எமெர்ஜன்சி சமயத்தில் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்டு கருத்துரிமை, எழுத்துரிமை என எல்லாமே பறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரே ஒரு உரிமை மட்டும் பறிக்கப்படவில்லை.

என்ன உரிமை அது?

நாளை பார்ப்போம்.


2 comments:

  1. //என்னுடைய நினைவுகளில் எமர்ஜென்சி
    இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமான அவசர நிலைக்காலம் பற்றி அதன் நாற்பதாவது ஆண்டையொட்டி பலரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். //

    பெறுமதியான தகவல்கள் நன்றி.

    ReplyDelete
  2. எமெர்ஜென்சியின் நன்மைகளையும் பட்டியலிடலாமே. பொழுது போக்கும் அரசுப் பணியாளர்கள் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஒழுங்காக 'நேரத்துக்கு வேலைக்கு வந்தது, ஊழல் குறைந்தது போன்று.

    ReplyDelete