கடந்த வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு
முக்கியமான போராட்டம் குறித்து இங்கே
பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
அடிமைகளாக, நால் வர்ணத்தில் கூட சேர்த்துக்
கொள்ளப்படாமல் பஞ்சமர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் மக்கள் வாழ்வு மேம்பட
வேண்டும் என்பதற்காக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு, இங்கிலாந்து
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி சுமார் பனிரெண்டு லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியா
முழுதும் தலித் மக்களுக்கு அளித்தது. இதிலே தமிழகத்தில் மட்டும் அளிக்கப்பட்டது
இரண்டு லட்சர் ஏக்கம்.
இவ்வாறு தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட தமிழிலே
பஞ்சமி நிலமும் ஆங்கிலத்தில் Depressed Class Land சுருக்கமாக DC Land என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சமி நிலங்களின்
முக்கியத்துவம் என்னெவென்றால் இந்த நிலங்களை தலித் மக்களைத் தவிர வேறு சமூகத்தோர்
யாரும் வாங்கவோ, அனுபவிக்கவோ முடியாது. அப்படி வேறு யாராவது வாங்கினால் சட்ட
விரோதம். அப்படி வேறு சமூக மக்களுக்கு விற்பதை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்
பதிவுத்துறைக்கு உத்தரவு உள்ளது.
ஆனால் விதி மீறல் என்பதே விதியாகிப் போன ஒரு
சமூகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பஞ்சமி நிலங்களில் பெரும்பகுதி
இன்று காலப்போக்கில் ஆக்கிரமிப்பு நிலங்களாக மாறி விட்டது. வறுமை காரணமாக சிறிய
பகுதி நிலங்கள் விற்கப்பட்டது என்றால் சமூக நெருக்கடி, மிரட்டல், அச்சுறுத்தல்
மற்றும் அறியாமை காரணமாக கை மாறிப் போனவைதான் பெரும் பகுதி நிலங்கள்.
சில வருடங்கள் முன்பாக தமிழக அரசே ஒப்புக் கொண்டபடி
பஞ்சமி நிலங்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் மாற்று சமூகத்தவர் வசமே உள்ளது.
அப்படிப் பட்ட நிலங்களை அவர்களிடமிருந்து மீட்டு தலித் மக்களுக்கே மீண்டும்
ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசாணைகள் இருந்தாலும் அவை வெறும் காகிதமாக
மட்டுமே இருக்கிறதே தவிர அதற்கு செயல் வடிவம் தர வேண்டும் என்று ஆட்சியாளர்களோ
இல்லை அதிகாரிகளோ என்றும் முயற்சித்தது கிடையாது. இரு கழக ஆட்சிகளிலும் இதுதான்
நிலைமை.
ஆனால் பஞ்சமி நிலங்களை மற்றவர்கள் வாங்குவதை பதிவு
செய்வதும் நிற்கவில்லை. அதற்கு வருவாய்த்துறை பட்டா அளிப்பதும் கூட நடக்கிறது.
தலித் அமைப்புக்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் தவிர வேறு எந்த ஒரு அரசியல்
கட்சியும் பஞ்சமி நிலம் குறித்து கவலைப்படுவதே கிடையாது. பஞ்சமி நிலங்களை மீட்டு
தலித் மக்களுக்கு அளிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கூட கொடுப்பது கிடையாது.
ஜெயலலிதாவின் சிறுதாவூர் மாளிகை கூட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற
குற்றச்சாட்டு எழுந்த போது மட்டும் அவசரம் அவசரமாக ஒரு விசாரணைக் கமிஷன்
அமைக்கப்பட்டு அவருக்கு நற்சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டது.
பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே யாரிடம் இருக்கிறது
என்று சரியான விபரங்கள் கிடையாது. ஆனாலும் பல அமைப்புக்கள் தங்களின் முயற்சியால்
கண்டறிந்து அவற்றை மீட்க இயக்கங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு
தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இப்பணியில் உரிய கவனம் செலுத்தி வருகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த இரண்டு வருடங்களில்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களால் பல நூறு ஏக்கர் பஞ்சமி
நிலங்கள் மீட்கப்பட்டு தலித் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் தாலுகாவில் அரக்கோணம்
நகரத்திலிருந்து ஒரு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கீழ்ப்பாக்கம் என்ற
கிராமத்தில் 95 ஏக்கர் பஞ்சமி நிலம் மாற்று சமூகத்தவருக்கு பட்டா போட்டு
அளிக்கப்பட்டுள்ளது. அக்கிராம மக்கள் ஒரு மூன்று வருடங்களாக ஜமாபந்தி கூட்டங்களில்
பஞ்சமி நிலத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மனு
கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்த அசைவும்
நிர்வாகத்திடமிருந்து இல்லை.
தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு தகவல் கிடைத்தது.
அமைப்பு முதலில் வட்டாட்சியருக்கு முறைப்படி மனு அளித்தது. மாவட்ட நிர்வாகத்தின்
கவனத்திற்கு பிரச்சினையை எடுத்துச் சென்றும் கவனம் கொடுக்கப்படவில்லை.
அதற்கடுத்தபடியாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போதும் நிர்வாகம் அசைந்து கொடுக்காததால் நேரடியாக களம் இறங்கி நில மீட்புப்
போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தலித் மண்ணுரிமை
அமைப்பும் முடிவு செய்தன. தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கும் அளிக்கப்பட்டது.
கடந்த வாரம் ஜூன் 24 ம் தேதியன்று இரண்டு அமைப்புக்களின் தோழர்களும் நேரடியாக அந்த நிலத்திற்கே
சென்று “குறிப்பிட்ட சர்வே எண் உடைய நிலம் பஞ்சமி நிலம் என்றும் வேறு சமுதாய
மக்கள் இதனை பயன்படுத்துவது சட்ட விரோதம்” என்று அறிவிக்கிற பதாகைகளை அந்த
நிலப்பகுதிகளில் நிறுவினர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல் ராஜ், தலித் மண்ணுரிமை அமைப்பினுடைய அமைப்பாளர்
தோழர் நிக்கோலஸ் ஆகியோர் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள்
இப்போராட்டத்தில் பங்கேற்றார்கள், அங்கேயே உணவு சமைக்கப்பட்டு பறிமாறப்பட்டது. இந்த
போராட்டம் நடைபெற்ற போது காவல்துறை தூரமாக நின்று வேடிக்கை பார்த்ததே தவிர கிட்ட
வரவில்லை.
தலைவர்களோடு அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு
கொண்டார்கள். தவறாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து தலித் பயனாளிகளுக்கு அதனை
பகிர்ந்தளிப்பதாக வருவாய் கோட்டாட்சியர்
உறுதி அளித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் சொன்ன வார்த்தையை காப்பாற்றும்
என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி காப்பாற்றாமல் பின் வாங்கினால் இன்னும்
கடுமையாக போராட்டம் வெடிக்கும் என்பதை அறியாதவர்களா அவர்கள்?
இப்போராட்டத்தில் எங்கள் சங்கத்தின் சார்பில் எட்டு
தோழர்கள் பங்கேற்றோம் என்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் இது ஒரு நல்ல துவக்கம். இனியும்
தொடரும்.
இயக்கத்தின் சில புகைப்படப் பதிவுகள் கீழே
Good Start.......Thee paravattummm....looted Land hope to return to concern.
ReplyDeleteSeshan/dubai
திராவிடக் கட்சிகளின் தலித் விரோத மனப்பானமைதான் நமக்குத் தெரியுமே! அவர்கள் இருக்கும்வரை தலித்துக்களுக்கு மண்ணுரிமை கிடைப்பது குதிரைக்கொம்பே.
ReplyDeleteஇப்படி ஒரு நிலம் இருப்பதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதற்காக வெட்கப்படுகிறேன்.
ReplyDeleteயார் நிலத்தைப் பதிவு செய்தார்கள் என்ற விவரம் இருக்கும். (அரசு அதிகாரி). அவர், மற்றும் அதற்குத் துணை போனவர்கள் (மேலதிகாரிகள், யார் யார் எல்லாம் அப்ரூவ் செய்துள்ளார்களோ அவர்கள்) அனைவரும், வேலையில் இருந்தால் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். பணி ஓய்வு பெற்றிருந்தால், ஓய்வு ஊதியம் நிறுத்தப்பட்டு, அவர்கள் ஜெயிலுக்குச் செல்லவேண்டும். இப்படி சட்டம் இருந்து நடைமுறைப்படுத்தினால்தான், ஏதிலிகளின் அறியாமையைப் பயன்படுத்துவது குறையும். ஆனால், நீங்கள் அரசு அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல்வாதிகளை மட்டும் குறைசொன்னால் அது சரியாக இருக்காது.
ReplyDeleteஇப்படியும் கொடுமை நடந்திருக்கு! அதற்கு எதிராக நல்ல முயற்சிகள்.
ReplyDelete