Wednesday, June 10, 2015

அவங்களும் மனுசப் படைப்புதான்



எங்கள் சங்க இதழான சங்கச்சுடருக்காக எழுதியது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூலைப் பற்றிய அறிமுகம் இது.

நூல் அறிமுகம்

நூல்             : மெல்ல விலகும் பனித்திரை
                    (திருநங்கையர் குறித்த சிறுகதைகள்)
தொகுப்பு        : லிவிங் ஸ்மைல் வித்யா
வெளியீடு       : பாரதி புத்தகாலயம்,
                   சென்னை – 18
விலை           : ரூபாய் 50.00

திருநங்கையர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்த சட்டம் நிறைவேறி  உள்ளதும் மேற்கு வங்கம் கரக்பூரில் உள்ள கிருஷ்ணாநகர் பெண்கள் கல்லூரியில் மனாபி பண்டோபாத்யா என்ற திருநங்கையர் முதல்வராக பணியேற்றுள்ளதும் திருநங்கையரின் நிலையில் மிகச் சிறிய முன்னேற்றம் உருவாகத் தொடங்கியிருப்பதற்கான அடையாளம்.

கௌரவான பணிகளுக்கு திருநங்கையரை அமர்த்த இந்தியச் சமூகம் தயங்கிக் கொண்டிருக்கிற நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் ஜீவிதத்திற்கு பாலியல் தொழிலையும் பிச்சையெடுப்பதையுமே நாட வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. அந்தப் பின்னணியில் இந்தியத் திரைப்படங்களும் பெரும்பாலான ஊடகங்களும் திருநங்கையரை கொச்சைப்படுத்தியே காட்டி வருகின்றன.

அதற்கு மாறாக திருநங்கையரின் பிரச்சினைகளைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் உரிமைகளைப் பற்றியும் பேசுகிற சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.

கரிசல் கி.ராஜநாராயணனின் “கோமதி” கோமதிநாயகம் என்ற திருநங்கையின் வாழ்க்கையை சிரிக்க சிரிக்கச் சொன்னாலும் அவள் வாழ்க்கையில் விரும்பியது நடக்காத சோகத்தைச் சொல்லி மனத்தை கனமாக்கி விடுகிறார். திருநங்கைகளை கொச்சைப்படுத்தி அதிலே இன்பம் காணும் இளைஞர்களுக்கு மோர் விற்கும் பாட்டி கொடுக்கிற சூடு பாவண்ணன் எழுதிய “வக்கிரம்” கதையின் கருப் பொருள். திருநங்கையாக மாறியதால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற ஜோசியரின் வாக்கை நம்பி விஷம் கொடுத்துக் கொள்ளப்பட்ட மதியின் துயரத்தையும் அதுநாள் வரை அவளை சுரண்டி வாழ்ந்த குடும்பத்தின் சுயநலத்தையும் சொல்கிறது இரா.நடராஜனின் “மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து”. மாற்றுத் திறனாளிக்கும் திருநங்கைக்கும் ஏற்படுகிற பிணைப்பை பாரதி தம்பியின் “தீராக்கனவு” சொல்கிறது என்றால் நட்பின் புரிதலை கவின் மலர் எழுதிய “நீளும் கனவு” விவரிக்கிறது. லட்சுமணப் பெருமாளின் “ஊமங்காடை” யில் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொண்டு பொன்ராசு அவமானப்பட்டால் சுதா எழுதிய “இப்படியும்” சிறுகதையில் கதிர் திருமணத்தன்றே தற்கொலை செய்து கொண்டு இறக்கிறான்.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதையாக திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் எழுதிய “ஆச்சி முத்து” வை கூறலாம். பாலியல் இச்சைக்கு அழைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆச்சிமுத்து செய்கிற எதிர்வினைக்காக அவனை கொலை செய்ய அவனது குடும்பத்தாரரும் அந்த சேரியின் ஆண்களும் அலைகிற போது ஊர்க்காரர்களின் அக்கிரமங்களுக்கு எதிராக பெண்கள் பொங்கி எழுகிறார்கள். ஆச்சிமுத்துவைப் பாதுகாக்கிறார்கள். 

“மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து”. சிறுகதையில் இறந்து போன மதியின் ஒரு உடலுறுப்பை ட்ரான்ஸ்ப்ளேன்டேஷன் செய்ய மருத்துவர் ஏற்பாடு செய்வார். "திருநங்கையாச்சே" என்று கேள்வி கேட்கிற பணியாளரிடம்"அவங்களும் மனுசப் படைப்புதான்" என்று மருத்துவர் பதில் சொல்வார்.

அந்த புரிதலை உருவாக்குவதுதான் இந்த சிறுகதைத் தொகுப்பு.

படத்தில் உள்ளவர்தான் கல்லூரி முதல்வர் மனாபி





3 comments:

  1. சிறந்ததொரு விமர்சனம் நண்பரே நூலை வாங்க வேண்டும் என்ற ஆவல் கொள்கிறது மனம்
    நேரமிருப்பின் எமது பதிவுக்கு வருகை தரவும் நன்றி
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
  2. சமூகத்தின் அவலங்களை நினைக்க நினைக்க மனம் கனக்கிறது.

    ReplyDelete
  3. நூல் அறிமுகம் சிறப்பு
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே

    ReplyDelete