இந்தியப் பிரதமர்களிலேயே சிறிது காலமே பதவியில் இருந்தாலும் அழுத்தமான தடத்தை பதித்தவர் நிச்சயமாக திரு வி.பி.சிங் மட்டுமே.
ஊழலுக்கு எதிராக உண்மையான நடவடிக்கைகள் எடுத்தவர் அவர் மட்டுமே. சமூக நீதியையும் மதச் சார்பின்மையையும் நேர்மையாக கடைபிடித்தவர். அந்த இரு காரணங்களுக்காகவே பதவி இழந்தவர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவு படுத்தாதே என்று தேர்தல் நேரத்தில் மாய்மாலம் செய்த மோடியின் கட்சியினர்தான், மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியதால் போராட்டம் நடத்தி வட இந்தியா முழுதும் கலவரம் செய்தார்கள். அத்வானியின் ரத்த யாத்திரையை உறுதியாக தடுத்தவரும் அவர்தான்.
இரண்டு முறை அவரது பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு நெய்வேலி வந்துள்ளார்.
2003 ல் சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை அவர்தான் துவக்கி வைத்தார். மக்கள் மீதான அக்கறையும் இந்தியா அன்னிய நாடுகளின் அடிமையாகி விடக்கூடாது என்ற உணர்வும் அந்த இரு உரைகளின்போதும் காண முடிந்தது.
பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்கிறவராகவும் உடனடியாக முடிவு எடுக்கிறவராகவும் அவர் இருந்தார் என்பது எல்.ஐ.சி ஊழியர்களின் சொந்த அனுபவம்.
எங்களுடைய ஊதியத்தில் மிகப் பெரிய முரண்பாடு இருந்தது. விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் பஞ்சப் படி வழங்கப்படும். அதில் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு 100 % பஞ்சப்படியும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு 75 % பஞ்சப்படியும் வழங்கப்பட்டது.
இதனால் ஒரு நான்காம் பிரிவு ஊழியர் மூன்றாம் பிரிவு பணியான பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறும்போது அவரது பஞ்சப்படி விகிதம் 75 % ஆக குறைந்து ஊதியமும் குறைந்து விடும். பதவி உயர்வு பெற்றால் ஊதியம் குறைந்து போகும் விசித்திரம் இங்கேதான் நிகழ்ந்தது.
இந்த முரண்பாட்டை களைய எல்.ஐ.சி நிர்வாகம் தயாராக இல்லை. வி.பி.சிங்கிற்கு முந்தைய எந்த ஒரு நிதியமைச்சரும் கூட தயாராக இல்லை. எங்கள் சங்கத் தலைவர்கள் வி.பி.சிங்கை சென்று சந்தித்து இப்பிரச்சினையை விவரித்தவுடன் அதற்கான தீர்வு என்னவென்று கேட்டார்.மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 100 % பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று கோரினார்கள்.
பதிவு எழுத்தர் பதவியின் அதிகப்பட்ச அடிப்படை ஊதியமான 790 ரூபாய் (இது 1987 நிலவரம்) வரை 100 % பஞ்சப்படி வழங்குவதற்கான அரசாணையை முதலில் பிறப்பித்தார். பதிவு எழுத்தர் தொடங்கி உயர்நிலை உதவியாளர் வரை அனைத்து மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 790 ரூபாய் வரை 100 % பஞ்சப்படி கிடைத்தது.
காலப்போக்கில் அனைவருக்குமே 100 % பஞ்சப்படி என்பது கிடைத்தது. இந்த பஞ்சப்படி உயர்வின் மூலமாக ஒரு ஆறு மாத அரியர்ஸாக 500 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணம் கொண்டுதான் என்னுடைய முதல் கைக்கடிகாரத்தை வாங்கினேன். அந்த ஆல்வின் கைக்கடிகாரம் ஒரு எட்டு வருடங்கள் வரை நன்றாகவே உழைத்தது.
நல்ல மனிதர்களுக்குதான் நம்மூர்ல வேலை இல்லியே!
ReplyDeleteவாட்சின் பெயரும் ALL WIN தானா ?
ReplyDeleteஆமா ,நீங்க ஏன் அந்த பத்து கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது ?